அத்தியாயம் 6: நடந்தேறியது நரபலி

தன்னை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த உருவத்தின் மேலிருந்த கருப்பு போர்வையை உருவியதும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்ற மதிநாகசுரனின் கண்கள் முன் நின்றிருந்தது நவியாகம்ஷி. அவள் கள்வனைப் போல அவன் அறையினுள் வந்ததைப் பார்த்தவன் சற்று நிதானித்துக் கொண்டு அவளிடம்

“நவியாகம்ஷி நீயா!!! ஏன் நீ இப்படி போர்வைப் போர்த்திக்கொண்டு என் அறைக்கு வந்துள்ளாய்? அப்படி வருவதற்கான அவசியம் என்ன? நீ நேராகவே என்னைக் காண எப்போதும் போல வந்திருக்கலாமே!!! ஏன் இப்படிச் செய்தாய்? என்ன ஒன்றுமே பேசாமல் சிலைப் போல் நிற்கிறாய்!!! ம்…பதில் சொல்”

நவியாகம்ஷி அவர்கள் இருந்த மதிநாகசுரன் அறையின் கதவை சாற்றினாள்

“ஏய் உனக்கு என்ன ஆயிற்று?? முதலில் கள்வனைப் போல உள்ளே வந்தாய் பின் எனது அறையின் கதவை இப்பொழுது ஏன் அடைத்தாய்? இப்பொழுதே திறந்திடு”

“பொறுமையாக இருங்கள் மதிநாகசுரரே. நாம் பேசப் போவது எவருக்கும் கேட்கக் கூடாதல்லவா அதற்காகத் தான் கதவடைத்தேன்”

“அப்படி என்னிடம் என்ன பேச வந்துள்ளாய்?”

“எதற்கு இந்த பதற்றம் மதி. உங்கள் அறைக்கு நான் வரக்கூடாதா?”

“ஓ!! தாராளமாக வரலாம் ஆனால் நீ வந்த முறை தவறாக இருக்கிறது”

“அப்படியா நான் என்ன  பாதாளபுரிவனத்தினுள்ளேயே  உங்கள் அறையில் இருக்கும் பாதாளவழி மூலம் வந்தேனா!!! இல்லை மேல் கூறையை உடைத்துக் கொண்டு உள்ளே குதித்தேனா? உங்களுக்கு தவறாகத் தெரிய!!! முறையாக கதவைத் தட்டித்தானே வந்தேன்”

“கதவைத் தட்டித் தான் வந்தாய் ஆனால் ஏன் போர்வைப் போர்த்திக் கொண்டு எவர் கண்களிலும் படக்கூடாதென்பதைப் போல வந்தாய்? எப்பொழுதும் வருவதைப் போல வந்திருக்கலாமே!!!”

“வந்திருக்கலாம் தான் ஆனால் அந்த யாகம்யாழியை சமாளிப்பது யார்? அவளின் கேள்விக் கணைகளை என்னால் எதிர்கொள்ள முடியாதுப்பா அதனால் தான் இவ்வாறு வந்தேன்”

“ஓ!!! அப்படியா விஷயம்!! யாகம்யாழியை சமாளிப்பது என் நவியாகம்ஷிக்கு  அவ்வளவு கடிமானதா என்ன? என்னவளாகப் போகிறவளுக்கு இது போல கேள்விகளை கூட  எதிர்கொள்ள முடியாதா என்ன?”

என்று கூறிக் கொண்டே நவியாகம்ஷியை இழுத்துக் கட்டி அணைத்தான் மதிநாகசுரன். உடனே அவள் அவன் பிடியிலிருந்து மெல்ல நழுவிச் சென்று மதிநாகசுரனின் சிலையருகே அதைப் பார்த்து ரசித்தப் படி நின்றாள். அவனும் அவள் பின்னால் சென்று

” நான் உன் எதிரிலேயே இருக்கும்போது ஏன் என் சிலையைப் பார்த்து ரசிக்க வேண்டும் நவியா? இதோ உன் மதி வா நவியா வா”

“மதி நான் தங்களிடம் ஒரு விஷயத்தை பற்றி கேட்க தான் வந்தேன் கேட்கலாமா?”

“எதை வேண்டுமானாலும் கேள் நவியா. நான் தருவதற்கு காத்திருக்கிறேன்”

“தாங்கள் இப்போது நான் கேட்பதற்கு சரியான பதில் மட்டும் தந்தால் போதுமானது”

“கேள் நவியா கேள்”

“நமது ஆசான், மந்திராசுரன் அண்ணா மற்றும் நீங்கள் மூவருமாக இன்று எங்கே சென்றீர்கள்? எங்கிருந்து வந்தீர்கள்?”

“அது… அது …வந்து…. என்ன? நீ ஒன்று கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்படி கேட்டுக்கொண்டே போகிறாய்?”

