அத்தியாயம் 3: நவியாகம்ஷியும் நரபலியும்

பாதாளபுரிவனம் தலைவன் மஹா பலியால் உருவாக்கப்பட்டது. அசுரர்களின் பெண்களும் குழந்தைகளும் பனி மற்றும் மழைக்காலங்களில் அங்குதான் வசித்துவந்தனர். மஹா பலி சிறைப்பிடித்து வரும் நரன்களை பாதாளபுரிவனத்தில் தான் அடைத்தும் வைத்தான். அவர்கள் வசிக்கும் மற்றும் நரன்களை புசிக்கும் இடமாக உபயோகப்பட்டு வந்தது அவர்கள் பதுங்கும் இடமாக மாறியதைப் பார்த்த காற்கோடையனுக்கு மிகுந்த மனவருத்தம் பல ஆண்டுகளாக இருந்துக்கொண்டிருந்தது. அதை மறைவிக்கச் செய்யும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அவர் அழைத்து வந்த சிறுவர்கள் இளம் வாலிபர்களாக வளர்ந்து  அசுரர்களுக்கே உரித்தான    பல வித்தைகளிலும், சித்து வேலைகளிலும் தேர்ச்சிப் பெற்று வருவதைப் பார்த்துத் தன்னைத் தானே சமாதானம் படுத்திக் கொண்டான்.

பத்து ஆண்டுகள் உருண்டோடின.  பத்தே பத்து  அசுரர்கள் மட்டும் இருந்து வந்த மஹாசுரர் இனம் அவர்களுக்கான படையை உருவாக்க முடிவெடுத்தனர். அதற்குண்டான அனைத்துப் பயிற்சிகளிலும் தேர்ந்தவர் ஆயினர். மதிநாகசுரன் தலைமையில் காற்கோடையன் மற்றும் மந்திராசுனின் ஆலோசனையின் படி பாதாள பைரவிக்கு நரபலி கொடுத்து அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தனர். 

எட்டு வகையான சித்திகளான

பிராப்தி – மனதினால் அனைத்தையும் தன்வயப் படுத்துதல். 

பிராகாமியம் – கூடு விட்டு கூடு பாய்தல்.

ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

அணிமா – அணுவின் அளவு சிறியதாக மாறுதல்.

மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.

இலகிமா – காற்றைப் போல் இலேசாய் மிதப்பது.

கரிமா – எவைகளாலும் அசைக்க முடியாதவாறு பாரமாயித்தல் (கனமாவது)

வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல் (பார்வையால், ஸ்பரிசத்தால்) 

கடும்  தவத்தினாலும் பயிற்சியினாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் கைத்தேர்ந்தவராயினர். 

இவற்றில் பிராப்தி, பிராகாமியம், அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, வசித்துவம் ஆகிய ஏழிலும் ஒவ்வொரு சித்தியை ஒவ்வொருவர் என ஏழு இளைஞர்களும் தங்கள் கடும் தவத்தினாலும் ஆசானின் பயிற்சியினாலும் தேர்ந்து வந்துள்ளனர். ஆனால் தலைவனான மதிநாகசுரன் அனைத்தையும் பயின்று தானே அண்டசராசரத்தையும் ஆள வேண்டி தயார் ஆனான். அதற்கு படைத்திரட்ட  பாதாள பைரவிக்கு நரபலிக் கொடுக்க முதல் நரனை சிறைப்பிடித்து வர மற்ற எழுவருக்கும் ஆணையிட்டான்.

தலைவன் மதிநாகசுரனின் கட்டளையை நிறைவேற்ற சிம்பாசுரன், நவியாகம்ஷி, சிகராசுரன், கோபரக்கன், மிளானாசுரி, யாகம்யாழி மற்றும் மந்தாகிஷி புறப்பட்டனர். அப்பொழுது மதிநாகசுரன் அவர்களை நிற்கச்சொன்னான்.

“ஒரு நரனை சிறைப்பிடித்து வர எழுவர் செல்ல வேண்டுமா என்ன?”

“அது தானே. மதிநாகசுரன் கூறுவதும் சரிதான். நீங்கள் இவ்வளவு பயிற்சிப் பெற்றது எழுவர் சேர்ந்து ஒரு நரனைப் பிடிப்பதற்கா?” என்றான் மந்திராசுன்.

