
காவிரி ஆறு கரைபுரண்டு ஒடியது. புது வெள்ளம் செம்மண் கலந்து வழியில் இருந்த மரம் செடி கொடி குடிசைகள் என்று ஒன்று விடாமல் எல்லாவற்றையும் புரட்டி அடித்து சென்றுக்கொண்டிருந்தது. அந்த கண் கொள்ளா காட்சியை ரசித்து பிரம்மித்து ஆப்பிள் போன்ற கன்னத்தில் கைகளை வைத்தவாறு கரையில் நின்றிருந்தாள் மிருதுளா என்ற பதினெட்டு வயது அழகிய பெண். அவளுக்கு நினைவு தெறிந்த காலத்திலிருந்து அன்று தான் முதல் முறையாக இருகரை புரண்டோடும் வெள்ளத்தை பார்க்கிறாள்.
ஒடும் வெள்ளம் பயங்கர சப்தம் எழுப்பி தன் வருகையை முழக்கமிட்டு கொண்டே சென்றது. அவ்வளவு இரைச்சலிலும் ஏதோ ஒரு சிறு வயது பெண்ணின் அழுகுரல் கேட்டது மிருதுளாவுக்கு. பிரமிப்பில் இருந்து வெளிவந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். தனது வலது புரம் திரும்பிப் பார்த்தாள். ஐந்து வயது சிறுமி கரையில் நின்று அழுது கொண்டிருந்தாள். உடனே வேகமாக அவள் அருகில் சென்று
“பாப்பா பின்னால் வா. தண்ணிக்குள்ள விழுந்துடுவ” என்று கத்திக்கொண்டே சிறுமியை பின்னால் இழுத்தாள் மிருதுளா. சிறுமி அதிர்ச்சியானாள் பின் மீண்டும் தன் கைகளை ஆற்றுப்பக்கம் காட்டி “அம்மா அம்மா” என்று அழுதாள்.
எங்க உங்க அம்மா பாப்பா? நீ எப்படி இங்கே வந்த?
நானும் அம்மாவும்…. வந்தோம்….அதோ என் அம்மா ஆற்றில் நடந்தே போறாங்க நான் அழுவதை பார்த்தும் நீ போ நீ போ என்று சொல்லிக்கிட்டே போயிட்டிருக்காங்க அக்கா…அவங்க பின்னாடி….என்று விக்கி விக்கி அழுதாள்…
உடனே விஷயம் புரிந்தது மிருதுளாவிற்கு. சிறுமியை அங்கிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போக முடிவு செய்தாள். அவள் பெற்றோரும் தனது தூரத்து சொந்தக்காரரின் பய்யன் திருமணத்தில் கலந்துக்கொள்ள பக்கத்து ஊருக்கு சென்றிருக்கிறார்கள்.
“பாப்பா பாரு என் டிரஸும் பூரா ஈரமாயிருக்கு. உன் டிரஸும் ஈரமா இருக்கு. வீட்டுக்கு போய் உடைய மாத்திக்கலாமா. இப்படியே ஈரத்தோட எவ்வளவு நேரம் இருக்கறது. வா வா”
“பாப்பா என் கூட என் வீட்டுக்கு வந்தினா. நான் உனக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி தரேன்”
என்று சொல்லி அந்த சிறுமியை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து சென்றாள். செல்லும் வழியில் அண்ணாச்சி கடையில் நின்றாள். காசு எடுக்க தன் கைபையை தேடினாள். அது அவளிடம் இருக்கவில்லை. உடனே சிறுமியிடம்
“அக்காவின் கைபையை காணல…உன்ன காப்பாத்தும்போது தவறிடுச்சுனு நினைக்கிறேன். வீட்டிற்கு போய் காசு எடுத்து வந்து வேண்டியதை வாங்கலாம் சரியா”
என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். வீட்டினுள் சென்றதும் பிஸ்கட் எடுத்து சிறுமியிடம் கொடுத்து
“இதை சாப்பிட்டிட்டு இரு நான் உனக்கு சாப்பாடு சமைத்து தருகிறேன்”
சமையலில் இறங்கினாள் மிருதுளா. அவள் சமைத்துக் கொண்டிருக்கையில் அந்த சிறுமி அவள் அருகே சென்று
“அக்கா அக்கா அம்மா அம்மா பின்னாடி அம்மா பின்னாடி….”
