அத்தியாயம் 5: மகுடாந்த மலையில் மதிநாகசுரன்

அங்கும் இங்குமாக காற்றோடு காற்றாக அலைந்து திரிந்தான் மதிநாகசுரன். ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கு ஏற்றார் போல ஆத்திரத்திலும், அவசரத்திலும் பேசக்கூடாதவையை தன்னுடன் தனக்காக இருப்பவரிடம் பேசிவிட்டு இப்போது அவர்களைத் தேடி அலைவதில் என்ன பிரயோஜனம்? 

ஆத்திரத்தால் அறிவிழந்து தேடுகிறான் என்று சொல்லவும் முடியாது. தன்னை காப்பாற்றி சிறு வயது முதல் பாதுகாத்து வந்தவர்கள் அப்படி விட்டு விட்டு சென்றுவிடுவார்களா? என்று எண்ணிப் பார்க்கக்கூடிய நிலையில் அவன் இல்லை. ஏனெனில் அவன் கோபத்தில் பேசியவை தவறு என்று உணர்ந்ததால் வந்த பரிதவிப்பே தேடலாக மாறியுள்ளது.

அவன் தேடலின் பதில் அவர்களின் பாதாளபுரிவனத்திலிருந்து வடக்கில் ஐந்து காத தூரத்தில் இருந்த மகுடாந்த மலைப் பகுதியிலுள்ள ஒரு குகைக்குள் கிட்டியது. அங்கே அவன் கண்ட காட்சி அவனை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது. 

குகையினுள் காற்கோடையன் தவத்தில் இருக்க மந்திராசுரன் தன் ஆசானை சுற்றியிருந்த நெருப்பு வளையத்தில் பூக்களையும், இலைகளையும், மரப்பட்டைகளையும், சில வகையான பூச்சிகளையும் போட்டுக் கொண்டே இருந்தான். 

அதைப் பார்த்த மதிநாகசுரனுக்கு ஆசான் அப்படி நெருப்பின் நடுவில் நின்று தவமிருப்பது புதிதல்ல ஏனெனில் அவனே கூட ஒரு தடவை அவ்வாறு தவம் மேற்கொண்டுள்ளான். ஆனால் அவனுக்கு விளங்காதது என்னவென்றால் எதற்காக ஆசான் இந்த தவத்தை மேற்கொண்டுள்ளார்? ஏன் அதை தன்னிடமிருந்து மறைகிறார்? இது போல் என்னவெல்லாம் இவ்விருவர் தன்னிடம் மறைக்கிறார்கள்? என்று பல கேள்விகள் மனதில் தாங்கியவாறு நடந்தவற்றை பார்த்துக் கொண்டே இருந்தவனை சட்டென்று….

“மதிநாகசுரா ஏன் உனக்குள் இவ்வளவு குழப்பங்கள்? எதை கேட்க வேண்டுமோ அதை கேள். கேட்டால் தான் பதில் கிடைக்கும். உன் தேடலின் முடிவு குழப்பமாக இருத்தல் வேண்டாம்”

என்று தன் ஆசானின் குரல் ஒலித்தது ஆனால் அந்த குரல் மந்திராசுரனையோ, ஆசானையோ எந்த விதத்திலும் அசைக்கவில்லை அவர்கள் வேலையில் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள். மீண்டும் ஆசானின் குரலில்

“என்ன மதிநாகசுரா அப்படி ஒரு வியப்பில் இருக்கிறாய். ம்… கேள்”

சுற்றும் முற்றும் பார்த்தான் மதிநாகசுரன் அவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அமைதியாக யோசிக்கலானான். அப்பொழுது ஒரு உண்மை அவனுக்கு விளங்கியது. உடனே அவனருகே உன்னித்துப் பார்த்தான் ஒரு சிறிய புழு நெளிந்துக் கொண்டே அவனைப் பார்ப்பதை உணர்ந்தான். அப்போது தான் அவனுக்கு தன் ஆசான் பிராகாமியம் உபயோகித்துள்ளார் என்பது புரிய வந்தது. 

