அத்தியாயம் 4: மூர்க்கம் முட்டாளாக்கும்

“நிறுத்து! மதிநாகசுரா! நிறுத்து!”  

என்று காற்கோடையன் கூறியதும் ஓங்கிய வாளால் நரனை வெட்டாமல் நிறுத்திவிட்டான் மதிநாகசுரன். அவன் வாள் வீசிய வேகமும், சட்டென்று நிறுத்தியதும் ஒருவகையான அதிர்வு கொடுத்ததை அனைவரும் உணர்ந்தனர். மந்திராசுரன் வேகமாக ஓடிச் சென்று மதிநாகசுரனின் கையிலிருந்த வாளை வாங்கி தரையில் வைத்தான். வாளைக் கொடுத்துவிட்டாலும் அண்டசராசரங்களையும் ஆள வேண்டும் என்று அவனுள் இருந்த வெறி அடங்க சற்று நேரமானது. அவன் அங்கிருந்து வேகமாக வெளியேறும் போது மந்திராசுரனை தனது வலது கையால் தட்டிவிட்டதில் அவன் நிலை தடுமாறி நரனின் மீது விழுந்தான்.

 மந்திராசுரன் விழுந்ததும் நரன் விழித்துக் கொண்டு தன்னை விட்டுவிடும்படி கூறலானான். அவனின் அந்த அழுகையுடன் கூடிய அலறல் பாதாளபுரிவனத்தையே ஆக்கிரமித்தது. அதைக் கேட்டு பொறுக்காது வெளியேச் சென்ற  மதிநாகசுரன் மீண்டும் உள்ளே வந்து அவனை வெட்ட வாள் எடுத்து வீசப் போக நவியாகம்ஷி அவனை தடுத்தாள்.

நரனைப் பார்த்து மீண்டும் பிராப்தி சித்தியை உபயோகித்து தன் மனதினால் அவன் மனதை ஆட்கொண்டாள். பின்பு அவனை அமைதியாக அமரச்செய்தாள். நடந்தவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு மட்டுமே நின்றிருந்த காற்கோடையனைப் பார்த்து மதிநாகசுரன்

“ஆசானே எனக்கு உங்கள் மீது அதீத மரியாதை இருக்கிறது”

“அதை நீ வாள் வீசப் போகும் போது, நிறுத்து என்று நான் சொன்னதும் நிறுத்தியதிலிருந்தே புரிகிறது மதிநாகசுரா” 

“ஆனால் ஏன் அப்படி செய்தீர்கள் ஆசானே? ஏன்? நான் அந்த பலியைக் கொடுத்து பைரவியின் ஆசியைப் பெற்று அடுத்த வேலையில் இறங்கி இருப்பேனே !!! ஏன் தடுத்தீர்கள்?”

“மதிநாகசுரா!!! எதை செய்வதென்றாலும் அதற்கான வழிமுறைகள் இருக்கிறது. அதிலிருந்து நீ தவறி விடக் கூடாதென்பதற்காக தான் நிறுத்தினேன். அது ஆசானாகிய எனது கடமையாகும்”

“வழிமுறைகளா? அதைப் பற்றி தாங்கள் ஒன்றுமே கூறவில்லையே!! பைரவிக்கு நரனை பலிக் கொடுத்த பின் நமது படை திரட்டும் வேலையில் இறங்கச் சொன்னீர்கள் அதை தான் நான் செய்யலானேன்”

“நீ ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய் என்பது எனக்குப் புரிகிறது மதிநாகசுரா. அவசரம் நமக்கு என்றும் பயனளிக்காது. அதை என்றுமே நினைவில் வைத்துக் கொள். நிதானமாக அது அது செய்ய வேண்டியதை உரிய நேரத்தில் உரிய முறையில் செய்தால் தான் வெற்றி நமதாகும். புரிகிறதா?”

“சரி ஆசானே இப்போது என்ன செய்ய வேண்டுமென்பதை விரிவாக கூறுங்கள் அதன் படி செய்கிறேன்.  அவசரப் பட்டமைக்கு என்னை மன்னியுங்கள்.”

“நன்றாக கேட்டுக்கொள் மதிநாகசுரா.  நிறைந்த பௌர்ணமி தினத்தில் காலை முதல் விரதமிருந்து மாலை பைரவிக்கு பூஜை செய்து நிலா நடுவானில் இருக்கும் பொழுது நரனை பலி கொடுத்தால் நீ எண்ணியவை எல்லாம் நடந்தேறும்.”

