அத்தியாம் 1: உருவேற்றம்

அசுரக் குல தலைவர் மஹா பலியும் நமது படையும் கடுங்கோபம் கொண்டு வேகமாக நமது இருப்பிடமான அசுரகிரிவனம் வருவதைப் பார்த்ததும் ஏதோ எதிர்பார்த்தது நடக்காததால் சினம் கொண்டு சிவந்த கண்களுடன் அவர்கள் வரும்பொழுது அவர்களின் கதம் எங்களை சுட்டெரித்துவிடுவது போல இருந்தது. அவர்கள் வந்து சேர்ந்ததும் பின்னாலேயே ஒரு படை வந்து நம் இனத்தைத் தாக்கியது.

நம் இனம் என் கண் முன்னே மாண்டு மடிவதைக் கண்டு செய்வதறியாது நின்றிருந்தேன். ஏன் எதற்கு என்ற காரணமும் அறியாது திகைத்திருந்தேன். நம் குலத் தலைவன் மஹா பலியின் வீரபராக்கரமங்களையும் அவரின் அசுர பலத்தையும் பற்றி நிறைய எங்கள் குருகுலத்தில் என் ஆசான் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அன்று தான் நேரில் பார்த்தேன். அவர் அசுர வேகத்தையும், விவேகத்தையும் கண்டு வியந்து என்னை மறந்து அவரின் வீரத்தில் லயித்திருந்தேன்.  

தேவர்களை நம் இனத்தவர்கள் தாக்கியும் அவர்களை ஆண்டதையும் தான் நான் அன்று வரைப் பார்த்தும், கேட்டும் உள்ளேன்! ஆனால் அன்றோ தேவர்கள் நம் இனத்தை கூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து நம்மை காக்க நமது தலைவர் மஹா பலி போராடுவதைப் பார்த்தப் போது மெய்சிலிர்த்தது. அதை கண்டு பிரமையில் இருந்த என்னை முதுகில் வேகமாக யாரோ தட்டியது போல இருக்க சிலிர்த்துக் கொண்டு நான் பதுங்கியிருந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்த்தேன் நம் அசுரக் குலகுரு சுக்கிராச்சாரியாரின் சீடனும், தலைவன் மஹா பலியின் ஆலோசகரும், நண்பரும் எனது ஆசானுமாகிய காற்கோடையன் ஏழு சிறுவர்களையும் கையில் ஒரு கைக் குழந்தையையும் வைத்துக் கொண்டு 

“டேய் மந்திராசுரா எழுந்திரு நாம் இந்த இடத்தை விட்டு உடனே இக்குழந்தைகளுடன் வெளியேற வேண்டும்.”

“ஆசானே நம் தலைவர் அங்கே”

“அவர் பார்த்துக் கொள்வார். நம் இனத்தைக் காக்க நாம் உடனடியாக இங்கிருந்து புறப்பட வேண்டும்”

“நாம் ஏன் இப்படி அவர்களுக்கு பயந்து நம் அசுரகிரிவனத்தை விட்டு போக வேண்டும்?”

“இது கேள்வி கேட்க வேண்டிய நேரமல்ல மந்திராசுரா!! விவேகத்துடன் செயல்பட வேண்டிய தருணம்.  நம் இனம் பிழைத்திருந்தால் தான் இவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும். ம்…ம்…ம்…உன் சந்தேகங்களுக்கான பதில்களை நாம் நம்மை பத்திரப்படுத்திக் கொண்டதன் பின்  விளக்கம் அளிக்கிறேன்.ம்… வா”

என்று நமது ஆசான் இடது கால் மற்றும் கை சரியாக இல்லாத போதும் நமது இனத்தை பாதுகாக்க அவ்வளவு துணிச்சலுடன் கூறிக் கிளம்பியிருக்கும் போது நல்ல சிஷ்ஷியனாக அவர் சொல்ப்படி நடப்பதே உகந்ததாக எனக்கு தோன்றியது.  அவர் கூறுவதிலும் செய்வதிலும்  ஏதாவது உட்பொருள் இருக்கும் என்று எண்ணி அவருடன் செல்வதற்கு எழுந்த போது தேவர்களின் சிரிப்பொலியை விட ஏதோ அந்த அசுரகிரிவனமே அதிர்ந்ததுப் போல சற்று ஆடியது  தலைவன் மஹா பலி தாக்கப்பட்டு கீழே விழுந்தப் போது. அவர் வீழும் போது எங்களைப் பார்த்து சென்று விடுங்கள் என்று கையசைத்துக் கொண்டே நம்மை விட்டுப் பிரிந்தார். மீதமிருந்த நமது அசுரர் குலத்தினரை கைதிகளாக பிடித்துச் சென்றனர். 