“ஆமாம் அண்ணா சரியாகச் சொன்னீர்கள். எழுவரில் யார் முதலில் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்குள் முதலில் முடிவுச் செய்து பின் எங்களிடம் கூறுங்கள்” 

“அப்படியே ஆகட்டும் தலைவரே. சகோதரர் சகோதரிகளே வாருங்கள் நம்முள் யார் முதல் நரனைக் கொண்டு வருவதென்பதை கலந்தாலோசித்து முடிவெடுப்போம்” என்றான் மந்திராசுரனின் தம்பியும், எழுவரில் மூத்தவனும், அணிமா சித்தியில் கைதேர்ந்தவனும், மதிநாகசுரனை விட இரண்டு வயதே சிறியவனான சிம்பாசுரன்.

“இதுக்கெல்லாம் எதுக்கு கலந்தாலோசிக்க வேண்டும் அண்ணா. நான் சென்று நரனுடன் வருகிறேன்” என்றான் மந்திராசுரன், சிம்பாசுரனின் தம்பியும், இலகிமா பயிற்சிப் பெற்ற  கோபரக்கன்.

“நம் தலைவனுக்கு எவ்விதத்திலும் இளைத்தவள் அல்ல நான். ஆகவே நான் சென்று முதல் வெற்றியுடன் வருகிறேன்” என்றாள் மருத்துவத்தில் தன் தந்தையைப் போலவே அனைத்து மூலிகைகளையும் பற்றி நங்கு அறிந்த, பிராப்தி சித்தியை அடைந்த  நவியாகம்ஷி

“பலே! நவியாகம்ஷி! பலே! நீ சொல்வதைக்கேட்டதும் எனக்குள் அதீத மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது. உன்னால் முடியாதென்று எவரும் இங்கு கூறவில்லை, என் முன் கூறவும் முடியாது” என்று அவன் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நவியாகம்ஷியை பார்த்துச் சொன்னான் மதிநாகசுரன்.

மதிநாகசுரனின் மனதில் நவியாகம்ஷி இருப்பதை அறிந்த மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு புன்முறுவலுடன் தலையசைத்தனர். யாகம்யாழி மெல்லிய குரலில் மீளானாசுரியிடம்

“மீளானா அக்கா. என்ன !!நம் தலைவர் கூறும் விதத்தைப் பார்த்தால்!!!நவியாகம்ஷி அக்கா தன் பிராப்தி சித்தியை தலைவரிடமே பிரயோகித்து விட்டாள் போல தோன்றுகிறதே?” என்று கூற 

“அப்படியெல்லாம் செய்ய முடியாதே யாழி. நாம் கற்றதை நம்மவர்களிடமே பிரயோகிக்க முடியாதென்பது உனக்குத் தெரியாதா என்ன?” என்றாள் மீளானாசுரி 

“மீளானா அக்கா அது எனக்குத் தெரியாதா!! சும்மா நம்ம நவியாகம்ஷியை நகைக்கும்  நோக்கத்தில் சொன்னேன். நம் தலைவர் சிறு வயது முதலே நவி மீது தனிப்பிரியத்துடன் இருப்பது நாம் அறியாததா? இல்லை அதை அறிந்தும் அறியாததுப் போல நாடகமாடும் நவியை பற்றி நாம் அறியாததா? சொல்லுங்கள்”

“யாழி சற்றுப் பேசாமல் இருக்கிறாயா ! என்னத் தான் முடிவு செய்கிறார்கள் என்பதை உன் பேச்சால் கவனிக்காமல் விட்டுவிடப் போகிறோம்”

“சரி சரி நவியாகம்ஷி நீயே முதலில் சென்று வெற்றி வாகைச் சூடி வா. நம்ம பாதாள பைரவிக்கு உன் வேட்டையே முதல் பலியாகட்டும்” என்று மதிநாகசுரன் சொன்னதைக் கேட்ட யாகம்யாழி

“மீளானா அக்கா நான் சொன்னது சரி தானே. சரி தானே. நவி சென்று வரட்டும் அவளை நாம் ஒரு வழிப் பண்ணுவோம்”

“என்ன யாகம்யாழியும் மீளானாசுரியும் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்? அப்படி என்ன பேசுகிறீர்கள் என்பதை அனைவருக்கும் சொன்னால் நன்றாக இருக்குமே” என்றான் சிரகாசுரன். 

