அத்தியாயம் 7: அதிர்வும்!! விதிர்ப்பும்!!

நரன் பலியானதும் அண்டசராசரங்களும் அதிர்ந்தது. தேவலொகத்திலும் அதிர்வலைகளை உணர்ந்தனர். 

அனைத்தும் அறிந்தும் மஹாவிஷ்ணு எந்த வித சலனமுமின்றி கண்களை மூடியப்படியே அனந்தசயனத்திலிருந்தார். அதிர்வை உணர்ந்த மாஹாலட்சுமி 

“சுவாமி இப்பொழுது  ஏன் இந்த அதிர்வு ? என்ன நடந்துள்ளது அல்லது என்ன நடக்கவுள்ளது?”

“தேவி நான் முன் கூறியது போலவே நடக்கத்துவங்கியுள்ளது. இனி நாம் காண நிறைய இருக்கிறது. இதற்கே பதற்றமடைந்தால் எப்படி? பொறுமையாக நடக்க இருப்பதைப் பார்ப்போம்.”

“சுவாமி தங்களுக்கு அறியாதது ஒன்றுமில்லை நடக்க இருப்பதை தாங்கள் தடுக்க வழியில்லையா?”

“ஹா! ஹா!  ஹா! தடுப்பதா? எப்படி தேவி? இது விதியின் விளையாட்டு, அவரவரே பொறுப்பேற்று விளையாடும் பரமபதம் துவங்கியுள்ளது அவ்வளவு தான். ஆட்டம் ஆரம்பத்திலேயே தடுத்தால் சுவாரஸ்யம் இருக்காதே!!! ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் தான் முடிக்கவும் வேண்டும். இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை தேவி. இனி யார் யாரை எந்தெந்த பாம்புகள் கடிக்கப் போகிறதோ!!!! யார் யாரை ஏணி ஏற்றிவிடப் போகிறதோ? யார் யாரெல்லாம்  இந்த ஆட்டத்தில் புதிதாக சேரப்போகிறார்களோ? எங்கெங்கு  கொண்டுச் செல்லப் போகிறதோ?”

“சுவாமி தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தங்களிடம் பதில் இருந்தும் ஏன் இவ்வாறு ஒரு விளையாட்டை ஆடவிட வேண்டும்?”

“தேவி!!! என்னதிது ஏதோ நான் தான் ஆட்டத்தை ஆட வைப்பது போல கூறுகிறாய்? இதற்கும் இந்த பரந்தாமனா!!!! எனக்கும் அவர்கள் ஆட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. பொறுத்திருந்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆட்டத்தின் வெட்பம் தாங்காமல் யார் நம்மிடம் வருகிறார்களோ அப்பொழுது  ஆட்டத்தை எப்படி முடிப்பது என்பதைப் பற்றியோ இல்லை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதைப் பற்றியோ முடிவு செய்துக் கொள்வோம்”

அனைத்து லோகங்களையும் இருள் சூழ்ந்தது. இந்திரனும் மற்ற தேவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்த அசுரருடனான ஒரு பிரச்சினையையும் அதில் அவர்கள் இழைத்த சிறு தவறையும் மறந்து போயிருந்தனர். அவ்வாறு மறந்தால் தான் மீண்டும் தவறிழைக்க சௌகர்யமாக இருக்கும் என்பதாலேயே அவர்களை அப்படி படைத்துள்ளார் நமது படைக்கும் கடவுள் என்ற எண்ணத்தை தான் நமக்கு தோன்ற வைக்கிறது அவர்களின் நடவடிக்கைகள். அவர்களில் சூரியனுக்கு ஏதோ பதற்றம் வர அவர் இந்திரனிடம்

“தேவேந்திரா எனக்கென்னவோ நாம் செய்த ஏதோ ஒரு தவறு தான் இப்படி எல்லாம் இப்பொழுது நிகழ வைக்கிறது என்று தோன்றுகிறது.”

“ஏன் அது நாம் இழைத்ததாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? இந்த மேல்லோகத்தில் தவறிழைக்க வேறு யாரும் இல்லையா? தீயது எது நடந்தாலும் தேவர்கள் தான் காரணமாக இருக்க வேண்டுமா என்ன? இப்படி  நாமே சொல்லிக் கொண்டோமேயானால் பிற்காலத்தில் நாம் செய்யாத தவறுகளையும் நம் தலையில் போட்டு விடுவார்கள் புரிகிறதா? தயவுசெய்து அவரவர் வேலைகளை அவரவர் செய்யுங்கள். எது வந்தாலும் நமது பரந்தாமன் பார்த்துக் கொள்வார்”

என்ற தைரியம் தான் இவர்கள் தொடர்ந்து தவறிழைக்க மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.

