
அரவிந்தன், கழல்விழி, தேன்மொழி மூவரும் பூம்புகார் கடற்கரையில் அமர்ந்து அலைகளை ரசித்துக் கொண்டிருந்தனர். தேன்மொழிக்கு அலைகள் எப்படி வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அழகாக வந்து தன்னை முத்தமிட்டு சென்றுக் கொண்டிருக்கிறது என்ற வியப்பில் தன் தந்தை அரவிந்தனிடம் கேட்டாள். அதற்கு அரவிந்தன் தனது குட்டி தேவதையான தேன் குட்டிமாவை முதல்முதலாக பார்ப்பதால் அலைகள் மகிழ்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்து தன் மகளை விளையாட அழைப்பதாக கூறினான். அதைக்கேட்ட தேன்மொழிக்கு இன்னும் சற்று நேரம் அந்த அலைகளின் அரவணைப்பில் விளையாட ஆசை எழுந்தது. தன் ஐந்து வயது செல்ல மகளான தேன்மொழியின் சந்தோஷத்தை விட வேறு எதுவுமே இல்லை என்று எண்ணும் அப்பாவாகிய அரவிந்தன் சம்மதித்தான். தேன்மொழி அலைகளுடன் ஓடி பிடித்து விளையாடி சற்று களைத்துப் போய் அரவிந்தன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.
கயல்விழி சுற்றும் முற்றும் பார்த்தாள் ஜன நடமாட்டமே இல்லாமல் வெறுச்சோடி இருந்த கடற்கரையில் அலைகளின் சப்தமும் தேனின் மழலைச் சப்தமும் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. அவளுள் ஏதோ ஒரு அச்சம் தொற்றிக்கொள்ள அங்கிருந்து உடனே கிளம்பி வீட்டுக்கு செல்லவேண்டும் என்று அரவிந்தனிடம் கூறுவதற்காக திரும்பியவளின் இதயத்துடிப்பு கிடுகிடுவென அதிகரித்தது ஏனெனில் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளின் கணவரும் மகளும் அங்கிருக்கவில்லை. தேன்மொழியின் மழலை குரலும் கேட்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்நீரும் மணலும் தான் தெரிந்தது.
பரிதவித்தாள்… ஓடினாள் கடற்கரையில் எல்லா இடங்களிலும் ஓடினாள் “என்னங்க என்னங்க” “தேனு தேனுமா” என்று கதறிக்கொண்டே தேடினாள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தாள். தன்னுடன் அதுவரை அமர்ந்திருந்தவர்களை சட்டென்று காணவில்லையே அது எப்படி என்று சற்று நிதானித்து யோசித்துக்கொண்டிருக்கையில் தூரத்தில் இருவர் உருவம் தெரிந்தது. அவர்கள் அரவிந்தனும் தேனுமாக தான் இருப்பார்கள் என்று எண்ணி அவர்களை நோக்கி ஓடலானாள். அவர்கள் அருகில் சென்றதும் தான் தெரிந்தது அவர்கள் இருவருமே பெண்கள் என்று. அவர்களிடம் விசாரித்தால் ஏதாவது தெரியலாமே என அதில் ஒருத்தியின் தோளில் கையை வைத்து அழைத்தாள் கயல்விழி ….அந்த பெண்ணும் திரும்பிப் பார்த்தாள்…..ஆனால் அந்த பெண்ணைப் பார்த்ததில் கயல் தன் முன் இருப்பது கண்ணாடி யா என்று ஒரு வினாடி அதிர்ந்துப் போனாள் ஏனெனில் அவள் முன் இருந்த உருவம் அவளைப் போன்றே இருந்ததில் கற்சிலை போல நின்றாள். சட்டென ஏதோ சுட்டதுப் போல கைகளை உதறிக்கொண்டே சுயநினைவுக்கு வந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி அங்கிருந்த அந்த இருப்பெண்களையும் காணவில்லை…மீண்டும் தனித்து நின்றிருந்தாள்.
