அத்தியாயம் 10: மனையும் மணமக்களும்

“அதிர்ச்சி அடையும் அளவிற்கு ஒன்றும் இல்லையே மதிநாகசுரா?”

என்று காற்கோடையன் அந்த அரண்மனையின் ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னார். 

“என்ன ஆசானே சாம்பீனி மந்திரத்தை உச்சாடனம் செய்து நரன்களை மாற்றுவோம் என கூறிவிட்டு இப்படி சிறு பிள்ளை தனமாக பாம்புகளையும் சிலந்திகளையும் விட்டு வேடிக்கைப் பார்க்க நினைக்கிறீர்களே!!!”

“மதிநாகசுரா நீ ஒன்றை மறந்து விட்டாய். சாம்பீனி மந்திரம் இறந்தவர்கள் மீது தான் பிரயோகிக்க முடியும் அதற்காக தான் அவை.”

“சரி சரி இப்போது புரிந்துக் கொண்டேன். ஆமாம் இந்த அரண்மனைப் பற்றியும் எங்களின் பங்கு பற்றியும் கூறுங்கள் ஆசானே”

“அதை சொல்லத்தானே இங்கே உன்னை அழைத்து வந்துள்ளேன். முதலில் இந்த குகையைப் பற்றி கூறிவிடுகிறேன். இந்த மகுடாந்த குகையில் நமது சரித்திரமே அடங்கியுள்ளது அதனால் இந்த இடத்தை சர்வ எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும். நான் முன் கூறியது போல எவருக்கும் இந்த இடம் தெரியாது. உனக்கும் இந்த குகைக்குள் நுழையும் மந்திரத்தை சொல்லித் தருகிறேன். ஏனெனில் நாளை எனக்கு ஏதாவது நேர்ந்தால் ….”

“ஆசானே ஏன் இப்படி எல்லாம் கூறுகிறீர்கள். தங்களுக்கும் என் நண்பர்களுக்கும் என்றுமே எதுவுமே நேர்ந்திடாமல் நான் பார்த்துக் கொள்வேன். கவலை வேண்டாம்”

‘அது எனக்கும் தெரியும் மதி ஆனாலும் நீ தெரிந்து வைத்துக் கொள்வது மிக அவசியம் அதனால் தான் சொல்கிறேன் என் வார்த்தையை கேள்”

“சரி சொல்லுங்கள் கேட்கிறேன்”

“மகு மகு மகுடாந்த மலையே

முட்களாக காட்சியளிக்கும் மலையே

உன்னுள் இருக்கும் குகையே

எங்கள் இனத்தின் ஆதாரமே

பைரவியின் பிள்ளை வந்துள்ளேனே

என்னை உள்ளே அனுமதித்திடுவாயே

மலையே அனுமதித்திடுவாயே “

“நன்றாக புரிந்துக் கொண்டேன் ஆசானே. இதை எப்போது உச்சாடனம் செய்ய வேண்டும்?”

“மகுடாந்த மலையடிவாரத்தில் வந்ததும் எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் நின்று  இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி உச்சாடனம் செய்தால் உன் எதிரே வாயிற்கதவு திறக்கும். நீ உள்ளே வர அனுமதி கிடைக்கும். நீ உள்ளே வந்ததும் கதவு தானாக மூடிவிடும். வெளியே செல்ல வாயில் கதவு முன் நின்று அதிலிருக்கும் இந்த சிறிய ஆணியை அழுத்தினால் கதவு திறக்கும் நீ வெளியே செல்லலாம். நீ வெளியே சென்றதும் மீண்டும் கதவு மூடிவிடும். புரிகிறதா?”

“புரிகிறது ஆசானே”

“சரி இப்போது நமது அரண்மனையைப் பற்றி விவரிக்கிறேன் வா”

“ஆவலுடன் இருக்கிறேன் ஆசானே”

