ஏதிலார்

அழகிய  ஓடைகளில் பல சலசலப்புடன் ஏதோ அவசர வேலையை முடிக்க வேண்டியிருப்பதைப்போல் முந்தியடித்துக்கொண்டு குள்ளத்தி நதியை சென்றடைந்துக் கொண்டிருந்தன. சில ஓடைகள் சென்றடைவேண்டிய இலக்கு குள்ளத்தி நதி என்று தெரிந்ததினாலோ என்னவோ ஓடும் வழியெல்லாம் நின்று நிதானமாக  பூமியை வருடிக்கொண்டே அழகாக சப்தமில்லாமல் தங்களுக்கான வழியை வகுத்து பாதை மாறாமல் சென்று நதியோடு இணைந்தன. மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதனாலும் அதிக ஆழமில்லாததனாலும் இந்த நதிக்கு குள்ளத்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பாறைகளில்  பல மடிப்புகள் காணப்பட்டன மேலும் மிகவும்  வழுவழுப்பாகவும் இருந்தன. அந்த இடத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட எரிமலை பிழம்பினால் அத்தகைய பாறைகள் உருவாகியுள்ளது. அதன் விளைவாக ஓடை நீர் பூமிக்குள் செல்ல வழியின்றி குள்ளத்தி நதியை சென்றடைகின்றன. 

இப்படி அழகு எழில் கொஞ்சும் நல்லமலைத்தொடரிலுள்ள  அடர்ந்த காட்டினுள் புலிஅடவி என்ற ஓர் இடமிருக்கிறது.  அந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன் புலிகளும் சிறுத்தைகளும் நிறைந்திருந்ததினால் அப்பெயர் பெற்றது.  இப்படிப்பட்ட அழகான இடத்தில் ஒரு பெரிய தோட்டத்தின் நடுவில் அழகான வீட்டில் தன்னிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் டாக்டர் சூரியகாந்தன்.

புலி அடவி எனும் அந்த இடமானது நத்தையால் என்ற ஒரு சிறிய கிராமத்திலிருந்து சுமார் இருபது மைல் தள்ளி இருக்கிறது. இந்த கிராமத்தில் நத்தையர் எனப்படும் காட்டுவாசிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறந்த வேடர்கள் ஆவர். இந்த இனத்தவர்  இருபது குடும்பங்களாக சுமார் ஒரு நூறு  பேர் வெளி உலகம் பற்றி ஒன்றுமே தெரியாத, மாடர்னைஸேஷன் எனப்படும் நவ நாகரீகமான நகர வாழ்வு தீண்டாமல், இந்த கால வேகமான வாழ்க்கை வாழ்ந்துவரும் நம்மைப்போலில்லாமல் ஆதி கால மனிதர்களைப்போலவே மெல்ல ஊர்ந்து ஊர்ந்து இன்றும் வாழ்ந்து வருபவர்கள். இவர்களின் நத்தையால் கிராமம் மலைகளால் சூழப்பட்டிருந்தது.  

பல அதிசயங்களை உள்ளடக்கியுள்ளது நத்தையர்களின் நத்தையால் கிராமம். இங்கு வருடத்தில் நான்கு மாதங்கள் மழைப்பொழியும் இதில் என்ன விஷேசம் என்றால் மழை நீர் நீல நிறத்தில் இருக்கும். ஆனால் ஓடைகளிலும் நதியிலும் சேர்ந்ததும் நிறமின்றி ஆகும். இவர்கள் அனைவரும் கிராமத்தை விட்டால் காடு, காட்டை விட்டால் கிராமம் என்று வாழ்பவர்கள். எவருக்குமே அதைத்தாண்டி என்ன இருக்கும் என்ற சிந்தனை கூட செய்யாத மனித இனத்தவர்கள். அதிலும் சில இளவட்டங்கள் முயற்ச்சித்ததில் பலனின்றி போனது. ஒவ்வொரு முறை முயன்ற போதும் காடு வெறிக்கொண்டது போல் இவர்களை வேட்டையாடி படு காயங்களுடன் கொண்டு வந்து கிராமத்தின் எல்லையில் போட்டுவிடும். அவர்களின் நம்பிக்கை தெய்வமான நத்தைதேவதை உதவியை நாடியதால் காப்பாற்றப்பட்டனர்.  இதனால் அனைவரும் வெளியேறும் எண்ணத்தையே மெல்ல மெல்ல கைவிடலானார்கள்.

டாக்டர் சூரியகாந்தன் அமேரிக்காவில் ரோபோடிக்ஸ், ஸ்பேஸ் ஸயின்ஸ் என பல பிரிவு பாடங்களில் பி.எச்.டி முடித்து பின் டெலிபோர்டேஷன் இயந்திர ஆராய்ச்சியில் தனது நான்கு நண்பர்களான டாக்டர் சதீஷ், டாக்டர் அஞ்சலி, டாக்டர் ராபேர்ட், டாக்டர் லூசியானா ஆகியோருடன் இணைந்து  பல வருடங்களாக இந்த நல்லமலைத்தொடரில் புலி அடவி பகுதியில் ஈடுபட்டு வருகிறார். அதில் சில முக்கிய  வெற்றிகளும் கண்டுள்ளனர். அவர்களின் ஆராய்ச்சி டெலிபோர்டேஷன் பற்றி மட்டும் அல்லாமல்  அந்த நத்தையால் கிராம மக்களின் மீதாகவும் தான் இருந்தது.  டாக்டர் சூரியகாந்தனை தவிர மற்ற நால்வரும் அமேரிக்கா பிரஜைகள் ஆவர். டாக்டர் சூரியகாந்தன் இந்தியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டு வெற்றியும் கண்டவராவார். இவரின் உயிர் நண்பர்களான சதீஷ், அஞ்சலி, ராபேர்ட், லூசியானா ஆகியோரை ஒரு முக்கிய ஆராய்ச்சிக்காக இந்திய அமேரிக்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் அழைப்பு விடுத்து அவர்களை இந்த நல்லமலைத்தொடருக்கு அழைத்து வந்தார். அந்த ஆராய்ச்சி மிகவும் ரகசியமாக முப்பது ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கிறது.  இவர் ஐவரின் மூளை எப்படி உதவியுள்ளது எங்கே எதற்காக இவர்கள் ஆராய்ச்சி பயன்ப்பட்டுள்ளது என்பதைப்பற்றி மேலும் படித்து தெரிந்துக்கொள்வோம்.

இவர்கள் ஐவரும் வேறு வேறு பாடபிரிவுகளில் பி.எச்.டி முடித்திருந்தாலும் அனைவரும் ஒரே கல்லூரியில் படித்தமையால் நட்பு வளர்ந்தது. இவர்களில் நத்தையால் கிராம மக்களுக்கு பரிச்சயமானவர் டாக்டர் சூரியகாந்தன் மட்டுமே. ஐவரும் ஒன்றாக ஒரே இடமான புலி அடவியில் வசித்து வந்தாலும் நத்தையால் கிராம மக்களைப்பொருத்தவரை தங்கள் இனத்தவர் அல்லாத நபர் சூரியகாந்தன் மட்டும் ஆவார்.  மற்ற நால்வரையும் எவருமே கண்டதில்லை.  சூரியகாந்தன் எப்படி இவர்களுள் ஒருவரானார் என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா. இதோ அதற்கான விடை ..

ஒரு முப்பது வருடங்களுக்கு பின் செல்வோமா!!!! அன்று ஒருநாள் பலத்த இடியுடன் கூடிய மழைப்பொழிந்தது நத்தையர் அனைவரும் அவரவர் குடிலில் இருந்தனர். அவ்வளவு மழை சப்தத்திலும் ஏதோ ஒரு மனித குரல் கேட்டது சிசரவன் என்ற நத்தையனுக்கு. அவன் குடிலில் இருந்து வெளியே தாழை இலை குடைப்பிடித்து சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஊர் எல்லையில் யாரோ ஒருவர் படுத்துக்கிடப்பதைப்பார்த்தான். ஓடி அருகில் சென்றான். அது அவன் இனத்தவர் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு உடனே தனது இனத்தலைவனான சிம்பானனை அழைத்துவந்து காட்டினான் சிசரவன். சிம்பானன் அந்த உடலைச்சுற்றி தங்கள் தெய்வமான நத்தைகள் காவல் இருந்ததைப்பார்த்து 

“அஸ்தரபா அஸ்தரபா…அனுப ஆராபராமா”

என்று நத்தையர் பாஷையில் “ஆண்டவா ஆண்டவா என்னே உன் அற்புதம்” என்று கூறி சிசரவனை அனுப்பி இன்னும் மூவரை அழைத்து வரச்சொன்னார். நால்வரும் சேர்ந்து சூரியகாந்தனை  தலைவர் குடிலுக்குள் தூக்கிச் சென்றனர். சூரியகாந்தனுக்கு அவ்வளவாக அடி ஏதும் இல்லாததால். மயக்கம் என்று எண்ணி ஏதோ பச்சிலையை அரைத்து வாயிலும் மூக்கிலும் ஊற்றினார் நத்தையரின் மருத்துவர் சீலபாமன். உடனே விருட்டென்று எழுந்து அமர்ந்தார் சூரியகாந்தன். அவரைச்சுற்றி கிராமமே இருந்தது. மனதில் அச்சமும் இருந்தது. காட்டு வாசிகளாயிற்றே தன்னை என்ன செய்வார்களோ என்று. செய்கையில் தான் வழிமாறி வந்தததை புரிய வைத்தார். அதை புரிந்துகொண்ட சிம்பானன்…

“அஸ்தரபா நூமு நாகோ நத்தையால் கனுகு சேர்ச்சை. நூமு நாகோ ஆ அஸ்தரபா துவிதி. நூமு இனபே குடு.” 