சட்டென்று அவளை யாரோ உலுக்கி
“கயல் …கயல்… கயல்விழி என்ன மறுபடியுமா”
….என்று ஏதோ ஒரு குரல் கிணற்றுக்குளிருந்து கேட்பது போல இருந்தது.
“ஏய் கயல் எழுந்திரிடி அப்புறம் லேட்டாச்சுன்னா அந்த பிஸினஸ் இகானமிக்ஸ் கனகா நம்மள கடிச்சே திண்ணிடுவாங்க….எழுந்திரிடி …டைம் ஏழரை ஆயிடுச்சு”
என பள்ளி முதல் கல்லூரிவரை கயலின் தோழி ரூபி அவர்கள் கல்லூரி ஹாஸ்டல் ரூமில் கத்தி கத்தி எழுப்ப அதை கேட்டு பக்கத்து ரூம் கவிதாவும், தீபாவும் ஓடி வந்து எட்டிப்பார்த்து….
“ஏய் ரூபி அன்ட் கயல் உங்க ரெண்டு பேருக்கும் எத்தனை தடவ சொல்லறது?? இப்படி கத்தாதீங்க பக்கத்துல நாங்க எல்லாம் படிக்கனும்ன்னு! ரெண்டு வருஷமா காலையில உனக்கு இதே வேலையா போச்சு”
“கவி அன்ட் தீப்ஸ் நீங்களும் ரெண்டு வருஷமா இதே டையலாக்கை தான் காலையில சொல்லறேங்கள் நாங்க என்ன உங்கள மாதிரி கம்ப்ளேயின்ட்டா பண்ணறோம்….நேத்து பூம்புகார் பீச் போயிட்டு வரத்துக்கு நைட் லேட் ஆயிடுச்சு பா அவ்வளவு தான் அதுக்குப் போய்…..அட போங்கப்பா போங்க..கிளாஸுக்கு உங்களுக்கு லேட்டாகிட போவுது….இது தானே லாஸ்ட் இயர்..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கப்பா. ”
என்று சொல்லிக்கொண்டே கவிதாவையும் தீபாவையும் ரூமுக்கு வெளியே அனுப்பி கதவைத் தாழிட்டு ….
“இவ்வளவு நடக்குது இவ இன்னும் அசையாம கிடக்கிறத பாரு. அடியே கயல் இப்போ நீ எழுந்து கிளம்பலைன்னா நான் உன்ன விட்டுட்டு போயிடுவேன்”
“அது எப்புடி போவ ரூபி? இல்ல என்னைக்கு போயிருக்க சொல்லு? சரி இந்த கவி, தீப்ஸ் கூட வழக்கமான கச்சேரி முடியட்டும் எழுந்திரிக்கலாமேன்னு சும்மா படுத்துகிட்டிருந்தேன் ….இதோ அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன் மை டியர்”
என்று சோம்பல் முறித்துக் கொண்டே கூறி எழுந்து டூத் பிரஷ், டவல் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றாள் கயல்.
“அடி பாவி நீயும் இரண்டு வருஷமா இதையே தான் செய்யற நானும் மறுபடியும் மறுபடியும் ஏமாந்து போறேன்…எப்படியோ ரெடி ஆகி வா”
இருவரும் கிளாசுக்கு கரெக்டாக போய் அட்டென்ட் செய்து விட்டு மத்திய உணவு சாப்பிட கல்லூரி கேன்டீனுக்கு சென்றார்கள் அப்போது ரூபி கயலிடம்….
“என்ன கயல் நேத்தும் அதே கனவா!! பூம்புகார் கடற்கரை அரவிந்தன் அன்ட் தேன்மொழி பாப்பா கரெக்டா….”