“பாப்பா உங்க வீடு எங்கே? யாரெல்லாம் இருக்கீங்க? நாளைக்கு எங்க அப்பா அம்மா வந்திடுவாங்க அப்பறம் உன்னை உன் வீட்டில கொண்டு போய் விடறோம் சரியா. “
“எனக்கு யாருமே இல்லை அக்கா… அம்மாவும் நானும் மட்டும் தான் இருந்தோம் ஆனா இப்போ அம்மாவும் ஆத்துல நடந்து போயிட்டாங்க என்ன விட்டுட்டு….எங்க குடிசையும் அந்த ஆறு எடுத்துக்கிச்சு” ஆனா அம்மா பின்னாடி…ஹும்… ஹும்…ஹீம்…
“சரி சரி அழாத பாப்பா. இதோ சாப்பாடு ரெடி. வா சாப்பிடலாமா? அக்கா சமையல் பிடிச்சிருக்கானு சொல்லு பார்க்கலாம்”
என பேச்சை திசை திருப்பி சிறுமிக்கு கதை சொல்லி சாதம் ஊட்டி முடித்தாள்.
“அக்கா… சாப்பாடு சூப்பரா இருந்துச்சு எங்க அம்மா சமைச்சா மாதிரியே இருந்துச்சு”
“சரி பாப்பா இப்போ நீ சமத்தா போய் வாசல்ல விளையாடிட்டிரு நான் இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவிட்டு…இடத்தை சுத்தம் செய்துட்டு வந்து உன் கூட விளையாடுறேன்”
சிறுமி அக்கா சொல்படி வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவ்வழியே வந்த ஒரு பெண் சிறுமியைப்பார்த்து
“யாரும்மா நீ? ஏன் இங்கே உட்கார்ந்து இருக்க?”
“என் அம்மா ஆத்து தண்ணீல நடந்து எங்கயோ போயிருக்காங்க அதனால என்ன மிருதுளா அக்கா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. இப்போ பாத்திரம் விளக்கிக்கிட்டு இருக்காங்க…”
“என்னது மிருதுளாவா!!! ஏய் பாப்பா நீ இங்க எல்லாம் இருக்காதே உடனே உன் வீட்டுக்கு போயிடு”
“எங்க வீடு தான் ஆறு தூக்கிக்கிட்டு போயிடுச்சே”
“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் போயிட்டு வரேன்”
“அக்கா அக்கா மிருதுளா அக்கா…”என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றாள் சிறுமி.
“என்ன பாப்பா நான் இங்க இருக்கேன்”
“நான் திண்ணைல உட்கார்ந்திருந்தேனா…அப்போ இன்னொரு அக்கா வந்தாங்க ….வந்து இங்கே எல்லாம் இருக்கக்கூடாது னு சொன்னாங்க …ஏன் அக்கா?? அவங்க யாரு??”
“அது அனேகமா என் தோழி வான்மதி அல்லது கோமதியா இருப்பா… அவங்க ரெண்டு பேரும் டிவின்ஸ் …”
“டிவின்ஸ்னா என்ன அக்கா?”
“டிவின்ஸ்னா இரட்டையர்கள் என்று அர்த்தம்”
“இரட்டையர்கள் னா!! என்ன?”
“அதாவது அவங்க இரண்டு பேரும் அக்கா தங்கச்சி பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்க”
“ஓ அப்படியா…அப்போ வந்து என் கூட பேசினது வான்மதி அக்கா வா? இல்ல கோமதி அக்காவா??”
