அத்தியாயம் 9: மகுடாந்த மலையில் மகுடி

காற்கோடையனும், மதிநாகசுரனும் மகுடாந்த மலையை சென்றடைந்தனர். அங்கே ஆசான் வேள்வி மேற்கொண்ட குகைக்குள் மதிநாகசுரனை அழைத்துச் சென்றார். இருவரும் உள்ளே சென்றதும் காற்கோடையன் மதிநாகசுனை ஒரு பாறையின் மீது அமரச் சொல்லி விட்டு குகையினுள் இருந்த இன்னுமொரு குகைக்குள் சென்றார். சற்று நேரமானது ஆசான் வராததால் அந்த குகையின் வாயிலில் நின்றுக்கொண்டு மதிநாகசுரன்

“ஆசானே! ஆசானே!! எங்கே இருக்கிறீர்கள்? நான் உள்ளே வரட்டுமா? ஆசானே ஏதேனும் பதில் அளியுங்கள்”

“ஆங் …ஆங் …மதி நீ அங்கேயே இரு இதோ வருகிறேன். சற்று பொருத்திரு இதோ வந்துக் கொண்டிருக்கிறேன்”

மதிநாகசுரன் குகைக்குள் எட்டிப் பார்த்தான். சற்று தொலைவில் சிரிய வெளிச்சம் அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டே மதிநாகசுரனை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.  அந்த வெளிச்சம் கிட்டே வர வர தான் தெரிந்தது அது தீ பந்தம் அதை பிடித்துக் கொண்டு வந்தவர் தனது ஆசான் என்று. உடனே 

“ஆசானே எங்கே போனீர்கள்? அந்த குகையினுள் என்ன இருக்கிறது? என்னை ஏன் அழைத்து செல்லவில்லை?” 

“மதிநாகசுரா அந்த குகையினுள் நமது வேள்விகளுக்கான மந்திரங்கள் கொண்ட ஓலைச் சுவடிகளும். நமது இனத்தைப் பற்றிய ஏடுகளும் மேலும் சில விவரங்கள் அடங்கிய ஒரு பொக்கிஷத்தை நான் இத்தனை ஆண்டுகளாக எழுதி, பேணி பாதுகாத்து, பராமரிப்பு செய்து வருகிறேன். அதனுள் ஒரு உக்கிரமான ஜந்துவையும் அடைத்து வளர்த்து வருகிறேன் அதற்கான தீனியை போட்டுவிட்டு இதோ இந்த ஓலையை எடுத்துவர தான் சென்றேன். விளக்கம் போதுமா இல்லை இன்னும் ஏதேனும் கலக்கம் உன் மனதில் உள்ளதா?”

“என்னையும் அழைத்து சென்றிருக்கலாம் பரவாயில்லை உள்ள என்ன ஜந்துவை வளர்த்து வருகிறீர்கள்? எதற்காக?”

“இந்த குகையைப் பற்றியும் இதனுள் இருப்பவையைப் பற்றியும் விவரமாக உனக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டமையால் தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன் மதிநாகசுரா”

“அப்படியா!!! அப்படி என்ன இங்கே இருக்கிறது ஆசானே? சொல்லுங்கள் கேட்டுக் கொள்கிறேன்.”

“சொல்கிறேன் மதிநாகசுரா சொல்கிறேன் கேள். இந்த குகை இருக்கும் இந்த இடத்தின் வாயிலில் இருந்து அஞ்சு மயில் தூரம் வரை வெளியே எவருக்கும் இப்படி ஒரு இடமிருப்பது தெரியாது. அங்கிருந்து பார்பவர்களுக்கு இது ஒரு முட்கள் நிறைந்த காடாக தான் தெரியும். என்னுடன் வருபவர்கள் மட்டும் நான் அனுமதித்தால் இந்த குகையை காண முடியும். அப்படி இதை நான் உருவாக்கியுள்ளேன். இந்த இடம் அந்த தேவேந்திரனுக்கு கூட தென்படாது. அவ்வளவு பாதுகாத்து வருகிறேன். நான் என் ஆசானாகிய சுக்கிராச்சாரியாரிடம் கற்றுக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டது “சஞ்சீவினி மந்திரம்”. அதை மட்டும் பிரயோகம் செய்ய முடிந்திருந்தால் நம் இனத்தை அன்றே உயிரோடு கொண்டுவந்திருப்பேன். ஆனால் அதை சரியாக கற்றுக் கொள்ள முடியாததால் என்னால் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. அப்போதும் என் முயற்சியை கைவிடவில்லை நான். அதற்கு தேவையான வேள்விகளை இத்தனை வருடங்களாக செய்து அந்த ஈசனின் அருளை நீ நரபலி கொடுத்த தினத்தன்று நான் பெற்றேன்.”