“எக்ஸாக்ட்டா சொல்லற ரூபி. நீ தான் டி உண்மையான உயிர் தோழி”
“ஆமாம் இதே கனவ லாஸ்ட் ஏழு வருஷமா தொடர்ந்து சொன்னா அதை திருப்பி சொல்ல உயிர் தோழியா இருக்கனும்ன்னு இல்லடி ….ஒரு கிளிப்பிள்ளை கூட சொல்லும் ….மறுபடியும் மறுபடியும் அதே கனவு வருதுன்னு அங்கேயே போய் பார்த்தா எதாவது க்ளூ கிடைக்கும் அது இதுன்னு ஏதோ பெரிய டிடெக்டிவ் மாதிரி பூம்புகார் வரை போயிட்டும் வந்திட்டோம் …”
“ஹலோ ரூபி மேம் ஓசில பூம்புகார் வரைக்கும் சூப்பர் டிரிப் கிடைச்சுதுல!!”
“நான் எனக்கு கிடைச்சதைப் பத்தி சொல்லலடீ ….என் டிடெக்டிவ் தோழிக்கு ஒன்னும் கிடைக்கலையேன்னு தான் அலுத்துக்கிட்டேன்….பார்த்தயா… துணைக்கு வான்னு கூட்டிட்டுப் போயிட்டு இப்போ ஓசி கீசின்னுலாம் சொல்லற போடி”
“சும்மானாச்சுக்கும் சொன்னேன் பா சரி சரி ஃப்ரீயா விடு நண்பி…அடுத்த கிளாஸ்க்கு நேரமாச்சு வா வா போகலாம்”
இப்படியே தினம் தினம் ஒரே கனவு பல ஆண்டுகளாக வந்து கயலை மிகவும் கஷ்ட்டப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. அதையும் தாண்டி அவளும் அவள் தோழி ரூபியும் கடைசி ஆண்டு சென்னையில் கல்லூரிப் படிப்பையும் வெற்றிகரமாக ஃபஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்று முடித்து அவர்கள் ஊரான மருவூர்ப்பாக்கத்திற்கு காரில் புறப்பட்டனர்.
கயலின் தந்தை வைர வியாபாரியாகவும் ரூபியின் தந்தை பட்டு வியாபாரியாகவும் இருந்துவருகிறார்கள். கயலும் ரூபியும் தோழிகளாவதற்கு முன்பே அவர்கள் தந்தைகளான வைரவநாதரும் அந்தோனியாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். அவர்களின் நட்பு பிள்ளைகளிடமும் அப்படியே தொடர்ந்தது.
படிப்பு முடித்து வந்ததும் வைரவநாதர் கயலுக்கு மாப்பிள்ளை பார்த்து அவருக்கு பிடித்துப்போக வீட்டிற்கு பெண் பார்க்க வரச்சொல்லியதை வீட்டில் அவர் மனைவி வேணியிடமும் கயலிடமும் தெரிவித்தார். கயல் தான் மேலும் படிக்க வேண்டும் என்று சொல்ல அதற்கு கல்யாணம் கட்டிகிட்டு அப்புறம் படிப்பை தொடரும் படி சொல்லிவிட்டார் வைரவநாதர். ஞாயிற்றுக்கிழமை கயலை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாகவும் அதற்கு தயாராக இருக்கவும் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை வந்தது மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர். கயலை அழகாக அலங்கரித்தாள் ரூபி. மாப்பிள்ளை கயலைப் பார்த்துவிட்டு அவளிடம் தனியாக பேசவேண்டும் என்று கூற வழக்கம் போல நம்ம பெரியவர்கள் அனைவரும் ஒருவரைஒருவர் பார்த்து விட்டு நம்ம வைரவநாதர்….
“வேணி மாப்பிள்ளை நம்ம கயலுகிட்ட ஏதோ தனியா பேசனும்மாம் கயல வரச்சொல்லுமா”
கயல் வந்து மாப்பிள்ளையை வீட்டின் பின்புறம் அழைத்துச்சென்றாள்.
“ஹாய்!!! உங்க பேரு கயல்விழி….அழகான பெயர். என் பேரு அரவிந்தன்.”
“என்னது!!!!”
