
“எங்கள் அக்கா துளசி நம் கையில் இருக்கும் கட்டைவிரல் போல யாருடனும் ஒட்டாதவள் ஆகையால் மற்ற நான்கு விரல்களாகிய நாங்கள் அவளை ஒதுக்கி வைத்துள்ளோம்”
என்று ருக்குமணியும், பாமாவும் அவர்கள் சொந்தகாரர் திருமணத்தின் போது கூறியதை கேட்டு அதிர்ந்து போனாள் துளசியின் சிநேகிதி லதா. ஆம் இவர்கள் கூறும் அந்த கட்டைவிரலாகிய இவர்களின் அக்கா துளசி எப்படிப்பட்டவள் என்பதும், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் லதா நன்கு அறிந்தவள் ஆவாள்.
துளசிக்கு….ரமா, பாமா, ருக்கு, கார்த்திகா என நான்கு தங்கைகளும் சூரியா என்ற அண்ணனும் இருக்கிறார்கள். சூரியாவிற்கு திருமணம் ஆகவில்லை. அண்ணன் சூரியா சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். தந்தை இல்லாத இந்த குடும்பம் சூரியாவின் உழைப்பில் தான் ஓடிக்கொண்டிருந்தது. சூரியா தனது மூத்த தங்கை துளசி அவள் கணவன் நடராஜனின் உதவியோடு நான்கு தங்கைளுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.
கார்த்திகா திருமணம் முடிந்த சில வருடங்களில் அவர்கள் அம்மாவும் இறைவனடி சேர்ந்தார். அடுத்த ஆறு மாதங்களில் சூரியாவும் மாரடைப்பால் காலமானார். வருடங்கள் உருண்டோடின.
துளசி நடராஜன் தம்பதியினருக்கு ஒரு மகள் வீணா ஒரு மகன் விக்னேஷ். தங்களால் முடிந்த உதவிகளை இரு வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் செய்து தன்னிறைவான வாழ்வை வாழ்ந்து வரும் அளவான அழகான குடும்பம்.
ரமா அவள் கணவர் நீலமேகத்துடனும் பெண் குழந்தை நிஷாவுடனும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
பாமாவும் அவள் கணவர் கமலனும் திருச்செந்தூரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. வருமானமும் அவ்வளவாக இல்லை. ஆகையால் அடிக்கடி துளசி கணவரிடம் கடனாக பணம் வாங்குவதும் கொடுப்பதுமாக இருந்து வந்தாள். ஒரு முறை பணக்கஷ்டம் அதிகமாக… துளசியிடம் உதவி கேட்டாள் அந்த சமையம் நடராஜனுக்கே பணம் சற்று தட்டுப்பாடு இருந்தது அதனால் கொடுக்க மறுத்துவிட்டார். தற்செயலாக நடந்ததை… துளசி தான் தர மறுக்கிறாள் என எண்ணிக்கொண்டு துளசியை பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ருக்குமணியின் கணவர் நரசிம்மன் குடி போதையில் கீழே விழுந்து காலில் ஃப்ராக்சர் ஆனதால் ஆறு மாதம் துளசி வீட்டில் தான் இரு குழந்தைகளுடன் இருந்து வந்தாள். துளசி வீட்டிலிருந்து தன் கணவனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போவதும் வருவதுமாக இருந்து ஒரு வழியாக கால் சரியாகி துளசி வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு பார்த்தபின் குடியேறினர் அதுவரை அவர்களை பார்த்துக்கொண்டு வேண்டியதை செய்துக்கொடுத்தது எல்லாமும் துளசியும், நடராஜனும் ஆவர். ருக்குவுக்கு தனது அக்கா துளசி மீது அதீத பொறாமை இருந்தது. துளசி கணவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லை வருடத்தில் ஒரு முறை வெளியூர்களுக்கு டூர் போவார்கள், நகை வாங்குவார்கள். ஆனால் ருக்கு வீட்டுக்காரர் அவளையும் அவள் பிள்ளைகளையும் எங்கேயுமே கூட்டிக்கொண்டு போனது கிடையாது. தனது இந்த பொறாமை குணத்தை வெளிக்காட்டாமல் துளசியுடன் உறவாடிக்கொண்டே தக்க சமையத்துக்காக காத்திருத்தாள். அவளது பொறாமை ஆறு மாசம் துளசி அவர்களை உட்கார வைத்து சோறு போட்டதை கூட மறக்கச் செய்தது.
கார்த்திகா இளமாறன் தம்பதியினர் திருமணம் முடிந்ததும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர்.
அனைவரும் துளசி மகள் வீணா திருமணத்திற்கு வந்திருந்தனர். வீணாவின் திருமணத்திற்கு வாங்கியிருந்த நகைகளை பார்த்து எங்கு எவ்வளவு என விசாரித்து அதே போல் தனக்கும் வேண்டும் என்று அதே கடைக்கு சென்றாள் கார்த்திகா ஆனால் அதே போல் கிடைக்கவில்லை ஆகையால் தன்னிடம் இருக்கும் பணத்திமிரால் துளசியிடம் வீணாவுக்கு வேறு நகைகள் வாங்க பணம் தருவதாகவும் அவளுக்கு வாங்கிய நகைகள் தனக்கு பிடித்திருப்பதால் தனக்கே தருமாறு கூறினாள். அந்த நகைகள் அனைத்தும் வீணா அவளுக்காக பார்த்து பார்த்து எடுத்திருப்பது அதனால் கார்த்திகாவிற்கு தர மறுத்து விட்டாள் துளசி. இதனால் துளசி மீதும் வீணா மீதும் தேவையே இல்லாமல் கோபம் கொண்டாள் கார்த்திகா.