“ஆண்டவனே!!! உங்களை எங்கள் நத்தையால் கிராமத்தில் அவரே காவல் இருந்து எங்களிடம் சேர்த்துள்ளார். இனி நீங்கள் எங்களோடு தான் இருக்க வேண்டும்”

என்று அவர்கள் பாஷையிலும் செய்கையிலும் சொல்ல சூரியகாந்தன் 

“அது தானே வேண்டும் அதற்காக தானே இவ்வளவு முயற்சியும்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு நன்றி அப்படியே ஆகட்டும் என அவர்களுடனே இருந்துவிட்டார்.

ஒரு வருடம் அவர்கள் கிராமத்திலேயே அவர்களுடனே இருந்து அவர்களுக்கு தன் தமிழ் மொழியைக்கற்றுக்கொடுத்து நத்தையரின் மொழியை கற்றும் கொண்டார். அவர்களின் நம்பிக்கையை பெற பல திட்டங்களைப்போட்டார். அவர்கள் காட்டிற்கு சில நேரம் செல்ல முயலும் போது (அதாவது அந்த நேரம் அவர் நண்பர்கள் ஏதாவது ஆராய்ச்சிக்காக காட்டிற்குள் சென்றிருந்தால்) 

“இன்று காட்டிற்குள் செல்ல வேண்டாம் மீறினால் படு காயங்களுடன் தான் ஊருக்கு திரும்ப முடியும்” 

என்று கூற அதை மீறி சென்ற சிலர் இடி தாக்கி பாதி உசுருடன் ஒடி வந்ததைப்பார்த்ததில் அனைவரும் அவரிடம் ஏதோ தங்கள் நத்தை தேவதையின் சக்தி இருக்கிறது என்று நம்பலானார்கள். 

அதேபோல் ஒரு சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தண்ணீர் அருந்த வேண்டாம் என்று கூறினார் அதை மீறி ஒருவர் செய்ய மரணம் அவரைத்தழுவயிருக்கையில் அந்த நபர் உயிருக்கு போராடுவதை இருந்த இடத்திலிருந்தே அறிவித்து சிம்பானனிடம்  ஆட்களை அனுப்பச் சொல்லி தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றினார். அனைவரும் சூரியகாந்தனை கடவுளாகவே பார்க்க ஆரம்பித்தனர். நத்தையால் கிராமத்தில் அவர் செல்வாக்கு கூடியது. அவர் சொல்படியே அனைத்தும் நடந்தமையால் மெல்ல மெல்ல அந்த கிராமத்து மக்களாகிய நத்தையர்கள் அவர் பிடிக்குள் வந்தனர்.

இடி தாக்கியது, தண்ணீர் விஷமானது, அதை தக்க சமயத்தில் தெரிவித்தது இப்படி பல அதிசியங்களை  அவர் நண்பர்கள் உதவியுடன் சூரியகாந்தன் நடத்திய திருவிளையாடல் ஆகும்.

அங்கிருந்த ஒரு வருடத்திற்குள் மற்ற நால்வரும் வேண்டிய அனைத்து பொருட்களுடன்  நத்தையர்களுக்கு தெரியாமல் புலி அடவியில் செட்டில் ஆனார்கள்.

அவர்களுக்குள் இருந்த கம்யூனிகேஷன்ஸ் அனைத்தும் ஒரு சிறிய மைக்ரோ ஃபோன் மூலமாக தான் இருந்தது. மேலும் நத்தையர்களுக்கே தெரியாது அவர்கள் கிராமத்திலும் காட்டைச்சுற்றியும் பல ஹை டெஃபனிஷன் கொண்ட கேமராக்கள் கண்ணுகே தெரியாதவாறு ஆங்காங்கே சரியான இடங்களில் பொருத்தப்பட்டது. இதன் மூலமும் கிராமத்திலிருந்து டாக்டர் சூரியகாந்தன் நண்பர்களுடன் உரையாடி வந்தார்.  

அவர் சுதந்திரமாக அந்த கிராமத்தில் உலாவ ஆரம்பித்தார் அடிக்கடி அவர்களது ஆராய்ச்சிக்காக ரகசியமாக புலிஅடவி சென்றும் வந்தார். 

கிராம மக்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுத்து காட்டில் சில பகுதிகளை விவசாய நிலமாக மாற்றி அதில் எல்லா வகையான பழங்கள், காய்கறிகள், அரிசி என எல்லாம் விளைவித்து அதை எப்படி சமைத்து உண்பது பற்றியும் பாடம் நடத்தி வெற்றி கண்டார். ஆரம்பத்தில் கிராமத்திலிருந்து விளைந்த காய்கறிகள் பழங்கள் என எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிவைத்தார். ஆனால் இது தொடர்ந்தால் அனைவரும் பிடிப்பட்டு விடவேண்டி வருமென எண்ணி புலி அடவியிலேயே நத்தையாலில் அமைத்தது போலவே விவசாய நிலம் அமைத்து அதில் விளைவதை உட்கொண்டனர் சூரியகாந்தனின் நண்பர்கள். பெரிய சோலார் யூனிட் ஒன்றையும் ஃபிக்ஸ் செய்திருந்தனர். இப்படியே ஒரு முப்பது வருடங்கள் உருண்டோடின. 

நத்தையர்களில் சிரபாவன் என ஒரு இருபது வயது இளைஞன் இருந்தான். தலைவன் சிம்பானனின் தங்கை மகனாவான். இவன் ஒரு நாள் சூரியகாந்தன் பதுங்கி பதுங்கி எங்கோ செல்வதைப்பார்த்துவிட்டு அதைப்பற்றி அவரிடமே வினவினான். அதற்கு சூரியகாந்தன் ஏதோ ஆபத்து வருவதாகவும் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள சென்றதாகவும் விளக்கம் அளிக்க அதை தன் மாமா சிம்பானனிடம் சொல்லிவிட்டு செல்ல எது தடுத்தது என்று சிரபாவன் கேட்க ஏதோ சொல்லி சூரியகாந்தன் சமாளிக்க…அந்த பதில் சிரபாவனனுக்கு திருப்தி அளிக்கவில்லை. 

சூரியகாந்தனும் அவர் நண்பர்களும் இருபத்தைந்து முதல்  முப்பது வயதிற்குள் இருந்தனர்  நல்லமலைத்தொடருக்கு நத்தையால் மக்களைப் பற்றிய ஆராய்ச்சிக்காக வந்தபோது. முப்பது வருடங்களாக அங்கேயே இருந்து வருகிறார்கள். இப்பொழுது அவர்கள் ஐம்பத்தைந்து முதல் அறுபது வயதுடையவராகி விட்டனர். வயதின் காரணமாக சூரியகாந்தனின் வேகம் குறைந்தது. அதனால்தான் சிரபாவனிடம் இம்முறைப் பிடிப்பட்டார். இதை உணர்ந்த சூரியகாந்தன் இனி ஜாக்கிரதையாக இருக்க முடிவு செய்தார். 

சிரபாவனனுக்கு சிறு வயது முதலே சூரியகாந்தனின் மேல் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அவனது பத்து வயதில் இதே போல் சூரியகாந்தனை பின்தொடர்ந்து சென்றபோது புலிஅடவியை அடைந்ததும் ஓர் இடத்தில் அவர் மறைந்து போனார். அதைப்பார்த்த சிரபாவன் பயந்துக்கொண்டே அவர் மறைந்துபோன இடத்தில் சென்று பார்த்தான். ஆனால் அவனால் அந்த இடத்தை தாண்ட முடியவில்லை ஏதோ ஒரு சக்தி அவனை பின்னுக்கு தள்ளியது. அதனால் மீண்டும் மரத்துக்கு பின்னாடி ஒளிந்துக்கொண்டு காத்திருந்தான். பல மணிநேரம் கழித்து அதே இடத்திலிருந்து வெளிவந்தார் சூரியகாந்தன். இதைப்பார்த்து மிரண்டு போய் தன் தாய் சில்லுவியிடம் கூற அவள் அவனை அவர் பின்னாடி அப்படி எல்லாம் போகக்கூடாது என கண்டித்தாள். அத்துடன் அதை அங்கேயே கைவிட்டான் சிரபாவன். 

இப்பொழுது மீண்டும் பத்து வருடங்களுக்கு பின் அதே போல் சூரியகாந்தன் செல்வதைப்பார்த்த சிரபாவனனுக்கு அன்று உறக்கமே வரவில்லை. அவன் கடந்த பத்து வருடங்கள் சூரியகாந்தன் என்னவெல்லாம் செய்தார் என்பதை பற்றி வானத்தை நோக்கி அன்னாந்து படுத்துக்கொண்டு யோசித்துப்பார்த்தான். அவர் சில சமயங்களில் கிராமத்திலிருந்து காணாமல் போவதும் அவன் மக்கள் அவரை தேடுவதும் சட்டென்று அவர் கிராமத்திற்குள் விஜயிப்பதும், ஏதோ சிறிய கூர்மையான ஒரு ஆயுதத்தை (சிரிஞ்) வைத்து தன் மக்கள் உடம்பிலிருந்து ஏதோ சிவப்பு நிற திரவம் எடுப்பதும், அவர் சொன்னால் மழை வருவதும் நிற்க சொன்னால் நின்று விடுவதும், காட்டிற்குள் தானாக மறைவதும், இதெல்லாம் எப்படி சாத்தியம்!!! நிஜமாகவே சில்லுவி  சொல்வது போல இவர் தங்கள் நத்தை தேவதை தூதனா இல்லை இவர்களுக்கு தீங்கு விளைவிக்க இருக்கும் தீயவரா என்று மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி இனி அவரை கண்காணிக்க முடிவெடுத்தான். 

இதை தன் தாயிடமோ மாமாவிடமோ சொன்னால் தன்னை திட்டுவார்கள் என்று எண்ணி அவர்களுக்கு தெரியாமலே இதை கண்டுபிடிக்க தனது தோழன் சிரக்குவனின் உதவியை நாடினான். சிரக்குவனும் ஒத்துழைப்பு கொடுக்க சம்மதிக்க இருவரும் சி.ஐ.டி வேலையில் இறங்கினார்கள்.