நான் நம் ஆசானிடமிருந்த  தலைவர் மஹா பலியின் தங்கை மகளான மந்தாகிஷியை ஒரு கையில் பிடித்துக் கொண்டும்  தலைவரின் மகனான மதிநாகசுரனை மறுகையில் பிடித்துக் கொண்டும், ஆசான் நம் படைத்தளபதியின் மகன்களும் என் சகோதரர்களுமான சிம்பாசுரன், சிகராசுரன், கோபரக்கன் ஆகியவர்களைப் பிடித்துக் கொண்டு சந்திரப் பிறை வடிவில் வேக வேகமாக நடக்கலானோம் எங்கள் பிறை வடிவிற்குள் மருத்துவர் மகளான நவியாகம்ஷி, நம் மந்திரியின் மகள்களான மிளானாசுரி மற்றும் யாகம்யாழியை நடக்கச்செய்து பாதுகாப்புடன் ஒன்றாக நகர்ந்துக் கொண்டிருந்தோம் அப்பொழுது அக்னி தேவன் நம்மைத் தாக்கினார். உடனே  ஆசான் நம் அனைவரையும் ஒன்றாக கரங்களைப் பிடித்துக் கொள்ளச்  சொல்லிவிட்டு …

“ஹே ஹே மஹா காளி, 

மந்திரம் பலிக்க வேண்டும்

நாங்கள் இக்கணம் மறைய வேண்டும்

நல்லிடம் சேர்க்கப்பட வேண்டும் 

ஹே ஹே மஹா காளி”

என்று கூறியதும் நாம் அனைவரும் வேறொரு புதிய இடத்தில் இதோ இப்போது இருக்கிறோமே இந்த பாதாளபுரிவனத்தில் தான் இருந்தோம்.  நம் ஆசானின் மந்திர சக்தியால் இங்கிருந்துக் கொண்டே நமது அசுகிரிவனத்தில் என்ன நடந்தது என்று பார்த்தோம்.

அங்கே அக்னி தேவன்  இந்திரனிடம்

“தேவேந்திரா இருவர் ஐந்தாறு சிறுவர்களுடன் தப்பி சென்றுக் கொண்டிருந்தனர் நான் அவர்களை தாக்கியபோது அவ்விடத்திலிருந்து  மறைந்து போனார்கள்”

“விட்டு விடு அக்னி நானும் அதை கவனித்தேன். அந்த பலியின் நொண்டி நண்பனும், அவனுடன் சென்ற சிறுவர்களும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. பாதி இனத்தையே அழித்து மீதியை சிறைப் பிடித்துள்ளோம் இதைப் பார்த்தும் நம்மை எதிர்க்க அந்த ஊனமுற்றவனுக்கும் அவன் காப்பாற்றிச் சென்ற சிறுவர்களுக்கும் எங்கிருந்து தைரியம் வரும்…ஹா! ஹா! ஹா!”

என்று நகைத்தான் தேவேந்திரன். மீண்டும் அக்னி…

“இருந்தாலும் அவர்களையும் கைதிகளாகவோ இல்லை அழிக்கவோ செய்திருக்க வேண்டுமென்று என் மனதில் தோன்றுகிறது தேவேந்திரா”

“விடு அக்னி நம்ம தேவேந்திரன் சொல்வது தான் சரி பேடிப் போல் தப்பித்து போனவர்களைப் பற்றி கவலைப் படாமல் நமது வெற்றியைக் கொண்டாடுவோம் வா”

என்று சூரியன் கூற அனைவரும் நமது அசுரகிரிவனத்தை மயானமாக்கிச் சென்றார்கள். 

