கயலும் கரகமும்

“என்ன வேல்விழி வேலை எல்லாம் ஆயாச்சா? உன் பொண்ணு கயல்விழி குட்டி என்ன பண்ணிட்டிருக்கா?”

“நீங்களே  பாருங்க ராஜி அக்கா. எப்ப பார்த்தாலும் மொபைலும் கையுமாக இருக்கா! ஷிப்ட் பண்ணின பொருட்கள் எல்லாம் செட் பண்ணிடேங்களாக்கா? வீடு செட்டாயிடுச்சா?  நம்ம அப்பார்ட்மெண்ட் ல எல்லாரும் ரொம்ப நல்லவங்க அக்கா. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க அக்கா”  

மூன்று வயதே ஆன கயல்விழி  கையில் மொபைல் ஃபோன் வைத்துக்கொண்டு கண் இமைக்காமல் எதையோ ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

“நிச்சயமா சொல்லுறேன் வேல். இப்போதைக்கு எங்களுக்கு தெரிஞ்சவங்க னா அது உங்க ஃபேமிலி மட்டும் தான்”

“ஏய் கயல் குட்டி இங்க பாருடா கண்ணு ராஜி  ஆன்டி உன்ன பார்க்கத்தான் வந்திருக்காங்க. அந்த ஃபோனை வச்சுட்டு வாடா செல்லம்”

“ஏய் வேல் இப்படியே இவள விட்டுட்டனா அப்பறம் அஞ்சு வயசுலயே கண்ணாடி போட வேண்டி வரும்”

“கயல் போதும் நீ கார்டூன் பார்த்தது. அந்த ஃபோனை குடு. வரவர ரொம்ப கெட்டப்பழக்கமாவுது”

என்று  ஃபோனை கயல் பாப்பா கைகளிலிருந்து வெடுக்கென்று எடுத்தாள் வேல். ஃபோன் தன்னிடமிருந்து போனதும் வீல் வீல் வீல் என்று ஒரே அழுகை. 

“வேல் அவகிட்ட ஃபோனை குடுத்திடு பாவம் குழந்தை ரொம்ப அழறா பாரேன்”

சொர்ணம் பாட்டி  அவர்கள் வீட்டு வாசலில் இருந்து ..

“கயல் குட்டி மா ஏன் அழுவுறா? பாட்டி கிட்ட ஓடி வா செல்லம்”

“இங்க பாருங்க ராஜி அக்கா அழுகை காணாம போச்சு!! டிங்கு டிங்குனு போவுது பாருங்களேன்”

“அதுதானே!!! அது எப்படி!!!!”

“இப்படி தான் அக்கா தினமும் நடக்குது. இங்க இருந்தா மொபைல் ஃபோன் வேணும்ன்னு அடம் பிடிப்பா ஆனா நம்ம எதிர் வீட்டு சொர்ணம் பாட்டி வீல் சேர் சத்தம் கேட்டா உடனே அவங்க கிட்ட ஓடிடுவா. அவங்க அப்படி என்ன தான் விளையாட்டு காட்டுவாங்கனு தெரியலை. நானும் அவங்கள்ட்ட கயல்விழியை விட்டுட்டு என் வேலைகளை எல்லாம் முடிச்சதும் கூட்டிட்டு வருவேன்”  

“எதிர் வீட்ல அந்த பாட்டி மட்டும் தனியா இருக்காங்களா? அவங்க காலுக்கு என்ன ஆச்சு வேல்?”

“அவங்க பசங்க எல்லாம் வெளிநாட்டில் இருக்காங்க கா. இரண்டு வருஷம் முன்னாடி நடந்த கார் ஆக்சிடென்ட் ல அவங்க கால் ல அடிப்பட்டு இப்படி இருக்காங்க. அவங்களும் அவங்க ஹெல்ப்பர் கமலாவும் தான் அங்க இருக்காங்க. அவங்க பரதநாட்டிய டான்ஸர் கா. சூப்பரா பரதநாட்டியம் ஆடிட்டு இருந்தாங்க…பாவம் யார் கண்ணு பட்டுதோ இப்படி வீல் சேரிலே உட்கார வச்சிடுச்சு .”