“அப்படியே ஆகட்டும் ஆசானே. ஆனால் என்று அந்த பௌர்ணமி தினம்? எத்துனை நாட்கள் இந்த நரனை சிறையிலிட வேண்டும்?”

“சற்று முன் தானே அவசரம் ஆபத்தை விளைவிக்கும் என்றேன்! அதற்குள் மறந்திட்டாயே”

“அவசரம் ஒன்றுமில்லை ஆசான் அவர்களே. என்று வரைக் காத்திருக்க வேண்டும் என்று தான் கேட்க வந்தேன்.”

“ரொம்ப நாட்கள் இல்லை மதிநாகசுரா. ரொம்ப நாட்கள் இல்லை. நாளை மறுநாள் நிறைந்த பௌர்ணமி தினம் அன்று நீ உன் பூத வேள்வியை ஆரம்பித்து சந்திரன் நடுவானில் வந்ததும் நரனை பலி கொடுத்துப் பார் அனைத்து லோகமும் இருளில் மூழ்கிவிடும்”

“அப்படியா ஆசானே. நாளை மறுநாளே செய்துவிடவேண்டியது தான்”

“நன்று மதிநாகசுரா. பூத வேள்விக்கான மந்திரங்களை அன்று நான் உனக்கு போதிப்பேன். அதை அன்று காலை முழுவதும் நன்றாக மனதில் நிறுத்திக் கூறி வந்தால் எல்லாம் நமது திட்டப்படியே நடந்திடும்” 

“ஆது என்ன மந்திரம்? அதை நான் இப்பொழுதே தெரிந்துக் கொள்ளக் கூடாதா?”

“பூத வேள்விக்கானது பாதபௌரவி மந்திரம். அதை அன்று தான் விரதமிருந்து கற்றுக் கொள்ளவும் உச்சரிக்கவும் வேண்டும், அப்போது தான் அதன் முழு சக்தியையும் பெற முடியும். அந்தி நேர பூஜைக்கு வேண்டியதை மந்திராசுரன் ஏற்பாடு செய்திடுவான். என்ன மந்திராசுரா நான் சொல்லவது சரிதானே”

“ஆகட்டும் ஆசானே. நான் தாங்கள் கூறுவதனைத்தையும் செய்ய  கடமைப் பட்டிருக்கிறேன்”

“நன்றி மந்திராசுரா. சரி இந்த நரனை சிறையிலிடுங்கள். நாளை மறுநாள் இங்கே கொண்டு வந்தால் போதுமானது”

“ஆசானே இவனை ஏன் சிறையிலிட வேண்டும்? இவனைத் தான் நான் என் வசம் வசியப்படுத்தி வைத்திருக்கேனே! எங்கே போக வேண்டுமானாலும் என்னை மீறி சென்றுவிட முடியாது”

“நவியாகம்ஷி உன் திறமையை நான் அறிவேன் ஆனால் அதிலிருக்கும் ஆபத்தை நீ அறியாய் பெண்ணே நீ அறியாய். உங்கள் அனைவரின் சித்துகளுக்கும் ஒரு பலவீனமான புள்ளி உள்ளது அது எது என்பதை அவை நிகழும் போதுதான் அறிய முடியும். இப்போது நீர் பட்டதும் நரன் உன் பிடியிலிருந்து விடுப்பட்டானே அதைப் போல தான். ஆகையால் தான் சிறையிலிடச் சொன்னேன்”

“நன்றாக புரிந்தது ஆசானே. ஆனால் நாம் ஏன் நமது சித்துக்களில் இருக்கும் அந்த பலவீனமான புள்ளியை அழிக்க ஏதாவது யாகமோ, பலியோ பைரவிக்கு செய்து அவற்றை நீக்க முயற்சிக்கவில்லை?”

