அத்தியாயம் 2: நாரதரின் சாடைக்குறிப்பு

வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு ஆதிசேஷன் மீது அனந்த சயனம் கொண்டிருக்க அவருக்கு அருகே மஹாலக்ஷ்மி வீற்றிருந்தாள்.  தேவர்களின் செயலைக் கண்டதால் மனவருத்தத்துடன் மஹாவிஷ்ணு படுத்திருந்ததைப் பார்த்த லக்ஷ்மி தேவி

தன் பதியின் மனதில் ஏதோ ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அது என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ளவும், அதற்கான பதிலையோ இல்லை ஏதேனும் செய்யவோ முடிந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது

“என்ன தேவி என்னிடம் ஏதோ கேட்க விரும்புகிறாய் போலத் தெரிகிறதே” 

அனைத்து லோகத்தையும் காக்கும் விஷ்ணுவாயிற்றே அவருக்கு தன் தேவி நினைப்பது மட்டும் தெரியாமல் போய்விடுமா என்ன!. 

“ஆம் சுவாமி உண்மை தான். தாங்கள் இன்று முழுவதும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அது என்ன என்று தங்களிடம் கேட்கத் தான் நினைத்தேன். காக்கும் பகவானுக்கு என் மனதில் கேள்வி உள்ளது மட்டும் தான் தெரிந்ததா!!! என்ன கேள்வி என்பது தெரியவில்லையோ!!” 

(இது மனைவிகளுக்கே உள்ள நய்யாண்டி தன்மை இதில் லக்ஷ்மி தேவி மட்டும் விதிவிலக்கா என்ன)

“என்னவென்று எனக்கு தெரிந்தாலும் அதை என் தேவிக் கேட்டு நான் பதில் சொன்னால் தானே நன்றாக இருக்கும் என்று தான் காத்திருந்தேன். அமிர்தத்தை அசுரர்களுக்கு கிடைக்கவிடாமல் தேவர்களுக்கு மட்டும் கிடைக்கும் படி செய்தும் பயனில்லாமல் போய் விடும் போல தோன்றுகிறது”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் சுவாமி”

“ஆம் வேறு எப்படிச் சொல்ல முடியும் லக்ஷ்மி. ஒவ்வொரு முறை அவர்கள் தவறிழைக்கும் போதும் என்னிடம் ஓடி வருவார்கள் நானும் எப்படியாவது அவர்களை காப்பாற்றி விடுவேன். அதன் பின் மீண்டும் அந்த தவறு நிகழாமல் பார்தத்துக் கொள்ளும் படிச் சொல்லி அனுப்புவேன் அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள்”

“அவர்கள் தான்  மீண்டும் அந்த தவறு நிகழாமல் தங்கள் சொற்படி நடந்துக் கொள்கிறார்களே பின்பு ஏன் கவலைக் கொள்கிறீர்கள் சுவாமி?”

“அவர்கள் அதே தவறு செய்வதில்லை புதிது புதிதாக தவறிழைத்து என்னை இப்படி எண்ண வைக்கிறார்கள் லக்ஷ்மி”

“இம்முறை என்ன செய்து தங்களை இவ்வாறு நினைக்க வைத்துள்ளார்கள்?”

“அமிர்தம் கிடைத்தது, அருந்தினார்கள், அசுரர்களான அநீதியை அக்கிரமத்தை அழித்தார்கள், சரி, ஆனால் அந்த வேலையையும் முழுமையாக செய்யாமல் விட்டுவிட்டனரே. அந்த இனத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை வழக்கம் போல் தேவேந்திரன் தனது அகம்பாவத்தினாலும், அலட்சியத்தினாலும் குறைத்து மதிப்பிட்டு அவர்களைத் தப்ப விட்டுவிட்டான். அவன் இழைத்த இந்த தவறுக்காக என்று மீண்டும் வந்து என்னிடம் நிற்கப் போகிறார்களோ என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.”

“தங்களுக்கு நடக்கப் போவது தெரியாததா சுவாமி!”