ஒருவாரம் சூரியகாந்தனை பின் தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினார்கள். ஓன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. மீண்டும் அடுத்த வாரமும் பின் தொடர்ந்தனர் இம்முறையும் அவரின் செயல்களில் எந்தவித வித்யாசமும் இல்லை. சிரக்குவன் சிரபாவனனை நோக்கி 

“என்னடா இது இந்த வயதான மனிதர் ஏதோ புலிஅடவிக்கு சென்றால் மறைந்து விடுவார் என்றெல்லாம் சொன்ன ஆனா இவரு நம்ம கிராம எல்லையைக்கூட தாண்ட மாட்டேங்கராரே”

என்று கேட்க ….அதற்கு சிரபாவன் 

“நான் பத்து வருடத்திற்கு முன்பு பார்த்தது. அதே போல இப்பவும் போகிறாரா என்று தெரிந்துக்கொள்ள தான் நாம அவரை பின் தொடர்கிறோம். உனக்கு இதில் இஷ்டம் இல்லையெனில் நீ விலகிக்கோ. நானே பார்த்துக்கொள்கிறேன்”

“டேய் சிரபாவன் உடனே கோபமா? சரி நானும் வருகிறேன் வா…ஏய் …டேய் …சிரபாவா…அங்கே பார் அந்த சூரியகாந்தன் எங்கோ வேக வேக மாக செல்கிறார்”

“ஆமாம் சிரக்க்குவா. வா.  அவர் புலிஅடவி பக்கம் தான் செல்கிறார். வேகமாக வா.”

இருவரும் மரங்களில் தாவியும் ஆங்காங்கே மறைந்தும் சூரியகாந்தனை பின் தொடர்ந்து புலிஅடவியை சென்றடைந்தனர். சிரபாவன் பத்து வயதில் கண்டது போலவே அதே இடத்தில் மறைந்து போனார் டாக்டர். அதை பார்த்த சிரக்குவன்….

“என்னடா மாயமா காணாம போயிட்டார். ஒரு வேள நம்ம மக்கள் சொல்லறது போல நம்ம நத்தை தேவதை தூதர் தானோ. சாமி காப்பாத்துப்பா என்று வேண்டிக்கொண்டான்”

“அடப்போட இவர் நம்ம நத்தை தேவதை ஒன்னுமில்லை. நம்மள போல நத்தையர் தான்.”

இவ்வாறு இவர்கள் ஒரு மரத்தின் பின்னிருந்து உரையாடிக்கொண்டே சூரியகாந்தனின் வரவுக்காக காத்திருந்தனர். 

மறைந்த சூரியகாந்தன் எங்கே சென்றார் என்ன ஆனார் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்வோமா!!!

அவர் ஏன் மறைந்தார்? ஏன் சிரபாவனனால் உள்ளே போக முடியவில்லை? என்பதற்கான விடை அவர் சென்ற இடத்தினுள் இருகிறது வாருங்கள் நாம் சென்று தெரிந்துக்கொள்வோம்.

அவரும் அவர் நண்பர்களும் தங்களுக்கென ஒரு உலகை புலி அடவியில்  உருவாக்கி அவர்களின் ஆராய்ச்சிக்கு எந்த வித இடையூரும் வராமலிருக்கவும் அதைச்சுற்றி ஃபோர்ஸ் ஃபீல்டு(Force Field) எனப்படும் கண்களுக்கு தெரியாத ஒரு பெருஞ்சுவர் எழுப்பி இருந்தார்கள். அதுதான் சிரபாவன் நுழைய நினைத்தப்போது அவனை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதற்குள் செல்லவும் வெளியே வரவும் அந்த ஐந்து விஞ்ஞானிகள் மட்டுமே செய்யக்கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தது. டாக்டர்ஸ்  அவ்வப்போது சில சாம்பிள்ஸ் கலெக்ட் செய்ய வெளியே வருவதும் பின் மீண்டும் அதனுள் செல்வதுமாக இருந்தனர்.

அன்று ஏன் சூரியகாந்தன் அங்கு வந்துள்ளார்? அன்று ஆராய்ச்சிக்காக மட்டும் அவர் வரவில்லை. வேக வேக மாக அவர் வந்ததர்க்கான காரணம் அவரின் நண்பரான டாக்டர் ராபேர்டின்  உடல் நலம் சரியில்லாமல் போனது தான். 

இவர்கள் ஐவர் உடலுக்குள் ஒரு நச்சுயிரி பல வருடங்களுக்கு முன் இரண்டாயிரத்தி இருபதாம்(2020) ஆண்டு  ஊடுருவியுள்ளது. அவர்களின் ஆராய்ச்சியின் விளைவாக  இவ்வளவு வருடங்கள் அவர்கள் அனைவரும் உயிர் வாழ முடிந்திருக்கிறது. ஆனால் ராபேர்ட் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அன்று சுயநினைவு இல்லாமல் இருந்ததை சூரியகாந்தனுக்கு தெரிவித்ததால் ஓடி வந்துள்ளார். 

அவர் வந்து சேரவும் ராபேர்டிற்கு நினைவு வரவும் எல்லாரும் சற்று நிம்மதியானார்கள்.  ஆனால் அவர்களின் நிம்மதியின் ஆயுள் சிறிது நேரமே நீடித்தது. சதீஷ் மற்றும் சூரியகாந்தனின் கைகளைப்பிடித்துக்கொண்டு ராபேர்ட்… 

“இந்த ரிஸர்ச்சில் நாம் வெற்றி அடையவேண்டும். இவ்வளவு வருடங்களாக நமது போராட்டத்திற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தாக வேண்டும். இந்த ஆராய்ச்சியில் எனக்கும் ஒரு பங்களித்தமைக்கு மிக்க நன்றி சூரியகாந்தன். “லாங் லிவ் நத்தையர்ஸ்”” 

என்று கூறிக்கொண்டே லூசியானாவின் மடியில் சாய்ந்து உயிர் நீத்தார்.  ராபேர்ட்டின்  உடலை ஃபோர்ஸ் ஃபீல்டுக்கு வெளிய தகனம் செய்ய முடிவெடுத்தார்கள். 

ராபேர்ட்டின் உடலை சதீஷீம் சூரியகாந்தனுமாக தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர்கள் வரும் சப்தம் கேட்டு மரத்தின் பின்னாலிருந்து எட்டிப்பார்த்தனர் சிரபாவனனும், சிரக்குவனனும். சூரியகாந்தனுடன் சதீஷைப்பார்த்து அதிர்ந்து போனார்கள் இருவரும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் பின்னாலே வந்த லூசியானாவையும் அஞ்சலியையும் பார்த்துவிட்டனர்.   அவர்கள் அனைவருமாக ராபேர்ட்டின் உடலை மின்சாரம் கொண்டு தகனம் (புகை மேலே போகாமலிருக்க) செய்தார்கள் ஒரு நொடியில் எரிந்து சாம்பலானார் ராபேர்ட் … இதைப் பார்த்ததும் அவர்கள் அனைவரும் நத்தையர்களை அழிக்க வந்தவர்களே என முடிவு செய்து நத்தையால் கிராமத்தை நோக்கி ஓடலானார்கள். அவர்கள் ஓடும் சத்தம் கேட்டு சூரியகாந்தன் சுதாரித்துக்கொண்டார். அது யாராக இருக்கலாம் என்றும் அவர் யூகித்தார். தனது நண்பர்களை உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு ராபேர்ட்டின் உடல் முழுவதுமாக எரித்தபின் அந்த சாம்பலை அவர்கள் பயிர்களுக்கும் மரங்களுக்கும் போட்டுவிட்டு எலும்புகளை எங்காவது வெளியவே புதைக்க சதீஷிடம் சொல்லிவிட்டு …தான் உடனடியாக நத்தையால் செல்ல வேண்டும் என்றார். அதற்கு சதீஷ் ….

“சூரியகாந்தா நமக்கு நேரம் மிக குறைவாக உள்ளது ஆகையால் அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என எனக்கு மனதில் படுகிறது. எதற்கும் கடைசியாக ஒரு முறை நீ சென்று பார்த்துவிட்டு நாம் எப்போது அங்கு போகலாம்!! இல்லை நமது ப்ளான் பீயை இம்ப்ளிமென்ட் பண்ணலாமா என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் நண்பா” 

“எனக்கும் அதுதான் சரி என்று மனதிற்குள் தோன்றுகிறது. சரி நான் உடனே சென்று நாம் இங்கிருந்து அங்கு செல்லலாமா என்பதை தெரிந்துக் கொண்டு வருகிறேன்.  அதன் பின் கிராம மக்களை சந்தித்து அனைத்தையும் விளக்கமாக விவரித்து அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சரி மெஷின் ரெடி தானே?”  

“பக்காவாக உள்ளது சூரியகாந்தன்”

“அதில் நீண்ட தூர பயணம் போன வருடம் மேற்கொண்டது அதனால் தான் கேட்டேன் சதீஷ்.  வாவ் !!! இட்ஸ் இன் குட் கன்டிஷன் மேன். ஓகே தென் நான் சென்று தெரிந்துக்கொண்டு நல்ல செய்தியோடு வருகிறேன். நமது இந்த முப்பது வருட வனவாசம் இந்த வருடமாவது முடிவுக்கு வருமா என்பதை தெரிந்து வரும்வரை நீங்கள் அனைவரும் பத்திரமாக இருங்கள் அந்த சிரபாவன் நிச்சயம் ஊரையே அழைத்து வருவான். இவ்வளவு  வருடங்கள் காத்திருந்தோம் இன்னும் சில மாதங்களே நான் சென்று வருகிறேன் நண்பா டேக் கேர். பை” 

என்று கூறி தாங்கள் கண்டுப்பிடித்த டெலிப்போர்டிங் இயந்திரத்தில் அமர்ந்து கை அசைத்து நிமிடத்தில் மறைந்தார் சூரியகாந்தன். சதீஷ் அவர் கூறியது போலவே எலும்புகளை ஃபோர்ஸ் ஃபீல்டுக்கு வெளியே புதைத்துவிட்டு அவர்களின் குமிழுக்குள் சென்று விட்டார். 