“ஏன் இந்த தடுமாற்றம் மதிநாகசுரரே?”

“தடுமாற்றம் ஒன்றுமில்லை நவியா. நாங்கள் நாளை பலி பூஜைக்கு வேண்டியவைகளை எல்லாம் ஏற்பாடு செய்யவே சென்று வந்தோம்.”

“ஓ !!! அதற்காகத்தான் சென்றீர்கள் என்றால் ஏன் ஆசான் உங்கள் இருவரையும் பார்த்து யாருக்கும் சொல்லவேண்டாம் என்றார்?”

“நாங்கள் எங்கெங்கெல்லாம் சென்றோம் என்பதைத் தான் எவரிடமும் சொல்ல வேண்டாம் என்றார் வேறொன்றுமில்லை நவியா”

“அப்போ எங்கு சென்றீர்கள் என்பதை என்னிடம் கூட சொல்லமாட்டீர்கள் அல்லவா?”

“நவியா நாளை மறுதினம் நீயே தெரிந்துக் கொள்ளப் போகிறாய் அதன் முன் உனக்கு ஏன் இந்த அவசரம்? அமைதியான இரவு நேரம் நீயும் நானும் மட்டும் இங்கே ..ஆஹா! ஆஹா ! வா நவியா என் அருகில் வா”

நவியாகம்ஷி அவனருகில் சென்றாள் உடனே உணர்ச்சி வசப்பட்டு அவளை மீண்டும் அணைக்க எழுந்த போது அவள் அவன் அருகிலிருந்த கருப்பு போர்வையை எடுத்துக் கொண்டே 

“பதிலுக்கு நான் நாளை மறுநாள் வரை காத்திருக்க வேண்டியதைப் போலவே  தாங்கள் நம் திருமணம் முடியும் வரை …..நம் திருமணத்திற்கு பிறகு தான் என்று நான் சொன்னதை மறந்துவிட்டீர்களா?”

“ம்..ம்.. காத்திருங்கள் என்கிறாய் அல்லவா ….அதை ஏன் இப்போது ஞாபகம் படுத்துகிறாய் நவியா? சரி முதலில் ஆசானிடம் சொல்லி நமது திருமணத்தை முடித்தாக வேண்டும்”

“அதை செய்யுங்கள் முதலில் மற்றவை  அனைத்தும் தானாக இனிதே நடந்தேறும் இப்போது நிம்மதியாக உறங்குங்கள் நாளை பூஜை இருக்கிறதல்லவா? நான் எனது அறைக்குச் செல்கிறேன்”

என்று கூறிவிட்டு வந்தவழியே போர்வையைப் போர்த்திக் கொண்டு சென்றாள் நவியாகம்ஷி. மதிநாகசுரன் மீது  பிராப்தி சித்தியை நவியாகம்ஷி பிரோயகப் படுத்தியது போல அவன் மனம் முழுவதும் அவள் ஆகிரமித்திருந்தாள். வெகு நேரம் கழித்து மறுநாள் தனது முக்கியமான பொறுப்பு நினைவுக்கு வந்ததும் உறங்கலானான். 

காலை விடிந்ததும் மதிநாகசுரன் ஆசான் கூறியது போலவே குளித்து விட்டு பைரவி முன் வந்து நின்றான். ஆசானும் மற்ற அனைவரும் மதிநாகசுரன் வருவதற்கு முன்னதாகவே வந்திருந்தார்கள். ஆசான் முதலில் பைரவிக்கு மாலையை சாற்றினார். அடுத்து மதிநாகசுரனை அழைத்து அவன் கழுத்தில் இரண்டாவது மாலையை போட்டார். சிம்பாசுரனையும், கோபரக்கனையும் அழைத்தார்

“சிம்பா, கோபா நீங்கள் இருவரும் தான் மதிநாகசுரன் பூஜை முடியும் வரை அவனைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்க வேண்டும் எந்த வித இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் புரிகிறதா?”

“அப்படி ஆகட்டும் ஆசானே. அவ்வாறே செய்கிறோம்” என்றனர் சிம்பாவும், கோபாவும். 

ஆசான் குருதி இருந்த கலயைத்தினுள் வலது கையை விட்டு அதைக் கொண்டே ஹே பாதாள பைரவி என்று பைரவி பாதத்தில் எழுதினார். மீண்டும் அந்த கலயத்திற்குள் கையை விட்டு சில துளிகளை எடுத்து அனைவர் மீதும் தெளித்தார். அந்த கலயத்தோடு நவியாகம்ஷியை அழைத்துக் கொண்டு  நரன் வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று அவன் மீதும் தெளித்தார். நரன் தெளியவில்லை அப்படியே நவியாகம்ஷி வசப்பட்டிருந்தான். அப்போது நவியாகம்ஷிக்கும் ஆசானுக்கும் தெரியவந்தது என்னவென்றால் நவியாகமஷியின் சித்தான பிராப்தி தண்ணீர் கொண்டு மட்டும்தான் தெளிவிக்க முடியும். 

