அத்தியாயம் 8: திட்டம் தீட்டப்பட்டது

மந்திராசுரன் ஆசான் காற்கோடையன் சொன்ன ஓலை சுருளை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான். அதைப் பார்த்ததும் மதிநாகசுரனின் கண்கள் விரிந்தன, முகம் மலர்ந்தது, வேகமாக ஆசானின் அருகில் சென்று நின்றான். 

காற்கோடையன் அந்த ஓலைச் சுருளை  பலி பீடத்தின் மேல் விரித்து வைத்து 

“என் செல்வங்களே இந்த ஓலையில் உள்ள இடங்களை எல்லாம் நமதாக்கி அங்கிருக்கும் நரன்களை எல்லாம் நம் படைகளாக்க வேண்டும்” 

“மிகவும் அற்புதமாக வரைந்துள்ளீர் ஆசானே! எனக்கு இதைப் பார்க்கும் பொழுதே அனைத்திலும் நமது கொடி பறப்பதுப் போல தோன்றுகிறது. இதில் எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?”

“மதிநாகசுரா நாம் தராசியின் பாதாள லோகத்தில் இப்போது உள்ளோம் முதலில் நம் பாதாளபுரிவனத்தின் மேல் உள்ள தராசியை கைப் பற்றுவோம் அதன் பின் வரிசையாக சௌனி, சன்டோகன்டகம், புமதானி, ரோதகனி, நாகிரி,  மேலன், போகனி, எம்னி, நாகதிப்பா, அனுரோகமி, கலீபி ஆகிய ஊர்களை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும். அதன் பின்னர் பூர்வா ரச்னாக்கர் சாகர் வழியே சென்று  காலிங்கா, ஓதரா, உட்கலா, வாங்கா, ஷுமா, அங்கா, விதேஹா, விரிஜி, மல்லா, ஷக்கியா, கோசலா, கஷி, வட்ஸா, மாயாபுரி, கொசம்பி, பிரயாகா, கிட்சக்கா, சேடி, கருஷா, அனுபா, அவன்த்தி புரி, ஹேயாயா, த்ரிகான்தக் என அப்படியே மேலே சென்று இதே வரிசையில் அனைத்து இடங்களிலும் நாமே வியாபித்திருப்போம். இப்படியே அனைத்தையும் நமதாக்கி பத்து அசுரர்கள் பல ஆயிரம் அசுரர்களாக படை எடுத்து  தேவேந்திரனை நேருக்கு நேர் சந்திப்போம். என்ன சொல்கிறீர்கள்?  இதில் நமக்கே கூட தீங்கு நேரிடலாம் நம்மவர்களை இழக்கவும் செய்யலாம்!!! இந்த மாஹா யுதத்திற்கு நீங்கள் அனைவரும் தயாரா?”

“நாங்கள் தயார் ஆசானே” என்று அனைவரும் ஒருமித்துக் கூறினர். 

“மிக்க மகிழ்ச்சி. நாளை முதல் நமக்கு ஓய்வு இல்லை. ஆகையால் இன்றைய தினத்தை தாங்கள் அனைவரும் சந்தோஷமாக விரும்பியவையை செய்தும், உண்டும் மகிழுங்கள்.”

ஆனாலும் மதிநாகசுரன் ஏதோ சிந்தனையிலிருந்ததை கவனித்த காற்கோடையன் 

“என்ன மதிநாகசுரா ஓலையை கண்டதும் உன் முகத்திலிருந்த பிரகாசம் இப்போது மங்கியுள்ளதே!! ஏன்?”

“ஆசானே அனைத்தும் சரி தான். ஆனால்….”

“என்ன ஆனால்?”

“நாம் பத்துப் பேர் தான் உள்ளோம் நமது சித்தியையும் சரிவர பிரயோகம் செய்வது கடினம், அப்படியே செய்தாலும் காலதாமதமாகும் என்றீர். அதற்கு மாற்று வழி உள்ளது என்றும் கூறினீர்கள் ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே தாங்கள் கூறவில்லையே என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்”

“அப்படி கேள் மதிநாகசுரா!!! தலைவன் மகனாயிற்றே அவரின் அறிவும், வல்லமையும் இல்லாமல் போய்விடுமா என்ன? அதை நீ உன் அவசரப் புத்தியால் மறந்திட்டாயோ என்று நினைத்தேன்!! பரவாயில்லை ஞாபகம் இருக்கிறதே!!”

“இவை எல்லாம் மறக்கக்கூடியதா ஆசானே?”