“வா நாமளே போய் கேட்ப்போம்….என் வேலைகளையும் முடிச்சிட்டேன்….”
இருவரும் வான்மதி, கோமதி வீட்டுக்கு சென்றனர்.
” பாப்பா நீ மட்டும் போய் கூப்பிடு நான் இங்க ஒளிஞ்சுக்கறேன் ….அவங்க வந்ததும் …பா…என்று கத்தி பயமுறுத்துறேன் சரியா”
“சரி அக்கா”
“கூப்பிடு…ஹும்..கூப்பிடு”
“வான்மதி அக்கா ….கோமதி அக்கா”
“நான் தான் கோமதி …ஏய் நீ மிருதுளா வீட்டு திண்ணையில உட்கார்ந்திருந்த பாப்பா தானே ….”
“ஆமா அக்கா…நீங்க கோமதின்னா அப்போ வான்மதி அக்கா எங்க? கூப்பிடுங்க….நீங்க இரட்டையர்களாமே.”
” இது எப்படி உனக்கு தெரியும்? உன்னை இந்த ஊர்ல இன்னிக்கு தான் பார்க்கிறேன்”
“மிருதுளா அக்கா தான் சொன்னாங்க….மிருதுளா அக்கா நானே சொல்லிட்டேன் ….இனி ஒளிய வேண்டாம் வெளியே வாங்க”
“ஏய் பாப்பா என்ன உளருர ….போயிடு எனக்கு நிறைய வேலைகள் இருக்கு”
என்று சொல்லிக்கொண்டே கதவை தாழிட்டு வீட்டினுள் சென்றாள் கோமதி.
இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த மிருதுளாவிற்கு ஒரே குழப்பம்…
“ஏன் கோமதி சட்டென்று கதவடைத்தாள் என்னை பார்க்கக்கூட வரவில்லை.என்ன ஆச்சு இவளுக்கு …இவள் கொஞ்சம் சிடுமூஞ்சி தான் வான்மதி இருந்திருந்தா அப்படி செய்திருக்க மாட்டாள்.”
“பாப்பா அவ அப்படிதான் …வரியா சந்தைக்கு போயிட்டு வரலாம்”
“சரி அக்கா போகலாம்”
இருவரும் சந்தையை சென்றடைந்தனர். சிறுமி மிருதுளாவிடம் பஞ்சு மிட்டாய் கேட்டாள்.
” ஓ வாங்கி தரேன் வா….அண்ணே ஒரு பஞ்சு மிட்டாய் தாங்க “
என்று காசை எடுத்து நீட்டினாள்… பஞ்சு மிட்டாய் காரர் காசை வாங்கிக்கொண்டு சிறுமியைப்பார்த்து திரு திரு என விழித்தார்…உடனே மிருதுளா
“என்ன அண்ணே என்னமோ புதுசா பார்கரா மாதிரி முழிக்கிறீங்க….ஓ இதுவா இந்த பாப்பா எங்க வீட்டு விருந்தாளி…சரி நாங்க வரோம்”
“அக்கா அக்கா எனக்கு இராட்டினத்தில ஏறனும்முன்னு ஆசையா இருக்கு அக்கா…ஏத்தி விடுறேங்களா!!!”
“ஓ அதுக்கென்ன வா வா …இதோ ஏறு..நல்லா உட்கார்ந்திட்டயா….கெட்டியா கம்பிய பிடிச்சுக்க பாப்பா… இந்தாங்க அண்ணே காசு …இராட்டினத்த சுத்துங்க…என்ன அண்ணே அப்படி பார்க்குறீங்க?”
இராட்டினம் சுழன்றது மூன்றுமுறை. பின் நிறுத்தப்பட்டதும்..