“ஓ! அப்படியா சரி சொல்கிறேன் நன்றாக  கேளுங்கள். தங்களையும் மந்தாகிஷியையும் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம். அனைவருக்கும் சொல்லட்டுமா?” என்றாள் துருதுருப்புக்கும் நகைச்சுவையான பேச்சுக்கும் சொந்தக்காரியான யாகம்யாழி.

அதைக் கேட்டதும் வாயடைத்துப் போய் நின்றான் சிரகாசுரன். 

காற்கோடையன் நவியாகம்ஷியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 

நவியாகம்ஷி பாதாளபுரிவனத்திலிருந்து வெளியே வந்ததும் தன் கண்ணில் படும் முதல் நரனைப் பிடித்துச் செல திட்டமிட்டிருந்தாள். அது படி வெளியே வந்தாள் வெகு தூரம் அலைந்துத் திரிந்தாள்.  அவள் எதிரே மோர்  பானைகளுடன் ஒருவன் வந்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து சற்று தண்ணீர் வேண்டுமென்று கேட்டாள். அவனோ அவளை ஏற்றெடுத்தும் பார்க்காமல் தான் வைத்திருப்பது மோர் பானைகள் என்றும் வேண்டுமென்றால் மோர் தருவதாகவும் கூறினான். நவியாகம்ஷி சரி என்று தலையசைத்தாள். அவன் அவளைப் பார்க்காததால் மீண்டும் கேட்டான் அதற்கு அவள் தரும்படி கூற உடனே அவன் ஒரு மோர்  பானையிலிருந்து ஒரு கலயம் மோரை அவளிடம் நீட்டினான். அவளோ அதை வாங்காமல் நின்றிருந்தாள். அவனும் வெகு நேரமாக கலயத்தை கையில் வைத்திருந்தான். அவள் அவனிடம்

“ஏன் என்னைப் பார்க்க மாடேங்கிறாய்? நிமிர்ந்துப் பார்த்து கலயத்தை தா பார்ப்போம்” 

என்று அவள் கூறியதும்  சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டே மோர் கலயத்தைக் கொடுத்தான் நரன்.

 அவள் மனதில் 

பிள்ளைக்கு உயிர் கொடுத்ததைப் போல

ராஜாத்தி என் அழைப்புக்கு

திரும்பிடாது என்னுடன் வரவேண்டும்”

என்று சொல்லிக்கொண்டே

அந்த கலயத்தை வாங்கி கீழே போட்டுடைத்தாள் நவியாகம்ஷி. அவள் உடைத்ததும் அந்த நரனும் தான் சுமந்துக் கொண்டிருந்த அனைத்துப் மோர் கலயங்களையும் போட்டுடைத்தான். அதைப் பார்த்ததும் நவியாகம்ஷி பலமாக சிரித்துக் கொண்டே …

“ஏய் நரனே என்னுடன் என் பின்னாலேயே வா” 

என்றதும் அவனும் அவளின் பின்னால் பிரமைப் பிடித்தவன் போல சென்றான். பாதாளபுரிவனம் வந்தது இருவரும் உள்ளே சென்றார்கள். அப்போது அங்கே காற்கோடையனும், மந்திராசுரனும் இருக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒரு முக்கிய வேலையில் இருந்தனர். நவியாகம்ஷியையும், அவள் அழைத்து வந்த நரனையும் பார்த்த மதிநாகசுரன் 

“பலே ! நவியாம்ஷி பலே! எனக்கு நன்றாக தெரியும் நீ வெற்றியோடு வருவாய் என்று. வா வா வா. ஓ!! இவன் தான் நமது முதல் பலியா!!! ம்.. பலே வாட்ட சாட்டமான இளைஞனைத் தான் அழைத்து வநதுள்ளாய். பாதாள பைரவி இந்த பலியை கொடுத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைவாள். நமது பயணமும் இனிதே தொடங்கும். அவனை அந்த பாறையின் மேல் அமரச் சொல் நவியாகம்ஷி”

“தங்களின் புகழ்ச்சிக்கு மிக்க நன்றி தலைவர் மதிநாகசுரரே. இதோ அவனை அமரச்சொல்கிறேன்” 

என்று நரனை மதிநாகசுரன் சொன்ன இடத்தில் கட்டிப்போட்டு அமரச் செய்தாள் நவியாகம்ஷி.