என்று மாப்பிள்ளை பெயரைக்கேட்டதும் மயக்கமடைந்து கீழே விழப் போனவளை தாங்கிப்பிடித்துக் கொண்டு அனைவரையும் அழைத்தான் அரவிந்தன். எல்லோருமாக வந்தனர். சில பெரியவர்கள்….
“மாப்பிள்ளை அப்படி என்ன சொன்னீங்க எங்க கயல் இப்படி மயக்கமாயிடுச்சு”
அரவிந்தனின் தந்தை நாகராஜன் …
“டேய் என்னடா அப்படி பேசின …அந்த பொண்ணு மயக்கமாகற அளவுக்கு!!!”
“அப்பா அவங்க பெயர் அழகாயிருக்குன்னு சொன்னேன் அப்புறம் என் பெயரைச் சொன்னேன் அதைக் கேட்டதும் அவங்க மயங்கிட்டாங்க”
“அட !அட !அட !அட! மாப்பிள்ளை பெயரை கேட்டதுமே பொண்ணு மயங்கிடிச்சாம் ல…அப்போ கல்யாணம் பண்ணிட வேண்டியது தான்”
என அவரவர் பேசத் துவங்கினர். வைரவநாதர் அனைவரையும் அமைதிப்படுத்தி ஹாலில் அமரச்செய்தார். பின் கயலை முகத்தில் நீர் தெளித்து எழுப்பி நடந்தது என்ன என்று விசாரித்தனர் வேணியும் ரூபியும்.
விருட்டென எழுந்த கயல் தன் தோழியைப் பார்த்து….
“ஹேய் ரூ….ரூபி அந்த மாப்பிள்ளை பெயர் அரவிந்தன் ஆம் டி….அதை கேட்டதும் எனக்கு தலை கிர்ன்னுச்சு பாரு அப்புறம் என்ன நடந்ததுன்னே தெரியலைடி”
“அவர் பெயர் அரவிந்தன் னா உடனே நீ ஏன்டீ மயக்கமடையனும்?” என்று கேட்டாள் வேணி
“அம்மா அம்மா நீங்க டென்ஷன் ஆகாதீங்க நான் அவகிட்ட பேசி அழைச்சுட்டு வரேன் நீங்க போய் வந்தவங்கள பார்த்துக்கோங்க” என ரூபி கயலின் அம்மாவை உள்ளே அனுப்பி வைத்து விட்டு தன் தோழியைப் பார்த்து சிரித்தாள்….கயல் சற்று கோபமாக பார்க்க …தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு ….
“ஏய் நீ என்ன இப்படி இருக்க கயல்?”
“எப்படி இருக்கேனாம்!”
“கனவுல வந்ததை சீரியஸ்ஸா உன்ன மாதிரி யாருமே நிஜத்துல எடுத்துக்க மாட்டாங்க கயல்”
“ஆனா அவர் பெயரும் அரவிந்தன் தானே!”
“இருக்கட்டுமே!!! அதுக்கென்ன இப்போ? ஒரே மாதிரி ஏழு நபர்கள் இருப்பார்கள் என்பதை நம்புற ஆனா ஒரே பெயர் மட்டும் இருக்கக் கூடாதா என்ன?”
“அதுக்கில்லை ரூபி அது எப்படி அதே பெயர் கொண்ட ஒருத்தர் என்னை கல்யாணம் பண்ணிக்க வருகிறார்”
“இங்க பாரு கயல் நீ கனவையும் நிஜத்தையும் போட்டு குழப்பிக்கிட்டு லைஃபை ஸ்பாயில் பண்ணிக்காதே. இவர் நன்றாக படிச்சிருக்கார். அமேரிக்காவில் வேலை செய்கிறார். கல்யாணமானதும் உன்னையும் அங்கேயே கூட்டிட்டு போயிடுவாங்களாம்….நல்ல மாப்பிள்ளை டீ …சும்மா அந்த கனவ கட்டிக்கிட்டு வீணாகாதே…புரியுதா …நான் போய் மறுபடியும் அவரை இங்கே அனுப்பறேன். ஒழுங்கா பேசு. தயவுசெய்து கனவுலகம் போயிடாத கயல். இது உன் வாழ்க்கை ஞாபகம் வச்சுக்கோ”
என்று நல்ல தோழியாக அறிவுரை கொடுத்துவிட்டு உள்ளேச்சென்றாள் ரூபி.
