அத்தியாயம் 11: தூண்டிலில் சிக்கியது தாரசி

மந்திராசுரன், சிகராசுன், யாகம்யாழி மூவரும் மகுடாந்த மலையை சென்றடைந்தனர். அங்கே மந்திராசுரன் மலைமுன் நின்று ஆசானே என்று கூற மலையின் வாயிற் கதவு திறந்தது. அன்று தான் முதன் முதலாக சிகராசுரனும், யாகம்யாழியும் செல்கின்றனர் என்பதால் அவ்விடத்தையும் அந்த மலையில் கதவு திறந்த விதத்தையும் வியப்புடன் பார்த்துக் கொண்டே மந்திராசுரனை பின்தொடர்ந்து உள்ளே சென்றனர். உள்ளே நுழைந்தவர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது. உள்ளே பல வகையான பாம்புகள், பூரான்கள், தேள்கள் மற்றும் பெரிய சிலந்திகள் சூழ அமர்ந்திருந்தார் ஆசான் காற்கோடையன். தன் சிஷ்யர்களின் வருகையைப் பார்த்தவர்

“வாருங்கள் வாருங்கள்” என்றார்

மூவரும் ஆசானுக்கு வணக்கம் தெரிவித்ததும் சிகராசுரன்

“ஆசானே இது என்ன? இவைகளின் நடுவில் தாங்கள் என்ன செய்கிறீர்கள்?”

“ஏன் உங்கள் தலைவன் மதிநாகசுரன் ஒன்றும் கூறவில்லையா?”

“சொன்னார் ஆனாலும் நான் இதை எதிர் பார்க்கவில்லை”

“நானும் தான்… நீயும் யாகம்யாழியும் இங்கு மந்திராசுரனுடன் வருவீர்கள் என எதிர் பார்க்கவில்லை!!”

“அது …அது …வந்து…”

“என்ன ஆயிற்று? மந்திராசுரா நீ சொல். ஏன் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளவில்லை?”

“அவர்கள் இருவருக்குமே தற்போது திருமணத்தில் நாட்டம் இல்லையாம். அவர்களுக்கு தோன்றும் போது நிச்சயம் செய்து கொள்கிறோம் என்று கூறியதால் என்னுடனே இருவரையும் அழைத்து வந்துவிட்டேன் ஆசானே”

“அப்படியா? சரி நீங்கள் மூவரும் விடியற் காலையில் தாரசிக்கு செல்ல வேண்டும் ஆகையால் நன்றாக இங்கேயே ஒய்வெடுங்கள். எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கிறது அதை முடித்து விடுகிறேன்.”

“ஆசானே இந்த பிராணிகள் நம்மை ஒன்றும் செய்திடாதே?”

“இவைகள் நான் உருவாக்கியவை. ஆகையால் நம்மை ஒன்றும் செய்யாது. என் கட்டளைப் படி நடக்கும் நமது படையின் முதல் வீரர்கள் இவைகளே. கவலை வேண்டாம் யாகம்யாழி. நிம்மதியாக உறங்கு.”

“சரி ஆசானே”

என்று கூறிவிட்டு சிகராசுரன் மற்றும் மந்திராசுரனுடன் சென்று உறங்கினாள் யாகம்யாழி.

காலை விடிந்தது. கதிரவன் எழுந்தான் அவனுக்கு முன்னால் எழுந்தனர் அசுரர்குலத்தவர்கள். அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப

ஆசான் பரமபத அரண்மனையை உருவாக்கத் துவங்கினார்

கோபரக்கன் மகிமாவை பிரயோகம் செய்து மனை உருவாவதை மறைத்து நின்றான்.

மந்திராசுரன் பிராகாமியம் பிரயோகம் செய்து தாராசியின் ஊர் தலைவரானான். ஊர் தண்டோரா காரரை அவசரமாக வரவழைத்து தண்டோரா போட்டு சொல்ல வேண்டிய செய்தியை அவனிடம் கொடுத்து அதை உடனே ஊர் முழுவதும் சொல்லி வர உத்தரவு கொடுத்தான்.