பிராகாமியம் மதிநாகசுரனுக்கு தெரிந்திருந்தாலும் அவனால் அதை சரியாக உபயோகிக்க ஏதோ தடை இருந்ததை பயிற்சி காலங்கலிலிருந்தே அவன் அறிந்து வந்ததே. அதன் மந்திரத்தை உச்சரித்து அவன் முயன்ற போதெல்லாம் அது அறையும் குறையுமாவே நடந்தேறியது. அதனாலேயே அவன் அதை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டான். தனது ஆசான் அதை எளிதாக செய்வதைப் பார்த்த மதிநாகசுரனுக்கு ஆச்சர்யமும் ஆசையும் கலந்த மனநிலையில் அந்த புழுவைப் பார்த்து வணங்கினான். சட்டென அந்த புழு மெல்ல நகர்ந்து அந்தப் பாறையின் துவாரத்திற்குள் சென்றுவிட்டது. 

அது உள்ளேச் சென்றதும் தவத்திலிருந்த தன் ஆசானை உடனே திரும்பிப் பார்த்தான் அவர் அப்படியே தவத்திலிருந்தார். மதிநாகசுரன் அங்கேயே காத்திருந்தான் அப்போது அவனுள் அவனே..

“எதைக் கேட்கச் சொல்கிறார் ஆசான்?”

என்று பேசிக்கொண்டே மறுபடியும் திரும்பிப் பார்த்தான். தனது ஆசான் தவத்திலிருந்து வெளிவந்து தனது தவத்திற்கு உதவிப் புரிந்த மந்திராசுரனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார் மேலும் மதிநாகசுரன் காற்றோடு காற்றாக கலந்து அங்கிருந்ததை அறிந்த ஆசான் அவனிருக்கும் திசையை நோக்கி புன்னகைத்தார். அதைப் பார்த்ததும் காற்றோடு காற்றாக கலந்திருந்த மதிநாகசுரன் அவனாகவே வெளிப்பட்டான். உடனே மந்திராசுரன்…

“மதி நீ எப்போது வந்தாய்? ஏன் வந்தாய்?”

“மந்திரா அவன் நான் தவம் மேற்கொண்ட சில மணி நேரத்திலேயே வந்துவிட்டான். என்ன மதிநாகசுரா நான் சொல்வது சரியா?”

“ஆமாம் ஆசானே சரிதான். உங்கள் இருவரையும் நமது பாதாளபுரிவனத்தில் காணவில்லை அதனால் தான் தேடி வந்தேன்”

“காணவில்லை என்றா? இல்லை வெளியேறி விட்டோம் என்றா?”

“ஆசானே!!! நம் மதிநாகசுரனிடம் ஏன் இந்த கேள்வி? இப்போது!!! நாம் ஏன் வெளியேறுவோம் என்று அவன் எண்ணப்போகிறான்? நாமின்றி அவனில்லை அவனின்றி எவருமிருக்கப் போவதில்லையே!!!”

“மந்திராசுரா என்னை மன்னித்து விடு. உன்னை நான் தவறாக பேசியதற்கும், நீ அதை ஆசானிடம் சொல்லி இருவரும் பாதாளபுரிவனத்தை விட்டு வெளியேறிவிட்டிகள் என்று மடத்தனமாக எண்ணியதிற்கும், அதை தீர்க்கமாக நம்பி இவ்வாறு தேடி வந்ததற்கும்” 

“மதிநாகசுரா ஏன் இவ்வளவு குழம்பியுள்ளாய்? நீ சொல்லும்போது உன் மனநிலையைப் புரிந்துக் கொண்டேன். நீயே நிதானமாக யோசிப்பாய் என்று தான் உன்னிடமிருந்து அப்போது விடைப் பெற்றுச் சென்றேன். நான் ஆசானிடம் அதைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. உன் அறையிலிருந்து வெளியே வரும்போது ஆசான் என்னை மகுடாந்த மலைக்கு செல்ல வேண்டி அழைத்தார் வந்தேன். இதுதான் நடந்தது.”

“நன்றி நண்பா என்னை புரிந்துக் கொண்டமைக்கு.”