“இல்லடி ரூ…..ரூபி…”
சற்று நேரத்தில் அரவிந்தன் மீண்டும் வந்தான்.
“ஹாய் சாரி என்னால தான் மயங்கிட்டீங்கன்னு எல்லாரும் பேசிக்கறாங்க…அப்படியா!!! என்ன பார்த்தா மயக்கம் வர அளவுக்கு நான் ஆழகானவனா இல்லை பயங்கரமானவனா”
சிரித்தாள் கயல் ….
“அப்பாடா சிரிச்சிட்டீங்க. நல்ல வேளை மறுபடியும் மயங்கிடுவீங்களோன்னு பயந்து தான் பேசினேன்”
“சாரிங்க ஏதோ ஒரு எண்ணத்தில் மயங்கிட்டேன். ஐ ஆம் எக்ட்ரீம்லீ சாரி. சொல்லுங்க தனியா என்கிட்ட என்ன பேசனும்”
“ஒன்னுமில்லை உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா….என்னோட கல்யாணத்துக்கு பிறகு அமெரிக்கா வர சம்மதம்மான்னு கேட்க தான் வந்தேன்”
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா!”
“ஓ!! எஸ் !! அதனால தான் உங்கள் விருப்பத்தையும் கேட்க தனியா வந்தேன்…இவ்விடம் ஓகே அவ்விடம் என்னவோ அதை நான் அறிந்துக் கொள்ளலாமா”
“இவ்விடமும் ஓகே தான். தங்களைப் பார்த்ததும் மயங்கினேனே அப்போதே அவ்விடம் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என நான் நினைத்தேன்”
“ஹா! ஹா! ஹா!! ஓகே தென் நான் உள்ளே போய் எல்லாரிடமும் சொல்லிடறேன்.”
“ஆமாம் ஆமாம்!!! எல்லாரும் என்னன்னவோ நினைச்சிருப்பாங்க …ப்ளீஸ் நீங்க போய் ஃபர்ஸ்ட் அதை க்ளியர் பண்ணிடுங்க”
அரவிந்தன் உள்ளே சென்று அவர்கள் இருவரின் விருப்பத்தையும் கூறியதும் அனைவரும் மகிழ்ச்சியில் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். அரவிந்தன் ஒரு மாதத்தில் அமெரிக்கா செல்லவேண்டும் என்பதினால் அன்றே நிச்சயதார்த்தம் போல செய்துக் கொண்டு திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது. வாழையிலை போட்டு சாப்பாடு பறிமாறப்பட்டது.