தண்டோரா காரரால் ஊர் தலைவர் உத்தரவை ஏற்காமல் இருக்க முடியுமா?
விடியற் காலை என்றும் பாராமல் உடனே செயலில் இறங்கினார். ஒவ்வொரு தெருவிலும் நின்று

” ஊர் எல்லையில் ஒரு பரமபத மனை ஒன்று நிறுவப்பட்டுள்ளது அதனுள் சென்று அங்கே இருக்கும் பரமபதம் விளையாட்டை விளையாடினால் நாம் நினைத்ததெல்லாம் நடந்தேறும் மற்றும் அதில் வெற்றிப் பெற்றால் விலை மதிப்பில்லா பொன்னும் பொருளும் அளிக்கப்படும் என்று நம் தலைவருக்கு ஓலை வந்துள்ளது அதன் படி அனைவரும் சென்று விளையாட வேண்டுமென்று ஆணைப் பிரப்பித்துள்ளார் நமது தலைவர். அந்த அரண்மனைக்கு நம்ம ஊர் மக்கள் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் சரியாக இன்னும் ஒரு ஐந்து மணி நேரத்தில் அங்கே ஒன்று கூட சொல்லி இருக்கிறார்”

என்று தண்டோரா போட்டு சொல்லிக் கொண்டே சென்றார். அதைக் கேட்டதும் பொன்னுக்கும் பொருளுக்குமாக ஆசைப்பட்ட பலர் வேகமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஊர் எல்லையைச் சென்றடைந்தனர். மீதமுள்ளவர்களையும் அங்கே அனுப்புவதற்காக நவியாகம்ஷியும், மிளானாசுரியும் அந்த ஊர் மக்கள் தலைவனின் மந்திரியையும், தலைவனின் தங்கையையும்…பிராப்தி மற்றும் வசித்துவம் கொண்டு வசியப்படுத்தி அவர்கள் முதலில் உள்ளே அனுமதிப் பெற்று சென்றதாகவும் பொன் பொருள்கள் கிடைத்ததாகவும் கூறி கை நிறைய பொன் பொருட்களுடன் ஊருக்குள் வந்து அனைவரிடமும் கூறி காட்டினர். அந்த அரண்மனையின் அழகையும் வர்ணித்து பேசினர். ஊர்காரர்களில் பலர் பல கேள்விகளை கேட்க அனைத்திற்கும் அவளைகள் அங்க போக வைக்கும் படியான பதில்களை சொன்னார்கள் தலைவனின் மந்திரியும், மனைவியும். அதை கேட்ட அனைவரும் பிரம்மித்துப் போனார்கள். உடனே ஊரே எல்லையில் திரண்டு நின்றனர்.

சிகராசுரனும், யாகம்யாழியும் தங்களின் இலகிமா, அணிமா சித்திகளை பிரயோகம் செய்து அந்த ஊர் மக்கள் அனைவரும் எல்லை சென்று விட்டார்களா? ஊருக்குள் இன்னும் யாரேனும் இருக்கிறார்களா என்று ஒரு நோட்டமிட்டு அப்படி எவருமே இல்லை என்பதை ஆசானிடமும், மதிநாகசுரனிடமும் சென்று கூறினர். அவர்கள் சொன்னதும் மதிநாகசுரன் ஆசானிடம்

“எல்லாம் தயாரா ஆசானே? கோபரக்கனை விலகச் சொல்லாமா? யாகம்யாழி, சிகராசுரா உங்களின் வெளி வேலைகள் முடிந்தன ஆகையால் நீங்கள் இருவரும் தீப்பிழப்பின் அடியில் உள்ள பாதாள தளத்திற்கு இப்போது சென்று அடுத்தப் பணியையும் இதே போல் சிறப்பாக செய்திட அங்கே காத்திருங்கள்”

“ஆகட்டும் மதி நாங்கள் இருவரும் இப்போதே செல்கிறோம். ஹே பாதாள பைரவி” என்று ஒருமித்து கூறி அங்கிருந்து விடைப்பெற்று பாதாள தளத்திற்கு சென்றனர் சிகராசுரனும், யாகமாயாழியும்.