“அவை இன்னதுதான் என்று நிகழும் வரைத் தெரியாதல்லவா!! சாபத்திற்கு விமோட்சனம் உண்டு என்பதைப் போல எல்லாவற்றிற்கும் ஒரு மாற்றுவழி இருக்கத்தான் செய்யும். அது என்ன என்பதை நாம் கண்டறிந்து விட்டால் அதை நம் எதிரிகள் செய்யாதிருக்க நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்”

“ஆம் அது தான் சரி ஆசானே. எனது பிராப்தி சித்தியின் முடிவு நீரில் இருப்பது தெறிந்துக் கொண்டேன். என் வசியத்திலிருப்பவர்கள் விடுவிக்காமலிருக்க நான் என்ன செய்ய வேண்டுமென்பதை இன்று அறிந்துக் கொண்டேன். இனி நான் பார்த்துக் கொள்கிறேன்”

“நல்லது நவியாகம்ஷி. இவளைப் போலவே நீங்கள் ஒவ்வொருவரும் இதே போல் தெரிந்துக் கொண்டு அதற்குண்டான மாற்று வழியையும் செயல்படுத்த வேண்டும் புரிகிறதா”

“அப்படியே ஆகட்டும் ஆசானே”

என்று அனைவரும் ஒருசேர சொல்ல சபை கலைக்கப்பட்டது.

வசியம் செய்து பிடித்து வந்த நரனை சிறையிலிட்டார்கள். மந்திராசுரன் கோபரக்கன் மற்றும் யாகம்யாழியை, ஆசான் தன்னிடம் கூறிய பூஜை சாமான்களை திரட்ட அழைத்துச் சென்றான். யாகம்யாழியை பூக்களை எல்லாம் பறித்து அவற்றை அழகான மூன்று மாலைகளாக கோர்த்து அதை தாம்பாளத்தில் வைத்து பைரவி பாதத்தில் வைக்கச் சொன்னான். அவளும் அவ்வாறே செய்யத் துவங்கினாள். 

கோபரக்கனை மூன்று புதிய கலயங்களை நன்றாக அலங்கரித்து பைரவி முன் வைக்கச் சொன்னான். பின்பு அவர்களின் உணவான மற்ற உயிரினங்களை பிடித்து வந்து கட்டிப்போடச் சொன்னான். கோபரக்கன் அனைத்தையும் சிரத்தையுடன் செய்து முடிக்க, மந்திராசுரன் சிம்பாசுரனை அழைத்து கட்டிப் போடப்பட்டிருந்த உயிரினங்களை வெட்டி அனைத்தின் குருதியையும் கோபரக்கன் அலங்கரித்து வைத்திருந்த மூன்று கலயத்தில் ஒன்றை எடுத்துவரச் சொல்லி அதில் ஊற்றச் சொன்னான். சிம்பாசுரனும் அதை செய்து முடித்தான். அதை எடுத்து பாதாளபைரவியின் முன் இருக்கும் பலி பீடத்தில் தெளித்தபின் அந்த கலயத்தை பீடத்தின் மேல் வைத்து ஒரு இலைக் கொண்டு மூடினான் மந்திராசுரன்.

மதிநாகசுரன் தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக கைகளைப் பிசைந்துக் கொண்டு தான் அன்று பலி கொடுத்து துவங்க முடியாமல் போனதற்காக ஆத்திரத்தில் நடந்துக் கொண்டிருந்தான். அவனின் கோபம் புரிந்த மந்திராசுன் அவனின் அறைக்குள் அவனை அழைத்தவாறு நுழைந்தான். உடனே மதிநாகசுரன்

“வா மந்திராசுரா வா வா”

“என்னது இது மதிநாகசுரா? ஏன் இவ்வளவு பதற்றத்துடன் இருக்கிறாய்?”

“பின்ன என்ன மந்திரா? ஆசான் முழுமையாக சொல்லாததால் நான் இன்றே நமது திட்டங்களை நிறைவேற்ற புறப்படுவோம் என்று எவ்வளவு உற்சாகமாக இருந்தேன் தெரியுமா? இப்போது அனைத்தும் பொசிங்கிவிட்டதுப் போல தோன்றுகிறது”

என்று தன் வலது கையை மடக்கிக் கொண்டு அவனின் மொத்த சினத்தையும் ஒன்று திரட்டி ஒரு தூணில் ஓங்கி தட்ட அந்த தூண் இடிந்து விழுந்தது. அதைப் பார்த்த மந்திராசுரன்

“மதிநாகசுரா நீ செய்வது தவறென்று உனக்குப் புரிகிறதா? உன் ஆத்திரம் உன்னை மட்டுமல்லாமல் நமது எஞ்சிய இனத்தையும் அழித்திடும் என்பதை என்றும் நினைவில் கொள். உன்னைவிட பல மடங்கு கோபம், ஆத்திரம் எல்லாம் எனக்குள்ளும் நம் ஆசானுக்குள்ளும் இருக்கிறது. அதற்காக நாங்கள் என்ன உடனே சென்று அவர்களை அழிக்க முற்பட்டோமா என்ன? இத்தனை ஆண்டுகள் பொறுமை காக்கவில்லை??நீயும் பொறுமையுடன் இருக்கத்தான் வேண்டும்”