“அது என்ன சஞ்சீவினி மந்திரம் ஆசானே? அது என்ன செய்யும்?”

“என்ன செய்யுமா ?? அந்த மந்திரம் தெரிந்தால் இறந்தவர்களை உயிரோடு மீண்டும் கொண்டுவர முடியும்.”

“அப்படியானால் நமது இனத்தவர்களை மீண்டும் கொண்டு வரப் போகிறீர்களா ஆசானே?”

“இல்லை அது இப்போது சாத்தியமில்லை மதிநாகசுரா. ஏனெனில் எனக்கு அந்த மந்திரம் முழுவதுமாக தெரியாது “

“ஏன் உங்க ஆசான் தங்களுக்கு கற்றுத் தரவில்லையா?”

“கற்றுத் தந்திருக்கலாம் ஆனால் நான் கேட்டதில்லை. தேர்வர்களோடு என் முன்னவர்கள் போரிடும் போதெல்லாம் இறந்த நம்மவர்கள் மீண்டும் மீண்டும் உயிர்பிழைத்து வந்து மீண்டும் போரிட்டனர் . அப்போது அதைப் பார்த்த நான் அது இயற்கையாக நடக்கிறது என்று எண்ணினேன் ஆனால் என்று கசன் எங்கள் குருகுலத்தில் வந்து சேர்ந்தானோ அதன் பிறகு தான் எனக்கு தெளிவு பிறந்தது. நம்மவர்கள் உயிர்ப்பித்து வர காரணமாக இருந்தவர் என் ஆசான் சுக்கிராச்சாரியாரும் அவரின் சஞ்சீவினி மந்திரமும் தான் என்பதை புரிந்துக் கொண்டேன்”

“அது யார் கசன் ஆசானே? ஏப்படி அவர் வரவு தங்களுக்கு சஞ்சீவினி மந்திரத்தைப் பற்றி தெரிய வைத்தது?”

“அது பெரிய கதை மதிநாகசுரா”

“ஆசானே செல்லுங்கள் தெரிந்துக் கொள்கிறேன்”

“சரி சுருக்கமாக சொல்கிறேன் கேள். தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகனே கசன். சஞ்சீவினி மந்திரத்தை எனது ஆசான் சுக்ராச்சாரியாரிடமிருந்து குறுக்குவழியில் கற்றுக் கொள்ள தேவர்கள் குலகுருவான பிரகஸ்பதியின் மகனான கசனை சுக்ராச்சாரியரிடம் அனுப்பி வைத்தார்கள். அவனும் குருகுலம் வந்த நாளிலிருந்து எங்களை எந்த வேலையையும் செய்ய விடாமல் எல்லாவற்றையும் அவனே செய்து குருவிடம் நன்மதிப்பைப் பெற்றான். அப்போது நம்மவர்களுக்கு அவன் வந்த நோக்கம் தெரிய வந்ததும் அவனை முதல் முறை கூறு கூறாக வெட்டி ஓநாய்களுக்கு இறையாக்கினர். ஆனால் சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி கசன் மீது அதீத அன்பு வைத்திருந்ததால் தன் தந்தையிடம் அவனை உயிருடன் கொண்டு வரவேண்டும் என்று கூறினாள். அவரும் ஏதோ ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஓநாய்களின் வயிற்றிப் பிளந்துக் கொண்டு உயிருடன் வந்தான் கசன். அன்று தான் எனக்கு புரிந்தது நம்மவர்கள் எவ்வாறு மாண்டதும் உயிருடன் வந்தார்கள் என்பதும். நம்மவர்கள் கசனை விடவில்லை. இரண்டாவது முறை அவனை வெட்டி கூழாக்கி கடலில் கரைத்தனர். அப்போதும் எனது குரு அவனை உயிருடன் கொண்டுவந்தார். மூன்றாவது முறை நம்மவர்கள் கசனை கொன்று எரித்து அவன் சாம்பலை சோமபானத்தில் கலந்து சுக்ராச்சாரியாருக்கே அருந்த கொடுத்தனர். அவரும் அதை வாங்கி அருந்தினார்.”