நரபலி கொடுத்ததும், மதிநாகசுரன் புதிதாக பிறந்தது போல உணர்ந்தான். அனைவரும் பாதாள பைரவியின் காலில் விழுந்து எழுந்தனர். அப்போது காற்கோடையன்

“மதிநாகசுரா உனக்கு இன்று முதல் வெற்றி மட்டுமே வரப்போகிறது. வெற்றிக்கு விலாசமே நீயாகத்தான் இருக்கப் போகிறாய்.”

“நன்றி ஆசானே எல்லாம் தாங்கள் சொல்லிக் கொடுத்தது தானே. நான் தங்களிடம் ஆலோசனைக் கேட்காமல் அன்றே பலி கொடுத்திருந்தால் இப்படி நான் உணர்ந்திருக்கமாட்டேன். ஆனால் இன்று எனக்குள் ஒரு வகையான புதிய சக்தி பிறந்திருப்பதைப் போல இருக்கிறது.”

“மதிநாகசுரா அந்த உணர்வு நீ காலை முதல் இரவு வரை உச்சரித்த மந்திரத்தின் பிரதிபலிப்பே!!! அதற்கு சற்றே வீரியம் சேர்த்தது இந்த பலி அவ்வளவு தான். நரபலியால் மட்டுமே  இது நடக்க சாத்தியமில்லை. நேரம், காலம், மந்திரங்கள், பலி ஆகிய அனைத்தும் ஒருசேரவே நீ இந்த நிலையை அடையக்காரணமானது புரிகிறதா?”

“நன்றாக புரிந்துக் கொண்டேன் ஆசானே. இனி நாம் நமது படையைத் திரட்டும் வேலையில் இறங்க வேண்டும். அதற்கான கால நேரம் எப்பொழுது ஆசானே?”

“பொறுமை மதிநாகசுரா பொறுமை. முதலில் இந்த வேள்வி வெற்றிகரமாக நடந்தேறியதற்கு காரணமான மந்திராசுரன், நவியாகம்ஷி,  சிம்பாசுரன், கோபரக்கன், சிகராசுரன், மிளானாசுரி, யாகம்யாழி மற்றும் மந்தாகிஷி 

 அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஆட்டத்தை துவங்க உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் மிக மிக முக்கியமானதாகும். என்ன மதிநாகசுரா? நான் சொல்வது சரிதானே?  நீயும் இதைத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”

“ம்…ம்.. ஆமாம் ஆசானே. தங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”

“மதிநாகசுரா “நன்றி” உன் மனதிலிருந்து வந்தது போல தெரியவில்லையே”

“இல்லை ஆசானே அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நான் மனதாரத் தான் சொன்னேன்”

“அப்படி என்றால் சரி. இப்பொழுது நீங்கள் அனைவரும் நன்றாக உறங்குங்கள். இன்று வரை நாம் பதுங்கியது போதும் நாளை முதல் பாய்வதற்கான ஆயத்தங்களை செய்ய களத்தில் இறங்க வேண்டும். ம்..ம்.. அவரவர் இருப்பிடத்திற்கு செல்லுங்கள்”

என்று காற்கோடையன் கூறியதும் அனைவரும் கலைந்து போனார்கள். அப்போது ஆசானான காற்கோடையன் மதிநாகசுரனிடம் ஏதோ மனமாற்றம் வந்திருப்பதை உணர்ந்ததால் அதைப் பற்றி மந்திராசுரனிடம்

“மந்திரா நீ நம்ம மதியை கவனித்தாயா?”

“ஏன் ஆசானே? அவன் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றான். அவனின் நீண்ட நாள் கனவு பலிக்கப் போகிறதல்லவா!!!”

“அதெல்லாம் உண்மை தான் ஆனால் எனக்கென்னவோ அவனிடம் ஏதோ ஒரு வித மாற்றம் வந்திருப்பதாக தோன்றுகிறது”

“எந்த வகையில் மாற்றம் தெரிகிறது ஆசானே?”