“ஹா! ஹா! ஹா! இது நல்ல வேடிக்கையாக இருக்கிறது மந்திராசுரா. உன்னாலும் நமது ஆசானாலும் அப்போது ஒன்றும் செய்ய இயலாத நிலை. நினைத்திருந்தாலும் உங்கள் இருவரால் ஒன்றும் செய்திருக்கவும் முடியாதென்பது நான் அறியாததா? ஆனால் நான் அப்படி அல்ல என்னால் எல்லாமும் முடியும். என்னால் மட்டுமே முடியும் என்பதை நீ முதலில் புரிந்துக் கொள்” 

என்று மமதையில் மதிநாகசுரன் மந்திராசுரனையும், காற்கோடையனையும் இகழ்ந்தப் பேசினான். அதைக் கேட்டும் மிகவும் அமைதியாக மந்திராசுரன் 

“ஆமாம் மதிநாகசுரா நீ சொல்வது சரிதான் எங்களால் அப்போது என்ன? இப்போதும் எதிர்க்க வல்லமையற்றவர்களாக உங்களை நம்பித் தானே இருக்கின்றோம். நீ சொல்வது சரியே தான். ஆனால் உனது மூர்க்கம் உன்னை முட்டாளாக்குகிறது என்பதை நீ புரிந்துக் கொண்டால் நம் அனைவருக்கும் நல்லது. நாம் செய்ய இருப்பது ஒரு நாள் தள்ளிப் போயிருக்கிறது அவ்வளவு தான். அதுவும் காரணமாகத் தான் செய்கிறோம். நிதானமாக யோசித்துப் பார், உனக்கும் அது புரியும். நான் வருகிறேன்”

என்று நல்ல நண்பனாக கூறிவிட்டு மதிநாகசுரன் அறையை விட்டு வெளியேறினான்.

மந்திராசுரன் கூறியதை சிந்தித்துப் பார்த்த மதிநாகசுரனின் கோபம் தனிந்தது. தனக்குத்தானே 

“ச்சே! ச்சே! எனது முன்கோபத்தினாலும் அவசரபுத்தியினாலும் எனது ஆசானையும், உயிர் நண்பனையும் இழிவுப் படுத்திப் பேசிவிட்டேனே. என்னுடை இந்த மூர்க்கத்தனத்தை மூட்டைக்கட்டி வைக்க நினைத்தாலும் முடியவில்லையே. சரி முதலில் என் நண்பனை சமாதானம் செய்ய வேண்டும்”

கூறிக்கொண்டு மந்திராசுரனைத் தேடிச் சென்றான். ஆனால் மந்திராசுரன் அவன் அறையில் இருக்கவில்லை. உடனே மற்ற அனைவரிடமும் கேட்டான். எவருமே மந்திராசுரனைப் பார்க்கவில்லை என்ற பதிலையே சொல்ல, ஆசானின் அறைக்கு விரைந்துச் சென்றுப் பார்த்தான் அங்கே ஆசானும் இருக்கவில்லை. உடனே

லைப் போல காற்றில் மிதந்திட

யமாக தவழ்ந்திட

கியமதமின்றி தேடிட

காற்றைப் போல எட்டுத்திக்கும் பறந்திட

இலகிமாவாம் என் சித்தியை தந்தருளி எனது ஆசானையும், நண்பனையும் கண்டறிந்திட வேண்டும் பைரவியே துணையிருப்பாயே! என்று கூறி காற்றாய் மாறி தேடலானான்.

தான் மிகவும் கடினமான வார்த்தைகளால் தனது நண்பனையும், ஆசானையும் பேசியதினால் அவர்கள் தன்னை விட்டுப் போயிருப்பார்களோ என்ற அச்சம் அவனுள் இருந்து அவனை பொறுமை இழக்கச் செய்து, சிந்திக்க விடாமல் இப்படி அலைய வைக்கிறது.

அரசுரர்களுக்குள்ளும் அன்பு இருக்கிறது என்பதற்கு இவர்களே எடுத்துக்காட்டாவார்கள்.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s