சிரபாவனனும் சிரக்குவனனும் மூச்சிறைக்க ஓடி வந்து சிம்பானனை அழைத்தார்கள். சிம்பானனுக்கும் வயதாகிவிட்டதால் சற்று நிதானமாக வெளியே வந்தவர் …

“என்னடா பசங்களா இப்படி மூச்சு வாங்குகிறது? ஏன் ஓடி வந்திருக்கீங்க? என்ன அவசரம்?”

சிரபாவன் …”ஐயோ மாமா நாம நல்லா ஏமாந்துட்டோம் …இல்ல இல்ல ஏமாத்திட்டாங்க” என்றான்

“யாரு ஏமாத்தினா? நாம என்னத்த ஏமாந்தோம்? ஏய் சில்லுவி இவங்களுக்கு குடிக்க தண்ணீர் குடு”

சில்லுவி தண்ணீர் கொடுத்தாள். ஊரே ஒன்று கூடியது. 

“இப்போ நிதானமானீங்களா பசங்களா? இப்பொ பொறுமையா சொல்லுங்க கேட்கிறோம்”

சிரபாவன் தனது பத்து வயதில் தன் கண்களால் கண்டதையும் அதை சில்லுவி தாயிடம் கூறியதையும் சொல்லியதும் அனைவரும் சிரித்தனர். 

“அனைவரும் சிரிப்பதை நிறுத்துங்கள் சிரபாவன் சொல்வதை கேளுங்களேன். அவன் பத்து வயதில் கண்டதை நாங்கள் இருவருமே இன்று கண்டோம்”

என்று சிரக்குவன் சொன்னதும் அமைதி நிலவியது. சிரபாவன் தொடர்ந்தான்…

“யாராவது அந்த சூரியகாந்தனை இன்று காலையிலிருந்து நம்ம கிராமத்தில் பார்த்தீர்களா?”

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் பின் ஒன்றாக இல்லை என்றனர். மீண்டும் சிரபாவன்

“அவர் அடிக்கடி இப்படி காணாமல் போவதும் நாம் தேடும்போது வந்தும் விடுகிறார். இது எப்படி சாத்தியம் என நாங்கள் அவரை இரண்டு வாரங்களாக பின் தொடர்ந்தோம்” 

சிரக்குவன் குறுக்கிட்டு..

“நமக்கே தெரியாமல் இந்த சூரியகாந்தனைப்போல இன்னும் பலர் அந்த புலிஅடவியில் உள்ளனர்.” 

அனைவரும் ஆச்சர்யமாக இவ்விரு நண்பர்களைப் பார்த்தார்கள். கிராம மருத்துவர் சீலபாமன் ..

“அது எப்படி நமக்கு இந்த காடு பற்றி முழுவதுமே நன்றாக தெரியும். நம்ம கண்ணில் படாமல் யாருமே இங்கிருக்க வாய்ப்பேயில்லை”

இதை கேட்ட சிரபாவன் 

“வைத்தியரே இந்த காட்டுக்குள்ளேயே நமக்கும் தெரியாத ஓரிடத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர் பின்னாலேயே செல்ல முயற்ச்சித்த போது ஏதோ ஒன்று எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டது அவரோடு உள்ளே போக முடியவில்லை. அதுவுமில்லாமல் இன்று அவர்கள் அனைவருமாக அவர்களை போன்றே ஒருவரை ஏதோ கயிறுகள் வைத்து எரித்தனர். அதை நாங்கள் பார்த்ததும் ஓடி உங்களிடம் கூற வந்தோம். எனக்கென்னவோ அந்த சூரியகாந்தன் மேல் பல வருடங்களாக சந்தேகமாகத்தான் இருக்கிறது. இன்று என் சந்தேகம் ஊர்ஜிதமானது. அந்த ஆள் நமக்கு நல்லது செய்ய வரவில்லை நமக்கெல்லாம் ஏதோ பெரிய ஆபத்தை விளைவிக்க போகிறார். அதற்குமுன் நாம் அவர்களை கண்டுபிடித்து அழித்து விட வேண்டும் …என்ன சொல்கிறீர்கள் மாமா”

“எனக்கென்னவோ அவர் நல்லவராக தான் தெரிகிறது சிரபாவனா. அப்படியே ஏதாவது தீங்கு விளைவிக்க வந்தவர் என்றால் இத்தனை காலமாக ஏன் அதை செய்யவில்லை?”

“மாமா இவ்வளவு காலமாக அவர் என்னென்ன செய்துள்ளார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். சரி அவர் ஏன் மாதாமாதம் நம் ஒவ்வொருவரின் உடலில் இருந்து ஏதோ சிவப்பு நிற திரவத்தை கூரான ஆயுதத்தால்(சிரிஞ்) எடுத்தார் ? அதை அவர் என்ன செய்தார்? இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?”

“நீ சொல்வதும் சரி தான் யோசிக்க வேண்டிய விஷயம் தான் ஆனால் அந்த திரவம் ஏதோ பூஜைக்காக என்றல்லவா நினைத்தேன் நாம் ஆடு மாடுகளை முன்னொரு காலத்தில் நம்ம நத்தை தேவதைக்கு கொடுத்துள்ளோம் அது போல என்று நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.”

“சிரக்குவனா இவர்கள் நாம் சொல்வதை நம்ப மாட்டார்களடா. இவர்கள் அனைவரையும் அப்படி மாற்றியுள்ளார் அந்த சூரியகாந்தன்”

உடனே சிரக்குவன்…

“இப்பொழுதே எங்களுடன் வாருங்கள் நாங்கள் நிருபித்து காட்டுகிறோம். இவ்வளவு நேரமாகியும் ஏன் இன்னும் அந்த ஆள் இங்கு வரவில்லை? அவர் அங்கே தான் இருக்கிறார். வருகிறீர்களா?”

இதை சிம்பானனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணி சிம்பானன், மருத்துவர் சீலபாமன் மற்றும் இன்னும் இருவர் சேர்ந்து சிரபாவன் சிரக்குவனனுடன் செல்ல முடிவு செய்து கிராமத்திலிருந்து புறப்பட்டனர். 

அவர்கள் அனைவரும் புலிஅடவியை நெருங்கியதும் சிரபாவன் அனைவரையும் ஓரிடத்தில் நிற்க்கச்செய்து  பின் தனது மாமாவை அழைத்து சூரியகாந்தன் நுழைந்த அதே இடத்தில் அவரை உள்ளே போகச்சொன்னான். அவரும் அழகாக அந்த இடமுழுவதும் சுற்றி வந்தார்.  அதைப்பார்த்த சிரபாவன் தானும் நடந்தான் முன்பு அவனைத் தள்ளிய சக்தி ஏதும் அங்கு இல்லாததை கண்டு அதிர்ந்து போனான். அவன் மாமா அவனைப் பார்த்து முறைத்தார். உடனே…

“மாமா இங்கே தான் அவர் காணாமல் போனார்…இதே இடம் தான். டேய் சிரக்குவன் நீயும் தானே பார்த்த சொல்லுடா”

“எனக்கே ஆச்சரியமாக இருக்கு சிரபாவா . சரி அவர்கள் ஒருவரை எரித்தார்களே அந்த இடத்திற்கு போவோம் வாருங்கள்”

என்று கூறி அனைவரையும் அங்கு அழைத்துச்சென்றனர் சிரபாவனனும், சிரக்குவனனும். அங்கும் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. நடப்பதை எல்லாம் பார்த்த மருத்துவர் சீலபாமன்…

“சிம்பானனா இந்த இளைஞர்கள் ஏன் நம்மிடம் பொய் பேச வேண்டும். இவர்கள் எதையோ பார்த்திருக்கின்றனர் அதில் எந்த வித ஐயமும் இல்லை, சூரியகாந்தனையும் காணவில்லை அதுவும் சந்தேகத்தை கிளப்புகிறது….. ஆனால் பிள்ளைகளா நீங்கள் சொல்வது போல இங்கு எதுவுமே இல்லையே அது எப்படி? அதுதான் ஏதோ மர்மமாக இருக்கிறது”

“அப்பாடா…எங்களை நம்பியதற்கு மிக்க நன்றி வைத்தியரே. மாமா பார்த்தீர்களா நம்ம வைத்தியர் கூட ஆமோதிக்கிறார் ஆனா நீங்க என்னை முறைக்கிறீர்.”

சிரக்குவன் சற்று தூரத்திலிருந்து …

“எல்லோரும் இங்கே வாருங்கள். சீக்கிரம்”

என்று கத்தி கூப்பிட்டான் 

அனைவரும் அவன் இருந்த இடைத்திற்கு சென்றனர் அங்கு சிரக்குவன் ஓர் இடத்தைக்காட்டி அந்த இடம் புதிதாக தோண்டப்பட்டு முடப்பட்டிருக்கிறது என்று கூற சிரபாவனனும் சிரக்குவனனும் அவர்கள் கையில் கொண்டு வந்த ஆயுதங்களால் தோண்ட ஆரம்பித்தனர். தோண்டிய சில மணி நேரத்தில் மனித எலும்புகள் கிடைத்தது. அது அவர்கள் எரித்த மனிதனுடையது தான் என்று அடித்துக்கூறினர் இரு நண்பர்களும். அதைப் பார்த்ததும் சிம்பானனுக்கும் சீலபாமனுக்கும் ஏதோ தவறு நிகழப்போகின்றது என தோன்றியது. இனியும் அங்கு இருப்பது நல்லது அல்ல என்று எண்ணி சிம்பானன் அனைவரையும் உடனே கிராமத்துக்கு செல்லும்படி உத்தரவிட்டார். அனைவரும் வேகமாக கிராமத்தை சென்றடைந்தனர். 

கிராமத்திற்குள் சென்றதும் அனைவரையும் அழைத்து இனி அந்த சூரியகாந்தன் நமது கிராமத்திற்குள் நுழைய யாருமே அனுமதிக்கக்கூடாது என ஆணையிட்டார். கிராமத்தின் இரண்டு நுழைவாயில்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. யாரும் கிராமத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் கட்டளையிட்டார்.