“ஓ அப்படியா!!! அவங்கள அப்புறமா ஒரு நாள் போய் மீட் பண்றேன். சரி வேல் நான் போய் மீதமுள்ள வேலையைச் செய்யனும். கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டேன்”

“சரி கா நானும் கயல் அங்க இருக்கும் போதே என் வேலைகளையும் முடிச்சுக்கறேன். பை கா”

“பை வேல். நாளை பார்ப்போம்” 

இப்படியே ஐந்து வருடங்கள் பறந்தன. கயல்விழியின் எட்டாவது பிறந்த நாள் வந்தது. வேல்விழியும் அவள் கணவர் சேகரும் கயலுக்கு என்ன கிஃப்ட் வேண்டும் என்று கயலிடம் கேட்டனர். அதற்கு கயல்விழி…

“எனக்கு கரகாட்டம் கத்துக்கணும் பா. ப்ளீஸ் பா. நான் நிறைய கரகாட்ட டான்ஸ் மொபைல்ல பார்த்திருக்கேன் பா. அந்த டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா…அப்பா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் வேற எதுவும் எனக்கு வேண்டாம் பா.”

“நீ எப்போ டி கரகாட்டத்தை மொபைல்ல பார்த்த. எனக்கு தெரிஞ்சு கார்டூன் தான் பார்த்திருக்க…அதுவும் இல்லாம பசங்க எல்லாம் இப்போ சால்ஸா, பாலிவுட் டான்ஸ் அது இதுன்னு கத்துக்கறாங்க நீ என்னடான்னா கரகம் கத்துக்கணும்னு சொல்லுற. என்னடி ஆச்சு உனக்கு!!!”

“ஏய் வேல் அவளை ஏன் டிஸ்க்கரேஜ் பண்ணுற. அவளுக்கு எதுல இன்டரெஸ்ட் இருக்கோ அதையே கத்துக் கட்டுமே. விடேன்”

“சரிங்க நான் விட்டுட்டேன் இப்போ கரகம் இவளுக்கு யார் சொல்லித் தருவாங்க? அதுக்கு எங்க போய் டிச்சர் தேடப்போறீங்க?”

“அம்மா…. நம்ம சொர்ணம் பாட்டி டான்ஸர் தானே அவங்க கிட்டயே கத்துக்கறேனே”

“ஏய் அவங்க பரதம் டான்ஸர். அவங்க எப்படி கரகம்…..ம்ம்…”

“ஹேய் கயல்…ஹாப்பி பெர்த்டே டூ யூ கண்ணா”

“தாங்ஸ் சொர்ணம் பாட்டி.”

“உள்ள வாங்க மா. உங்களைப் பத்திதான் பேசிகிட்டே இருந்தோம் நீங்களே வந்திட்டிங்க” 

“அப்படியா!!! அப்படி என்ன என்னைப் பத்தி டிஸ்கஷன்? சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கறேன்”

“அது ஒன்னுமில்லை மா. நம்ம கயலுக்கு கரகாட்டம் கத்துக்கணும்மாம். அதுவும் உங்ககிட்ட கத்துக்கணும்னு சொல்லுறா!! அதுதான் அவகிட்ட சொல்லிட்டிருக்கேன் நீங்க பரதநாட்டிய டான்ஸர் ஆச்சே னு”

“சே சே அப்படி எல்லாம் ஒன்னுமே கிடையாது. நம்ம கயல் குட்டிக்கு அவளுக்கு பிடிச்ச கரகாட்டத்தையே கத்துக்குடுத்துட்டா போச்சு”

“அதுக்கில்லை  மா…இந்த காலத்துல போய்!!! கரகாட்டம் எல்லாம் யாருமே ஆடறது இல்லையே  இவ மட்டும் கத்துக்கிட்டு என்ன பண்ண போறான்னு தான் யோசிக்கறேன்”

“பரதம் போல கரகாட்டமும் ஒரு கலை தானே வேல்விழி. எந்த கலையை கத்துக்கிட்டாலும் நல்லதுதானே. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். நம்ம கயல் குட்டிக்கு கரகம் பிடிச்சிருக்குதுன்னா அவ அதையே படிக்கட்டுமே”

“உங்களுக்கு ஏன் மா வீண் சிரமம்”

“இதுல எனக்கு எந்த சிரமமும் இல்லை. என்ன கயல் இன்னைக்கே கிளாஸ் ஆரம்பிக்கலாமா? நீ ரெடியா?”

“ஓ….நான் ரெடி பாட்டி.”