“அய்யயோ இப்போது கசன் தங்கள் குருவினுள் சென்று விட்டானே!!!”

“ஆம் கசன் குருவின் வயிற்றிலிருந்து தன்னை காப்பாற்றும் படி கூற அதைக் கேட்ட சுக்ராச்சாரியார் மூன்றாவது முறையாக சஞ்சீவினி மந்திரத்தை உச்சாடனம் செய்தால் கசன் அவர் வயிற்றை கழித்துக் கொண்டு வந்திடுவான் ஆனால் சுக்ராச்சாரியார் இறந்திடுவார். அவர் தேவயானியிடம்  நிலைமையை விளக்க அவள் கண்களில் கண்ணீர் பெருக இருவருமே தனக்கு வேண்டுமென்று கூறினாள். உடனே அவர் மிகவும் யோச்சித்து பின் சஞ்சீவினி மந்திரத்தை கசனுக்கு கற்பிக்கலானார். நான் நடந்தவற்றை எல்லாம் அங்கிருந்த மரத்தின் பின்னாலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தேன். அப்போது அவர் கசனுக்கு கற்பித்த சஞ்சீவினி மந்திரத்தை நானும் கற்றுக் கொண்டேன். கசன் மந்திரத்தை ஆசானின் வயிற்றினுள் இருந்து உச்சாடனம் செய்து சுக்ராச்சாரியார் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். அவன் வந்ததும் எனது ஆசான் மாண்டு விழுந்தார். அவரை ஓடி போய் தாங்கிப் பிடிக்க என் கைகள் துடித்தது ஆனால் கால்கள் நகராமல் புதகுழியில் சிக்கியது போல ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்றிருந்தேன். என் கண்கள் முன்னால் கசன் சஞ்சீவினி மந்திரத்தை உச்சாடனம் செய்து சுக்ராச்சாரியாரை உயிர்ப்பிக்கச் செய்தான். அவர் உயிருடன் வந்ததும் கசன் தான் யார் என்பதையும் எதற்கு வந்தான் என்பதையும் சுக்ராச்சாரியாரிடம் விளக்கமாக கூறி விடைப் பெற வேண்டி நின்றவனை பார்த்த தேவயானி அவளை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கசனிடம் கூறினாள். அதற்கு அவன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து வந்ததால் அவர் அவனுக்கு தாயுமானவர் ஆகிரார் என்றும் தேவையானி அவனுக்கு அக்கா என்றும் கூறி மறுத்தான். அதற்கு தேவயானி அவனுக்கு அவன் கற்ற சஞ்சீவினி மந்திரம் தக்க சமையத்தில் பிரயோகிக்க முடியாமல் போகும் என்று சாபமிட்டாள். அதைக் கேட்ட கசன் தனக்கு பயனளிக்காது போனாலும் பரவாயில்லை ஆனால் தேவர்களுக்கு முறையாக சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் அந்த பிரகஸ்பதியின் மகனான கசன். அன்று தான் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்டேன். ஆனால் அதை சரியாக கற்றுக் கொள்ளவில்லை என்பதை நமது இனத்தை தேவர்கள் அன்று என் கண் முன்னே அழித்த போது, சஞ்சீவினி மந்திரத்தை உச்சாடனம் செய்தேன், அவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்காக, ஆனால் எவருமே உயிர்த்தெழவில்லை. அப்போது தான் எனக்கு புரிந்தது நான் சரியாக கேட்டுக் கற்கவில்லை என்பது.”

“அந்த தேர்வகளுக்கு சஞ்சீவினி மந்திரம் தெரியுமா? பிறகு நாம் எவ்வாறு அவர்களை அழிப்பது? ஈசன் தங்களுக்கு அருளியது என்ன?”

“கசன் தேவர்களுக்கு கற்றுக் கொடுத்தானா இல்லையா? அவர்களுக்கு அந்த மந்திரம் தெரியுமா தெரியாதா? அவர்கள் அதை எப்போதாவது பிரயோகித்துப் பார்த்தார்களா என்பதைப் பற்றி எல்லாம் நாம் அச்சம் கொள்ள வேண்டாம். ஏனெனில் நமது தலைவன் உன் தந்தை ஆண்ட பொழுது அவர்கள் அப்படி பயந்து நடுங்கியதைப் பார்த்தால் அவர்களுக்கு அந்த மந்திரம் தெரியாதது போல தான் எனக்குப் பட்டது. அதை எல்லாம் விட்டுத் தள்ளு மதிநாகசுரா. நீ தெரிந்துக் கொள்வதற்காகவும், நீ கேட்டதாலும் இவைகளை சொன்னேன். நாம் நமது முயற்சிகளை கைவிடாமல் செய்துக் கொண்டே இருப்போம். இறுதியில் வெற்றி நமதாக்குவோம் புரிகிறதா?” 

