உயரப்பற

இரட்டைவால் குருவி / கரிக்குருவி எனப்படும் குருவி மட்டுமே கழுகின் மீது அமர்ந்து பயணிக்கும் தைரியம் உள்ள ஒரே பறவை இனம். இவை பயமறியா பறவை இனம். இது தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட  தாக்கும் குணம் கொண்டது.

ஆம் இந்த வகைக் பறவை கழுகின் மீது பயணிப்பதோட நின்றிடாது. அது கழுகின் கழுத்தில் அமர்ந்து சவாரி செய்வதோடு கழுகின் கழுத்தை தனது சிறிய கூர்மையான அலகால் கொத்தி கொத்தி புண்ணாக்குமாம். அது தான் அதன் பொழுதுப் போக்கு போல(சில மனிதர்களைப் போல்).  சிரமப்படாமல் தன் சிறகுகளுக்கு அதிக வேலைக் கொடுக்காமல் இலவச வான்வழிப் பயணத்துடன் கொத்திக் கொத்தி விளையாடும் விளையாட்டும் கிடைத்தால் கசக்குமா கரிக்குருவிக்கு?

தன் மீது சொகுசு பயணம் மேற்கொள்வதோடு தன்னை ரணமாக்கும் அந்த கரிக்குருவியை கழுகார் ஒன்றுமே செய்ய மாட்டார். அந்த சின்னக் குருவியுடன் சண்டைப் போட்டு தன் நேரத்தையோ தனது சக்தியையோ வீணாக்க அவருக்கு விருப்பமில்லை. அதனால் என்ன செய்வார் தெரியுமா? தனது நீளமான சிறகுகளை வான் முழுவதுமாக விரித்து மெல்ல மெல்ல உயரத்தை அதிகரித்து வானில் உயர்ந்துப் பறப்பாராம். அது தானே அவர் வலிமையே!! 

ஆம் மற்றப் பறவைகளைக் காட்டிலும் அதிக உயரம் பறக்கக் கூடியது கழுகு மட்டுமே. கழுகு தனது தனித்திரனால் உயர உயர பறந்து, அதிகமான உயரத்தை எட்டுவதிலேயே அதன் கவனம் இருக்குமாம். சாதாரணமாக மழைக்கு காற்று வீசினாலே மரக்கிளைகளில் ஒதுங்கும்  பறவை இனத்தில் நமது கழுகார் புயலிலும் ஜம்பமாக மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறக்கவே ஆசைப்படும் தனித்துவம் வாய்ந்த பறவை இனமாகும். மற்றப் பறவைகள் அனைத்தும் கூட்டமாகவே பறக்கும். ஆனால் கழுகள் மட்டுமே தனித்தனியாக பறக்கக்கூடியவை. 

இவ்வளவு தனித்துவம் வாய்ந்த கழுகின் கழுத்தைக் கொத்திக் கொண்டிருக்கும் குருவியிடம் சண்டையிடாமல் அது தனது உயரத்தை உயர்த்திக் கொண்டே சென்று குருவியையும் கூடவே கூட்டிச் செல்ல ஒரு கட்டத்தில் கரிக்குருவியால் கழுகின் உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் பிராணவாயு குறைவினால் கழுகின் மீதிருந்து வீழ்ந்திடுமாம். 

இந்த சிறிய கரிக்குருவி மற்றும் கழுகிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது. கழுகைப் போல் தன்னம்பிக்கை உடையவர்கள் வாழ்வின் சவால்களை அவர்களாகவே சந்திப்பார்கள் கூட்டம் சேர்க்க மாட்டார்கள்.  பலவீனமானவர்களே கூட்டத்துடன் அதிகம் காணப்படுவார்கள். மன ஒருமைப்பாடு மற்றும் துல்லியமான இலக்கு இவையே கழுகுகள் தங்கள் இரையை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதை அடையும் சக்தியைக் அதற்கு கொடுக்கிறது. 

அது போல நாமும் நமது இலக்கை நோக்கி,  மன ஒருமைப்பாட்டுடன் உயர்ந்துக் கொண்டே சென்றோமேயானால் கரிக்குருவியைப் போல நமக்கு இடையூறுகள் செய்ய பலர் வந்தாலும் அவர்கள் எல்லாம் நமது உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போயிவிடுவர். எல்லா வாதங்களுக்கும் நாம் பிரதிவாதம் வைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விமர்சகர்களுக்கும் நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் நமது குணத்தை, தன்னபிக்கையை, தரத்தை எல்லாவகையிலும் உயர்த்திக் கொள்வோம். 

எதிரிகள், நமக்கு தீங்கிழைக்கக் காத்திருப்பவர்கள், கரிக்குருவி கழுகைக் கொத்துவதுப் போல நமக்குப் பின்னாலிருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், செய்துக் கொள்ளட்டும் அதைப் பற்றி சிந்தித்து கவலைக் கொள்ளல் வேண்டாம், அப்படிப் பட்டவர்கள் இருக்க வேண்டிய இடம் அதுதான் என்று விட்டுத்தள்வோம்.

நாம் நமது பயணத்தை மட்டும் கவனத்துடன் மேற்கொண்டு உயரப்பறப்போம்.

❤️நன்றி❤️

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s