
நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப் படுகிறது
அது நேராக வளர்ந்து நின்றிருப்பதனால் மட்டுமே வெட்டப்படுகிறது
அது சாய்ந்து வீழ்ந்தாலும் பலர் அமரும் நாற்காலியாகும்
வெட்டுபவருக்கு என்றும் உபயோகமாக மட்டுமே இருக்கும்
தன்னை வெட்டிவிடுவார்கள் என்று ஒருநாளும் அது தன்னை வளைத்துக் கொள்வதில்லை
அப்படிப் பட்ட மரங்கள் எண்ணிக்கையில் குறைவானதாகவே இருக்கும்
நேர் நிமிர்ந்த மரங்களைப் போல தான் மனிதர்களில் சிலர்
நேர்மை, நியாயம், நாணயம், உண்மை, சட்டம், சுய ஒழுக்கம் என்று வாழ்கிறார்கள்
அவர்கள் தங்களின் சுய விருப்பங்களுக்காகவோ / அடுத்தவரிடமிருந்து காரியத்தை நடத்திக் கொள்வதற்காகவோ எங்கும் எதற்கும் தங்களின் நல்ல குணங்களையோ / பழக்கங்களையோ / பாரம்பரியத்தையோ சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் வாழ்கிறார்கள்
அவர்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் ஒதுங்கிவிடுகிறார்கள்
வளைந்து நெளிந்து வளர்ந்த மரங்கள் நேர் நிமிர்ந்திருக்கும் மரத்தில் முட்டி, மோதி, அதன் மீதே சாய்ந்தும் கூட வளர்ந்திருக்கும்
சூழ்நிலைக்கேற்ப, இடத்துக்கேற்ப, ஆட்களுக்கு ஏற்றார் போல வளைந்து, நெளிந்து வாழ்பவர்கள் நன்னெறியோடு நேராக வாழ்க்கை நடத்துபவர்களை வளைந்த மரத்தைப் போல முட்டுவார்கள், மோதுவார்கள், எல்லா வழிகளிலும் தாக்குவார்கள்
வளைந்து நெளிந்து வளரும் மரங்கள் பல நேரங்களில் பலரை தடுக்கி விழச்செய்யும், கண்களைக் குத்தும், வழியை மறைக்கும், மற்ற மரங்களை வளரவிடாது தடுக்கும்
அதேப் போல் எல்லாவற்றிக்கும் வளைந்து, நெளிந்து, குனிந்து, கும்பிடுப் போட்டு வாழ்க்கை நடத்துபவர்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய நேர்மையான மனிதர்களை பல நேரங்களில் பல சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்கள்
அவற்றை எல்லாம் பொறுமையாக, நிதானம் தவறாமல் கையாளுபவர்கள், வெட்டுப் பட்டும் நேர்மையாகவே இருப்பவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் துளிர்ப்பர், மீண்டும் நேர்மையானவராகத் தான் வளர்வர்
நேர்மையின்றி, வேண்டிய இடங்களில் வேண்டியோருக்கு துதிப் பாடி வளைந்து கொடுத்தால் தான் வெட்டுப்படுவதிலிருந்து சற்று தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் பலரால் திணிக்கப் படுகிறது
எத்துனை முறை வெட்டுப் பட்டாலும் நாம் நமது நேர்மையிலிருந்தும், நேர்மறை எண்ணங்களிலிருந்தும் நல்லொழுக்கங்களிலிருந்தும் ஒருபோதும் வளைந்து, நெளிந்து மாற வேண்டிய அவசியமில்லை
வளைந்தும், நெளிந்தும், அடுத்த மரத்தில் சாய்ந்தும் மட்டுமே வளரக்கூடிய மரங்களின் மத்தியில் நெடுநெடுவென நேர் நிமிர்ந்த மரமாகவே நாம் உயர்ந்து நிற்போம்
வெட்டுப் பட்டால் நாற்காலிகள் ஆவோம் இல்லையேல் நமது விதைகள் நாளைய சிறந்த தலைமுறையினர்களாகி, நேர் நிமிர்ந்த மரங்களாக வளர்ந்து நமது குடும்பத்திலும் சமுதாயத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதைப் பார்த்து வளைந்து நெளிந்து கிடக்கும் மரங்களும் நேர் நிமிர்ந்த மரங்களாகட்டும்.
❤️நன்றி❤️