“சொல்கிறேன் அனைவரும் நன்றாக கேளுங்கள். நாம் ஒவ்வொரு ஊருக்கு சென்றதும் அதன் எல்லையில் நான் ஒரு அரண்மனையை எனது மந்திரத்தால் உருவாக்குவேன். அதற்கு சற்று நேரமெடுக்கும் அந்த நேரத்தில் கோபரக்கன் நீ உனது மகிமா சித்தியை பிரயோகம் செய்து நமது அரண்மனை உருவாகும் வரை மறைத்திட வேண்டும்”

“ஆகட்டும் ஆசானே” என்றான் கோபரக்கன்

“மந்திராசுரா நீ பிராகாமியம் சித்தியை உபயோகித்து அந்த ஊர் பெரியவனாக அல்லது அரசனாக வேண்டும். அவ்வாறு ஆனதும் ஊர் எல்லையில் ஒரு பரமபத  மனை ஒன்று நிறுவப்பட்டுள்ளது அதனுள் சென்று அங்கே இருக்கும் பரமபதம் விளையாட்டை விளையாடினால் நாம் நினைத்ததெல்லாம் நடந்தேறும் மற்றும் அதில் வெற்றிப் பெற்றால் விலை மதிப்பில்லா பொன்னும் பொருளும் அளிக்கப்படும் என்று உனக்கு ஓலை வந்துள்ளதாகவும் அதன் படி அனைவரும் சென்று விளையாட வேண்டுமென்றும் ஒரு ஆணையைப் பிரப்பித்து நமது அரண்மனைக்கு அந்நாட்டு அல்லது அவ்வூர் மக்கள் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் அழைத்து வரவேண்டும் புரிகிறதா?”

“நன்றாக புரிகிறது ஆசானே” என்றான் மந்திராசுரன்

“நவியாகம்ஷி, மிளானாசுரி நீங்கள் இருவரும் அவ்வூரிலிருக்கும் முக்கியமான இருவரை உங்களின் பிராப்தி மற்றும் வசித்துவம் சித்தியை உபயோகித்து வசப்படுத்தி மந்திராசுரன் போடும் கட்டளைகளுக்கு ஊர் மக்களிடமிருந்து மாற்றுக் கருத்து வராது காக்க வேண்டும் சரியா”

“அப்படியே செய்கிறோம் ஆசானே”

என்று ஒருசேர சொன்னார்கள் நவியாகம்ஷியும், மிளானாசுரியும்

“சிகராசுரன், யாகம்யாழி இருவரும் அவரவர் சித்திகளான இலகிமா மற்றும் அணிமா ஆகியவைகளை பிரயோகித்து எனக்கும் மதிநாகசுரனுக்கும் ஒற்றன் வேலை பார்த்து நடப்பவைகளையும் நரன்களின் எண்ணங்களையும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதைப் பொருத்தே நாங்கள் அடுத்தடுத்த யுக்திகளை செயல்படுத்த முடியும். செய்வீர்களா”

“நிச்சயமாக செய்வோம் ஆசானே எங்களுடன் மந்தாகிஷியையும் சேர்த்துக் கொள்ளலாமா? ஏனெனில் அவளும் அணிமா வில் தேர்ச்சிப் பெற்றவளாயிற்றே”  என்று சிகராசுரனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே சொன்னாள் யாகம்யாழி.

“அதுவும் சரிதான் மந்தாகிஷி நீயும் அவ்விருவருடனும் சேர்ந்து சென்று அதே வேலையை செய்வாயாக”

“ஆகட்டும் ஆசானே” என்று சிகராசுரனுடன் சேர்ந்திருக்கும் வாய்ப்பை தவறவிட மனமில்லாமல் கூறினாள் மந்தாகிஷி. 

சிம்பாசுரன் தானாக முன் வந்து 

“ஆசானே எனக்கு எந்த வேலையும் தாங்கள் தரவில்லையே” என்றான்

“சிம்பாசுரா நீயும், மதிநாகசுரனும் என்னுடன் நமது அரண்மனையிலிருக்க வேண்டும். நாம் மூவர் இருப்பது வெளியே எவருக்கும் தெரியக் கூடாது புரிகிறதா?”