சிரபாவன் அந்த சக்தி எப்படி அந்த இடத்திலிருந்து காணாமல் போனது, அங்கிருந்த மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்ற சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான். அவனால் அதை ஜீரணிக்க முடியாமல் அதற்கான விடை தேடி தவித்தான். மறுபடியும் அங்கு செல்ல முடிவு செய்து சிரக்குவனனையும் அழைத்துக்கொண்டு தனது மாமாவின் கட்டளையை மீறிச் சென்றான். 

புலிஅடவியை இருவரும் அடையும் போது பலத்த மழை பெய்தது. புயல் காற்றும் வீசியது. இடி பயங்கரமாக இடித்தது. ஆனாலும் அவர்கள் பின்வாங்காமல் அந்த இடத்திற்குள் மறுபடியும் நுழைய முயன்ற போது அவர்களால் முடியவில்லை. முன்பு போலவே ஏதோ ஒரு சக்தி அவர்களை பின்னே தள்ளியது. அவர்களும் விடாமல் மீண்டும் மீண்டும் முயற்ச்சித்தனர். பின்பு அசதியால் சற்று நேரம் அமர்ந்தார்கள். இனி அங்கு இருந்தால் கிராமத்தில் தங்களை தேட ஆரம்பிப்பார்கள் என்ற அச்சத்தால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 

உள்ளே டாக்டர் லூசியானாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அவரும் அஞ்சலி மற்றும் சதீஷின் கரங்களைப் பற்றிக்கொண்டு

“என்னால் முடிந்ததை நானும் செய்துவிட்ட திருப்தியோடு செல்கிறேன் நண்பர்களே நீங்கள் இருந்து ஆக வேண்டியவைகளை முடித்துவிடுங்கள். நமது பாஸ் சூரியகாந்தனிடம் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்திடுங்கள். லாங் லிவ் நத்தையர்ஸ்” 

என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்தது. அவரையும் ராபேர்டின் உடலை தகனம் செய்தது போலவே எல்லாவற்றையும் செய்தார்கள் சதீஷும் அஞ்சலியும். 

பின் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அஞ்சலி மெதுவாக…

“அடுத்தது யாரோ”

என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றனர். 

சிலநாட்கள் கழித்து மீண்டும் சிரபாவன் சிரக்குவனனோடு தனது மாமாவிற்கு தெரியாமல் தண்ணீர் வழியாக புலிஅடவி செல்ல முடிவு செய்தான். ஏனெனில் அன்று காவலுக்கு இருந்தது சிம்பானனும் வைத்தியர் சீலபாமனும். அவர்களை தாண்டி செல்வது என்பது நடக்காத காரியம். அதனால்  தங்களது கிராமத்தின் அருகே ஓடிக்கொண்டிருந்த ஓடையில் குளிக்க போவதாக சில்லுவி தாயிடம் சொல்லிவிட்டு இருவரும் சென்றனர். 

ஓடைக்குள் இறங்கியதும் மெல்ல நீந்தீ நீந்தீ சென்றனர். ஓரிடத்தில் வெள்ளத்தின் வேகம் சற்றென்று அதிகரித்து அவர்களை அடித்துச்சென்று குள்ளத்தி நதியில் கொண்டு சேர்த்தது. அன்று ஏதோ சரியாக மனதிற்கு படாததால் கிராமத்திற்கே  திரும்பிச் செல்ல முடிவு செய்து குள்ளத்தி நதியின் இடதுபுறமாக சென்றால் புலிஅடவி வலதுபுறமாக சென்றால் நத்தையால் ஆகையால் வலதுபுறமாக சென்றனர். மீண்டும் ஓரிடத்தில் வெள்ளப்போக்கு அதிகரித்து அவர்களை சுழற்றிக்கொண்டு (வழியில் நத்தையாலையும் பார்த்தனர் ) மீண்டும் குள்ளத்தியிலேயே சேர்த்தது. அன்று தான் சிரபாவனனுக்கு புரிய வந்தது அவர்கள் கிராமமும் புலிஅடவியும் சுற்றி நீர் நிலை அமைந்துள்ளது என்பதும், அவர்கள் பெரிய காடாக எண்ணி வாழ்ந்தது ஒரு நீர் நிலை வளையத்துக்குள் இருக்கும் குறைந்த நிலமே என்பதும். 

“பொதுவாக அந்த காட்டைத்தாண்டி குள்ளத்தி நதிக்கரையை நாம யாராவது நெருங்கினாலே காடு வெறிக்கொண்டு பலத்த காயங்களோடு ஊர் எல்லையில் அவர்களைப் போட்டுவிடும் என்றல்லவா கேள்விப்பட்டுள்ளோம் ஆனால் நாம் இன்று இங்கே வந்து இங்கிருந்து ஒரு முறை இந்த வனத்தையே சுற்றி மீண்டும் இங்கேயே வந்துள்ளோம் ஆனால் காடு அமைதியாக இருக்கிறதே அது எப்படி!!!”

என்றான் சிரபாவன் அதற்கு சிரக்குவன்…

“நாம பேசாம கிராமத்துக்கே போயிடலாம் சிரபாவனா. எனக்கு என்னவோ இது சரியா படல”

“சரி இப்போ போனா மாமாவிடமோ இல்ல வைத்தியரிடமோ மாட்டிக்குவோம் கொஞ்சம் இருட்டட்டும் போகலாம். பயப்படாதே சிரக்குவனா நான் இருக்கிறேன். இருட்டும் வரை ஏன் சும்மா இருக்க வேண்டும் வா மீண்டும் ஒரு முறை புலிஅடவிக்கு சென்று வருவோம்”

இருவரும் புலிஅடவி இருக்கும் திசையை நோக்கி நடக்கலானார்கள்.

இதே நேரம் அங்கே புலிஅடவியில் டாக்டர்  சதீஷ்க்கு உடல்நலம் சரியில்லாமல் போக அஞ்சலிப் பதறிப்போனாள். ஏனெனில் லூசியானா மறைவுக்குப்பின் அஞ்சலியின் உடல்நலமும் குன்றியது. இருவருமே சிரமப்பட்டுக்கொண்டிருந்தாலும் சூரியகாந்தனின் வரவுக்காக அவர்கள் உயிரைப்பிடித்து வைத்திருந்தனர். ஆனாலும் அஞ்சலியால் அதுவரை காத்திருக்க முடியாமல் சதீஷை தனியாக விட்டுவிட்டு மரணத்தோடு கைகோர்த்தாள். 

சதீஷ் அஞ்சலியை மனதார விரும்பியுள்ளார் ஆனால் அந்த சூழலின் காரணமாக அதை வெளியே சொல்லாமல் எடுத்துக்கொண்ட வேலைதான் முக்கியம் என அவளிடம் கடைசி வரை சொல்லவே இல்லை. அவருக்கும் உடல்நலம் சரியில்லாததால் அஞ்சலியின் உடலை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு அவர்களின் குமிழுக்கு வெளியே வந்து அவளின் உடலை தகனம் செய்கையில் வாய்விட்டு கதறி அழுதார். 

அவரின் அழுகுரல் சற்றே தொலைவில் நடந்து வந்துகொண்டிருக்கும் சிரபாவனனுக்கு சிரக்குவனனுக்கும் கேட்க அவர்கள் கால்கள் வேகமாக ஓட ஆரம்பித்தது. அவர்கள் கிட்டே நெருங்க அவர்களின் காலடி ஓசையைக்கேட்டதும் உடனே அஞ்சலியின் எலும்புகளை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே சென்றார் சதீஷ். 

அவர் உள்ளே செல்லவும் சிரபாவன் அங்கு வருவதும் சரியாக இருந்தது. எரிந்து கிடந்த அஞ்சலியின் சாம்பலையும் எலும்புகளையும் நண்பர்கள் இருவரும் பார்த்தனர். மீண்டும் உள்ளே செல்ல முயற்ச்சித்தனர் ஆனால் முடியாமல் அங்கேயே அமர்ந்தனர்.

அப்போது ஒரு குரல் கேட்டது. அது சொன்னது என்னவென்றால்….

“சிரபாவனா சிரக்குவனா நீங்கள் இருவரும் உங்கள் கிராமத்திற்கே சென்று விடுங்கள் தேவையில்லாதவைகளை மனதிற்குள் போட்டு உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் மூன்றே நாட்களில் விடை கிடைத்துவிடும். எல்லாம் நல்லதுக்கே என்ற மன நிம்மதியுடன் செல்லுங்கள் உங்கள் அனைவரின் சிறப்பான எதிர் காலத்திற்கு நல்ல வழி பிறக்கும்.” 

என்று கூறி நின்றது. இருவரும் கிராமத்திற்கு திரும்பி வந்து நடந்ததை கூறினர். சிம்பானன் தனது கட்டளையை மீறிய சிரபாவன் மீது கோபப்பட்டார். அனைவரும் சிரபாவன் சொன்ன அந்த நாளுக்காக காத்திருந்தனர்.

அந்த நாள் வந்தது. சூரியன் உதயமானார் அவருடன் சூரியகாந்தனும் நத்தையால் கிராமத்தில் விஜயித்தார். அவரைப்பார்த்ததும் சிரபாவன் கோபத்தில் …

“ஏய் நீ ஏன் இங்கு வந்துள்ளாய் இன்னும் எங்களின் உடம்பிலிருந்து எவ்வளவு சிவப்பு திரவம் உனக்கு வேண்டும் கூர்மையான ஆயுதத்தால் இனியும் எத்தனை முறை எடுக்கப்போகிறாய். புலிஅடவியில் எதை மறைத்து வைத்துள்ளாய்? உன்னோடு உன்னைப்போலவே சிலர் இருந்தார்களே அவர்கள் எங்கே அவர்களில் அன்று ஒருவரை எரித்தாயே அதே போல் எரித்து எலும்புகளை எங்கே புதைத்துள்ளாய்? நீ யார்? அங்கே ஒரு குரல் எங்களோடு பேசியதே அது எப்படி? அதுக்கு எங்கள் பெயர்கள் எப்படித் தெரியும்? எங்களை என்ன செய்ய திட்டமிட்டுள்ளாய்?.”