“பாப்பா வா வீட்டுக்கு போகலாம்”
“அக்கா அக்கா இன்னொரு ரவுண்டு”
“ஹூம்… ஹூம் …வா வா ….நாளைக்கு காலைல என் அம்மா அப்பா வந்திடுவாங்க…இப்ப போய் சாப்பிட்டுட்டு தூங்கினா தானே காலைல சீக்கிரம் எழுந்து எல்லா வேலைகளையும் நான் முடிக்க முடியும். போகலாமா?”
” அது சரி பாப்பா என்கிட்ட ஏதாவது வித்தியாசம் தெரியுதா”
“அப்படினா”
“நான் பவுடர் ஜாஸ்தியா போட்டிருக்கேனா”
“இல்லை அக்கா ..நீங்க அழகா இருக்கீங்க”
“அப்புறம் ஏன் அந்த ரெண்டு அண்ணன்களும் அப்படி வெரிச்சு வெரிச்சுப் பார்த்தாங்க….பயந்தாங்க…ஏன்? என்னவா இருக்கும்? சரி சரி வேகமா வா இருட்டிடுச்சில்ல”
“உங்க கூடவே தானே அக்கா வரேன்”
இருவரும் வீட்டிற்குள் சென்றனர். இரவு உணவு உண்டபின்…முன்வாசல் கதவையும், பின்வாசல் கதவையும் சாற்றி படுத்துறங்க பாயை விரித்து
“பாப்பா வா படுத்துக்கலாம்”
என்றபடி பார்த்தாள் …சிறுமி அறையின் மூலையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தாள். அவளருகே மிருதுளா சென்றாள்…
“பாப்பா ஏன் அழுவுற?”
“அக்கா ஹூம்ம்ம்…அக்கா ஹூம்ம்ம்… அம்மா….அம்மா…ஹூம்ம்ம்ம்…”
“பாப்பா உங்க அம்மா சாமிகிட்ட போயிருக்காங்க அவங்க வரத்துக்கு ரொம்ப நாள் ஆகும். உன்ன பத்திரமா பார்த்துக்க மிருதுளா அக்கா இருக்கேன் நாளைக்கு என்னோட அப்பா அம்மா வந்திடுவாங்க அவங்க உனக்கும் அப்பா அம்மா தான்…மிருதுளா அக்காவும் பாப்பாவும் அப்பா அம்மா கூட ஜாலியா இருக்கலாம்…எங்க அப்பாக்கு பெரிய மீசை இருக்கு…நான் உன் வயசுல அதை பிடிச்சு இழுப்பேன் …. இதோ என் அம்மாவின் இந்த சேலையை எப்போதுமே போத்திகிட்டு தான் தூங்குவேன்…இந்தா இன்னிக்கு நீ போத்திக்கோ…நிம்மதியா தூங்கு சரியா”
“ஓ ஓ ஓ அக்கா அப்போ அம்மா பின்னாடில இருந்து …. அதுக்கு தானா”
“என்ன சொல்ற பாப்பா? எனக்கு புரியலையே”
“அம்மா சாமிகிட்ட தண்ணீல நடந்து போனாங்கலே அப்போ அவங்க பின்னாடியே நீங்க போனீங்க இல்ல அப்போ அம்மா என்ன பார்த்துக்க சொல்லிதான் உங்கள போக சொன்னாங்களா? அது தான் அவங்க சொன்னதும் நீங்க சட்டுனு என் பின்னாடிலருந்து என்ன கூப்பிட்டிங்களா!!! நீங்க ரொம்ப நல்ல அக்கா…ஆனா அம்மா ஏன் உங்கள அவங்க பின்னாடிலேருந்து அனுப்பனும் ….அதுக்கு அவங்களே வந்திருக்கலாமில்ல அக்கா….அக்கா..அக்காஆஆஆ!!!!.”
இதை கேட்ட மிருதுளா மிரண்டு போனாள். பூமி சுற்றாமல் நின்றது போல இருந்தது.