“புரியவில்லை ஆசானே. ஏன் நாம் இருப்பது வெளியே தெரியக் கூடாது?” என்று கேட்டான் மதிநாகசுரன்

“மதிநாகசுரா நான் முன்பு கூறியதுப் போல எல்லா காரியங்களுக்கும் காரணமிருக்கும் அது தங்களுக்கு தெரிய வேண்டிய நேரத்தில் தானாக தெரிய வரும்” 

“ஆகட்டும் ஆசானே காத்திருக்கிறேன்” 

“அதுதான் தலைவனுக்கு அழகு. சரி தாங்கள் அனைவருக்கும் அவரவர் செய்ய வேண்டியது அனைத்தும் புரிந்ததா? நாளை முதலில் செயலில் இறங்க வேண்டியவர்கள் சிகராசுரன், மந்தாகிஷி மற்றும் யாகம்யாழி. நீங்கள் மூவரும் சென்று யார்யார் என்னென்னவாக வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு  வந்து எங்களிடம் தெரிவித்ததும் மந்திராசுரன், நவியாகஷி மற்றும் மிளானாசுரி அதுபடியே நமது இந்த பரமபதம் ஆட்டத்தின் காய்களாகிய நரன்களை நம் அரண்மனைக்கு கொண்டு வரவேண்டும்” 

“அதன் பின் தான் நமது ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கும். நீங்கள் அனைவரும் உங்களுக்குத் தரப்பட்ட வேலையை செவ்வனே செய்தால் தான் நாங்கள் மூவரும் எங்கள் வேலையில் இறங்க முடியும் புரிகிறதா? இதில் எவருமே கால விரயம் ஏற்படாமல் அனைத்தையும் நிகழ்த்தி முடித்து அடுத்த ஊரின் எல்லையை சென்றடைய வேண்டும். இப்படியே எல்லா ஊர்களிலுள்ள நரன்களையும் நமது படைகளாக மாற்றுவோம். ஹே! ஹே! பாதாள பைரவி”

என்று காற்கோடையன் சொன்னதும் அனைவருமாக மூன்று முறை 

“ஹே! ஹே! பாதாள பைரவி” என கூறினார்கள். அப்போது மதிநாகசுரன் காற்கோடையனிடம்

“ஆசானே நாம் நீங்கள் உருவாக்கப் போகும் அரண்மனையினுள் நரன்களை மந்திராசுரன் அழைத்து வந்ததும் எப்படி நமது படைகளாக்குவோம்? ஏன் மந்திராசுரன் அப்படி ஒரு விளையாட்டை விளையாட வேண்டி அழைத்து வரவேண்டும்? அதிலும் பெண்களும் குழந்தைகளும் எதற்கு?” 

“அது தானே நமது சித்து விளையாட்டு. அவர்கள் உள்ளே வந்ததும் நமது பரமபத அரண்மனையைப் பார்த்ததும் பிரம்மிப்பிலேயே பாதி பேரை நமது படைகளாக்கிடுவோம் மீதியை சற்று நேரம் விளையாட விட்டும், விளையாட்டு காட்டியும் அவரவர்களின் திறமைக்கேற்ப நமது படையில் பதவிகள் கொடுப்போம் புரிகிறதா?”

“அதெல்லாம் புரிகிறது ஆனால் அதுதான் எப்படி படைகளாக்குவது என்பது தான் புரியாத புதிராகவே இருக்கிறது. மேலும் ஒவ்வொரு ஊரிலும் இப்படிச் செய்தால் காலம் விரையம் ஆகாதா?”

“ஆகாது மதிநாகசுரா ஆகாது. ஒரு ஊரை நம் வசப்படுத்தவும் அவ்வூரிலுள்ள நரன்களை நமது படைகளாக மாற்றவும்  இரண்டு அல்லது மூன்றே நாட்கள் தான் எடுக்கும் என்பது என் கணக்கு. அதை நாளை துவங்கினால் தெரிந்திடுமே! காலம் விடயமாகும் என்றிருந்தால் அப்போது நமது திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய் மதிநாகசுரா?”

“அப்படி என்றால் எனக்கு சம்மதம் ஆனால் இதில் நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கான பணி என்ன என்பதைப் பற்றி தாங்கள் ஒன்றுமே கூறவில்லையே?”

“நாம் மூவரும் தான் நான் கூறிய பரமபத ஆட்டத்தையே ஆட்டுவிக்கப் போகிறோம் மதிநாகசுரா”

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஆசானே?” என்று கேட்டான் மதிநாகசுரன்

“எனக்குள்ளும் அதே கேள்வி உள்ளது ஆசானே” என்றான் சிம்பாசுரன்

“அதை சொல்வதற்கு முன் நமது பரமபத அரண்மனை எப்படி நிறுவப் போகிறோம் என்பதை சொன்ன பிறகு தான் உங்கள் இருவரின் பங்களிப்பு அதில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கூற முடியும்”

“ஆஹா !! ஆஹா!! சொல்லுங்கள் ஆசானே கேட்க ஆவலாக உள்ளோம். என்ன நண்பர்களே அப்படித்தானே?”