“சரி சரி பார்ப்போம். பார்க்கத்தானே போகிறோம்” 

என்று கூறியதும் ஆசானும் மந்திராசுரனும் அவரவர் அறைகளுக்குள் சென்று உறங்கினர்.

 அசுரர்களுக்கு விடிந்தது புதிய நாள். மதிநாகசுரன் வேகமாக எழுந்து அனைவரையும் பைரவி முன் ஒன்று கூடச் சொன்னான்.  மதிநாகசுரன் உட்பட பத்து பேரும் அங்கே வந்தனர். அவர்களிடம்

“நமது இனத்தை காக்கவும் மீட்கவும் பைரவி நமது பூஜையையும் பலியையும் ஏற்றுக்கொண்டு நமக்கு உத்தரவு கொடுத்திட்டாள் ஆகையால் அதற்கான முதல் செயலான படைத் திரட்ட இன்று நாம் இறங்குவோம். என்ன சொல்கிறீர்கள்? ஆசானே ஆரம்பிப்பதற்கான நேரத்தைக் கூறுங்கள்.”

“மதிநாகசுரா நீ சொன்னதெல்லாம் சரி தான் ஆனால் அதற்கான நாள் இன்று அல்ல மகனே. பலி கொடுத்த மூன்றாவது நாள் தான் துவங்க வேண்டும். நமக்கு கிடைத்துள்ள இந்த நாளில் ஒரு திட்டமும் அதை செயல் படுத்துவதற்கான வழிகளையும் முதலில் முடிவு செய்வோமாக.”

“ஆசானே இது தான் நாம் பல ஆண்டுகளாக போட்டு வரும் திட்டமாயிற்றே!!! இதில் புதிதாக போடுவதற்கு என்ன இருக்கிறது! என்பது எனக்கு விளங்கவில்லை”

 “மதிநாகசுரா நாம் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருக்கும் விஷயம் தான் ஆனால் செயல்படுத்தும் முன் சற்று கவனமாக இருக்க வேண்டுமா!!. சரி பல ஆண்டுகளாக திட்டமிட்டுள்ளோம் என்கிறாயே எங்கே சொல்லு  நாம் எவ்வாறு படைகளை திரட்டப் போகிறோம் ?”

“இதில் என்ன சந்தேகம் ஆசானே நமது பாதாளபுரிவனத்தின் வெளியே உள்ள முதல் ஊரையும் அதிலுள்ள மக்களையும் நம் வசப்படுத்தி அடிமைகளாக்குவோம். நமது நவியாகம்ஷியின் பிராப்தி சித்தியையும்,  மிளானாசுரியின் வசித்துவம் சித்தியையும் கொண்டு அவர்களை கட்டிப்போட்டு நமது படைகளாக மாற்ற எவ்வளவு நேரம் எடுக்கப் போகிறது!! இதே போல எல்லா ஊர்களுக்குள்ளும் செல்வோம் அனைத்து ஊர்களையும் நமதாக்குவோம், படைகளை விரிவு படுத்துவோம். தேவலோகத்தை கைப்பற்றுவோம். அந்த தேவேந்திரனை நமது காலில் விழச் செய்வோம். இந்த திட்டம் போதுமா ஆசானே”

“நேற்று நீ மேற்கொண்ட வேள்வியும், நரபலியும் ஏற்படுத்திய அதிர்வும் விதிர்ப்பும் அண்டசராசரத்தையும் நடுங்க செய்திருக்கும். இதில் தேவேந்திரன் மட்டும் விதிவிலக்கா என்ன? எல்லாம் சரி மதிநாகசுரா ஆனால் நவியாகம்ஷி மற்றும் மிளானாசுரியின் சித்தியைக் கொண்டு அனைவரையும் அவர்கள் வசம் கொண்டு வருவதென்பதில் காலதாமதம் ஆகுமே!! இதை நீ யோசிக்கவில்லையா? அவர்கள் இருவர் எப்படி ஒரு ஊரையே வசியப்படுத்த முடியும் கூறு!!”

“ஏன் முடியாது? நவி, மிளா உங்களால் முடியாதா என்ன?”

“மதிநாகசுரரே எங்களால் ஒருவர் ஒருவராகத் தான் வசியப்படுத்த முடியும். ஆசான் சொல்வது போல அதற்கு நிச்சயம் காலதாமதம் ஆகும்.” 

