
நமது நண்பர்கள் அல்லது சொந்தக் காரர்கள் சிலர் வீடுகளுக்குச் சென்றால் பல மணி நேரம் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கத் தோன்றும். வெகு நேரம் கழித்து கடிகாரத்தைப் பார்த்து “ஓ நேரம் இவ்வளவு ஆகிவிட்டதா” என்று கடிகாரம் பார்த்தால் தான் உணர்வோம். கிளம்புகிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் கிளம்பாமல் பேசிக்கொண்டே இருப்போம். அப்படிப் பட்ட வீடுகளுக்கு எப்போது போக நினைத்தாலும் உடனே கிளம்பி விடுவோம். எந்த வித சாக்கு போக்கும் சொல்லத் தோணாது. எப்போது மறுபடியும் அவர்கள் வீட்டுக்கு போகலாம் என்று உள்ளம் எதிர்ப்பார்த்திருக்கும்.
அதே நாம் சில நண்பர் அல்லது சொந்தக்காரர் வீடுகளுக்கு செல்வதற்கே மிகவும் யோசிப்போம். அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று இருந்தாலும் அடுத்தவாரம் பார்ப்போம் இல்லையெனில் அடுத்த மாதம் போய்க் கொள்வோம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். அப்படியே சென்றாலும் அவர்கள் வீட்டிற்குள் சென்றதுமே நம் மனதில் அமைதி குறைந்ததுப் போலவும் ஒரு வகையான சங்கடமும் நம்மை ஆட்கொள்ளும். ஏதோ இனம் புரியாத ஒரு பதற்றம் அங்கிருந்து கிளம்பும் வரை இருந்துக் கொண்டே இருக்கும். சற்று நேரம் அமர்ந்து பேசியதுமே கிளம்பிவிடுவோம். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் நமக்குள் ஒரு வகையான மனநிம்மதியும், ஏதோ ஒரு பிடியிலிருந்து விடுப்பட்டது போல தோன்றும்.
இது நம்முள் பெரும்பாலானோர் அனுபவித்த உணர்வு என்றாலும் அதை எத்தனைப் பேர் நினைத்து அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துள்ளீர்கள்? ஏன் அப்படி நம்முள் ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பற்றியது தான் இந்த கட்டுரை. ஏனெனில் இது மாதிரியான நேர்மறை / எதிர்மறை உணர்வுகளை உணர்ந்ததாக பலர் சொல்லிக் கேட்டுள்ளேன். நானும் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
இந்தப் பதிவு ஒருவர் வீட்டில் நமக்கு அளிக்கப்படும் உபசரிப்பினாலோ அல்லது அவர்கள் நமக்கு அளிக்கும் மரியாதை / மதிப்பினாலோ எழும் மாற்றங்களைப் பற்றியது அல்ல. அந்த வீட்டினில் உள்ள ஆற்றல் /சக்தி எனப்படும் எனர்ஜி தான் எல்லாவற்றிற்கும் காரணமாகும்.
நாம் ஒருவர் வீட்டுக்கு செல்கிறோம் அவர்கள் நம்மை ராஜ உபசாரம் செய்கிறார்கள், நம் மீது அதீத மரியாதை மற்றும் மதிப்புடன் நம்மை நடத்துகிறார்கள் என்றாலும் நமக்கு ஒரு வகையான பதற்றம், சங்கடம், மனதில் அமைதியின்மை போன்ற உணர்வுகள் இருந்துக் கொண்டே இருக்கும். அதே சிலர் வீடுகளில் வெறும் தண்ணீர் குடித்தாலும் மனம் நிம்மதியடையும், மனதில் ஒரு வகையான மகிழ்ச்சிப் பொங்கும். இன்னும் சற்று நேரம் பேசிவிட்டுப் போவோம் என்று நம்மை தூண்டிலிட்டு அமர வைக்கும். இவை நேர்மாறாகவும் நடக்கலாம். அவை அனைத்தும் நாம் சந்திக்கும் நபரின் வீட்டினுள் உள்ள ஆற்றல்/சக்தி செய்யும் வேலையே!