மீண்டும் ஆசானிடம் கோபரக்கனை நகரச்சொல்லலாமா என்று ஆசானிடம் கேட்டான் மதிநாகசுரன் அதற்கு ஆசான்

“சற்று பொறு மதிநாகசுரா இதோ முடிந்துவிடும்”

“நரன்கள் கலைந்து போய்விடக்கூடாது ஆசானே. அவர்களை அதிக நேரம் காக்க வைத்தால் பின் திரும்பிச் சென்றுவிடப் போகிறார்கள். பின் நமது முயற்சிகள் எல்லாம் வீணாக போய்விடும்”

“அந்த கவலை உனக்கு வேண்டாம் மதிநாகசுரா‌. நரன்களை அங்கிருந்து செல்லாது பார்த்துக் கொள்வான் மந்திராசுரன். எனினும் என் வேலையும் முடிந்தது. கோபரக்கா நீ விலகி பாதாள தறத்திற்கு செல்லலாம்”

என்று காற்கோடையன் சொன்னதும் அவன் மெல்ல விலகி அப்படியே பாதாள தளத்தில் சிகராசுரனுடம், யாகம்யாழியுடனும் சேர்ந்து சாம்பீனிகளை அடைத்து வைக்க காத்திருந்தான்.

கோபரக்கன் விலகியதும் பரமபத அரண்மனையின் வெளித் தோற்றத்தை கண்டு வாய் பிளந்து நின்றனர் அவ்வூர் மக்கள். அவர்கள் எங்குமே கண்டிடாத அப்படிப்பட்ட உயரமான சுழல் வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனையின் வாயிற் கதவு திறந்ததும் உள்ளே முதலில் நுழைவதற்காக போட்டியிட்டுக் கொண்டும், முட்டி மோதிக் கொண்டும் காத்திருந்தனர் மக்கள்.

அதைக்கண்டதும் மதிநாகசுரனுக்கு வென்று விட்டதைப் போல மனதில் எண்ணம் தோன்றி அது அவன் முகத்தில் தெரிய, அதைப் பார்த்த ஆசான்

“மதிநாகசுரா நாம் இன்னும் ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் மனதில் வெற்றியை கொண்டாடத் துவங்கிவிட்டாயா?”

“இல்லை இல்லை ஆசானே…”

“உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா மதி!! ஆரம்பம் ஆனதுமே வெற்றியை கொண்டாடுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மீண்டும் சொல்கிறேன் பொறுமையை கடைப்பிடி எல்லாம் தானாக நடந்தேறும். புரிகிறதா?”

“சரி ஆசானே சரி. எப்போது அவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி கொடுக்க வேண்டும்? நாம் இன்னும் திறக்கவேயில்லை ஆனால் ஏப்படி எவருக்கும் தலைவனின் மந்திரி சொன்திலும், மனைவி சொன்னதிலும் சந்தேகமின்றி இருக்கிறார்கள்?”