“பாப்பா என்னமா சொல்லுற? உங்க அம்மா பின்னாடி நான் போயிட்டிருந்தேனா? நல்லா யோசிச்சு சொல்லுமா”
“ஆமா அக்கா அத தான் நான் காலைல இருந்து சொல்லறேன் …அம்மா பின்னாடி அம்மா பின்னாடி னு …நீங்க தான் கேக்கவே இல்லை அதுதான் இப்பொ சொல்லிட்டேனே…படுங்க அக்கா தூங்கலாம்..அப்பா அம்மா காலைல வந்திடுவாங்க ல”
மிருதுளா மெல்ல சிறுமி அருகே படுத்தாள். சிறுமி நன்றாக உறங்கினாள். மருதுளாவிற்கு சிறுமி சொன்னதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் காலையிலிருந்து நடந்தவற்றை எல்லாம் அசைபோட்டுப்பார்தாள். ஆனால் அவளுக்கு எதுவும் தவறாக படவில்லை. ஈரமான உடை, கைபை தவறியது, கோமதியின் பதட்டம், சடால் கதவடைப்பு, சந்தையில் இருந்த அந்த பஞ்சு மிட்டாய் காரர் மற்றும் இராட்டினம் சழற்றும் நபரின் வித்தியாசமான அந்த மிரண்ட பார்வை அவள் கண்முன் சட்டென்று வந்து சென்றது. ஏதோ தவறாக இருப்பது போல இருந்தது. இரவு முழுவதும் உறங்காமல் யோசித்து யோசித்து பார்த்தாள் அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
விடிந்தது… காலை சூரியன் பிரகாசத்தை வழங்கினார். வெளியே ஏதோ சப்தம் கேட்டது. அவள் அப்பா அம்மா வின் அழுகுரல். உடல் நடுங்கியது, உள்ளம் பத பதைத்தது மெல்ல எட்டிப்பார்தாள். வீட்டு வாசலில் ஊர் மக்கள் அனைவரும் இருந்தனர். அப்பாவும் அம்மாவும் அழுதுகொண்டே
” எங்களுக்கு ஒன்னுமே புரியல சார் இந்த பொன்னுங்க என்னென்னமோ சொல்லுதுங்க…எங்க பெண்ண காணலைங்க “
எற்றார்கள் போலிஸிடம்.
” என்னமா நீ தான் வான்மதியா? என்ன நடந்துசுன்னு விரிவா சொல்லுமா”
“ஆமா சார் நான் தான் வான்மதி. மிருதுளாவோட தோழி. நாங்க நேற்று”
“நாங்கன்னா!!! யாருயாருன்னு தெளிவா சொல்லுமா”
“நான், என் தங்கச்சி கோமதி, மிருதுளா மூனு பேரும் புது வெள்ளத்த பார்க்க ஆத்தங்கரைக்கு போனோம். அப்ப மிருதுளா அந்த புது செம்மண் கலந்த தண்ணீய கையால தொட்டு பார்க்கனும்னு கயித்த தாண்டி ஆத்துக்கிட்ட போனப்போ நாங்க வேண்டாம் வேண்டாம்னு கத்தினோம் ஆனா அவ காதுல விழல …அவ கயித்த தாண்டி கைய தண்ணீல வச்சா அவ்வளவுதான் காவிரி அவள அடிச்சுகிட்டு போயிடுச்சு சார்”
என்று கூறி கதறி அழுதாள். இதை கேட்டதும் அதிர்ந்து போனாள் மிருதுளா…
“அப்போ இந்த பாப்பா நேத்து ராத்திரி சொன்னதெல்லாம் நிஜமா….நான் அவ அம்மா பின்னாடி தண்ணீல போயிட்டிருந்தேனா? நான் இந்த சிருமியை காப்பாத்தினேன் நினைச்சேன் ஆனா உண்மையில் என் அப்பா அம்மாவுக்கு உதவ தான் வந்திருக்கேனோ!!! ஆனா கடையிலேயும், சந்தையிலேயும் என்ன எல்லாரும் வெரிச்சு வெரிச்சு பார்த்தாங்களே அது எப்படி? உண்மையில் நான் இருகேனா ? இல்லையா? ஐயோ! எனக்கு தலை சுத்துதே!!!!”