வீணாவின் திருமண நாள் அன்று ரமாவை தவிர மற்ற மூன்று சகோதரிகளும் அதுதான் சரியான சமையம் துளசியை பழிவாங்க என எண்ணி துளசியைப்படாத பாடு படுத்தினார்கள். இதில் கார்த்திகா தனது மகனை மாப்பிள்ளை அழைப்பு காரில் ஏற்ற வில்லை என ஒரு பெரிய சண்டைப்போட அவளுடன் பாமாவும், ருக்குமணியும் கைகோர்த்துக்கொண்டு துளசியை பந்தாடினார்கள்.
இவர்கள் திருமணமே துளசி நடராஜன் இல்லாவிட்டால் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மறந்துவிட்டனர்.
ஒருபக்கம் தன் வீட்டு ஆட்களின் ஆட்டம் என்றால் மறுபக்கம் தனது மாமியாரை பேத்தி திருமணத்திற்கு கூட வரவிடாமல் தடுத்த துளசியின் நாத்தனார்.
எப்படியோ இவர்களின் பிரச்சனைகளுக்கு நடுவில் துளசி நல்லபடியாக தன் மகள் திருமணத்தை முடித்தாள். எல்லாருக்கும் நல்லதை மட்டுமே நினைத்து நல்லது மட்டுமே செய்த துளசி நடராஜனுக்கு அவர்கள் மகளின் திருமணத்திற்கு அவர்கள் உதவிய சொந்தங்கள் எவருமே துணை நிற்கவில்லை. இது தான் இன்றைய சொந்தங்களின் லட்சணம். மனித உதவி இல்லாவிட்டால் என்ன ? அவர்கள் செய்த நல்லவை அவர்களுக்கு அனைத்தையும் நன்றாக சிறப்பாக நடத்த உதவியது. கடவுள் இருக்கிறார் என்பதை அன்று உணர்ந்தேன்.
இவ்வளவும் தெரிந்த லதா கோபப்பட்டு ருக்கு மற்றும் பாமா பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு வேகமாக சென்றாள் ….
“ஆமாம் ஆமாம் கரெக்ட் வெரி வெரி கரெக்ட் ருக்குமணி!!!! துளசி கட்டை விரலே தான் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை”
“பார்த்தாயா பாமா நான் சொன்னதையே தான் துளசி சிநேகிதி லதாவும் சொல்லறா!! இதுக்கு மேல யார் சொல்லனும்”
“இரு இரு ருக்குமணி கொஞ்சம் பொறுமை. நீ சொல்லும் விதமான கட்டைவிரல் அல்ல நான் சொல்லப்போவது. உங்கள் கைகளை நன்றாக பாருங்கள் கட்டைவிரல் மட்டுமே மற்ற நான்கு விரல்களையும் வளைந்து தொட முடியும். ஒற்றுமையாக தெரியும் மற்ற நான்கு விரல்களால் எல்லா விரல்களையும் தொட முடியாது. கட்டை விரலோடு இணைந்திருக்கும் சதையின் உதவியோடு அந்த கட்டை விரல் மற்ற நான்கு விரல்களுக்கும் உண்டான வேலைகளை செவ்வனே செய்ய உதவுகிறது. கட்டைவிரலின்றி மற்ற நான்கு விரல்களும் சின்ன வேலையை செய்யக்கூட மிகவும் சிரமப்படும். மகாபாரத துரோணர் கூட ஏகலைவனின் கட்டைவிரலைத்தான் குருதட்சணையாக கேட்டார் மற்ற விரல்களை அல்ல. கட்டை விரல் இல்லை என்றால் மற்ற விரல்கள் இருந்தும் பிரயோஜனமில்லை. கட்டைவிரலை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்பது புரிந்திருக்குமே!!! அது விலகி நின்றாலும் மற்ற விரல்களுக்கு என்றும் உதவுகிறது. கை இல்லாதவர்கள் கூட வாழ்கிறார்கள் இந்த உலகில். ஆனால் கையிருந்தும் கட்டைவிரலின்றி வாழ்வது மிகவும் கஷ்டம். என்ன சொன்ன ருக்குமணி கட்டைவிரலாட்டம் துளசியை ஒதுக்கி வச்சிருக்கேங்களா? ஹா! ஹா! ஹா! எங்கே உன் கட்டை விரலை ஒரு நாளைக்கு செலோடேப் போட்டு ஓட்டிட்டு நீ சொன்ன ஒற்றுமையான நான்கு விரல்களோடு எல்லாவற்றையும் செய்து தான் பாரேன்.!!!. அது மட்டுமில்லாமல் மனிதனை மனிதன் ஒதுக்கி வைப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை ஆனால் நமது தீய செயல்களாலும் தீய எண்ணங்களாலும் கடவுள் நம்மை ஒதுக்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்லது செய்தவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை தீமையோ, துரோகமோ மட்டும் செய்து விடாதீர்கள் அதன் தண்டனையை கடவுள் நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் வழங்குவார். இப்போதாவது கட்டை விரலாகிய எனது சிநேகிதி துளசியின் மகிமை புரிந்திருக்கும் என நினைக்கிறேன். புரியலை என்றால் ஏதாவது வழியில் கடவுள் உங்களுக்கு புரியவைப்பார். வரட்டுமா ஆள் காட்டி மற்றும் மோதிர விரல்களே “
என்று டாக்டர் லதா தனது சிநேகிதிக்காக சற்று நேரம் வக்கீலாக மாறி ருக்குமணிக்கும் பாமாவுக்கும் நல்ல பதிலடி கொடுத்தாள். 🙂
❤️முற்றும்❤️
