
அன்று வினாயகர் சதுர்த்தி. பாட்டி வள்ளியம்மை சுறுசுறுப்பாக பூஜைக்கு வேண்டிய கொழுக்கட்டை, வடை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.
மருமகள் ராணி வினாயகரை அலங்காரம் செய்து பின் சுவற்றில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள். அன்று பாட்டியின் மூன்று வயது செல்லக்குட்டி பேத்தி அஞ்சனாவின் பிறந்தநாளுமாகும்.
ராணி: அம்மா அடுக்களையில் உங்கள் வேலை முடிந்ததா? நான் அஞ்சுக்கு கேக் பேக் பண்ணணும்…
ஆச்சு என்று சொல்லிக்கொண்டே செய்ததை எல்லாம் வினாயகருக்கு முன் வைத்து தனது கணவர், மகன், மருமகள், பேத்தி அஞ்சனா அனைவரையும் பூஜைக்கு அழைத்தார். பூஜை சிறப்பாக முடிந்தது.
அஞ்சனா: இதெல்லாம் என்ன பாட்டி?
பாட்டி: இன்னைக்கு பிள்ளையாருக்கும் பெர்த்டே ஆச்சே. மூத்த கடவுள் இல்லையா…அதனால இது பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை அப்பறம் வடை.
ராணி : கேக் தயார். அஞ்சுமா கேக்கை வெட்ட வா மா.
எழுந்து வராமல் வருத்தமாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அனைவரும் ஏன் என்ன ஆச்சு என்று வினவினர்.
அஞ்சனா: பாட்டி நான் உன் கூட டூ!
பாட்டி: நான் என்ன செய்தேன் கண்ணா? ஏன் என் கூட அஞ்சுமா டூ விடரா?
அஞ்சனா: பி ஃபார் பிள்ளையார் ரைட்டா?
பாட்டி : சரிதான்.
அஞ்சனா: அ ஃபார் அஞ்சனா ரைட்டா?
பாட்டி : ரைட்டுதான்.
அஞ்சனா : பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டையும், பிடிகொழுக்கட்டையும், வடையும் செய்திருக்க பாட்டி அப்போ எனக்கு மட்டும் ஏன் கேக்?
பாட்டி: என் அஞ்சனா குட்டிக்கு வேற என்ன வேணும் சொல்லு உடனே செய்து தரேன்.
அஞ்சனா: எனக்கு ஆறின கொழுக்கட்டை யும், அடி கொழுக்கட்டையும் அன்ட்..அன்ட் அடையும் வேணும்.
அனைவரும் சிரித்தார்கள். பாட்டிக்கும் சிரிப்பு அடக்கமுடியலை ..ஆனாலும் அடுக்களைக்குள் சென்று தட்டு ஒன்றில் ஆறிப்போன பூரணக்கொழுக்கட்டையும், பிடிக்கொழுக்கட்டையை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியையும், வடையை நன்றாக கைகளினால் நசுக்கி அடைப்போல செய்து எடுத்து வந்து ….
பாட்டி: அ ஃபார் அஞ்சனா குட்டிக்கு பாட்டி செய்த ஆறின கொழுக்கட்டை, அடி கொழுக்கட்டை அன்ட் அடை தயார் ஆ காமி…
அஞ்சனா : சூப்பர் பாட்டி.
என்று உண்டு பின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
பிள்ளைகள் எப்பொழுது எதை கேட்ப்பார்கள் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் அதை அழகாக குழந்தை மனம் கோணாமல் லாவகமாக கையாண்டு சாபாஷ் வாங்குவதில் பாட்டிகளை மிஞ்ச யாரும் இல்லை.