“ஆமாம்! ஆமாம்! ஆமாம்! ஆமாம்! ஆமாம்! ஆமாம்! ஆமாம்!”

என்று அனைவரும் கூறிக் கொண்டே காற்கோடையன் பக்கம் திரும்பி அகண்டு விரிந்த கண்களுடனும், முழு கவனத்துடனும் அவர் சொல்லப் போவதைக் கேட்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது காற்கோடையன் அவர்களிடம்

“எப்படியும் நாளை உங்களுக்கு தெரியத்தான் போகிறது அதற்குள் ஏன் இந்த அவசரம்? நான் முன் கூறியது போல தங்கள் அனைவருக்கும் நிதானமாக உண்டு உறங்கி சந்தோஷிக்க கிடைத்துள்ள கடைசி நாள் இதுதான். இதையும் திட்டத்தைக் கேட்டே செலவிடப் போகிறீர்களா என்ன? அதுதான் யார்யார் என்னென்ன செய்ய வேண்டுமென்று கூறிவிட்டேனே அதன்படி நாளைமுதல் நடந்துக் கொள்ளுங்கள் மற்றவை எல்லாம் தானாக நீங்களே தெரிந்துக் கொள்ளும் நேரம் வரும் போது தெரிந்துக் கொள்ளத் தான் போகிறீர்கள். நான் உங்களுக்கு கிடைத்த இந்த நாளை எனது பரமபத மனையை விளக்கி வீணடிக்க விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் இப்போது கலைந்துச் சென்று உங்கள் மனம் போல் இருந்து மகிழ்ச்சியுறுங்கள். என்ன சரிதானே?”

என்று காற்கோடையன் சொன்னதும் அனைவரும் கலைந்துச் சென்றனர் ஆனால் மதிநாகசுரன் அங்கேயே அமர்ந்திருந்தான். காற்கோடையன் மந்திராசுரனை அழைத்து 

“மந்திராசுரா இந்த ஓலையை பார்த்து அது போலவே நான்கு ஓலைகளில் வரைந்து விட்டு அவ்வனைத்தையும் சுருட்டி எடுத்த இடத்திலேயே வைத்துவிடு. புரிந்ததா?” 

“புரிந்தது ஆசானே. அவ்வாறே செய்து முடிக்கிறேன். விடை கொடுங்கள்” என்றான் மந்திராசுரன்

“சென்று வா மந்திராசுரா சென்று வா” என்று காற்கோடையன் மந்திராசுரனுக்கு விடைக் கொடுத்தப்பின் மதிநாகசுரனைப் பார்த்து

“மதிநாகசுரா உன் மனதில் பல கேள்விகள் இருப்பதை நான் அறிவேன்”

“ஆம் ஆசானே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கான பதில்கள்……”

“எழுந்து வா என்னுடன். நாம் மகுடாந்த மலை வரை சென்று வருவோம்”

“மகுடாந்த மலைக்கா!!! அதுவும் நாளை இவ்வளவு பெரிய வேலையை வைத்துக் கொண்டு இப்போது ஏன் அங்கே செல்ல வேண்டும்?”

“உனக்கு பதில் வேண்டுமா? வேண்டாமா?”

“நிச்சயம் வேண்டும். இல்லையெனில் என்னால் முழுமையாக எதிலும் ஈடுபட முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றம் என்னுள் எழுகிறது”

“அப்போ என்னுடன் வா”

“சரி ஆசானே உடனே கிளம்புவோம்”

என்று மதிநாகசுரன் கூறியதும் ஆசானும் சிஷ்யனுமாக மகுடாந்த மலைக்குச் சென்றனர். அங்கே அப்படி என்ன இருக்கிறது? அங்கே சென்று மதிநாகசுரன் தெரிந்துக் கொள்ள வேண்டிய ரகசியம் தான் என்ன? ஆசானுடன் செல்லும் மதிநாகசுரன் பாதாளபுரிவனம் திரும்பும் போது அவன் மனதிலுள்ள சந்தேகங்கள் நீங்கி தெளிவு பிறக்குமா? காற்கோடையன் உருவாக்கப் போகும் அந்த பரமபத அரண்மனையில் என்ன தான் இருக்கப் போகிறது? 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s