கண்களை மூடி சற்று நேரம் அமைதியாக நடந்தவற்றை ஆழ்மனதிலிருந்து யோசித்தாள் மிருதுளா. அப்போ அவள் முன் ஒரு பெண் உருவம் தோன்றியது. இரு கண்களிலும் கண்ணீருடன் பாப்பாவை பார்த்த படி நின்று கொண்டு இருப்பதை உணர்ந்த மிருதுளா மெல்ல கண்களை திறந்தாள். அவள் கண்மூடி கண்ட உருவம் அவள் முன்னே இருந்தது.
“நீங்க யார்? எப்படி என் வீட்டுக்குள்ள வந்தீங்க? ஏன் பாப்பாவையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?”
“நான் மாலினியின் தாய். எவ்வளவு அழகாக உறங்குகிறாள் என் மகள். அவள் நிம்மதியாக தூங்க நீயே காரணம். நன்றி மிருதுளா”
“என் பேரு உங்களுக்கு எப்படி…ஓ ….ஓ… பாப்பா…ச்சே….மாலினி சொன்னதெல்லாம் உண்மையா? அப்போ நானும் இறந்துவிட்டேனா? ஆனா நீங்க வந்து உங்க மாலினிய சமாதானம் பண்ணாம உங்க பின்னாடி காவிரியில் மிதந்த என்ன ஏன் அனுப்பினீங்க? நான் அதனால உயிரோட இருக்கேன்னு நினைச்சு ஒரு நாள் பூரா உங்க பொன்னு கூட இருந்திருக்கேன்…. எனக்கு ஏன் இது நேர்ந்தது”
புலம்பினாள் மிருதுளா…
“மிருதுளா …மிருதுளாஆஆஆ சற்று சாந்தமாக இரு…நீ உயிருடன் தான் இருக்கிறாய்….நானும் உங்க ரெண்டு பேரோட நேத்து பூரா ….இப்ப வரைக்கும் இருக்கேன்…என் மகளுக்கு பாதுகாப்பா நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு..எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இனி இந்த மண்ணுலகில் இருந்து நான் விண்ணுலகம் செல்ல நேரம் வந்திடுச்சு.”
“என்ன சொல்லுறீங்க? அப்போ தண்ணீ என்ன அடிச்சிட்டு போயிருச்சுனு வான்மதி அழுவது…நான் செத்துட்டேன்னு எல்லாரும் வாசலில் கூடி இருக்காங்க …ஆனா நான் உயிரோடு இருக்கேன்னு செத்துப் போன நீங்க சொல்லுறீங்க….ஐயோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கே!!!!”
“உன்னை காவிரி ஆறு அடித்துக்கொண்டு போவதற்கு சற்று முன் என்னை விழுங்கி என் உயிர் குடித்தது. அதற்கு பசி அப்போதும் அடங்காமல் உன்னையும் முழுங்க பார்த்தது. அப்போ பார்த்தேன் நீ உயிரோடு போராடிட்டிருந்த உடனே உன்னை காப்பாற்றி என் மகளுடன் சேர்தேன். இதுதான் நடந்தது. தெளிவானதா??”
“அப்போ ஏன் என்னை பார்த்தவங்க எல்லாரும் வெரிச்சு வெரிச்சுப் பார்த்தாங்க…ஏதோ பேய பார்த்தா மாதிரி?”