“தெரிந்ததால் தான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தேன். ம்..ம்…ம்.. நான் என்னச் செய்வேன் எல்லாம் அவரவர் விதிப் படி தானே நடக்கும் அதற்கு தேவர்களும் விதிவிலக்கல்லவே. பொறுத்திருந்து பார்ப்போம்”

அமிர்தம் அருந்தி இழந்த வலிமைகளை எல்லாம் பெற்றதாலும், அதனால் அரக்கர்களை வென்றதாலும்  மகிழ்ச்சியில் தேவர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இந்திரனைப் பார்க்க வந்த நாரதர் தேவர்களைப் பார்த்து

“நாராயண! நாராயண! தங்கள் அனைவருக்கும் ஏன் இப்படி ஒரு ஆனந்தம்? அப்படி என்ன செய்து விட்டீர்கள்?”

இதைக் கேட்டதும் இந்திரன் நாரதரிடம்…

“என்ன நாரதரே இன்று கலகத்தை எங்களிடம் ஆரம்பிக்க உள்ளீரோ?”

“நாராயண!! நாராயண! தேவலோகத்தில் கலகத்தை நான் வந்து தான் செய்ய வேண்டுமா  தேவேந்திரா!”

“என்ன தங்கள் பேச்சில் நக்கல் தெரிகிறதே!!”

“நாராயண! நாராயண! அவையெல்லாம் எனக்கு தெரியாதுப்பா.”

“இப்போது ஏன் இந்த தேவலோகத்திற்கு வருகை தருவானேன்?”

“நாராயண!! நாராயண! அடியேன் ஏன் வந்தேன் என்று கேட்கிறாயா… இல்லை இங்கே வரவேண்டிய அவசியமில்லை என்கிறாயா தேவேந்திரா?”

“அப்பப்பா உங்களுடன் பேச முடியுமா. சரி நேராகவே கேட்கிறேன். எங்களை நக்கல் செய்வதற்காக வந்தீரோ?”

“அப்படி கேள். நான் நக்கல் ஏதும் செய்வதற்கு இங்கு வரவில்லை. வந்த இடத்தில் உங்களின் ஆகோஷத்தைப் பார்த்தேன் அதற்கான காரணத்தைக் கேட்டேன் அவ்வளவு தானே தவிற இதில் வேறொன்றும் இல்லை தேவேந்திரா”

“எங்களின் ஆகோஷத்திற்கான காரணம் தங்களுக்கு தெரியாதது போலவே கேட்கிறீர்களே நாரதரே”

“ஆம் புரியாததால் தான் கேட்கிறேன் தேவேந்திரா”

“சரி சொல்கிறேன் நன்றாக கேளுங்கள். நாங்கள் இந்த தேலோகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மாஹா பலி அசுரனையும் அவன் இனத்தையும் அழித்து விட்டு மீதமிருந்த பெண்களையும் குழந்தைகளையும் சிறைப் பிடித்து வந்ததை நாங்கள் ஆகோஷிக்க வேண்டிய வெற்றி அல்லவா அது தான் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. வாருங்கள் தாங்களும் கலந்துக் கொண்டு மேலும் சிறப்பாக்குங்கள்”

“நான் இதில் பங்கேற்க வரவில்லை தேவேந்திரா. தங்களிடம் ஒன்று கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளத் தான் வந்தேன். நாராயண! நாராயண!”

“என்ன கேட்க வேண்டி வந்தீரோ அதை தயங்காமல் கேளுங்கள் நாரதரே”

“தாங்கள் அசுரர்களை எப்படி வீழ்த்தினீர்கள் தேவேந்திரா”

“எங்களின் வலிமையைக் கொண்டும் திறமையைக் கொண்டும் வீழ்த்தினோம். ஏன் இதில் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் உள்ளதா என்ன?”

“ஆம் உள்ளது. தாங்கள் அனைவரும் ஏன் இதை சில காலங்களுக்கு முன்பே செய்யாதிருந்தீர்கள் என்பதை அடியேன் தெரிந்துக் கொள்ள வேண்டிக் கேட்கிறேன்” 

என்று நாரதர் கேட்டதும் தேவலோகமே நிசப்தமானது. தேவேந்திரன் சற்றுத் தடுமாறி பதிலளித்தான்…

“ஏன்….என்றால் அப்போது முனிவர் துர்வாசரின் சாபத்திற்கு உள்ளானதால் எங்களுக்கு இந்த வலிமை இல்லாமல் இருந்தது”

“சரி. தாங்கள் ஏன் துர்வாசரின் சாபத்திற்கு உள்ளானீர்கள்”

“அது …அது…அது வந்து”

“என்ன தேவேந்திரா வாய் குளறுகிறது. பதில் சொல்ல தெரியாததாலா இல்லை விருப்பமில்லாததாலா?”