பதினைந்தே நாளில் திருமணமும் நடந்தேறியது. அன்று இரவு அரவிந்தன் கயலிடம்…
“கயல் நான் ஒரு விஷயம் சொல்வேன் அதைக்கேட்டு நீ சிரிக்கக் கூடாது ஓகே”
“என்னன்னு சொல்லு அரவிந் சிரிக்கறதா இல்லையான்னு கேட்டதுக்கப்புறம் தான் டிசைட் பண்ண முடியும்”
“இல்லை இது பல வருஷமா எனக்கு வரது தான் என் நண்பனிடம் கூட பகிர்ந்திருக்கேன் ஆனா அவனுக்கு அது அபத்தமாக இருந்ததால் எப்பொழுதும் கிண்டல் செய்து சிரிப்பான்”
“அச்சச்சோ ஏன் இவ்வளவு பில்ட்அப் ப்ளீஸ் சொல்லுப்பா”
“எனக்கு ஒரு ஏழு எட்டு வருஷமா ஒரே கனவு வந்திட்டிருக்கு அதில் நான் கயல்விழி என்கிற என் மனைவி அன்ட் மகள் தேன்மொழி மூணு பேரும் ஏதோ ஒரு கடற்கரையில் உட்கார்ந்திட்டு இருப்போம் சடன்னா உன்னையும் நம்ம பாப்பா தேனையும் காணவில்லை ….ஊப்ஸ் சாரி கனவில் கயலையும் என் மகள் தேனையும் ….நான் கல்யாணமே வேண்டாமென்றிருந்தேன்….உன் ஃபோட்டோவை என்னிடம் காட்டி உன் பெயர் கயல்விழி என்றதும் என்னுள் என்னால் விளக்க முடியாத அவ்வளவு மகிழ்ச்சி பொங்கியது அதனால் தான் கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்”
“என்ன சொல்றீங்க அரவிந் !!!! எனக்கும் பல ஆண்டுகளாக இதே கனவு தான் வந்துக்கொண்டிருக்கு. ஆனால் எனது கனவில் நீங்களும் நம்ம பாப்பாவும் தான் காணாமல் போனீர்கள். நான் கடற்கரை முழுவதும் தேடி அலைந்தேன் தெரியுமா!!! சரி ஆட்டோ பிடித்து நம்ம வீட்டுக்கு வந்திடலாம்ன்னு பார்த்தேன் ஆனா ஏதோ ஒன்னு என்னை அந்த கடற்கரையின் ஓர் குறிப்பிட்ட இடத்தை விட்டு தாண்ட விடவில்லை தெரியுமா!!!”
“ஹேய் என்னையும் அப்படிதான் ஏதோ ஒன்னு அந்த கடற்கரையை தாண்ட விடலை கயல்…நான் உங்களை தேடிகிட்டே அந்த கடற்கரையில தான் அங்குமிங்குமாக ஓடித் தேடிக்கிட்டிருக்கேன்”
“நானும் தான் அரவிந். நமக்கு என்ன தான் ஆச்சு நம்ம பாப்பா தேனு எங்க போனா? நாம மீட் பண்ணுறதுக்கு ஏன் இவ்வளவு காலமாச்சு!!!!”
“இதற்கான விடை நாம தொலஞ்சுப்போன அந்த கடற்கரையில தான் போய் பார்க்கணும். ஆனா அது எந்த கடற்கரை ன்னு போறது!!! நாம நிறைய கடற்கரைகளுக்கு போயிருக்கோமே!!!”
“எனக்கு தெரியும் அரவிந். அது நம்ம பூம்புகார் கடற்கரை தான். நளைக்கு நாம காலையிலேயே போயிடுவோம். சரியா”
“ஓகே டன்”
பல வருடங்களுக்கு பின் சந்தித்த தம்பதியர் சந்தோஷமாக இருக்க நினைத்தாலும் தேன்மொழி எங்கே என்ற கேள்வி அவர்களை பிரித்திருக்கச்செய்தது. காலை விடிந்தது கதிரவனும் கடலிலிருந்து வெளிய வரத் தொடங்கி அரவிந்தன், கயல்விழிக்கு வழிக்காட்ட உதித்தெழுந்து விட்டார்.
அரவிந்தனும், கயல்விழியும் வேகமாக கிளம்பி வெளியே செல்வதைப்பார்த்த அவர்கள் பெற்றோர்…
“ஏய் பசங்களா இவ்வளவு காலையில எங்கப்பா கிளம்பிட்டிங்க? அட இருங்கப்பா பதில் சொல்லாம போறீங்க!!!”
ஆனால் அரவிந்தன் கயல்விழி இருவரும் அவர்கள் கூறுவது எதுவுமே காதில் விழாததுப் போல விருட்டென்று அவர்கள் காரில் ஏறி பூம்புகார் கடற்கரைச் சென்றனர்.