அந்த நரனுக்கு நேர் எதிரில் அந்த பாதாளபுரிவனத்தின் தரையிலிருந்து மேல் தளம் வரை உயர்ந்து, பத்துக் கரங்களில் பத்து வகையான ஆயுதங்கள் ஏந்தி, சிவந்த நாக்கு வாயிலிருந்து நெஞ்சு வரை தொங்க, அகண்டு விரிந்த செக்கச்சிவந்த ஆக்ரோஷமான கண்களுடன், தலைவிரி கோலத்தில், கழுத்தில் மண்டையோடுகளால் கோர்த்த மாலை அணிந்துக் கொண்டு பிரம்மாண்டமாக நின்றிருந்தாள் பாதாள பைரவி. அவள் பாதத்தில் காலிக் கலயமும், ஒரு கலயம் தண்ணீரும், காட்டுப் பூக்களைக் கோர்த்த மாலைகள் இரண்டும், கூர்மையான் வாள் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. 

வானோங்கி நின்ற பைரவி முன்

பாதாள பைரவியே!

லைப் போல் உயர்ந்து

கிணகர்களை உருவாக்கி

மாயாலோக அதிபதியாகி 

அண்டசராசரங்களையும் எங்கள் வயப்பட நாங்கள் தரும் இந்த நரபலியை ஏற்று எங்களுக்கு அருள் பாலிப்பாயாக என்று பைரவியின் உயரத்திற்கு மலைப் போல உயர்ந்து நின்று வேண்டினான் மதிநாகசுரன். வேண்டி முடித்ததும் அனைவருமாக 

“ஹே பாதாள பைரவி” என்று மூன்று முறை கூறியதும் மதிநாகசுரன் அங்கு வைத்திருந்த இரு மாலைகளில் ஒன்றை தன் கழுத்தில் போட்டுக்கொண்டுவிட்டு மற்றொன்றை நரனின் கழுத்தில் போட்டான். 

அனைத்து லோகத்தையும் தான் ஆள வேண்டும் என்ற எண்ணம் அவனை முழுவதுமாக ஆட்கொண்டது. அதனால் அவன் தன் ஆசான் காற்கோடையன் மற்றும் மந்திராசுரன் அங்கில்லாததைக் கூட கவனிக்கத் தவறினான். அடுத்து அந்த தண்ணீர் கலயத்தை பைரவியின் கரத்தில் வைத்து எடுத்து அந்த நீரை நவியாகம்ஷி பிடியிலிருந்த நரனின் மீது தெளித்தான். 

அந்த நீர் நரன் மீதுப் பட்டதும் நவியாகம்ஷி மாயப் பிடியிலிருந்து விடுப்பட்டான் நரன். ஆனால் அவன் விடுபட்டதும் அவன் முன் ஓங்கி நின்றிருந்த  ஆக்ரோஷமான பாதாள பைரவியும், அவளுக்கு இணையான மதிநாகசுரனையும் பார்த்துப் பயத்தில் மயங்கிப் போனான்.  அதைப் பார்த்ததும் பாதாளபுரிவனமே அதிர்வதுப் போல சிரித்தான் மதிநாகசுரன். அவனின் சிரிப்பொலி கேட்டு காற்கோடையனும், மந்திராசுரனும் விரைவாக வந்து வானோங்கி பைரவிக்கு நிகராக நின்றிருந்த மதிநாகசுரனைப் பார்த்தனர்‌.

“இதுவே என் முதல் வெற்றி. நன்றி தாயே”

என்று தலைவன் பைரவியை வணங்கி விட்டு ஒரு கையில் கூர்மையான வாளையும் மறுகையில் காலி கலயத்தையும் வைத்துக்கொண்டு பலிக் கொடுக்க வேண்டிய நரனின் தலையை நோக்கி வாளை வீச 

“நிறுத்து! மதிநாகசுரா! நிறுத்து!”  

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s