அது என்ன ஆற்றல்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நம் வீட்டுப் பெரியவர்கள் அவர்கள் வீட்டை அவ்வளவு சீக்கிரம் விற்கவோ அல்லது இடித்து புதுபிக்கவோ விடமாட்டார்கள். அதற்கு காரணம் பெரும்பாலும் அது “அவர் கணவர்/மனைவி/அப்பா/ அம்மா வாழ்ந்த வீடு, அதிர்ஷ்டமான வீடு. ராசியான வீடு” என்று பலர் பலவகையாக கூறுவர். ஆனால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் உள்ளது என்பது தான் உண்மையான காரணமாகும். ஆம் நமக்கு எப்படி நேர்மறை /எதிர்மறை எண்ணங்கள் /சிந்தனைகள் உள்ளதோ அதே போல நாம் வசிக்கும் வீட்டிற்கும் நேர்மறை/எதிர்மறை ஆற்றல் எனப்படும் பாஸிடிவ்/நெகடிவ் எனர்ஜி உள்ளது.
அதைப் பற்றி பலர் பல விதமாக எழுதியும், காணொளியாகவும் பதிவிட்டுள்ளனர். அவைகளை இணையதளத்தில் பறக்கவிட்டு, தங்கள் வீட்டில் இது சரியில்லையோ, நம்ம வீட்டில் இது இருப்பதால் / இல்லாததால் தான் அது நடந்ததோ என்று எண்ணும் அளவிற்கு மக்களை கொண்டுச் சென்றுவிட்டனர். அதற்கு வாஸ்து சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும், வீட்டில் இதை வாங்கி இந்த இடத்தில் வைத்தால், அதை வாங்கி அந்த இடத்தில் வைத்தால் சரியாகிவிடும் என்றும் பலர் கூறி மக்களைக் குழப்பம் என்னும் குட்டையில் தள்ளிவிட்டு கலங்கச் செய்து அதில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் பல வழிகளில்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எல்லா திசைகளிலும் இருப்பார் நமது பிக் பாஸ் வீட்டினுள் உள்ள காமெராக்களைப் போல எங்கும் நிறைந்திருப்பார். அவரிடமிருந்து எவருமே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்றிருக்கும் அவரையே நம்மக்கள் ஒரு குறிப்பிட்ட திசையை பார்த்து தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஏன்? எதற்கு?. ஒரு சிலர் கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு என்கிறார்கள், வட இந்தியாவில் மேற்குப் பார்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள். இதில் நான் படித்த ஒரு கட்டுரையை பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.
அந்த கட்டுரையில் ஒரு வீட்டின் பூஜை அறையை வடகிழக்கு / தென்கிழக்கு/ கிழக்கு/வடக்கு மூலைகளில் வைத்தால் தான் நமக்கு நல்லது நடக்கும் என்று கட்டுரையின் துவக்கத்தில் எழுதியிருந்தது. அதே கட்டுரையின் முடிவில் நான்கு திசைகளான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் பூஜை அறையை அமைக்கலாம் என்றும் பதிவிடப்பட்டிருந்தது. கட்டுரையை முழுவதும் படிக்காமல் முதல் மூன்று பத்திகளை மட்டும் படித்தால் நாம் நமது வீட்டின் பூஜை அறையை மாற்றி வைக்க வேண்டும் என்னும் அளவிற்கு நம் மனம் எண்ணத் துவங்கிவிடும், அப்படி இருந்தது அந்த கட்டுரையின் ஆரம்பத்திலிருக்கும் மூன்று, நான்கு பத்திகளும். இது நம் வீட்டின் எல்லா அறைகளுக்கும் நமது வீடு முழுவதுக்குமாக நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயமாகும். இங்கே ஒரு உதாரணத்திற்காக பூஜை அறையை குறிப்பிட்டுள்ளேன். இவை எல்லாம் சொந்த வீடு வாங்கிய அல்லது இருக்கும் நபர்களுக்கு சரி, ஆனால் வாடகை வீட்டிலிருப்பவர்கள் எப்படி மாற்றி அமைக்க முடியும்? அப்போ அவர்கள் வீடுகளில் எப்பொழுதும் பிரச்சினை என்றோ அல்லது எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்றோ எடுத்துக்கொள்ள முடியுமா என்ன?
அவரவர் பின்பற்றும் முறைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பமே. அதில் எந்த வித கருத்தையோ/எண்ணத்தையோ/ அபிப்பிராயத்தையோ/பின்பற்றும் முறையையோ தவறென்றோ இல்லை குற்றமென்றோ கூற நமக்கு உரிமையில்லை. ஆனால் எளிதாக சில மாற்றங்களை நம்முள் நாம் கொண்டுவந்தாலே போதுமானது என்று சொன்னால்!! அனைவரும் சற்று சிந்திக்கத் துவங்குவார்கள் இல்லையா? அது போல, சில மிகவும் எளிமையான விஷயங்கள், மாற்றங்கள் நமது வீட்டினில் உள்ள எதிர்மறை ஆற்றல் எனப்படும் நெகடிவ் எனர்ஜியை துறத்தியடிக்க வேண்டியவையாகும். அது சொந்த வீடானாலும் பொருந்தும் வாடகை வீடானாலும் பொருந்தும்.