அங்கு சென்று அவர்கள் கனவில் வந்த அதே இடத்தில் அமர்ந்தனர். சுற்றும் முற்றும் ஒரு ஈ காக்கா கூட இல்லை. அலைகளின் சப்தமும் உஸ் உஸ் என காற்றின் சப்தமும் மட்டுமே பலமாக அவ்விடத்தில் ஒலித்தது. கயல்விழி…
“அரவிந் அன்னைக்கும் இப்படி தான் இருந்தது அதை உங்ககிட்ட சொல்லி வீட்டுக்கு கிளம்பலாம் என்று எண்ணிக்கிட்டே திரும்பிப்பார்த்தேன் உங்களையும் நம்ம பாப்பா தேனையும் காணவில்லை அன்று முதல் இன்று வரை இங்கேயே தான் ஓடி ஓடி தேடிக்கிட்டிருக்கேன்…ஆமாம் நம்ம தேனு எங்கே”
“நாம இப்போ ஒன்னா சேர்ந்திட்டோமில்ல அதே மாதிரி நம்ம தேனும் நம்ம கூட சேர்ந்திடுவா பாரேன்”
சட்டென காற்று பலமாக வீச அமர்ந்திருந்த அரவிந்தன் கயலுக்கு ஏதோ அவர்கள் மனதிலிருந்த நினைவுகளை யாரோ உருவி வெளியே எடுத்து வந்ததுப் போல இரு உருவம் அவர்கள் முன் தோன்றி வணக்கம் சொன்னது. அந்த உருவங்களைப் பார்த்த கயல் சற்று பயத்துடன் கூடிய தயக்கத்தில் அரவிந்தனின் கரங்களை இறுக்கப் பற்றிக்கொண்டாள். அரவிந்தன்…
“நீங்கள் இருவரும் யார்?” என்று கேட்டான்
அவர்கள் சொல்லலானார்கள்…
“முதலில் உங்கள் இருவருக்கும் எங்களது நன்றியையும் அத்துடன் மன்னிப்பையும் கூறிக்கொள்கிறோம். நாங்கள் சென்னையில் யோகா சென்டர் நடத்தி வந்தோம். இருவருமே சிறந்த யோகா, பிரணாயாமம் பயிற்சியாளர்கள் என்று பல பரிசுகள் அவார்ட்கள் எல்லாம் பெற்றுள்ளோம். நாங்கள் எங்கள் குழந்தை தேன்மொழியுடன் இந்த கடற்கரைக்கு ஒரு பிக்னிக் போல அவளது பிறந்ததினமான 26 டிசம்பர் வந்தோம். சட்டென்று ஒரு நிசப்தம் நிலவியது அதன் பின் என்ன நடந்ததென்றே தெரியவில்லை இந்த கடற்கரையிலேயே நான் என் கணவரையும் மகளையும் தேடிக்கொண்டே இருக்கிறேன். அவர் என்னையும் மகளையும் தேடிக்கொண்டே இருக்கிறார். நல்ல வேளை நான் முயற்சித்ததையே அவரும் முயற்சித்ததால் நாங்கள் இப்போது சந்தித்துக்கொள்ள முடிந்தது….ஆனால் எங்கள் தேன் என்ன ஆனாள் என்று தான் நாங்கள் இருவரும் தவிக்கிறோம்.”
“அது என்ன முயற்சி?” என்று கேட்டாள் மணலில் அமர்ந்திருந்த கயல் அதற்கு வெரும் உருவமான அரவிந்தன் பதிலளித்தார்….
“நாங்கள் எங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி எங்களின் கடைசி நினைவுகளை அனுப்பியதில் உங்களுக்கு அது கனவாக வந்து இப்போது இங்கே உங்களை வரவைத்துள்ளது”
“ஓ மை காட் !!! கயல் எழுந்திரு நாம இங்கேருந்து உடனே போக வேண்டும். இது எனக்கு சரியாகத் தோன்றவில்லை” என்று மணலிலிருந்து எழ முயன்ற அரவிந்தனைப் பார்த்து….