“அது எனது தவறினால் எங்களுக்கு கிட்டிய சாபம்”

“ஆம். அதே தான். அதே தவறை மீண்டும் இழைக்கலாமா? சொல்லு”

“இல்லையே நான் யாரையும் அவமரியாதையோ இல்லை அகம்பாவத்தில் எடுத்தெரிந்தோ பேசவோ நடக்கவோ இல்லையே”

“நாராயண! நாராயண!! பரவாயில்லை உன்னிடத்திலுள்ள இரண்டையும் நீயே ஒப்புக் கொண்டு எனது வேலையை சுலபமாக்கி விட்டாய் தேவேந்திரா.”

“தாங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை”

“அதாவது தேவேந்திரா, தங்களுக்கு மீண்டும் இப்படி ஒரு வலிமை வரக் காரணமாக இருந்தவர்கள் அதாவது காரணகர்த்தாக்கள் பலரிருக்க இவை அனைத்தும் தங்களின் வலிமைக் கொண்டு வென்றது என்றும் அதற்காக ஒரு கொண்டாட்டமும் தேவைதானா?”

“ஆம் நாரதரே தாங்கள் சொல்வது சரிதான். எனக்கு எனது இந்த தவறைப் புரிய வைத்த தங்களுக்கு நன்றித் தெரிவிக்கிறேன். எங்களால் இது நிகழ்த்த முடிந்ததற்கு காரணகர்த்தாவாக இருந்த மும்மூர்த்திகளுக்கும், வாசுகிக்கும், மந்தார மலைக்கும், அசு….எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியேனின் இந்த தவறை மனிக்க வேண்டுகிறேன்.”

“எனக்கு எல்லாம் நன்றாக தெளிவாக கேட்டது ஆனால் அசு…என்று பாதி மட்டும் கேட்டதுப் போல இருந்ததே. என்ன சொல்ல வந்தாயோ அதை முழுமையாக சொல்லிவிடு தேவேந்திரா. அவர்களின்றியும் உங்களுக்கு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனது எண்ணம். சரிதானே”

“சரி !சரி ! நான் சொல்ல வந்தது அசுரர்கள் …போதுமா”

“அதை சொல்வதற்கு ஏன் கோபப் பட வேண்டும்? உண்மையை ஒப்புக் கொள்ள தயக்கம் ஏன்?”

“அது தான் ஒப்புக் கொண்டாகிவிட்டதே”

“அப்படியா. சரி சரி…நீ உணர்தால் அதுவே போதுமானது. ஆமாம், நீங்கள் ஏதோ சிறு பிள்ளைகளையும் இரண்டு அரக்கர்களையும் தப்பி ஓட விட்டதாகவும் கேள்விப் பட்டேன் அது உண்மை யா தேவேந்திரா?”

“அவர்கள் உயிர் பயத்தில் தப்பி ஓடிச் சென்றனர்”

“ஓ! தாங்கள் ஏன் அவர்களை விட்டுவிட்டீர்கள்?”

“நான் விட வேண்டாம் என்று சொன்னேன் ஆனால் இந்திரனும், சந்திரனும் தான் போகட்டும் என்று விட்டுவிட்டனர் நாரதரே”

“யார் அது இவ்வளவு சப்தம் எழுப்புவது? சற்று விலகுங்கள் நான் பார்க்கட்டும்….ஓ!!! சூரியனா. சரி! சரி! சரி!.   தேவேந்திரா சூரியனுக்கு தவறாகத் தெரிந்தது ஏன் உனக்கு தவறாக தோன்றவில்லை?”