“இந்த அரண்மனை பத்து தளங்கள் கொண்டதாகும்.  இந்த மனை சுழல் வடிவில் அமைக்கப்படும். ஒவ்வொரு தளத்திலும் பத்து அறைகள் அதில் முதல் அறைக்கு மட்டும் மூன்று கதவுகள் மற்ற அறைகள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு கதவுகள் மட்டுமே இருக்கும். முதல் அறையின் வாயிற் கதவிற்குள் நுழைபவருக்கு அங்கு ஒன்றும் நேரவில்லை என்றால் அவர்  நேராக  இருக்கும் கதவு வழியே அடுத்த அறைக்குள் இருக்கும் சவாலை ஏற்க செல்ல வேண்டும். அதிலும் வெற்றிப் பெற்றால் மீண்டும் நேராக உள்ள அடுத்த அறைக்கு செல்ல வேண்டும், இப்படியே அவர்களால் முடிகிற வரை அடுத்த அடுத்த அறைகளுக்கு சென்று மேல் தளத்தை அடைந்ததும் உன்னுடன் போட்டியிட வேண்டும். அவர்கள் ஏதாவது அறையில் தோற்றுப் போனால் அந்த அறையின் வலது புறம் உள்ள கதவு வழியாக சென்று நமது அரண்மனையின் நடுவில் அமைக்கப் போகும் தீ பிழம்பில் வீழ்ந்து மாண்டு போவார்கள். நான் மேல் தளத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்துக் கொண்டு சாம்பீனி மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டே இருப்பேன். அதனால் உயிர்பித்து வரும் விணம் அனைத்துக்கும் ஒரே வழி தான் உள்ளது.  அது இந்த தீ பிழம்பின் அடியில் உள்ள பாதாள அறைகளே. சிம்பாசுரன் அங்கு வரும் விணம் அனைத்தையும் வரிசைப் படுத்தி உன்னிடம் அனுப்புவான். நீ அவைகளுக்கு சரியாக.. நமக்கு வேண்டிய கட்டளைகளை அவற்றிற்கு வழங்கி அவர்களை மற்றுமொரு அறைக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஒரு ஊரின் நரன்கள் அனைவரையும்  நமது அரண்மனையினுள் தள்ளி கதவடைத்ததும், உன் கட்டளைகள் படி அவர்களுக்கு பயிற்சி அளிக்க நமது நவியாகம்ஷி, மந்தாகிஷி, மிளானாசுரி, கோபரக்கன், சிகராசுரன், மந்திராசுரன், யாகம்யாழி ஆகியோர் அங்கே காத்திருப்பார்கள். அனைத்து நரன்களையும் விணமாக மாற்றி அவைகளுக்கு பயிற்சி அளித்ததும் அவைகளை மகுடாந்த மலைக்குள் கொண்டு அடைத்திட வேண்டும். அடுத்த ஊரை அழிக்க அவைகளையே உபயோகிக்கலாம். என்ன சொல்கிறாய் மதிநாகசுரா?”

“சபாஷ் ஆசானே நல்ல யோசனை ஆனால் ஒவ்வொரு அறையிலும் என்ன இருக்கப் போகிறது நரன்கள் அந்த அறைகளுக்குள் என்ன செய்ய வேண்டும்?”

“ஒவ்வொரு அறையிலும் பல வகையான ஜந்துக்கள் ஒளிந்துக் கொண்டு ஒரே ஒரு கேள்வியோ விளையாட்டோ விளையாட சொல்லவோ / கேட்கவோ செய்யும். பதில் சரியாக சொல்லிவிட்டால் அடுத்த அறைக்கு நேரே உள்ள கதவு வழி அடுத்த அறைக்குச் செல்லலாம். தவறென்றால் நான் முன் கூறியது போலவே வலது புற கதவு வழியே தீ பிழம்பில் விழவேண்டியது தான்”

“நரன்கள் கதவைத் திறந்ததும் தீ பிழம்பைப் பார்த்து விழ மறுத்தால்?”

“கவலை வேண்டாம் மதிநாகசுரா நான் நிறுவப் போகும் ஜந்து அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்கும். ஆம் அவர்கள் தீ பிழம்பில் குதிக்காவிட்டால் அந்த ஜந்து நரனை கொன்று தீயில் தள்ளிவிடும்.”

“முதலில் செல்பவன் பின்னால் ஓடி வந்து மற்றவர்களை எச்சரிக்கை செய்து விட்டால்?”

“அது எப்படி முடியும் உள்ளே செல்பவன் வெளியே வரவே முடியாது”

“வெளியே இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால”

“எப்படி வரும் மதிநாகசுரா. அவர்களிடம் முன்னதாகவே வென்றவர்கள் வேறு வழியே பொன்னும் பொருளுடனும் வெளியே சென்றிடுவார்கள் என்றும் ஒரு முறை உள்ளே சென்றால் பின் வாங்க முடியாது என்றும் நிபந்தனைப் போட்டுத் தானே மந்திராசுரன் அவர்களை இங்கு அழைத்து வருவான்.”