அவர்களுக்குள்ளான உரையாடலைக் கேட்ட காற்கோடையன் சினம் கொண்டு 

“ச்சே ச்சே வெட்கம் வெட்கம். பேடி இந்திரனிடமா நாம் தோற்பது என்னே அவமானம். ஐய்யோ நடந்தவைகளைப் பார்த்து என் நெஞ்சுப் பொறுக்குதில்லையே” 

என்று மனவருத்ததில் தன்னைத் தானே நொந்துக் கொண்டார் அப்பொழுது நமது தலைவன் மகனான மதிநாகசுரன் ஆசானின் கைகளைப் பிடித்து

“கவலை வேண்டாம் நான் இருக்கிறேன். தேவேந்திரனின் கொட்டத்தை அடக்கி நமது இனத்தவரை மீட்டு, மீண்டும் எனது தந்தையைப் போல அண்டசராசரங்களையும் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆள்வேன் இது எனது உறுதிமொழி” 

என்று கூறியதும் நமது ஆசான் தெளிவடைந்தார் அதற்குண்டான பயிற்சிகளை எல்லாம் அன்று முதலே மேற்கொள்ளலானோம். என்ன? அனைத்தும் உங்கள் மனதில் பதிந்ததா?

என்று மந்திராசுரன் பல ஆண்டுகளாக இரவு நேரத்தில் தானும் தன் ஆசானுமாக காப்பாற்றி தங்களுடன் கூட்டி வந்த சிறுவர்களுக்கு கதை போல கூறிவந்தான். தப்பித்து வந்த போது கைக் குழந்தையாக இருந்த மந்தாகிஷி சற்று விவரம் தெரிய ஆரம்பித்ததும் கேள்வி எழுப்பினாள்…

“எல்லாம் நன்றாகவே பதிந்துவிட்டது அண்ணா எத்தனை ஆண்டுகளாக தாங்கள் இந்த நிகழ்வை எங்களுக்கு சொல்லி வருகிறீர்கள். இம்முறை எனக்கொரு சந்தேகம். கேட்கலாமா அண்ணா? இதை எனக்கு முன்னதாகவே மற்றவர்கள் கேட்டுவிட்டார்களா என்று எனக்கு தெரியாது, ஆனால் என் மனதில் உதித்த கேள்வியை கேட்கட்டுமா?”

“தாராளமாக கேளு மந்தாகிஷி”

“நம் தலைவரும் என் தாய் மாமாவும் ஆன மஹா பலி ஏன் கோபமாக வந்தார்? எங்கிருந்து வந்தார்? எதனால் தேவர்கள் நம்மவர்களை அழித்தார்கள்? அதைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கிறீர்களே!”

“நல்லக் கேள்வி மந்தாகிஷி இது நாம் அங்கிருந்து தப்பித்து வரும்போது என் மனதிலும் இருந்த கேள்வியாகும். இதற்கான விடையை நம் ஆசானிடம் பல காலம் கழித்தே தெரிந்துக் கொண்டேன்”

“என்னது அது அண்ணா? நாங்களே கேட்காத கேள்வியை நம் மந்தாகிஷி கேட்டதும் எங்களுக்கும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கூடியுள்ளது. சொல்லுங்களேன்”

“இரு இரு யாகம்யாழி சொல்கிறேன். நமது அசுரர்கள் கையோங்கிருந்த காலத்தில் பாற்கடலில் அமிர்தம் இருப்பதாகவும் அதை கடைந்தெடுக்க நம்ம இனத்தவரின் உதவியை நாடினார்கள் தேவர்கள். அப்பொழுது அவர்களுக்கு உதவினால் கிடைக்கும் அமிர்தத்தில் பாதி நம்மவர்களுக்கு தரவேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார் நம் தலைவர் மஹா பலி. அதற்கு தேவர்கள் ஒப்புக்கொண்டதால் நம்மவர்கள் உதவினர். ஆனால் அமிர்தம் கிடைத்ததும் மஹாவிஷ்ணுவின் உதவியால் நம்மவர்களை ஏமாற்றி அமிர்தத்தை முழுவதுமாக தேவர்களே உட்கொண்டார்கள். அப்படியும் நமது மந்திரி ராகுசுரன் தேவர்களுக்கு நடுவில் மறைந்திருந்து அமிர்தத்தை உட்கொண்டார். அதை தேவர்கள் கண்டுபிடித்து நாராயணனிடம் கூற அவர் ராகுசுரனின் தலையை துண்டித்து விட்டார். மஹாவிஷ்ணு தேவர்களுடன் சேர்ந்து நம்மை ஏமாற்றியதற்காக தான் கோபமாக வந்தார்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க உதவிய நம்மவர்கள். அப்படி அவர்கள் ஏமாந்து நம்மிடம் வந்து விரிவாக கூறுவதற்குள் பின்னாலேயே நம் இனத்தை அழிக்கும் நோக்கத்தில் வந்த தேவர்கள் அதை சிறப்பாக செய்தும் முடித்தனர். நமது ஆசான் காற்கோடையன் நடந்தவைகளை ஞானதிருஷ்டியில் கண்டுச் சொன்னார்”