“அவர்கள் சொன்னதை நீ கவனிக்கவில்லை மதிநாகசுரா. அவர்கள் தான் தலைவனின் ஆட்கள் ஆயிற்றே அதனால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதை எவர் சந்தேகிப்படுவர்? சரி இனியும் நேரம் கடத்த வேண்டாம். நான் மேலே உள்ள அறைக்குச் சென்று சாம்பீனி மந்திரத்தை உச்சாடனம் செய்த் துவங்கி அரை மணி காலம் கழித்து உள்ளே அவர்களை அனுமதித்து நமது ஆட்டத்தைத் துவங்கு மதிநாகசுரா. நான் சென்று வருகிறேன்”

“அப்படியே ஆகட்டும் ஆசானே. தாங்கள் தங்கள் மந்திரத்தை உச்சரிக்க துவங்கி சரியாக அரை மணி நேரத்தில் நான் என் ஆட்டத்தைத் துவங்குகிறேன். சென்று வாருங்கள் வெற்றி நமதே”

என்று மதிநாகசுரன் கூறியதும் அங்கிருந்து மேல் தளத்திலுள்ள அறையில் சென்று பாதாள பைரவி முன் அமர்ந்து சாம்பீனி மந்திரத்தை உச்சாடனம் செய்யத் துவங்கினார் காற்கோடையன். அரை மணி நேரமானதும் மதிநாகசுரன் தனது அசுரர்களுக்கே உரித்தான குரலில் தங்கள் அரண்மனையின் வாயிலில் காத்திருந்த நரன்களுக்கு கட்டளையிடத் துவங்கினான்.

“இங்கு எங்கள் பரமபத அரண்மனைக்கு வருகை தந்து, விளையாட்டில் பங்கெடுத்து பற்பல பரிசுகளை அளிச் செல்ல வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். இப்போது தாங்கள் அனைவரும் உள்ளே வரலாம். விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தங்களுக்கு தங்கள் தவைவன் கூறியிருப்பார் ஆனாலும் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்.”

என்று மதிநாகசுரன் சொன்னதும் மக்களிடையே இருந்து வந்த சலசலப்பு முற்றிலும் இல்லாமல் போய் அனைவரும் அமைதியாக கேட்க துவங்கினர். மதிநாகசுரன் தொடர்ந்தான்..

“உள்ளே வந்ததும் முதலில் எங்கள் அரண்மனையை நீங்கள் பார்த்து ரசிக்கலாம் ஆனால் முதலில் ஒருவர் அங்கே இருக்கும் முதல் அறையினுள் நுழைந்து விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும். அவர் அடுத்த அறைக்கு விளையாட்டில் முன்னேற்றம் அடைந்ததும் அடுத்தவருக்காக கதவு திறக்கும். இப்படியே இந்த பரமபத அரண்மனையினுள் தளத்திற்கு பத்து என்று இருக்கும் நூறு அறைகளில் உள்ள விளையாட்டுகளையும் விளையாட வேண்டும். அப்படி விளையாடி வெற்றியுடன் வெளிவருவோர் நினைத்துப் பார்த்திடாத அளவுக்கு பரிசுகள் வழங்கப்படும். இடையில தோற்றுப் போவோர் அந்த அந்த அறையிலிருக்கும் வலது புறம் கதவு வழியே வெளிவர வேண்டும். அவரவர் முன்னேற்றம் படி பரிசுகள் அளிக்கப் படும். உள்ளே வந்துவிட்டால் எக்காரணம் கொண்டும் பாதியில் வெளியே செல்ல அனுமதி இல்லை. விளையாட்டை விளையாடி பரிசுப் பொருட்களுடன் தான் செல்ல வேண்டும். எங்கள் பரமபத அரண்மனையிற்குள் வந்து விட்டால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய மாற்றமுண்டு. உங்கள் வாழ்நாளில் நினைத்திடாத வண்ணம் மாறி விடுவீர்கள் என்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். இப்போது எங்கள் அரண்மனை வாயில் கதவு திறக்கப்படும். வாருங்கள் வாருங்கள். “

என்று கூறிக் கொண்டே பிம்மாண்டமான பரமபத அரண்மனையின் கலைநயமிக்க வாயிற் கதவு மெல்ல திறக்கப்பட்டது.

பரிசுப் பொருட்களுக்கு ஆசைப் பட்டு ஒரு கூட்டமும்.

அரண்மனையின் அழகினை காண வந்த ஒரு கூட்டமும்.