“அப்படி என்றால் சரி தான் ஆசானே. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ஆசானே?”

“நீ நமது பாதாளபுரி வனம் சென்று மற்ற அனைவரிடமும்  இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய வழிமுறைகளை விளக்கி அது படி செய்ய சொல்லி கட்டளையை பிறப்பிப்பாயாக.”

“தாங்களும் என்னுடன் வரப்போகிறீர்கள் தானே?”

“இல்லை மதிநாகசுரா. நான் இங்கேயே இருந்து நரன்களுக்குண்டான ஒவ்வொரு அறைக்கான ஜந்துக்களையும் கேள்விகளையும் தயார் செய்ய வேண்டும். மேலும் நாம் கொண்டு வரப்போகும் விணம் அனைத்தையும் தங்க வைக்க வேண்டிய ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். அதனால் நான் இங்கேயே இருந்துக் கொள்கிறேன். நாளை அரண்மனையில் காண்போம்.”

“தங்களுக்கு உதவிக்கு யாரேனும்….”

“யாரும் வேண்டாம் மதிநாகசுரா நானே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இன்றைய பொழுதை கழியுங்கள். உங்கள் அனைவருக்கும் என்றும் என் ஆசி உண்டு. நீ சென்று வா மகனே”

“சரி ஆசானே நான் விடைப் பெற்றுக் கொள்கிறேன்.”

“பைரவியே எம் இனம் தழைத்து எனது மதிநாகசுரன் அவன் தந்தைப் போலவே இந்த அண்ட சராசரத்தையும் கட்டி ஆள வேண்டும். அடேய் தேவேந்திரா உன் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறதடா. என் தலைவனையா அழித்தாய்? அவர் உதிரம் உன்னை அழிக்க வரப் போகிறதடா”

என்று பாறையில் வரைந்திருந்த பைரவி உருவத்தைப் பார்த்து ஆக்ரோஷமாக சொன்ன காற்கோடையன் சட்டென்று கலக்கமாகி இருகரங்களையும் கூப்பி வேண்டிக்க துவங்கினான்

“பாதாள பைரவி தாயே உன் பிள்ளைகளாகிய என் இனத்தவரை நீ தான் காக்க வேண்டும். மதிநாகசுரனிடம் திட்டத்தை விளக்கிவிட்டேன் ஆனால்….நான் உருவாக்கப் போகும் விணம் அனைத்துக்கும் விமோசனமும் உண்டு என்பதும் அது எவ்வாறு என்பதும் மதிநாகசுரனிடம் நான் கூறாமல் மறைத்ததன் காரணம் உனக்கு தெரியாததா என்ன தாயே!!! அவைகளுக்கு விமோசனமே கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் போதுமே. அவைகளை காப்பாற்ற எவனும் இன்னும் பிறந்திருக்க மாட்டான் என்பது என் நம்பிக்கை அதை நிறைவேற்ற வேண்டியது உன் வேலை தாயே!!! சரி நான் எனது வேலையில் இறங்கட்டும். ஆசி வழங்கு தாயே”

என பாதாள பைரவியிடம் ஆசி பெற்று காற்கோடையன் தன் வேலைகளில் மும்முரமானான். 

மதிநாகசுரன் பாதாளபுரிவனம் சென்றடையவும், சிகராசுரன் மற்றும் யாகம்யாழி இருவரும் தாரசி ஊருக்குள் யார் யாரை என்ன செய்யவேண்டும் என்ற விவரங்களை சேகரித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அனைவரையும் ஒன்று கூட்டி  அவர்களிடம் ஆசானின் முழு ஏற்பாடுகளையும் விவரித்து யார் யார் எப்படி அந்த அரண்மனைக்குள் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் புரியவைத்து, விடிந்ததும் மந்திராசுரன், நவியாகம்ஷி, மிளானாசுரி மூவரும் ஊருக்குள் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் மந்திராசுரன் அவர்களிடம் 

“நமது ஆசான் மகுடாந்த மலைக்கு செல்லும் முன் எனக்கு ஒரு கட்டளையை கொடுத்து அதை நிறைவேற்றும் படி சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அதை இப்போது செய்ய வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. எனக்கும் ஆசானுக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் யார் யாரை விரும்புகிறீர்கள் என்பது நன்கு தெரியும். இப்போதே அவர்களுக்கு திருமணம் நடந்தேறும்.”