என்றாள் நவியாகம்ஷி. அதைக் கேட்டதும்  மதிநாகசுரன் கோபப்பட்டான். 

“ச்சே!! வெட்கம்! வெட்கம்!! இவ்வளவு வருடங்களாக பல வேள்விகளைச் செய்ததும், ஆசானிடம் பயின்றதும் எல்லாம் வீணா? நம்மால் ஒரு சிறிய ஊரைக் கூட நம் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதைக் கேட்கும்போது என் உள்ளம் சினத்தால் என்னை குத்திக் கிழிக்கிறது. ஆசானே நானும் இவ்விருவருடன் இணைந்து அவ்விரு சித்தியையும் பிரயோகித்தால்? எங்கள் மூவரால் ஒரு ஊரை……முடியாதா என்ன?”

“மதிநாகசுரா தாங்கள் மூவரும் சிறந்தவர்களே. வேள்விகள் செய்ததும், பயின்றதும் ஒருபொழுதும் வீணாகாது. தங்களால் முடியாது என்று நான் கூறவில்லை காலம் விரையம் ஆகும் என்பதைத் தான் சொல்கிறேன்”

“சரி அப்போ இதற்கு என்னத் தான் வழி இருக்கிறது? அதையாவது கூறுங்கள் ஆசானே அதன் படியே செய்கிறோம்”

“இருக்கு வழி இருக்கிறது மதிநாகசுரா. மந்திராசுரா நீ என் அறைக்குச் சென்று அங்கு இருப்பதிலேயே பெரிய ஓலைச் சுருளை எடுத்துக்கொண்டு வா”

“இதோ எடுத்து வருகிறேன் ஆசானே”

என்று கூறி மந்திராசுரன் ஆசானின் அறைக்குச் சென்று ஓலைச் சுருள்களை பார்க்கலானான். அந்த நேரத்தில் ஆசான் மதிநாகசுரனிடம்

“நாம் கைப்பற்ற வேண்டிய ஊர்களும் அங்கே எத்தனை மக்கள் உள்ளார்கள் என்ற விவரமும் தெளிவாக ஓலையில் எழுதியும், வரைந்தும் வைத்துள்ளேன் அதை மந்திராசுரன் எடுத்து வந்ததும் பாருங்கள் அதன் பின் கூண்டோடு அவர்களை நமது அடிமைகளாக்க இருக்கும் வழியையும் கூறுகிறேன். அது படி செய்தால் எல்லாம் நாம் நினைப்பது போலவே நடந்தேறும்”

“இதை ஏன் தாங்கள் முன்னதாகவே கூறவில்லை ஆசானே?” 

“எதை எதை எப்பெப்போ யார்யாரிடம் கூறவேண்டுமோ அதை அதை அப்பப்போ அவரவரிடம் சொல்வதே சிறந்த பலனைத் தரும். நான் முன் கூறியதைப் போல எல்லாவற்றிற்கும் காலமும் நேரமும் கூடி வரவேண்டும் மதிநாகசுரா.”

“சரி ஆசானே நாம் காலத்தை விரயம் செய்யாமல் எவ்வாறு படைத் திரட்டப் போகிறோம்?”

“மந்திராசுரன் ஓலைச் சுருளுடன் வந்ததும் உங்கள் அனைவருக்கும் விளக்கமாக கூறுகிறேன்”

“ஏன் இந்த மந்திராசுரன் இவ்வளவு நேரம் எடுக்கிறானோ தெரியவில்லை. இருப்பதிலேயே பெரிய சுருள் என்று தாங்கள் தெளிவாக தானே சொன்னீர்கள் !! அதை எடுத்து வர இவ்வளவு நேரமாக்குகிறானே!!! பேசாமல் நானே சென்று எடுத்து வரட்டுமா ஆசானே” 

ஆசான் புன்னகைத்தார். அதைப் பார்த்த மதிநாகசுரன் 

“நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டேனா? தங்களின் புன்னகை என்னை அப்படி எண்ண வைக்கிறது”

“புரிந்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி மதிநாகசுரா. எதை எதை யார்யார் செய்ய வேண்டுமோ அதை அதை அவரவர் தான் செய்ய வேண்டும்.”

என்று கூறிக் கொண்டே மதிநாகசுரனின் அவசரத்தைக் கண்டு புன்னகைத்தார் காற்கோடையன்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s