மீண்டும் பைரவி இடத்திற்கு வந்தார்கள். குருதி கலயத்தை அதன் இடத்தில் வைத்து விட்டு பைரவி முன் மதிநாகசுரனை அமரச் சொல்லி தானும் அவன் எதிரே அமர்ந்து, சிம்பா மற்றும் கோபாவை தவிர மற்ற அனைவரையும் கீழே அமரச் சொல்லி

“இப்பொழுது நான் மதிநாகசுரனுக்கு மந்திரத்தை கற்பிக்கப் போகிறேன் நீங்களும் கவனமாக கேட்டு நேற்று நான் சொன்னது போலவே ஒவ்வொரு வரியின் முடிவில் ஹே பாதாள பைரவி என்று சொல்ல வேண்டும். புரிகிறதா?”

“நன்றாக புரிகிறது ஆசானே” என்று அனைவரும் ஒன்றாக கூறினர் 

“மதிநாகசுரா மந்திரத்தை நன்றாக மனதில் நிறுத்திக் கொண்டு சொல். ஒவ்வொரு முறை சொல்லி முடித்ததும் இந்த குருதி கலயத்திலிருந்து ஒரு சொட்டு குருதியை பாதாள பைரவி பாதத்தில் மாற்றி மாற்றி திலகம் போலிட வேண்டும்.  இதை நீ தொடர்ந்து மாலை வரை சொல்லிக் கொண்டே , செய்துக் கொண்டே இருக்க வேண்டும். சரியா”

“அப்படியே செய்கிறேன் ஆசானே” என்றான் மதிநாகசுரன்

மந்திரத்தை உச்சரித்து கற்பிக்க ஆரம்பித்தார் காற்கோடையன்…

அமிர்தஸ்ய பாழாகம்ய

ஹே பாதாள பைரவி 

என்னோர்ச்சா சேவகஸ்யஹா

ஹே பாதாள பைரவி

துரோவிகாம் துவம்ஸம்ச்ச

ஹே பாதாள பைரவி

ஆரம்மியாம் இக்டாஸ்ச்ச

ஹே பாதாள பைரவி

என்னோர்ச்சா சஹேஜேன்ச்ச

ஹே பாதாள பைரவி

அதுகே கர்னே காகிம்ச்ச

ஹே பாதாள பைரவி

சம்ப்ரசித்தி பஷ்யதீச்ச

ஹே பாதாள பைரவி

நரன்யக்யா ஸ்வீக்ரூ

ஹே பாதாள பைரவி

வாமஹஸ்தஹ பைரவி சர்மாகரீன் 

ஹே பாதாள பைரவி 

(இதன் அர்த்தம் என்னவென்றால்

அமிர்தத்தால் பாழானோம் 

இனத்தை காக்க எஞ்சியுள்ளோம்

எதிரிகளை அழித்திட

படைத் திரட்டிட

இனத்தை காத்திட

அதற்குண்டான செயலில் இறங்கிட

வெற்றி கண்டிட

நரபலியை ஏற்றுக் கொண்டு 

எஞ்சிய எங்களை வாழ்த்திடு பைரவியே

என்பதாகும்)

ஆரம்பித்து கொடுத்து அதை மதிநாகசுரனும் மற்றவர்களும் சரியாக சொல்கிறார்களா என்பதை சற்று நேரம் கவனித்து விட்டு அங்கிருந்து மந்திராசுரனுடன் மகுடாந்த மலைக்கு சென்றார் காற்கோடையன். 

மகுடாந்த மலையில் ஆசானும், பாதாளபுரிவனத்தில் சிஷ்யனும் வேள்வியை மேற்கொண்டார்கள். மதிநாகசுரன் செய்யும் வேள்விக்கான காரணம் அனைவரும் அறிந்ததே ஆனால் காற்கோடையன் செய்யும் வேள்வியின் காரணத்தை எவரிடமும் சொல்லாததால் எவருக்குமே தெரியாது. மந்திராசுரன், மதிநாகசுரனை தவிர மற்ற எவருக்கும் காற்கோடையன் மகுடாந்த மலையில் வேள்வி செய்து வருகிறார் என்பது கூட தெரியாதிருந்தனர். 

பாதாளபுரிவனத்தில் காலையில் தொடங்கிய வேள்வி மாலை வரை நடந்தேறியது. மகுடாந்த மலையில் சற்று முன்னதாகவே முடிவடைந்து காற்கோடையனுக்கு ஈசன் அருளிய பரிசோடும், மனதில்  உற்சாகத்தோடும் பாதாளபுரிவனம் வந்து சேர்ந்தார். தனது ஆசான் புண்ணியத்தில் அந்த மகேஸ்வரனை கண்ட மகிழ்ச்சியில் மந்திராசுரனும் வந்து சேர்ந்தான். அவர்கள் வரவும் மதிநாகசுரனின் வேள்வி முடியவும் சரியாக இருந்தது. ஆசான் மதிநாகசுரன் முன் சென்று அமர்ந்தார். 