“அது ஏன்னா உன் தோழிகள் இருவரும் ஊர் முழுக்க உன்னை காவிரி அடித்து சென்று விட்டதாக தண்டோரா போட்டிருக்காங்க அதனாலதான் உன்னை அப்படி பார்த்தார்கள்”
“இதெல்லாம் நேத்திக்கே என்கிட்ட சொல்லிருக்கலாமே…நானும் என் தோழிகள்ட்ட சொல்லி அவங்களை துக்கப்படாமல் செய்திருப்பேனே”
“ஹம் …என் மகள் சரியானவரிடம் தான் சேர்த்திருக்கேனானு நான் தெரிஞ்சுக்கனுமில்ல ….இப்போ தெரிஞ்சுகிட்டேன் …அது தான் சொல்லிட்டேன்”
பேச்சு சத்தம் கேட்டு எழுந்தாள் மாலினி பாப்பா. கண்களைக் கசக்கி கொண்டே நிமிர்ந்தாள். அம்மா என்று கத்திகொண்டே வாரி அணைக்க ஓடினாள். ஆனால் முடியாமல் மலைத்து நின்றாள்.
“கண்ணு மாலினி இனி இவங்க தான் உன் சொந்தம் பந்தம் எல்லாமும்…இனி இவங்க சொல்படி கேட்டு நல்ல பெண்ணாக உன் மிருதுளா அக்கா மாதிரி வரணும் சரியா.. உன்ன பார்த்து இத சொல்லத்தான் சாமி என்னை அனுப்பினார். அம்மா போயிட்டு வரேன்டா கண்ணே. மிருதுளா என் மாலினிக்குட்டிய நல்லபடியா பார்த்துக்கோமா”
என்று கூறி மறைந்தாள் அந்த தாய்.
“அம்மா அம்மாஆஆஆஆஆ”
வீட்டினுள் சிறுமியின் கதறல் கேட்டு வீட்டிற்கு வெளியே நின்றவர்கள் கதவை உடைத்து உள்ளே போக முயர்ச்சித்தார்கள். சட்டென்று கதவு திறந்தது. மிருதுளா ஒரு சிறுமியுடன் நின்றிருந்தாள். மிருதுளாவின் பெற்றோர் எல்லாரையும் தள்ளிக்கொண்டு முன்னே வந்து தங்கள் பெண்ணை பார்த்ததும் ஓடி சென்று கட்டி அணைத்து கதறி அழுதார்கள். வான்மதியும், கோமதியும், ஊர் மக்களும் வாய் பிளந்து நின்றனர். இன்ஸ்பெக்டர் முன்னே வந்தார்.
“என்னம்மா உன்ன காவிரி ஆறு அடிச்சுட்டு போயிருச்சுன்னு இந்த ரெண்டு பொன்னுங்க நேத்திலேருந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க ஆனா நீ வீட்டுக்குள்ள இருந்து வர. என்னதாம்மா நடந்துச்சு”
மிருதுளா நடந்தவற்றை விளக்கமாக கூறினாள். உடனே தோழிகள் வான்மதியும் கோமதியும் அவளை கட்டிக்கொண்டு அழுதார்கள். மிருதுளா தனது பெற்றோரைப்பார்த்து…
“அப்பா, அம்மா இனி மாலினி என் தங்கை. நீங்கள் அவளை உங்கள் மகளாக ஏத்துப்பீங்களா?”
“ஏத்துக்கறதா? நீ வாடி மாலினிக்குட்டி இனி நான் தான் உன் அம்மா வள்ளியம்மா, அவர் தான் உன் அப்பா சேகர். எல்லாரும் கேட்டுக்கோங்க இனி எங்களுக்கு இரண்டு மகள்கள்”
மாலினி பாப்பாவின் தாயின் வலிக்கும் வேதனைக்கும் மருந்தானார்கள் வள்ளியம்மையும், சேகரும், மிருதுளாவும்.
புது வெள்ளத்தில் வந்த புது உறவுக்கு புத்தம் புது வாழ்க்கை அமைந்தது.
தாய் உயிர்நீத்தாலும் தாய்மை என்றும் உயிர்த்திருக்கும்.
❤️முற்றும்❤️