நல்ல வெளிச்சம் மற்றும் காற்று ஆகிய இரண்டும் நம் வீட்டினுள் நிறைந்திருக்கும் படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மிக முக்கியமான தேவைகளில் ஒன்று.
மற்ற எல்லாவற்றையும் விட நம் வீட்டிலிருக்கும் எதிர்மறை ஆற்றலை துறத்த மிக மிக முக்கியமான அவசியமான ஒன்று என்னவென்றால் அது நாம் தான். நமது வீடு நம்முடைய பிரதிபலிப்பே ஆகும். வீட்டில் வசதி இருக்கிறதோ இல்லையோ வாஸ்து படி அமைந்திருக்கிறதோ இல்லையோ அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சில மாதங்கள் நமது வீட்டில் ( சொந்த வீடோ/ வாடகை வீடோ)
நாம் நல்ல எண்ணங்களை மட்டுமே எண்ணுவோம்.
வீட்டிலுள்ள அனைவரிடமும் அன்பாகவும் அமைதியாக பேசுவோம்.
நம் வீட்டிலுள்ள ஒரு நபர் சோர்வடைந்தாலும் மற்ற அனைவருமாக அந்த நபருக்கு தோள் கொடுத்து உற்சாகத்தை பரிசளிப்போம்.
கோபம், வெறுப்பு, போட்டி, பொறாமை, பொய், ஏமாற்றுதல், எரிச்சல், வன்மம் போன்றவைகளை நம்மிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு
அமைதியை நமதாக்குவோம்.
வெறுப்பு மற்றும் வன்மத்தை வெல்ல அதை மறப்பதே ஆகும்.
மற்றவர்களை நமக்கு போட்டியாக எண்ணாமல் நம்மோடு நாமே போட்டியிட்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
பொறாமைக்கு ஆதார காரணம் அதீத ஆசை மற்றும் போட்டி. போட்டியைப் பற்றி புரிதல் ஆகிவிட்டது. இல்லையா? ஆசை பட வேண்டும். ஆனால் அது எதற்கு? ஏன்? என்று ஆராய்தலும் வேண்டும். ஆசை நியாயமானதாகவும் இருத்தல் வேண்டும். ஆரோக்கியமான ஆசைகளை, பொறாமையை தூண்டாத ஆசைகளை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
நம்மால் முடிந்தால், நம்மால் முடிந்ததை, நாலு பேருக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ உதவுவோம். எந்த வகை நல்லுதவி ஆனாலும் செய்வோம். அப்படி முடியாத பட்சத்தில் எவருக்கும் உபதிரவம் செய்யாமல் இருப்போம். எவரும் நமக்கு தாழ்ந்தவர்களும் இல்லை, நம்மைவிட உயர்ந்தவர்களும் இல்லை அனைவரையும் ஒரே மாதிரியாக எண்ணுவோம், அதுபடியே நடத்துவோம்.
நமது வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை / எதிர்மறை ஆற்றல் நம்முள் இருந்து வந்ததே என்பதை உணர்ந்தால் போதும். அதற்கு என்ன செய்ய வேண்டும் / கூடாது என்று நமக்கே புரிந்து விடும். “ஆடத் தெரியாதவர் மேடைக் கோணல்” என்றார் என்பது போல நம்மை நாம் மாற்றிக் கொள்ளாமல் வீட்டைக் குறை சொல்வானேன்!!!
நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், உண்மை, நம்பிக்கை, பொறுமை, மனநிறைவு ஆகியவைகளை நம் இல்லம் முழுவதும் விதைத்து வாழ்ந்துப் பாருங்களேன் எந்த திசை வீடாக இருந்தாலும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நேர்மறை ஆற்றலே நமக்கும் நம் வீட்டுக்கு வருவோருக்கும் மனமுழுவதும் நிறைந்து நம் இல்லம் இனிமையான அனுபவத்தையே தரும் சொர்க்கமாகும்.
❤️நன்றி❤️