என்று மூச்சுப்பிடித்து அவனது அனைத்து சந்தேகங்களையும் கேள்வியாக கேட்டு முடித்து பதில் கூறச்சொல்லி சூரியகாந்தனின் கழுத்தைப்பிடித்தான்.

சிம்பானன் சிரபாவனனை அதட்டி சூரியகாந்தனை விடச்சொன்னார். பின் டாக்டரைப்பார்த்து….

“ஐயா உங்களை எங்கள் நத்தை தேவதையின் தூதராக நம்பியதால் தான் நீங்கள் எது சொன்னாலும் அதை மறுக்காமல் செய்து வந்தோம். ஆனால் சிரபாவனனும் சிரக்குவனனும் கூறியவையை கேட்டப்பின் எங்களுக்குள் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. என்னைப் பொருத்தவரை நீங்கள் இன்று வரை எங்களுக்கு எந்தவித தீங்கும் இழைத்த தாக தோன்றவில்லை. மொழி கற்ப்பித்தீர்கள், இன்று எங்கள் அனைவராலும் எழுதி படிக்க முடிகிறதென்றால் அது உங்களால் மட்டுமே, விவசாயம் செய்ய கற்றுக்கொடுத்தீர்கள் அதனால் உண்ண உணவு கிடைத்ததது இல்லையேல் நாங்கள் என்ன ஆகியிருப்போம் காட்டிலுள்ள விலங்குகள் ஒன்று கூட இல்லை எங்களுக்கு உணவாக எல்லாமே காணாமல் போய்விட்டது நீங்கள் இங்கு வந்த நாள் முதல்… அந்த புலிஅடவியின் மர்மம் தான் என்ன? உண்மையில் நீங்கள் யார்? உங்களுடன் இருப்பவர்கள் யார்? ஏன் உங்களுள் ஒருவரை எரித்தீர்கள்? இப்பொழுதாவது கூறுங்களேன். “

என்று கேட்டு முடித்ததும் சூரியகாந்தன் ஓவென்று கதறி அழுதார். அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆனால் அவரை எவருமே தொந்தரவு செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து சமாதானம் ஆனப்பின் குடிக்கத் தண்ணீர் கேட்டார் உடனே சிம்பானன் கண் அசைக்க சிரக்குவன் கொண்டு வந்து கொடுத்தான். அவர் அதை குடித்து முடித்தப்பின் அனைவரையும் புலிஅடவிக்கு நாளை வரும்மாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது சிரபாவன் அவரைத்தடுத்தான். 

“சிரபாவனா” 

என்று சூரியகாந்தன் குரலை உயர்த்தி கண்கள் சிவக்க சொல்ல அந்த இடமே அதிர்ந்தது. சட்டென்று சிரபாவன் அவனது கைகளை கீழே இறக்கினான். அனைவரும் ஒரு அடி தள்ளி நின்றனர். டாக்டர் சற்று நிதானித்து சிரபாவன் கன்னத்தை தட்டிக்கொடுத்து

“நாளை புலிஅடவி  வாருங்கள். வந்தால் எல்லாமே உங்களுக்கு புரிய வைக்கிறேன். இன்று நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். என் நண்பர்கள் அனைவரையும் இழந்து யாருமற்ற வனாக நிற்கிறேன். எனக்கு சற்று உடல் நலம் சரியில்லை. தயவுசெய்து நாளை அங்கு வந்து அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.” 

என்றபடியே மயங்கி கீழே விழுந்தார். சிம்பானனும் சிரபாவனனும் அவரைத் தாங்கிப்பிடித்து சிம்பானன் குடிலுக்குள் படுக்க வைத்தார்கள். பல மணி நேரம் ஆகியும் சூரியககாந்தன் எழுந்திரிக்க வில்லை. அன்று மாலை கண் விழித்தார். அன்றும் அவரைச்சுற்றி கிராமமே நின்றிருந்தது. ஆனால் அவர் மனதில் முதல் நாள் இருந்த அச்சம் இல்லை. சுற்றும் முற்றும் பார்தார். பின் சிம்பானனிடம் …

“எனக்கு நேரம் மிக குறைவாக உள்ளது ஆகையால் நான் உடனே புலிஅடவி சென்றாக வேண்டும் சிம்பானன். இத்தனை வருடங்கள் என்னை நம்பினீர்கள். இன்று இரவு தாண்டியதும் நீங்கள் அனைவரும் காலையில் அங்கு வாருங்கள் உங்களுக்கு அனைத்தும் புரிய வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. என்னை நம்புங்கள்” என்று கூறி முடித்ததும் சிம்பானன்…

“தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிகிறது. இப்போ நீங்கள் அங்கே செல்வது அவசியம் தானா? இங்கேயே இருந்து விடுங்களேன். காலை அனைவரும் ஒன்றாக புலிஅடவி செல்வோம்”

“இல்லை சிம்பானன் நான் சென்றாக வேண்டும்”

“சரி அப்போ துணைக்கு எங்கள் ஆட்களை உங்களுடன் அனுப்பட்டுமா?”

“ஏன் சிம்பானா என் மேல் நம்பிக்கை இல்லையா? நான் எங்கும் ஓடி விட மாட்டேன். இனி ஓடுவதற்கு இடமும் இல்லை எனக்கு தெம்பும் இல்லை”

“அச்சசோ நான் சந்தேகப்பட்டு கூறவில்லை தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலையில் தனியாக செல்ல வேண்டுமா என்று தான் கேட்டேன். சரி உங்கள் விருப்பம் நீங்கள் சென்று வாருங்கள்” என்று சிம்பானன் சொன்னதும் சிரபாவன்

“மாமா” என்றதும் சிம்பானன் அவனை ஒரு பார்வையில் அமைதியாக இருக்கச் சொல்ல சூரியகாந்தன் நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

அவர் புலிஅடவியை அடைந்ததும் அந்த இடத்தை நன்றாக சுற்றிப்பார்த்தார் பின்பு ஃபோர்ஸ் ஃபீல்டை தாண்டி உள்ளே சென்றார். அங்கு அவர் நண்பர்கள் யாருமே இருக்கவில்லை. 

ஆம் அவர் பிரயாணத்தை முடித்துக்கொண்டு விடியற்காலை புலிஅடவி வந்ததும் அவருக்கு ஒரு அதிர்ச்சிக்காத்திருந்தது. அவரது நண்பர்களில் சதீஷ் மட்டுமே வீட்டில் இருந்தார். அவரும் பாதி உயிரை சூரியகாந்தனின் வரவுக்காக பிடித்துக்கொண்டு காத்திருந்தார். 

அதைப்பார்த்த சூரியகாந்தன் ஓடிச் சென்று சதீஷை தனது மடியில் தாங்கினார். டாக்டர் சதீஷ் சூரியகாந்தன் இல்லாத நேரம் நடந்த அனைத்தையும் விவரிப்பதற்காகவே காத்திருந்தது போல முழுவதும் சொல்லி முடித்ததும் “லாங் லிவ் நத்தையர்ஸ்” என்று கூறி அவர் உயிர் உடலை விட்டு பிரிந்தது. 

சூரியகாந்தனின் கடைசி நண்பனும் உறவு மான சதீஷும் தன்னைவிட்டு பிரிந்ததும் சூரியகாந்தன் தன்னையே சற்று நேரம் மறந்து உறைந்துப்போனார். சட்டென்று சுயநினைவுக்கு வந்து அழுதார் அதன் பின் சதீஷுக்கு எல்லா சடங்குகளும் செய்து உடலை எரித்து சாம்பலை உள்ளே அவர்கள் பேணிக் காத்து வந்த மரம் செடி கொடிகளுக்கு போட்டு “நண்பர்களே நன்றாக வளருங்கள்” என்று கூறி குளித்துவிட்டு நேராக நத்தையால் கிராமத்துக்கு சென்று இப்பொழுது திரும்பி புலிஅடவியில் அவர் முக்கியமான சில வேலைகளை செய்து முடிக்க வேண்டியிருப்பதால் வந்துள்ளார். என்னதான் அப்படிப்பட்ட முக்கியமான வேலை என்று நாமும் பார்ப்போம் வாருங்கள். 

முதலில் அவரும் அவர் நண்பர்களுமாக கண்டு பிடித்த டெலிப்போர்டேஷன் இயந்திரத்தை ஒரு முத்தம் கொடுத்து அதை முழுவதுமாக செயல்லிழக்கச்செய்து அதை பார்ட் பார்ட் ஆக கழற்றி அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டுப்பூட்டி வைத்து அதன் சாவியை தூர வீசி எறிந்தார். 

அவர்களின் ப்ளான் பீயை செயல்படுத்த ஃபோர்ஸ் ஃபீல்டுக்குள் ஒரு ஃபோர்ஸ் ஃபீல்டு இருந்ததை விளக்கினார் அதனுள் பல மிருகங்கள், பூச்சிகள், ஊர்வன, பறப்பன என எல்லா வகையான ஜந்துக்களும் தனித்தனியாக பராமரித்து வந்துள்ளார்கள் என்றால் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயமே.

இருட்டியது ஆனாலும் அவர் விழித்திருந்து செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். பின் ஒரு வீல் சேரை கொண்டுவந்து ஃபோர்ஸ் ஃபீல்டுக்கு வெளியே போட்டார் அதில் அமர்ந்தார். அப்படியே தூங்கிப்போனார். 

நத்தையால் கிராமத்தில் சிம்பானன், சிரபாவன், சிரக்குவன், சீலபாமன், சில்லுவி ஆகியோருக்கும் இன்னும் சில நத்தையர்களுக்கேம் உறக்கமே வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தனர். 