“அவசரத்தை பாரேன்! இரு கயல்… ஒரு ஒன் வீக் வேய்ட் பண்ணு என்னோட இந்த கால் டிரீட்மென்ட் முடிய போவுது. அடுத்த வாரம் நடக்க முடியும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நீ வந்து எனக்கு தினமும் நடக்க ஹெல்ப் பண்ணுறியா. நான் உனக்கு கரகம் சொல்லித்தரேன்.”

“ஓ நிச்சயமா வரேன் பாட்டி. ஐ வில் ஹெல்ப் யூ டூ வாக் அன்ட் யூ ஹெல்ப் மீ வித் கரகாட்டம்.”

தினமும் சொர்ணம் பாட்டிக்கு கமலாவின் உதவியோடு நடைப்பயிற்சி கொடுத்தனர் வேல்விழியும், கயல்விழியும். இரண்டு வாரத்தில் நடக்க ஆரம்பித்தார் சொர்ணம். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் வேல்விழியிடம்…

“நாங்க சொர்ணம் பாட்டியை சமாதானம் படுத்தத்தான் இரண்டு வாரத்துல நடக்கமுடியும்னு சொல்லியிருந்தோம். ஆனா திஸ் ஈஸ் அ மெடிக்கல் மிராக்கிள்!!!! காட் இஸ் கிரேட். இனி அவங்க எப்போதும் போல இருக்கலாம். வீல் சேர் இனி தேவையேயில்லை”

“ஓ !!! ரியலீ !!!காட் இஸ் கிரேட் டாக்டர் ஃபார் கிவ்விங் தீஸ் டூ லவ்லீ லேடிஸ் இன் மை லைஃப். இவர்களால் தான் என்னால் இவ்வளவு சீக்கிரம் நடக்க முடிந்தது. தாங்க்ஸ் டாக்டர்! நீங்க சமாதானத்திற்காக சொன்னது நிஜமானது.  நாங்க வரோம் டாக்டர்.”

“வரோம்னு சொல்லாதீங்க சொர்ணம். திஸ் ஈஸ் ஹாஸ்பிடல் அன்ட் நாட் மை ஹோம். ஹா !ஹா !ஹா!. பை டேக் கேர்”

“பை டாக்டர்”

“ஹேய் கயல் நாளை முதல் உனக்கு கரகம் கிளாஸ் ஆரம்பம். ஆர் யூ ரெடி பேபி”

“எஸ் பாட்டி ஐ ஆம் ரெடி”

மறுநாள் முதல் கயலுக்கு கரகாட்டம் கிளாஸ் ஆரம்பம் ஆனது. ஒரு ஆறு மாதம் பயிற்சிக்கு பின் சொர்ணம் வேல்விழியிடம் 

“வேல் நம்ம கயல் ரொம்ப அழகா, நளினமா ஆடறா. சீக்கிரம் கரகாட்டம் கத்துக்கிட்டா. உங்க குடும்பத்தில யாரவது டான்ஸர் இருக்காங்களா? ஆர் இருந்திருக்காங்களா?”

“என் குடும்பத்துல அப்படி யாரும் இல்லை அம்மா. அவர் ஃபேமிலி சைட்டுலயும் அப்படி யாரும் இருக்கறதா தெரியலையே…ம்ம்….ம்….ஹூம் ஹூம் எனக்கு தெரிந்து இல்லை” 

“அப்படியா!!!! நீ உன் வீட்டுக்காரரிடம் கேட்டு சொல்லு. எனக்கென்னவோ கயல் ஆடறத பாத்தா நிச்சயம் இட்ஸ் இன் ஹேர் பிளட் னு தான் தோணுது.”

“அப்படியா சொல்லுறீங்க! சரி நான் கேட்டு சொல்லறேன் மா”.

ஒரு வாரத்திற்கு பிறகு சொர்ணம் வேல்விழியிடம் ….

“வேல் உங்க வீட்டுக்காரர் கிட்ட நான் கேட்க சொன்னதை கேட்டயா? யாராவது இருக்காங்களா?”

“கேட்டேன் மா அவருக்கு தெரிஞ்சு இல்லையாம் அவங்க அம்மாட்ட கேட்டு சொல்லரேன்னு சொல்லிருக்காரு மா”

“ஓ அப்படியா உன் மாமியார் இப்போ எங்க இருக்காங்க?”