என்று மந்திராசுரனை அணைத்துக் கொண்டான் மதிநாகசுரன். பின் ஆசானைப் பார்த்து 

“ஆசானே தாங்கள் தவத்திலிருந்த போது பிராகாமியம் உபயோகித்து ஒரு புழுவாக வந்து என்னிடம் …கேட்டால் தான் பதில் கிடைக்கும்… கேள் என்று சொன்னீர்களே ஏன்? எதை நான் கேட்க வேண்டும்?”

“மதிநாகசுரா உன் மனதில் உள்ளதைத் தான் கேட்கச் சொன்னேன்”

“என் மனதில் ஒன்றுமில்லையே”

“மதிநாகசுரா உன்னுள்ளும் வந்து பார்த்திடுவேன் பரவாயில்லையா”

“ஆசானே நமது சித்து வேலையை நமக்குள்ளே காட்டிக் கொண்டால் அது வேலை செய்யாது எனவும் மேலும் உபயோகித்தால் அந்த சக்தியை இழக்கக்கூடும் என்றும் தாங்கள் தானே சொல்லித் தந்தீர்கள்…இப்போது…”

“ம்…. சொல்லிமுடி”

“இப்போது தாங்களே அதைச் செய்யவா என்று கேட்கிறீர்களே என்று தான் கேட்க வந்தேன்”

“உங்களுக்குள் உங்களால் முடியாது ஆனால் என்னால் முடியும் மதிநாகசுரா”

“அதை ஏன் எங்களுக்கு கற்று தரவில்லை ஆசானே?”

“அதுவும் காரணமாகத்தான் மதிநாகசுரா காரணமாகத்தான். சரி நீ கேட்க விழைந்தது அது அல்லவே!!!”

“ஆம் ஆசானே அது அல்ல. எனக்கு ஏன் பிராகமியத்தை சரியாக உபயோகிக்க முடியவில்லை?”

“அதற்கும் காரணமிருக்கும் மதிநாகசுரா”

என்று கூறிக்கொண்டே புன்னகைத்தார் காற்கோடையன். 

“அது தான் கேட்கிறேன், அது என்ன காரணம்?”

“காரணமில்லாமல் காரியங்கள் கிடையாது. அது ஏன் என்று நீ தான் புரிந்துக் கொள்ள வேண்டும். என்ன காரணத்திற்காக உனக்கு சரியாக வரவில்லை என்பதை நீ தான் கண்டறிய வேண்டும்”

“அது வராவிட்டால் என்ன மற்றவை உள்ளதே அது போதாதா என்ன?”

“ம்… அப்போ அதற்கான தேடலை கைவிடப் போகிறாய் இல்லையா?”

“தற்காலிகமாக தான் ஆசானே”

“சரி வாருங்கள் நமது இருப்பிடத்திற்கு செல்வோம் இல்லாவிட்டால் மற்றவர்களும் நம்மைத் தேடி வந்து விடப் போகிறார்கள்”

“தாங்கள் இருவரும் ஏன் இந்த மகுடாந்த மலைக்கு வந்தீர்கள்? எதைக் குறித்து இந்த தவத்தை மேற்கொண்டுள்ளீர்கள்? ஏன் என்னிடமிருந்து மறைத்தீர்கள்”

“பல ஆண்டுகளாக நாங்கள் இங்கே வந்துக் கொண்டிருக்கிறோம். ஆசானும் பல தவங்களை மேற்கொண்டார்.  இந்த தவத்தை கடுமையாக மேற்கொண்டிருக்கிறார். நானும் பல முறை கேட்டாகிவிட்டது. அவர் ஒன்றுமே கூறவில்லை ஆகையால் அவர் சொல்வதை மட்டும் செய்வேன்”

“அப்பப்பா எத்தனை கேள்விகள்? அவை அனைத்திற்கும் பதில் உண்டு ஆனால் அதைக் கூறுவதற்கான நாளும் நேரமும் இது அல்ல. மீண்டும் சொல்கிறேன் காரணமின்றி காரியம் ஏதும் நடப்பதில்லை. நாளை உன்னுடய முக்கிய நாள். அதை மட்டும் நினைவில் கொள் மதிநாகசுரா. மந்திராசுரா அதற்கு வேண்டியவைகளை ஏற்பாடு செய்து விட்டாயா?”