“ஏன் அவர் தேவர்கள் நம்மை ஏமாற்றப் போவதையும், நம்மை அழிக்க வருவதையும் ஞானதிருஷ்டியில் கண்டு எச்சரிக்கவில்லை? அண்ணா”

“அவரால் நடந்தவற்றைத் தான் பார்த்துச் சொல்ல முடியும் கோபரக்கா. நடக்கப் போவதை கூற முடியாது அந்த திறனைத் தான் நமது மதிநாகசுரன் வளர்த்துக் கொள்ள பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்”

“ஓ! நம் இனத்தவருக்கு ஏமாற்றத்தையும் அநீதியையும் ஒருசேர வழங்கியுள்ளனர் அந்த தேவர்கள். அவர்களை அழித்தே ஆக வேண்டும் அண்ணா”

“பொறுமை சிரகாசுரா பொறுமை. அது அவ்வளவு எளிதானதில்லை. அதற்காகத் தான் நம் ஆசான் நமக்கெல்லாம் பலவகையான பயிற்சிகளைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். நம் இனத்தை நாம் பெருக்க வேண்டும். நமக்கென்று ஒரு படையை உருவாக்க வேண்டும்.  மதிநாகசுரன் தலைமை ஏற்று வியூகம் அமைத்து அவர்களை தாக்கி நம்மவர்களை மீட்டு அண்டசராசரங்களையும் நாம் மீண்டும் ஆள  வேண்டுமெனில் பொறுமைக் காத்தால் தான் நிகழும். அதற்கான பயிற்சிகள் அனைத்தையும் சிரத்தையுடன் பயின்று நமக்குள் பலத்தை உருவேற்ற வேண்டும்”

“தேவர்களுடன் இணைந்து 

பாற்கடலை கடைந்தனர் நம்மவர்கள்

பாரிஜாத மலர்களைக் கொண்ட மரம் வந்தது

இந்திரனின் தோட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது

நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் வந்தது

இந்திரனின் வாகனமானது

காமதேனு வந்தது அதுவும் அவர்களுக்கானது

மதிரா வந்தாள் வருணனின் மனைவியாக வருணியானாள்

கல்பவிருக்ஷம் வந்தது அதுவும் அவர்களுக்கானது

அப்சரஸ்கள் வந்தனர் அவர்களும் தேவலோகத்திற்கே சென்றனர்

உச்சைஸ்ரவஸ் எனும் வெண்குதிரை வந்தது அதையும் இந்திரனே எடுத்துக்கொண்டான்

மாஹாலட்சுமி வெளிவந்து மஹாவிஷ்ணுவின் மனைவியானாள்

‌பஞ்சஜன்ய எனப்படும் சங்கு வந்தது அதை மஹாவிஷ்ணுவிற்கானது

பற்பல பொன்னும் விலைமதிப்பில்லா கற்களும் வந்தன அவற்றை நம்மவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை

இறுதியில் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிவந்தார் அவரை தேவலோக மருத்துவராக்கிவிட்டனர்

நம்மவர்கள் பங்கு கேட்டது வந்தது

அத்தனையும் எடுத்துக்கொண்ட தேவர்களுக்கு அமிர்தத்தில் பாதி தர மனமில்லாமல் 

நம்மவர்களை ஏமாற்றி அழிக்கவும் செய்தனர்

அமிர்தமின்றியும் பிழைத்தோம்

அமிர்தமின்றி வாழ்ந்தும் கொண்டிருக்கிறோம்

அமிர்தத்திற்காக நம்மவர்களை இழந்தோம்

அந்த அமிர்தம் உண்டவர்களை அடியோடு அழிப்போம் 

மீண்டும் நம் அசுரர் இனத்தை வாழ வைப்போம்

நாம் இழந்ததை மீட்டெடுப்போம்

அண்ட சராசரத்தையும்  நம் வசப்படுத்துவோம் 

ஹே ஹே மஹா காளி

ஹே ஹே மஹா காளி

ஹே ஹே மஹா காளி”

இவ்வாறு காற்கோடையனும், மந்திராசுரனும் எட்டு சிறுவர்களின் மனதில் ஆக்ரோஷத்தையும், வன்மத்தையும் அவர்களுக்குள் பல ஆண்டுகளாக உருவேற்றி வந்தனர். 

தொடரும்….

2 Comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s