“அவங்க வனவாசிங்கற கிராமத்துல இருக்காங்க மா. கிராமத்த விட்டு எங்கயுமே வரமாட்டாங்க. நாங்க தான் அப்ப அப்ப  போய் பார்த்துட்டு வருவோம்”

“ஹேய் வேல் நீயும் சேகரும் அனுமதித்தீங்கனா  நான் நம்ம கயல் விழியை கூட்டிகிட்டு என் கிராமம் வரை போயிட்டு வருவேன். நீ ஊர் பத்தி சொன்னதும் எனக்கும் எங்க ஊருக்கு போகணும்னு ஆசை வந்திடுச்சு. நீயும் வாயேன் ” 

“சரி மா எங்க வீட்ல அவரும் ஆஃபிஸ் விஷயமா டில்லி போயிருக்கார் அதனால நானும் கயலும் ஃப்ரீ தான் நாளைக்கே போயிட்டு வரலாமா? ஒரே நாள்ல வந்துடலாமில்ல மா? உங்க ஊரு எது?”

“ஓ எஸ் ஒரே நாள்ல போயிட்டு வந்துடலாம். கீழவாசல் தஞ்சாவூர் தான் எங்க ஊரு. அப்படியே உன் மாமியாரையும் வேண்டுமானால் பார்த்துவிட்டு வரலாம். டிரைவரை வரச்சொல்லரேன் நாளைக்கு விடியற்காலையில் கிளம்பிடலாமா?”

“சரி மா அப்படியே ஆகட்டும். நானும் கயலும் ரெடியா இருப்போம். என்ன கயல் பாட்டிக்கூட கார்ல நாளைக்கு போகலாமா?”

“ஓ!! போகலாமே. ஹய்யா ஜாலி ஜாலி”

காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்னையை விட்டு காரில் தஞ்சாவூரை நோக்கி பயணிக்கலானார்கள்  சொர்ணம், வேல்விழி, கயல்விழி மற்றும் கமலா ஆகிய நால்வரும். காலை பத்து மணிக்கெல்லாம் கீழவாசல் சென்றடைந்தார்கள். ஒரு சிறிய வீட்டின் முன் காரை நிப்பாட்ட சொன்னார் சொர்ணம். அனைவரும் கீழே இறங்கினார்கள். வேல்விழி…

“‘உங்க ஊர் ரொம்ப அழகா இருக்குமா. என்ன எங்க பார்த்தாலும் ஒரே குட்டி குட்டி ஆஃபிஸ் மாதிரி வச்சிருக்காங்க?”

“அதுவா அதுதான் எங்களை போன்ற கலைஞர்களின் ஆஃபிஸ். இந்த மண்ணு கலைகளை உருவாக்கிய மண்ணுமா. கரகாட்டத்துக்கு கீழவாசல். நையாண்டி மேளம், நாட்டுப்புற இசை, தப்பாட்டக் குழுவுக்கு ரெட்டிப்பாளையம். காளியாட்டம், காவடியாட்டத்துக்கு யாகூப்பியா தெரு. ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டத்துக்கு  மானோஜிப்பட்டி. பொய்க்கால் குதிரைக்கு குந்தளக்காரத் தெரு. இப்பத்தான் இப்படி அங்கங்கயா பிரிஞ்சிருக்காங்க எங்க காலத்துல எல்லாமே ஒன்னுதான்ம்மா.”

“உங்க காலத்துலனுட்டு என்னமோ பல வருஷம் ஆனா மாதிரி சொல்றீங்க மா”

“ஓ!!! ஓ!!! அதுவா !!!! நான் சின்ன புள்ளையா இருந்த காலத்துலனு சொல்றதுக்கு பதில் அப்படி சொல்லிட்டேன். அத விடு வேல். நம்ம தஞ்சாவூர் ல ஒவ்வொரு கலைக்கும் ஒரு பகுதி இருக்கு. எல்லோரும் ஒற்றுமையாக விளங்குவது, கீழவாசல். சாயந்தரம் நேரத்தில் தஞ்சைவூர்ல இருக்கற ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களையும் ஒரு சேர இங்கு  சந்திக்கலாம் தெரியுமா? சரி சரி வாங்க வீட்டுக்குள் போகலாம்”

” வீட்ல யாரு இருக்காங்க மா?”  