“பலே மதி பலே! உனக்கும் வெற்றி நிச்சயம்”

“எனக்கும் வெற்றி நிச்சயமென்றால் வேறு யாருக்கு வெற்றி நிச்சயமானது ஆசானே?”

“எனக்கு தானடா என் அருமை சிஷ்யா உன் ஆசானுக்கு தான் வேறு யாருக்கு”

“மிக்க மகிழ்ச்சி ஆசானே தாங்கள் எது சொன்னாலும் செய்தாலும் அதில் பல பொருள் அடங்கியிருக்கும்”

“சரி சரி அனைவரும் சென்று நீராடிவிட்டு புது ஆடைகள் அணிந்து இதே இடத்தில் வரவும். என்ன சிம்பா, கோபா இருவரும் சரியாக நடந்துக் கொண்டீர்களா?”

“மதிநாகசுரனை தொந்தரவு செய்வதற்காக ஒரு வெருகு வந்தது அதன் வாயை மூடி கழுத்தைப் பிடித்து திரித்து வீசி எறிந்தேன்”  என்றான் சிம்பாசுரன்

“அதன் பின் ஒரு அகடூறி வந்தது அதையும் மதி அருகே செல்லவிடாமல் பிடித்து முடிச்சாக்கி மூச்சை நிறுத்தி தூர வீசினேன்” என்றான் கோபரக்கன்

“வேறு எந்தவித இம்சைகளும் வரவில்லை ஆசானே” என்றான் சிம்பாசுரன்.

“பலே நமது இந்த ஒற்றுமை என்றும் நம்மை காக்கும். சரி நீங்களும் சென்று குளித்துவிட்டு இங்கே வந்திடுங்கள். நானும் செல்லட்டும். மந்திரா வா நாமும் தயாராகி வருவோம்”

என்று அனைவரும் இரவு நரபலி கொடுக்க தயாராகச் சென்றார்கள். யாகம்யாழி முதலில் தயாராகி பலிபீடத்தையும், காலை முதல் பூஜை செய்த இடத்தையும்  தண்ணீர் விட்டு அலம்பினாள். மீளானாசுரி இரவு பூஜைக்கு வேண்டிய மாலைகளையும், பலிபீடத்தையும், வாளையும் துடைத்து பூக்களால் அலங்கரித்தாள். 

சிகராசுரன் ஆசானும், மதிநாகசுரனும் அமரும் பலகையை துடைத்து கொடுக்க, மந்தாகிஷி அதை அழகாக மலர்களை கொண்டு அலங்கரித்து கொடுக்க, சிகராசுரன் அவ்விரண்டு பலகையையும் எதிரெதிரே வைத்தான். 

இரவு வந்தது நிலவும் வந்தது அனைவரும் பைரவிமுன் கூடினர். ஆசானும், மதிநாகசுரனும் வேள்வியை மீண்டும் துவங்கினர் அவ்விருவரும் மந்திரங்களை உச்சரிக்க பாதாளபுரிவனமே அதிர்ந்தது. நவியாகம்ஷியிடம் நரனை அழைத்து வரச்சொன்னார் ஆசான். அவளும் சென்று அழைத்து வந்தாள். 

“நவியாகம்ஷி நரனின் தலையை பலிபீடத்தில் வைக்கச் சொல்” என்றார் ஆசான் 

அவளும் நரனை அவ்வாறு செய்ய சொன்னதும் தலையை பலிபீடத்தில் வைத்தான் நரன். மதிநாகசுரனிடம் அவனுக்கு மாலையைப் போடச் சொன்னார். மாலைப் போட்டதும் குருதி கலயத்திலிருந்து குருதியை கையினால் எடுத்து நரனுக்கு திலகமிட்டு அவன் சிரத்தில் மூன்று முறை தெளிக்கச் சொன்னார். பின் வாளிலிருந்த மாலையை பைரவிக்கு சாற்றிவிட்டு வாளை வணங்கி கையில் எடுத்து தயாராகச் சொன்னார். அனைத்தும் ஆசான் சொல்ல சொல்ல மதிநாகசுரன் செய்து வந்தான். நிலவு நடுவானில் வந்ததும் ஆசான் மதிநாகசுரனிடம்

“நமது பாதாள பைரவிக்கு இப்போது குடு நரபலியை.”

என்று சொன்னதும் மதிநாகசுரன் வாளை வீச, ஒரே வெட்டில் நரன் பலியானான். 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s