காலை விடிந்தது. நத்தையால் கிராம மக்கள் அனைவரும் புலிஅடவி சென்றனர். அங்கு சூரியகாந்தன் வீல் சேரில் அமர்ந்தவாறு தூங்கிக்கொண்டிந்ததைப் பார்த்து சிம்பானன் ஓடிச்சென்று அவரை தொட்டுப்பார்த்தார். அவர் தொட்டதும் சூரியகாந்தன் சட்டென்று விழித்துக்கொண்டார். அனைவரையும் பார்த்தார் …

“எல்லாரும் வந்துவிட்டிர்களா! இல்லை இன்னும் யாராவது வராமல் இருக்கிறார்களா. சிரபாவன் எங்கே ?” என்று கேட்டதும் அவர் முன் வந்து நின்றான் சிரபாவன்.

“என்னை நம்பி இத்தனை காலம் நீங்கள் அனைவரும் வாழ்ந்தமைக்கும் …நேற்று என் மீது வைத்த நம்பிக்கைக்கும் மிக்க நன்றி. எனது நாட்கள் எண்ணப் படுகின்றன. இனி நான் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என சொல்லமுடியாது ஆகையால் தான் அனைத்து உண்மைகளையும் உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என முடிவெடுத்து உங்களை வரச்சொனேன்.”

சிம்பானன் பதட்டம் ஆனார். சூரியகாந்தனைப்பார்த்து 

“நீங்கள் எங்களுக்கு ஏதோ தீங்கு விளைவிக்க போவதாக சிரபாவன் சொன்ன போது கூட நான் பதட்டமாகவில்லை. ஆனால் உங்களின் இந்த பேச்சு என்னையே உலுக்குகிறது.”

“கவலை வேண்டாம் சிம்பானன். நீங்கள் அனைவரும் கடவுளால் காப்பாற்றப்பட்ட கடைசி மனித இனம் ஆவீர். உங்களால் தான் இனி இந்த மானிடம் தழைக்கப்போகிறது.”

“என்ன கூறுகிறீர்கள் சூரியகாந்தன்!!!இவ்வளவு காலமாக நாங்கள் மட்டும் தானே இருக்கிறோம். இன்னும் எங்களை மாதிரி மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?” என்று கேட்டார் சீலபாமன்.

“ஆம் வைத்தியரே. இருந்தார்கள் என்று தான் இப்பொழுது சொல்ல முடியும்.”

சிரபாவன் குறிக்கிட்டு “ஏன் அவர்களுக்கு என்ன ஆனது?”

“சுமார் முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் அதாவது இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு நாம் அனைவரும் வாழ்ந்த பூமியானது பல இன்னல்களுக்கு ஆளானது, ஒரு பக்கம் பல வித இயற்கைச் சீற்றங்கள், மறுபக்கம் மக்களே ஒருவரொக்கொருர் சண்டையிட்டு அழித்துக்கொண்டிருந்தனர், தீவிரவாதிகள் அவர்கள் பங்கிற்கு சில அழிவுகளை உண்டாக்கினர். இப்படி  பூமியை அனைத்துமாக புரட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு கூட்டம் தங்களது சுயலாபத்திற்காக ஒருவகை நச்சுயிரியை நாடுகளுக்குள் பரவிவிட்டனர். ஆனால் அது பூமியையே அழிக்கும் வல்லமை கொண்டது என்ன அவர்களுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. இதை கண்டறிந்து அதற்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பதற்குள் அந்த நச்சுயிரி பல மடங்காக விஸ்வரூபம் எடுத்து லட்சக்கணக்கில் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தது. அந்த சமயத்தில் தான் எனது அசிஸ்டென்ட்  கோபால் இந்த காட்டிற்குள் ஒரு வகை மூலிகைத்தேடி வந்தான். உங்கள் இனத்தை கண்டறிந்தது எனது கோபால் தான்.”

உடனே சிறக்குவன் “இருங்கள் அது என்ன நாம் வாழ்ந்த பூமியானதுனு சொல்லுறீங்க? இப்பவும் இங்கே தானே இருக்கோம்?” என்றதும்

சிம்பானன் அவனை ஒரு பார்வைப்பார்த்ததும் அமைதி ஆனான். பின் சூரியகாந்தனைப்பார்த்து..

“நீங்கள் சொல்லுங்கள் ஐயா.” என கூற சூரியகாந்தன் மீண்டும் கூறலானார்..

“சிரக்குவன் உன் கேள்விக்கும் பதில் உண்டு அவசரம் வேண்டாமே. கோபால் எப்படியோ உங்களது இரத்தத்தின் …சிரபாவனா உங்கள் உடம்பிலிருந்து சிவப்பு நிறத்தில் எடுப்பேனே அதன் பெயர் தான் இரத்தம் என்பார்கள். எங்கே விட்டேன்…ம்ம் உங்களில் இரண்டுபேர் அன்று வேட்டைக்கு சென்று காயம் ஏற்பட்டதில் அவர்களின் இரத்தம் கீழே சிந்த அந்த இரத்தத்தின் சாம்பிள் எனப்படும் சிறு துளியை பரிசோத்தித்ததில் அவர்களுக்கு வித்தியாசமான இரத்தம் வகை இருந்தது தெரியவந்தது. அதை அந்த நச்சுயிரி வைத்து சில பரிசோதனைகள் மேற்க்கொண்டோம் அப்பொழுதுதான் தெரிந்தது அந்த இருவரின் இரத்த வகை அபூர்வமானது அது எந்த நச்சுயிரியையும்  எதிர்க்கும் எதிர்ப்புசக்தி உடையது என்பது. இதை கோபால் எங்களிடம் ஒப்படைப்பதற்குள் பாதி மனித இனம் அழிந்துப்போனது. எனது குடும்பமும் அதில் அடக்கம். அப்பொழுது தான் பல துறைகளில் விஞ்ஞானிகள் ஆகிய  நாங்கள் ஒன்று கூடினோம் ஐந்து குழுவாக பிறிந்து உங்களைப்போன்ற இரத்த வகை மனிதர்களை கண்டறிய அவரவர் அரசாங்கத்திடம் அனுமதிக்கேட்டோம் அதில் சில நல்லவர்கள் இருந்தமையால் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது வெளியே தெறிந்தால் அவரவர்கள் உயிர் வாழ்வதற்கு உங்களைப் போன்றவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என எண்ணி இந்த ஆராய்ச்சியை மிக மிக ரகசியமாக வைத்திருக்க செய்தனர் ஆனால் பாவம் அந்த நல்லுள்ளம் கொண்டவர்களும் அந்த நச்சுயிரியின் வெறியாட்டத்தில் அழிந்துப்போனார்கள். ஆக ஐந்து குழுக்களாகிய இருபத்தைந்து விஞ்ஞானிகள் பல இடங்களில் அவரவர் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். நாங்கள் ஐவர்… நான்…என்னை உங்களுக்கு தெரியும் எனது நண்பர்கள் சதீஷ், ராபேர்ட், அஞ்சலி, லூசியானா உங்கள் இனத்தை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தோம். பல மாதங்களாக உங்கள் அனைவரையும் உங்களுக்கே தெரியாமல் கண்கானித்தோம். நாங்கள் அனைவரும் உங்கள் முன் வந்தால் எங்களை நீங்கள் ஆபத்தாக எண்ணி கொன்று விடுவீர்கள் என்ற பயத்தால்தான் அன்று அடிப்பட்டு மயக்கமானது போல நடித்து உங்களுள் ஒருவனானேன். அதன் பின் அவர்களை அறிமுகம் செய்யலாம் என்று எண்ணும்போது என் நண்பர்கள் என்னை தடுத்துவிட்டனர். ஏன் தெரியுமா? எங்களுக்குள்ளும் அந்த நச்சுயிரி இருந்தது தெரியவந்தது அதனால் என்னை மட்டும் உங்களோடு உங்களில் ஒருவனாக இருக்கச்செய்து பின்னாலிருந்து அனைத்து உதவிகளும் செய்தனர். “

“உங்களை இந்த காட்டைத்தாண்டி போகவிடாமல் பார்த்துக்கொண்டது அவர்கள்தான்”

“அது எப்படி நாங்க காட்டைத்தாண்ட போறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சுது?”

என்றான் சிரபாவன்

“எல்லா இடங்களிலும் கேமரா எனப்படும் ஒரு கருவிப்பொருத்தப்பட்டிருக்கிறது அது மட்டுமில்லாமல் நீங்கள் யாராவது புலிஅடவியிலுள்ள எங்களின் இந்த இடத்தை நெருங்கினாலோ அல்லது இந்த இடத்தைச் சுற்றி நாங்கள் அமைத்துள்ள எல்லையை தாண்டினாலோ எங்கள் வீட்டில் மணி அடிக்கும்படி ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். அதனால் தான் அவர்கள் யாரையும் உங்களுக்கு தெரியவில்லை.”

“சிரபாவன் இரண்டு  முறை எங்களைப் பார்த்தபோது நாங்கள் எங்கள் நண்பர்களை இழந்த துக்கத்தில் இருந்ததால் அவன் வந்ததை கவனிக்காமல் விட்டுவிட்டோம். அந்த மணியும் பழுதாகியதனால் அதுவும் சரியாக வேலை செய்ய வில்லை. எனது நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்துப்போனார்கள்.  உங்கள் அனைவருக்கும் என் நண்பர்கள் சார்பிலும் எனக்காகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களிடமிருந்து மாதாமாதம் எடுத்த இரத்தத்தை பரிசோதனைக்காகவும் மற்றும் எங்களுக்காகவுமாக உபயோகித்து வந்தோம். ஆம் உங்கள் இரத்தத்தினால் தான் இவ்வளவு ஆண்டுகள் நாங்கள் உயிர் வாழ்ந்துள்ளோம். இனி என்னாலும் தொடர்ந்து வாழ முடியாது என்பதை நானும் உணர்தேன். உங்கள் அனைவரையும் பத்திரமாக மீண்டும் பூமியிலேயே கொண்டு விட தான் இத்தனை ஆண்டுகள் நாங்கள் காத்திருந்தோம். பல முறை பூமிக்குச்சென்று அந்த நச்சுயிரி முழுவதுமாக அழிந்து விட்டதா? உங்களை அங்கு கொண்டு சேர்க்க நேரம் வந்ததா என்று தெரிந்துக்கொள்ளவே நான் எனது கண்டு பிடிப்பான டெலிப்போர்டேஷன் இயந்திரத்தை உபயோகித்து சென்று வந்துக்கொண்டிருந்தேன். பூமியில் அந்த நச்சுயிரி முழுவதுமாக ஆக்கிரமித்து மனிதன் வாழ்வதற்கான சூழலையே இல்லாமல் செய்து விட்டது மேலும் சூடு அதிகரித்து அனைத்து பனி மலைகளும் கறைந்து பூமியை வெள்ளம் கைப்பற்றியுள்ளது. ஆகையால் நீங்கள் அங்கே செல்வது உசிதமானது அல்ல.”