“இப்போ யாரும் இல்லைமா. சும்மா தான் வீடு கிடக்கு. அப்ப அப்போ என் வீட்டுக்காரர் அண்ணன் புள்ளை வழி பேரன்கள் வந்து இத விக்கறத்துக்கு ஆளுகளை கூட்டிட்டு வந்து காம்மிப் பாங்க அதோட சரி”

“அப்போ வீடு பூட்டிருக்குமே நாம எப்படி உள்ள போவது” என்றாள் கமலா

“நான் இருகேன் இல்ல பேசாம வா”

என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்தாள் சொர்ணம். வீடு ஆங்காங்கே சற்று இடிந்திருந்து. அந்த வீட்டினுள் சென்றதும் சொர்ணம் சின்ன பெண்ணைப்போல துள்ள ஆரம்பித்தாள். அப்பாடா எவ்வளவு வருஷம் ஆச்சு இந்த ஊஞ்சல் ல ஆடி! ஏய் கயல் குட்டி இங்க பாரேன் இந்த சுவரில் ஷீல்டு சின்னம் தெரியுதா? அங்க தான் என்னோட டான்ஸ்க்கு அந்த காலத்துல நான் வாங்கின ஷீல்டை மாட்டியிருந்தோம்.”

“ஓ தெரியுது பாட்டி ஆனா இப்போ அந்த ஷீல்டு எங்க காணோம்?”

சொர்ணத்தின் நடவடிக்கைகளை பார்த்ததில் வேல்விழிக்கு ஏதோ சந்தேகம் எழுந்தது. உடனே அந்த இடத்தை விட்டு வெளியேற முடிவு செய்து….

“சொர்ணம் அம்மா நம்ம கயலுக்கு பசிக்க ஆரம்பித்துவிடும். நாம ஏதாவது ஹோட்டலுக்கு போகலாம் வாங்க.”

“அப்படியா!!!! இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாமே வேல்”

“இல்ல மா குழந்தை பசியில வாடிடுவா. அதுவும் இல்லாம நைட்டுக்குள்ள சென்னை போய் சேரனும் நாளைக்கு கயல் அப்பா வந்திடுவார். அவர் வரும்போது நாங்க அங்க இருக்கணும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.”

“சரி சரி போகலாம் போகலாம் வாங்க”

என்று அலுத்துக்கொண்டே வெளியே வந்தாள் சொர்ணம். 

“பாட்டி,  கதவுக்கு  பூட்டு போடலை?”

“ஆமாம் அங்க என்ன இருக்கு பூட்டி வைக்க!!! சும்மா சாத்தி வச்சா போதும் வா வா”

என்று கோபமாக சொன்னாள் சொர்ணம். அதுவரை கயலிடம் அவள் அப்படி பேசியதில்லை. இதை கேட்ட கயல் தன் அம்மாவிடம் ஓடி போய் வேலின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். அனைவருமாக ஹோட்டலுக்கு சென்று மத்திய உணவருந்தி விட்டு மீண்டும் காரில் ஏறினர். சொர்ணம் காரின் ஜன்னல் கன்னாடியை கீழே இறக்கி பின்னாலேயே அவள் ஊரைப்பார்த்துக்கொண்டே வந்தாள். கார் திருச்சியை நெருங்கியதும் சமாதானம் ஆனாள் சொர்ணம். பின் வேல்விழைப்பார்த்து…

“வேல் திருச்சியை தாண்ட போறோமே அடுத்தது நேரா வனவாசி போறோம் உங்க மாமியாரைப் பார்க்கிறோம். சரியா”

“இல்ல மா பராவாயில்லை நாங்க அடுத்த வாரம் வந்து அவங்களைப் பார்த்துக்கறோம். இப்போ நேரா சென்னைக்கே போகலாம்”

“என்ன கொஞ்சம் டைம் ஜாஸ்த்தியாகும் அவ்வளவு தானே! நீயும் கயலும் சேகர் வீட்டுக்கு வரத்துக்கு முன்னாடி அங்க இருப்பீங்க அதுக்கு நான் ஜவாப்தாரி சரியா.”

என்று கூறி டிரைவரை வனவாசிக்கு போகச்சொன்னாள் சொர்ணம். சில மணி நேரத்தில் வனவாசியில் வேல் மாமியார் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தது கார். வேல் மாமியார் கண்ணம்மாள் வீட்டுமுன் கார் நின்றது. அனைவரும் இறங்கினார்கள் சொர்ணத்தை தவிர. தனது வீட்டின் முன் கார் வந்து நிற்பதைப் பார்த்த கண்ணம்மாள் வெளியே வந்து பார்த்து….

“அட அட அட என்ன விஷேசம் என் புள்ளைங்க எல்லாம் வந்திருக்கு. வாம்மா வேல் வா வா…ஏய் கயலு குட்டி வாடி வாடி என் செல்லக்குட்டி.” என கயலின் கண்ணத்தில் மாறி மாறி முத்தமிட்டு வாரி அணைத்துக்கொண்டே காருக்குள் சொர்ணத்தைப் பார்த்து..