“மந்திராசுரா என்ன சொல்கிறாய்? ஆசான் இல்லாமல் திருமணமா?”

என்றான் சிம்பாசுரன்

“ஆமாம் சிம்பா. சரி நேரம் கடத்தாமல் முதலில் மதிநாகசுரனும் நவியாகம்ஷியும்  நமது பைரவி முன் வந்து நில்லுங்கள்”

இருவரும் சென்று நின்றனர் அவர்களுக்கு அவர்கள் இனத்தின் வழக்கப் படி பைரவியின் கரங்களில் இருந்த ஒரு கூர்மையான வாளால் முதலில் மதிநாகசுரனின் வலது கையின் கைட்டைவிரலில் சிறு கீறல் போட்டப் பின் நவியாகம்ஷியின் வலது கையின் கைட்டைவிரலிலும் கீறல் போட்டான் மந்திராசுரன். மதிநாகசுரனை நவியாகம்ஷியின் நெற்றியில் தனது வலது கரம் கைட்டைவிரலின் ரத்தத்தால் திலகம் இடச் சொல்லி அதே போல நவியாகம்ஷியையும் மதிநாகசுரன் நெற்றியில் அவளது வலது கரத்தின் கைட்டைவிரலின் ரத்தத்தால் திலகம் இடச் செய்தபின் இருவரின் வலது கரங்களையும் இணைத்து இருவரின் ரத்தத்தையும் ஒன்றாகி பைரவி பாதத்தில் காணிக்கையாக கொடுத்து வணங்க செய்தபின் மதிநாகசுரனும் நவியாகம்ஷியும் தம்பதியாயினர். 

இதே போல சிம்பாசுரன் மந்தாகிஷிக்கும், கோபரக்கன் மிளானாசுரிக்கும் திருமணம் நடந்தேறியது. அடுத்து சிகராசுரனையும் யாகம்யாழியையும் அழைத்தான் மந்திராசுரன் ஆனால் இருவருமே வராமல் தயங்கினார்கள். அதை பார்த்த மந்திராசுரன்

“என்னவாயிற்று சிகராசுரா? ஏன் திருமணம் செய்ய தயக்கம் யாகம்யாழி? ம் ….பைரவி முன் வாருங்கள் இருவரும்”

“அண்ணா எனக்கு இப்போது திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணமே இல்லை. எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது செய்துக் கொள்கிறேன். என்னை வற்புறுத்தாதீர்கள். என்னை மன்னித்து விடு சிகராசுரா. உன்னை எனக்கு பிடிக்கும் ஆனால் திருமணம்…..”

“பரவாயில்லை யாகம்யாழி… எனக்கும் இப்போது திருமணம் செய்துக் கொள்வதில் உடன்பாடில்லை அதனால் நான் தவறாக எடுத்துக் கொள்ள ஒன்றுமேயில்லை. மந்திராசுரா நாங்கள் விரும்பும்போது திருமணம் செய்துக் கொள்கிறோம் இப்போது வேண்டாமே. ஆசானிடம் எங்களுக்காக நீ தான் விளக்க வேண்டும்.”

“இருவரும் ஒரே மாதிரி சிந்தித்துள்ளீர்கள் அதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் …..சரி நான் ஆசானிடம் சொல்லிக் கொள்கிறேன். இப்போது புது மண தம்பதியர் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும் நாம் மூவரும் ஆசானிடம் மகுடாந்த மலைக்கு சென்று வருவோம்”

“அப்படியே ஆகட்டும் அண்ணா” என்றாள் யாகம்யாழி

மந்திராசுரன், சிகராசுரன் மற்றும் யாகம்யாழி….மதிநாகசுரன் நவியாகம்ஷியையும், சிம்பாசுரன் மந்தாகிஷியையும், கோபரக்கன் மிளானாசுரியையும்  பாதாளபுரிவனத்தில் விட்டுவிட்டு மூவரும் மகுடாந்த மலைக்கு புறப்பட்டுச் சென்றனர். 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s