“நாரதரே தப்பிச் சென்றவர்கள் எட்டுச் சிறுவர்களும், ஒரு நொண்டி அசுரனும், அவனின் சீடனான மெலிந்த தேகத்துடனான…. நமது வாயு விடும் மூச்சுக் காற்றில் காணாமல் போய்விடும் அளவிற்கு துளியும் சக்தியில்லா ஒரு வாலிப அசுரனும் தான். மற்றப் படி அந்த இனத்தை அடியோடு அழித்து விட்டோம். தீயதை அழித்து விட்டோம்”

“ஓ!ஓ! அப்படியா நீ குறிப்பிடும் அந்த ஊனமுற்றவர் எதற்காக குறிப்பிட்ட அந்த எட்டுச் சிறுவர்களை மட்டும் அழைத்துச் சென்றார்? அவர்க்கு கீழ் பல சீடர்கள் இருக்க !!! ஏன் ? அந்த துளியும் சக்தி இல்லாத மெலிந்த சீடனை தன்னுடன் கூட்டிச் சென்றார்?”

“அது …அது…வந்து”

“என்ன மறுபடியும் தடுமாறுகிறாய் தேவேந்திரா?”

“அப்படிப் பட்டவர்களால் நமக்கு எந்த விதத்திலும் பாதகம் நேர்ந்திடாது நாரதரே தாங்கள் ஏன் தேவயற்றவைகளை எண்ணிக்  கவலைக் கொள்கிறீர்கள் என்று  எனக்குப் புரியவில்லை”

“நாராயணா! நாராயணா!! எனக்கு எதற்கு கவலை!! எனது கவலை அனைத்தும் தேவர்களான தங்களைப் பற்றியதே! என்னைப் பற்றியது அல்ல.  தாங்கள் அவர்களை குறைத்து மதிப்பிட்டு விட்டீரோ என்று எனக்குத் தோன்றுகிறது.”

“அப்படியா நினைக்கிறீர்கள்? சரி அதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை நான் செய்துக் கொள்கிறேன். தங்களுக்கு கவலை வேண்டாம் நாரதரே”

“நான் சொல்ல விழைந்ததைச் சொல்லிவிட்டேன் தேவேந்திரா. பார்த்து நடந்துக் கொள்ளவும். உன் அலட்சியம் ஆபத்தில் முடியலாம். நான் வருகிறேன். நாராயண!! நாராயண!!

என்று நாரதர் மஹாவிஷ்ணுவின் பிரதிநிதியாக தேவேந்திரனுக்கு ஒரு கோடுப் போட்டுக் காட்டிவிட்டுச் சென்றார்.

“தேவேந்திரா நாரதர் இப்படி நம்மைக் குழப்பிவிட்டுச் சென்று விட்டாரே!! நாம் ஏதேனும் தவறிழைத்து விட்டோமா” 

“தவறா!! நாமா!! இல்லவே இல்லை சந்திரா. நாரதர் வேலையே குழப்பத்தை ஏற்படுத்துவது தானே”

“ஆனால் அவர் சொல்வதிலும் ஏதோ இருக்கிறது நாம் எதற்கும் சற்று சூதானமாக இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது”

“வீன் அச்சம் வேண்டாம் சூரியனே. தப்பித்துச் சென்ற சிறுவர்கள் வளர்வதற்குள் அந்த ஆசான் உயிருடன் இருக்கப் போவதில்லை பின் அந்த சிறுவர்கள் என்னச் செய்வார்கள்? இல்லை அவர்களுக்கு நடந்தது எப்படித் தெரிய வரும்? அப்படியே தெரிய வந்தாலும் எட்டு சிறுவர்கள் எந்த தைரியத்தில் தேவாதி தேவர்களிடம் நெருங்க முற்படுவார்கள். இவை எல்லாம் சிந்திக்காமல் நாரதர் குழப்பி விட்ட குட்டையில் வீழ்ந்து யாரும் குழம்பிக் கொள்ள வேண்டாம். அவரவர் வேலைகளை அவரவர் செய்வோமாக”

என்று தேவேந்திரன் கூறியதும் சபைக் கலைந்தது. 

நாரதர் தேவேந்திரனுக்கு எச்சரிக்கைக் கொடுத்தும் அவன் அலட்சியம் செய்தான். இந்திரனுக்கு அவனது ஆணவம் அவனை நாரதர் கூறியவற்றை பற்றி சிந்திக்கக் கூட விடவில்லை. அமிர்தம் உண்ட எங்களை எவராலும் அழிக்க முடியாது என்ற மமதையில் இருந்தனர் தேவேந்தினும் அவனின் தேலோகமும். 

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s