“அது யாருமா வேல்? அவங்களையும் வீட்டுக்குள்ள வரச்சொல்ல வேண்டியது தானே. அம்மா வாங்க எங்க வீட்டுக்குள்ள வாங்க” 

“எப்படி இருக்க மா?. உன் அம்மா மாதிரியே இருக்க!” என்றாள் சொர்ணம்

“ஓ! உங்களுக்கு என் அம்மாவ தெரியுமா? அது எப்படி?”

“சரி இந்தாங்க காபி எடுத்துக்கோங்க.”

“உன் வீட்டுக்காரர் எங்க மா?”

“அவரு என்னைய விட்டுட்டு போய் அஞ்சு வருஷமாச்சு மா. ஆமா வேல் இவங்க யாருன்னு சொல்வே இல்லையே!”

“எங்க சொல்ல விட்டீங்க அத்தை ….ரெண்டு பேரும் என்னமோ ரொம்ப வருஷமா பழகினா மாதிரி பேசிக்கிறத பார்த்துட்டு இருக்கேன். அவங்க பேரு…”என்று வேல் முடிப்பதற்குள் 

“என் பேரு வெள்ளியம்மா” என்றாள் சொர்ணம். அதை கேட்டதும் கண்ணம்மாள்…

“இந்த பேரை எங்கோ கேட்டிருக்கேனே!!!.. ஆங் ஞாபகம் வந்துடுச்சு….என்னோட

பாட்டிப் பேரும் வெள்ளியம்மா தான். ஆனா நான் அவங்கள பார்த்ததே இல்லை. எங்க அம்மாவும் சாக போற நேரத்துல தான் அவங்கள பத்தி என்கிட்ட சொன்னாங்க. என்னமோ தெரியலை நேத்திலேந்து அவங்க பேச்சாவே இருக்கு”

“அப்படியா அத்தை!! ஏன் அப்படி சொல்லறீங்க?”

“நேத்து தான் சேகர் ஃபோன்ல நம்ம குடும்பத்துல யாராவது நாட்டியம் ஆடுவாங்களானு கேட்டான் அப்போலேந்து அவங்க நினைப்புதான்”

“ஏன் அத்தை அவங்க டான்ஸரா?”

“ஆமாம் மா அவங்க அந்த காலத்துல சக்தி கரகம், ஆட்ட கரகம் ன்னு  ரெண்டு‌ வகை கரகாட்டாமும் ஆடுவாங்களாம். நிறைய பரிசு எல்லாம் கூட வாங்கிருக்காங்களாம். அவங்களோட ஒரே பெண்ணான என் அம்மா அவங்களுக்கு பிடிக்காத பையனை அதாவது என் அப்பாவை கல்யாணம் பண்ணினதால குடும்பத்தை விட்டும் ஊரை விட்டும் ஒதுக்கி வச்சுட்டாங்களாம். என் அம்மா அப்பா இங்க வந்து பொழப்பு நடத்தி அதுக்கப்புறம் நான் பொறந்து எனக்கு கல்யாணமாகி சேகர் பொறந்து இப்போ நீங்க பொழப்புக்காக சென்னைல இருக்கீங்க.”

“உங்க அம்மா அவங்க அம்மாவை பார்க்க முயற்சி பண்ணலயா அத்தை?” என்று வேல் கேட்டதும் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணம்..

“அவ என் பொண்ணாச்சே என் பிடிவாதம் அவகிட்டயும் இருக்காதா!!! அவளும்  பிடிவாதகாரி அவளுக்கு பிறந்த இந்த கண்ணம்மாளும் பிடிவாதகாரியா தானே இருக்கா?” 

என்றதும் வேல்விழி

“அம்மா என்ன சொல்லுறீங்க…”

“அட ஆம வேலு இவ இப்படி தனியா கிடந்து இங்க கஷ்டம் படணுமா என்ன? உங்க கூட வந்து சென்னை ல இருக்கலாமில்ல. தனியா இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தான் தெரியும்.” 

வேல்விழி தன் அத்தையை தனியாக அடுப்படிக்குள் அழைத்துச்சென்று ….