“புரிகிறது ஆசானே. நன்றாக புரிகிறது. ஈசன் தங்கள் வேள்விக்கு என்ன தந்தார் என்பதைப் பற்றி சொல்லுங்கள் ஆசானே”

“சஞ்சீவினி மந்திரத்தை கேட்டு தான் வேள்வி மேற்கொண்டேன் ஆனால் எனக்கு கிடைத்தது அதே போல ஒரு மந்திரம் தான். அதன் பெயர் சாம்பீனி மந்திரம்”

“அதை போல ஒன்றா? சற்றுப் புரியும்படி சொல்லுங்கள் ஆசானே!”

“அதாவது எனக்கு கிடைத்த சாம்பீனி மந்திரத்தை உச்சாடனம் செய்தால் இறந்தவர்கள் உயிர்பிழைப்பார்கள் ஆனால் பேசாது, விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியில்லாதவராக்கப் பட்ட ஒரு விணமாக தான் இருப்பார்கள்.”

“அதை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்ய முடியும் ஆசானே?”

“அப்படி இருக்கும் ஜடங்களை நமது அடிமைகளாக்கி நாம் சொல்வதை எல்லாம் அப்படியே செய்ய வைக்க வேண்டும்.”

“அது முடியுமா?”

“எந்த வித உணர்ச்சியுமில்லாத அவைகளை நன்றாக தீனிப் போட்டு நமக்கு வேண்டியவைகளை செய்ய வைக்க வேண்டும். முடிந்தால் முடியாதது ஒன்றுமில்லை மதிநாகசுரா”

“அப்போ இந்த குகையினுள் தாங்கள் வைத்துள்ள ஜந்து அது போல உருவாக்கப்பட்டதா?”

“பரவாயில்லையே புரிந்துக் கொண்டு விட்டாயே. பலே! பலே! ஆனால் நான் என் மந்திரத்தை நரன் மீது செலுத்தாமல் ஒரு நரி மீது செலுத்திப் பார்த்ததில் உருவனாது தான் அந்த ஜந்து. அதற்கு தேவையானதை கொடுத்தால் நான் சொல்வதை எல்லாம் அது செய்யும். அதைப் போலவே நாளை முதல் ஒவ்வொரு ஊராகச் சென்று எல்லா நரன்களையும் மாற்றுவோம்.”

“அதை மந்திராசுரன் பரமபத மனையினுள் நரன்களை அழைத்து வந்ததுமே செய்திடலாமே எதற்காக இதில் ஒரு விளையாட்டு விளையாட வேண்டும் ஆசானே?”

“மந்திரத்தை உச்சாடனம் செய்ய நேரமாகாதா மதிநாகசுரா? அதுவரை அவர்களை கையாள்வது எப்படி அதற்குதான் இந்த ஏற்பாடு”

“சரி இதில் எனக்கும் சிம்பாசுரனுக்கும் என்ன வேலை?”

“அதை சொல்வதற்கு முன் நமது பரமபத மனையைப் பற்றி விளக்குகிறேன். இதோ இந்த ஓலைச்சுவடியை பிரித்துப் பார் அதில் தான் நமது பரமபத அரண்மனையின் முழு விவரங்களும் உள்ளது. இந்தா இதைப் பிடி …ம்…. விரித்து வை.”

காற்கோடையன் அந்த ஓலைச் சுருளை விரித்தான். ஓலை இலைகளை இறுக்கக் கட்டி ஒரு பாய் போல செய்து அதில் அழகான அரண்மணையின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அதனுள் பல வகையான குறியீடுகள் இருந்தன அதில் ஒன்றைப் பார்த்த மதிநாகசுரன்…

“ஆசானே இது என்ன பல இடங்களில் நாகங்கள் படமெடுத்த வண்ணம் இருக்கிறது? இது என்ன அங்கே விஷ சிலந்திகள் நிறைந்திருக்கிறது? அழகான அரண்மனையில் ஏன் இந்த விஷ ஜந்துக்கள்?”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s