“இருங்கள் நாங்கள் உங்களுக்கு இதுவரை எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை இனியும் அதை செய்ய மாட்டோம்.” என்றன அந்த உருவங்கள்
“அப்போ ஏன் எங்களுக்கு உங்கள் நினைவுகளை தினித்து இங்கு வரவைத்தீர்கள்?”
“அது தான் சொன்னோமே!!! அன்று என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கனும் அப்படியே எங்க தேனு என்ன ஆனா னும் தெரியனும் அதுக்குத்தான் உங்களை இங்கழைத்தோம்”
“அதுக்கு !!! இப்படியா அடுத்தவர்கள் வாழ்வில் விளையாடுது?” என்று ரத்தமும் சதையுமாக இருக்கும் அரவிந்தன் கேட்க அவன் மனைவியான கயல்…
“அரவிந்த் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருப்பா…. சரி நீங்க ரெண்டு பேரும் என்ன தேதி சொன்னீங்க?”
“டிசம்பர் 26த் எங்கள் தேன்மொழியின் பிறந்தநாள்”
“எந்த வருஷம்?”
“அன்று எங்கள் மகளின் ஐந்தாவது பிறந்த நாள் ….2004”
“கடவுளே !!!! நீங்கள் சொன்ன வருடம் நாள் எல்லாம் வைத்துப்பார்த்தால் …..அன்று சுனாமி வந்த தினமாயிற்றே!!!!”
“சுனாமி யா !!! அது என்ன?”
“கடலுக்கடியில் ஏற்ப்பட்ட பூகம்பத்தால் விளைந்த கடல் கொந்தளிப்பு முப்பது மீட்டர் உயரமான அலைகளை உருவாக்கி நமது நாட்டின் கடலோர பகுதிகளை எல்லாம் விழுங்கிய கொடூரமான இயற்கை சீற்றம். அது தான் உங்களையும் அழித்துள்ளது.”
“அப்படி என்றால் நாங்கள் இறந்துவிட்டோமா”
“ஆமாம். அந்த ராட்சத அலைகளுக்கு நீங்கள் இறையாகி உள்ளீர்கள்….வீ ஆர் ஸோ சாரி”
“எங்கள் மகள் தேனையும் அது விட்டு வைக்கவில்லையா?”
“என்ன செய்ய முடியும்மா? இயற்கையை வெல்ல நம்மால் முடியுமா?”
“அய்யோ எங்கள் மகள் தேனை இப்படி அனியாயமா தொலைச்சிட்டோமே”
“நீங்கள் தொலைக்கவில்லை அவளையும் கூட்டிச்சென்றுள்ளீர்கள். இப்போது நீங்கள் சேர்ந்தது போல தேனும் உங்களுடன் சேர மேலே காத்துக்கிட்டிருக்காளோ என்னவோ. உங்களுக்கு நடந்தது என்ன என்று புரிந்துக்கொண்டு விட்டீர்கள் ஆகையால் நீங்கள் சாந்தி அடைந்து தங்கள் மகளுடன் சேர நாங்கள் கடவுளை வேண்டிக்கொள்கிறோம்”
இதைக் கேட்டதும் காற்றுடன் காற்றாக கறைந்து காணாமல் போனார்கள் அடுத்த தேடலான தேன்மொழியைத் தேடி……
இரண்டு வருடங்கள் உருண்டோடின. மண்ணுலக அரவிந்தனுக்கும் கயலுக்கும் அழகான பெண் குழந்தைப் பிறந்தது. அந்த குழந்தைக்கு என்னப் பெயர் வைக்கலாம் என குடும்பத்தினர் அனைவருமாக பேசிக்கொண்டிருக்கையில்…. இரண்டு வீட்டாரும் ஒரு மனதாக அவர்கள் பேத்திக்கு “தேன்மொழி” என்ற பெயரை பரிந்துரைத்தனர்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் அரவிந்தனும் கயலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்!!!!!!!!
❤️முற்றும்❤️