“அத்தை அவங்க பேரு சொர்ணம். எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல தான் இருக்காங்க ஆன அவங்க பேரு  வெள்ளியம்மான்னு உங்க பாட்டி பெயரை தன் பெயரா ஏன் சொல்லனும்? சரி அத்தை உங்க பாட்டியோட ஊரு எதுன்னு உங்களுக்கு தெரியுமா?”

“ஓ!! தஞ்சாவூர்ல கீழவாசல் தான் எங்க பாட்டி தாத்தா ஊரு.” 

“ஓ!!! ஓகே!! அவங்க வீடு எதுன்னு தெரியுமா ?”

“அதெல்லாம் தெரியாதுமா. அதுபத்தி எல்லாம் என் அம்மா என்கிட்டே சொன்னது கிடையாது.” 

“சரி இப்போ நீங்களும் எங்க கூட சென்னைக்கு வாங்க அத்தை. ப்ளீஸ்… எனக்கென்னவோ அந்த சொர்ணம் அம்மா சொல்லறது செய்யறது எல்லாத்தையும் பார்த்தா சரியா படல. நாளைக்கு சேகர் வந்திடுவார். அதுவரைக்கும் துணைக்கு வாங்க அத்தை”

“என்ன மா என்வெல்லாமோ சொல்லுற. சரி சரி நான் உங்க கூட வரேன்”

வேல்விழி வெளியே வந்து சொர்ணத்திடம் தனது மாமியாரும் சென்னை வருவதாக கூற அதை கேட்ட சொர்ணம் 

“ஓ தாராளமா வரட்டும். எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான். சரி  அப்போ கிளம்பலாமா?”

அனைவருமாக சென்னை வந்து சேரும்போது இரவு பணிரெண்டு மணி ஆனது. சொர்ணம் …

“வேல் இன்னைக்கு நானும் உங்ககூட உங்க வீட்டுல வந்து படுத்துக்கலாமா?”

“ஓ! தாராளமா…வாங்க அம்மா”

அன்றிரவு அனைவரும் வேல்விழி வீட்டில் படுத்துறங்கினர். காலையில் சொர்ணம் எழுந்து சத்தமாக ….

“நான் எங்கே இருக்கேன்? எப்படி இங்க வந்தேன் நீங்க யாரு என கண்ணம்மாளிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்”

“சொர்ணம் மா நீங்க எங்க வீட்ல தான் இருக்கீங்க. ஏன் என்ன ஆச்சு? இவங்க என் மாமியார் கண்ணாம்மாள். நேத்து ஊருலேருந்து கூட்டிட்டு வந்தோமே…மறந்துட்டேங்களா என்ன?”

“ஹேய் வேல் ஹவ் கம் ஆம் இன் யுவர் ஹவுஸ்? அன்ட் நீ என்னனென்னவோ சொல்லுற நாம எப்போ எந்த ஊருக்கு போனோம்? எப்படி போனோம்?”

“அம்மா !!!!! உங்களுக்கு ஒன்னுமே ஞாபகம் இல்லையா?… பரவாயில்லை முதல் ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க.”

“ஹேய் வேல் ஆர் யூ கிட்டிங் என்னால எப்படி நடக்க முடியும் ?” 

“உங்களால இப்போ முடியும் எழுந்து வாங்க”

சொர்ணம் தத்தித்தடுமாரி எழுந்து நின்றாள் அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. மெல்ல அடி எடுத்து நடந்துப் பார்த்தாள். அதைப்பார்த்த கண்ணம்மாள்..

“ஏம்மா நேத்து நல்லா தானே நடந்தீங்க இப்போ என்ன புதுசா நடக்குறமாதிரி பயப்படறீங்க!!!”

“அத்தை நான் உங்களுக்கு அப்புறமா சொல்லறேன்” 

சொர்ணம் நடந்தே தனது வீட்டுக்குச் சென்றாள். உடனே தன் மகனுக்கும் மகளுக்கும் ஃபோனைப்போட்டு தன்னால் நன்றாக நடக்க முடியும் என்பதை தெரிவித்தாள். கமலா மூலமாக நடந்தது அனைத்தையும் அறிந்துக் கொண்டாதில் சந்தோஷமாகி வேல்விழி வீட்டுக்கு ஓடி தனது நன்றிகளை வேலின் மாமியாரிடம் கூறி மகிழ்ந்தாள். 

வேல்விழி…கண்ணம்மாளையும், சொர்ணத்தையும் அமரவைத்து ….