உள்ளே அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆர்வத்தில் வந்த கூட்டமும்

அத்துனை நேரம் காத்திருந்தது வீண் போகாமல் பரிசுடன் வீடு திரும்ப வேண்டி ஒரு கூட்டமும்.

என அந்த ஊர் மக்கள் அனைவரும் உள்ளே சென்றனர். முதலில் ஊர் தலைவரும் அவர் குடும்பமும் பின் மற்றவர்கள் என வரிசையாக உள்ளே அனுதிக்கப் பட்டார்கள்.

அனைவரும் அந்த அரண்மனை அமைக்கப்பட்ட விதத்தில் மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சாப்பிட பழ வகைகள், இனிப்பு பண்டங்கள் எல்லாம் நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அதை அவர்களுள் பலர் எடுத்து ரசித்து உண்டு மகிழ்ந்தனர்.

அசுரர்களின் திட்டப்படி விளையாட்டு அறைக்குள் முதலில் உள்ளே செல்ல வேண்டியவர்கள் தலைவன், அவர் மனைவி மற்றும் மந்திரி. ஏனெனில் அவர்களை உள்ளே விட்டப் பின் தான் மந்திராசுரன், நவியாகம்ஷி மற்றும் மிளானாசுரி பாதாள தளத்திற்கு செல்ல முடியும்‌.

ஊர் தலைவன் அனைவரையும் ஒன்றாக நிற்கச் செய்து தான் முதலில் உள்ளே விளையாட செல்வதாக கூறி அவர் பின் தன் மனைவியும் அவள் பின் தன் மந்திரியும் மீண்டும் விளையாடுவார்கள். மந்திரியின் பின் தாங்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து விளையாட வேண்டும் என்று கூறி முதல் அறைக்கு முன் நின்றார். கதவு திறந்தது. உள்ளிருந்து

“வாருங்கள் தலைவரே என்று ஒரு குரல் ஒலித்தது.”

அனைவரும் அந்த கதவுக்குள் என்ன உள்ளது என்பதை அறிய முட்டி மோதிக் கொண்டு எட்டிப் பார்த்தனர். ஆனால் ஒன்றுமே தெரியாததால் ஏமாற்றம் அடைந்த அவர்களுள் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மந்திரியான மிளானாசுரி அவர்களிடம்

“கவலை வேண்டாம் நீங்கள் அனைவரும் உள்ளே செல்லத் தான் போகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சென்றே தெரிந்துக் கொள்ள போவதை எதற்கு எட்டிப் பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும். வெளியே உள்ளதைப் போலவே உள்ளேயும் அழகு எழில் கொஞ்சும் வேலைப்பாடுகள் பார்க்கலாம். அனைவரும் அமைதியாக இருங்கள்.”

என்றதும் அனைவரும் அமைதியானார்கள். பின் அவரவர் முறை வருவதற்காக காத்திருக்கத் துவங்கினர்.

முதல் அறையின் கதவிற்குள் சென்றார் ஊர் தலைவன். அவர் உள்ளே சென்றதும் கதவு படார் என்ற சத்தத்துடன் மூடியது. முதல் அறைக்குள் தலைவன் சென்று கதவடைந்ததும் மந்திராசுரன் மீண்டும் பிராகமியம் உபயோகித்து தன் உடலுக்கே திரும்பி பாதாள தளத்திற்குச் சென்றான். அந்த அறையினுள் இருந்த தலைவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. தான் எங்கு இருக்கிறோம் எப்படி அங்கு வந்தோம் என்ற குழப்பத்தில் நின்றிருந்தவர் அந்த அறையை ஒரு நோட்டமிட்டார். அப்போது திடீரென அவர்முன் கருநாகம் ஒன்று படமெடுத்து நின்றது. அதைப் பார்த்ததும் பயத்தில் உறைந்து நின்றார் ஊர் தலைவர்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s