“எல்லாம் ஆகிவிட்டது ஆசானே”

“சரி மதிநாகசுரா மனதில் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே நாளை உனக்கு மட்டுமில்லை எனக்கும் மிக மிக முக்கியமான நாளாகும். எனது இத்தனை நாள் தவத்தின் பலன் கிடைக்க வேண்டிய நாளுமாகும்”

“ஆசானே தாங்கள் பேசுவது ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தாங்கள் சொல்வது படியே நடந்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்”

“அது போதும் மதி. சரி சரி நாம் நம்மிடத்தை வந்தடைந்து விட்டோம். எவரிடமும் எதுவும் இப்போது சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. புரிகிறதா?”

“அப்படியே ஆகட்டும் ஆசானே”

என்று ஒரு சேர சொன்னார்கள் மதிநாகசுரனும், மந்திராசுரனும். இவர்களை கவனித்த நவியாகம்ஷி மனதில் சந்தேகம் எழுந்தது. அசுரர் குலமானாலும் பெண்ணினமாயிற்றே!!!!காற்கோடையன் மந்திராசுரனின் ஏற்பாடுகளைப் பார்த்து அவனை பாராட்டினார். பின்பு அனைவரையும் பைரவி முன் வரச்சொன்னார். உடனே அனைவரும் அவ்விடம் கூடினர். 

“நம் இனத்தை தழைத்து காக்கவிருக்கும் என் செல்வங்களே!!நாளை நமது தலைவன் மதிநாகசுரன் மேற்கொள்ளப்போகும் வேள்விக்கு அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும். காலை முதல் மாலை வரை அவனை சுற்றி இருவர் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும் ஆனால் எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாதிருக்க வேண்டும். அனைவரும் விரதமிருந்து இங்கே அமர்ந்து மதிநாகசுரன் சொல்லவிருக்கும் மந்திரத்தின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் ‘ஹே பாதாள பைரவி’ என்று கூறவேண்டும் அதுவும் அவன் அடுத்த வரி சொல்ல துவங்குவதற்கு முன் சொல்லி முடிக்க வேண்டும். மாலையில் அனைவரும் குளித்து விட்டு இங்கே வந்து அமர்ந்துக் கொள்ளுங்கள்.  நமது மதிநாகசுரன் செய்யவிருக்கும் இந்த வேள்வியும், நரபலியும் நம் அனைவருக்கும் நீண்ட நாட்கள் கனவாக இருந்ததை நெனவாக்கப் போகிறது. ஹே பாதாளபைரவி”

“ஹே பாதாளபைரவி” என்று அனைவருமாக மூன்று முறை கூறியதும் சபையை கலைத்தார் காற்கோடையன். அனைவருக்குள்ளும் மறுநாள் நடக்க இருப்பதை காண ஆவல் அதிகமாகியது. 

காற்கோடையன் ஏன் மகுடாந்த மலைக்குச் சென்றார்? அங்கே அவர் மேற்கொண்ட தவத்தின் காரணம் என்ன? பாதாளபுரிவனத்தில் இல்லாத குகை அப்படி என்னதான் அந்த மகுடாந்த மலையில் உள்ளது? என்று பல கேள்விகள் தன்னுள் இருந்தாலும் மீண்டும் அவசரப்பட்டு அனைவரையும் சங்கடப்படுத்தக் கூடாதென்பதில் தெளிவாக இருந்த மதிநாகசுரனுக்கு உறக்கம் வராமல் தன் படுக்கையில் புரண்டுக் கொண்டே இருந்தான். அப்போது அவன் அறையின் கதவை யாரோ மெல்ல தட்டுவதுபோல இருக்க எழுந்துச் சென்று திறந்தான். 

அவன் கதவைத் திறந்ததும் அவனைத் தள்ளிக்கொண்டு ஒரு கருப்பு போர்வையைக் கொண்டு மூடிய உருவம் அவன் அறைக்குள் சென்றது. அதைப் பார்த்த மதிநாகசுரன்

“ஏய் யார் அது? இந்த நேரத்தில்? என்ன வேண்டும்”

அந்த உருவம் அசையாமல் ஆடாமல் நின்றிருந்தது. அதன் அருகே சென்று அந்த உருவத்தின் மேலிருந்த கருப்புப் போர்வையை உருவினான் மதிநாகசுரன்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s