“இவ்வளவு மாதங்களாக …சொர்ணம் அம்மா… உங்க ரூபத்தில் எங்க மாமியாரின் பாட்டி வெள்ளியம்மா தான் நம்ம கூட இருந்திருக்காங்க.  எனக்கு ஏதோ சந்தேகம் நீங்க கயலுக்கு கரகாட்டம் சொல்லிக்குடுக்கறேன்னு சொன்னபோதே வந்தது”

“ஓ ஈஸ் இட் வேல்!!!!எனக்கும் கரகாட்டத்துக்கும் ரொம்ப தூரம் மா. ஐ நோ ஓன்லி பரதநாட்டியம். நான் கரகாட்டம் ஆடினேனா? இன்டெரெஸ்டிங்!!!! “

“இதோ இதை பாருங்க…கயல் நீங்க அவளுக்கு சொல்லிக் கொடுத்த எல்லாத்தையுமே வீடியோ எடுத்துருக்கா பாருங்க”

“நான் இது மாதிரி கதை படிச்சிருக்கேன் ஆனா எனக்கே நடக்கும்னு நான் கனவுல கூட நினைச்சுப்பார்த்ததில்லை. சரி வை டிட் ஷீ சூஸ் மீ?” 

“ஏன்னா நீங்க டான்ஸர் அன்ட் எங்க வீட்டுக்கு எதிர் வீடு வேற அதுனால இருக்கலாம். ஆனா அவங்களோட இந்த வரவின் முக்கிய நோக்கம் அவங்களோட கலையான கரகாட்டத்தை தன்னோட பேத்தியோட பேத்திக்கு சொல்லிக்குடுத்து உயிர்ப்பிக்க வேண்டும் என்பதுதான். அதோட அவங்க ஊரையும் வீட்டையும் எங்களுக்கு காமிச்சுக்கொடுத்தாங்க. அவங்க பேத்தியான என் மாமியாரையும் பார்த்துட்டாங்க. வந்த வேலை அன்ட் டைம் முடிஞ்சிருக்கும் போயிட்டாங்க.   இதோ நம்ம கயல் சூப்பரா கரகாட்டம் ஆடறா வர ஞாயிற்றுக்கிழமை அரங்கேற்றம் பண்ணப்போறா. அதையும் அவங்க பார்த்துவிட்டு போயிருக்கலாம்…ஹும்..என்ன செய்ய!”

“ஏம்மா வேலு நீ சொல்வதெல்லாம் நிஜமா கண்ணு. வந்தது என்னோட பாட்டியா?”

“ஆமாம் அத்தை. சேகர் வரட்டும் நாம உங்க பூர்வீக வீட்டை கூட்டிட்டுப்போய் காட்டறோம்”

“எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை மா. நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல. நம்ம கயல் கரகாட்டம் ஆடுவாளா?” 

“ஆமாம் அத்தை நீங்களும் பார்க்கத்தானே போறீங்க”

ஞாயிற்றுக்கிழமை கயல்விழியின் கரகாட்டத்தைப் பார்த்த அனைவரும் அவளை புகழ்ந்து தள்ளினார்கள். டிவி பத்திரிகைகளில் எல்லாம் எட்டு வயது கயல்விழியின் கரகாட்டம் பற்றி தான் இருந்தது. வேல்விழியின் குடும்பத்தினர் அனைவரும் வெள்ளியம்மாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள். வேல்விழி கயலுக்கு அவள் குடும்ப பூர்வீகம் பற்றி அனைத்தையும் சொல்லிக்கொடுத்து வளர்த்தாள். 

வெள்ளியம்மை இறந்தாலும்

அவளுக்கு கலை மீதிருந்த தாபம் 

அவளை சொர்ணமாக உயிர்த்தெழச் செய்து

அடுத்த தலைமுறையான கயல்விழியிடம் 

அந்த கலையை கொண்டு சேர்த்தது. 

வீண் பிடிவாதத்தால், வறட்டு கௌரவத்தால் பல உறவுகள் தொலைந்து போவதும். அவர்கள் குடும்பத்தினரின் ஒவ்வொரு திறமைகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் காணாமல் போவதும் நம் தலைமுறையினரோடு முடியட்டும். நமது அடுத்த தலைமுறையினருக்கு நமது வறட்டு கௌரவம், பிடிவாதங்களை எல்லாம் பரணில் போட்டுவிட்டு அனைத்தையும் சொல்லிக்கொடுத்து வளர்ப்போமாக. 

❤️முற்றும்❤️

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s