“அப்போ… இப்போ நாங்கள் எங்கே இருக்கிறோம்? ஏன் எங்களை அந்த இடம் உள்ளே விடாமல் தள்ளுகிறது?” என்று சிரபாவன் கேட்க

“நீங்கள் அனைவரும் இப்பொழுது பத்திரமாக இருப்பது ஒரு வகை பயோ பபுளுக்குள்.. ம்ம் ம்ம்… உங்களுக்கு புரியும்படி சொன்னால் உயிர் குமிழுக்குள். நாங்கள் உங்களுக்காக ஏற்படுத்திய குமிழுக்குள். இதை உருவாக்கி எங்களது ஸ்பேஸ் ஷிப்பில்.. ஓ…ம்… வாகனத்தில் வைத்து இத்தனை ஆண்டுகளாக பராமரித்ததோடில்லாமல் மார்ஸில் நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு அனைத்தையும் எங்களின் ஆராய்ச்சியினால் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். பூமியில் வாழ்ந்ததைப்போலவே இந்த கிரகத்திலும் நீங்கள் உங்களது வாழ்க்கையை தொடரலாம். மனிதன் வாழ்வதற்கான எல்லாவற்றையும் இங்கேயே இருந்து பல விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றில் இல்லாதவைகளை உருவாக்கியும் உள்ளோம். மனித இனத்தின் மிச்சமுள்ள நீங்கள் தான் இனி மனித இனத்தை வளர்க்க வேண்டியவர்கள். உங்களின் மூலமே மனித இனம் மீண்டும் துளிர்க்கப்போகிறது.  இனி நீங்கள் இதற்குள் அடை பட்டிருக்க தேவையில்லை. சிரபாவனா இங்கே வா…”

சிரபாவன் சூரியகாந்தன் அருகே சென்றான். அவன் கைகளில் ஒரு பெரிய புத்தகத்தைக்கொடுத்து…

“இதோ இந்த புத்தகத்தை பத்திரமாக வைத்துக்கொள்.  இதில் எல்லா விவரங்களும் உண்மைகளும் உங்களுக்கு தெரியாத பல விஷயங்களும் இதில் இருக்கிறது… பூமியைப் பற்றியும், உங்களைப் போன்றே வாழ்ந்த பல தரப்பட்ட மனித இனம் பற்றியும், அவர்கள் அனைவரும் அழிந்து போனது பற்றியும்  எங்களின் ஆராய்ச்சிகள் பற்றியும், இனி நீங்கள் எங்கு எப்படி வாழப் போகிறீர்கள் என்பது வரையிலுமான எனது படைப்பு. இனி நீங்கள் உள்ளே செல்லலாம் எதுவும் உங்களை தள்ளிவீழ்த்தாது. ம்.. பயமின்றி செல்லுங்கள்” 

என்று அத்தனை ஆண்டுகளாக அவர் மனதை அரித்துக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்து அவரது மனம் நிம்மதியானதில் பெருமூச்சு விட்டார். 

அவர் கூறிமுடித்ததும் நத்தையர்கள் அனைவரின் கண்களிளும் கண்ணீர் வந்தது. அவர்கள் அனைவரும் சூரியகாந்தன் முன் மண்டியிட்டு வணங்கினர். அப்போது சிம்பானன்…

“ஐயா எங்களைக் காக்க தாங்கள் இவ்வளவு செய்துள்ளீர்கள். நீங்கள் எங்கள் நத்தை தேவதை தூதரே தான். எங்கள் இனத்தைக் காத்த கடவுள் ஐயா நீங்கள். உங்களுக்கு எவ்வாறு கைமாறு செய்யப்போகிறோம். இப்படி எங்களை கடனாளி ஆக்கி விட்டிர்களே.”

“இல்லை சிம்பானன் உங்களால் நம்ம மனித இனம் காப்பாற்றப்படபோகிறது. அதனால் சிறப்பாக நல்வாழ்க்கை வாழ்ந்து நம் மனித இனத்தை  நல்வழியில் கொண்டு செல்லவேண்டும். அதுதான் நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டிய ஒரே உதவி கைமாறு என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.ம்..ம்… சிரபாவன் அப்பொழுது உள்ளே செல்ல அவ்வளவு ஆர்வமாக இருந்தாய் இப்போ உள்ளே செல் என்கிறேன் அப்படியே நின்றுக்கொண்டிருக்கிறாயே” என்று டாக்டர் சூரியகாந்தன் சொன்னதும்..

சிரபாவன் அவர் காலில் விழுந்து அழுதுக்கொண்டே மன்னிப்புக் கேட்க அவனது கன்னங்களை தடவி, முதுகில் தட்டிக்கொடுத்து எழுந்து உள்ளே செல்ல சொன்னார். 

சிரபாவன் மெல்ல எழுந்து உள்ளே மெதுவாக தனது வலது காலை வைத்தான். அவன் பின்னால் சிறக்குவன்  சென்றான். அவர்களுக்குப் பின்னால் சிம்பானனும் சீலபாமனும் சென்றனர். மற்ற அனைவரும் அவர்களைப்பின்தொடர்ந்து உள்ளே சென்றார்கள். சிம்பானனும் சீலபாமனும் மற்ற பெரியவர்கள் அனைவரும் …

“ஓய் இங்க பாரு மாடுகள். ஏய் பேரப்பிள்ளைகளா இங்கே வந்து பாருங்க இதுதான் மாடு. எங்க காலத்துல இருந்தது. இது வெள்ளையா பால் கொடுக்கும்.”

“ஏய் இங்க பாரு ஆடுகள், கோழிகள்” 

என் அவர்கள் காலத்தில் பார்த்த பிராணிகள்,  மிருகங்கள் எல்லாவற்றையும் பார்த்து பிரம்மித்துப்போனார்கள். சிம்பானன் வெளியே வந்து சூரியகாந்தனைக்கட்டித் தழுவி ..

“நண்பா நீங்கள் எங்களை மட்டுமல்லாமல் இந்த வாயில்லா பிராணிகளையும், மிருகங்களையும் காப்பாற்றி இருக்கிறீர்கள். இவை அனைத்துக்கும் உங்கள் நண்பர்களும் காரணம் என தெரிந்தும் அவர்களை காண முடியாத துரதிஷ்ட்டசாலிகள் ஆகிவிட்டோம். ஐயா சூரியகாந்தா !!! ஐயா!!”

என்று அவரை உலுக்கினான் சிம்பானன். சூரியகாந்தன் அந்த சேரிலேயே உயிரிழந்து அமர்ந்திருந்தார்.  உடனே சிம்பானன் “ஐயா ஆஆஆஆஆஆ” என்று கதறியதும் அனைவரும் உள்ளேயிருந்து வெளியே ஓடி வந்தனர். அனை வருமாக அழ ஆரம்பித்தனர். சிரபாவன் அவர் கையில் ஒரு பேப்பர் இருந்ததை கவனித்தான் அதை எடுத்துப் படித்தான்…

“எனக்காக யாரும் அழ வேண்டாம். இதற்கு பின்னால் என்னைப்போன்ற பல விஞ்ஞானிகளின் கடின உழைப்பு இருக்கிறது. இனி இது தான் உங்களின் உங்களுக்கான புதிய பூமி. இங்கு நீங்கள் அனைவரும் சுதந்திரமாக சுவாசித்து தைரியமாக வாழலாம். வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து காட்டுங்கள். லாங் லிவ் நத்தையர்ஸ்” என்றெழுதியிருந்தார். 

பின் குறிப்பு என கீழே இருந்ததை சிரபாவன் பார்க்காமல் பேப்பரை படித்துவிட்டு வீசி எறிந்து ஓவென்று அழலானான். அந்த பேப்பர் பறந்து ஒரு மரத்தில் பேப்பரின் முன்பக்கம் ஒட்டிக்கொண்டது. அதில் சூரியகாந்தன் 

“நான் முன்பு கூறியது போல என்னுடன் இந்த ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் இருபத்தைந்து விஞ்ஞானிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்றவர்களை கண்டறிந்து இதே மார்ஸில் சேர்ப்பதாக அனைவரும் வாக்களித்துள்ளனர் ஆனால் சில வருடங்களுக்கு முன் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஆகையால் நீங்கள் இந்த குமிழிலிருந்து வெளியே சென்றால் உங்களைப் போன்ற மனிதர்களை காண நேரிடலாம்.” என்றெழுதியிருந்தார்.

அதைப்படிக்காமல் அனைவரும் உள்ளே சென்றார்கள். அவர்களின் நத்தை தேவதை அவர்களை ஏதும் தெரிந்துக்கொள்ளாமலே இருக்கவேண்டுமென்று படிக்க விடாமல் தடுத்ததோ!!!!! நத்தையர்களின் வாழ்க்கை நத்தை வேகத்தில் அவர்களது நத்தை தேவதையின் துணையுடன் நகர ஆரம்பித்தது. செவ்வாய் கிரகத்தில் துவங்கியது புதிய மானிட சமுதாயம். 

❤️முற்றும்❤️

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s