ஒரே கல்லூரியில் படித்த தோழிகள் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பி.ஏ ’98 என பெயர் சூட்டினர். அதில் ஆரம்பத்தில் அவர்கள் பல விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். நாட்கள் போக போக குழு அமைதி பூங்காவனமாக மாறியது. யாரும் எதுவும் பகிந்துக் கொள்ளவில்லை.
இப்படி அமைதி நிலவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருத்தி அவர்கள் கல்லூரியில் அவர்களுடன் படித்த ஐஸ்வர்யாவை குழுவில் இணைத்தாள். மீண்டும் குழு விருவிருப்பானது. அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்வதில் தொடங்கி அவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் வரை அனைத்தும் பகிரந்துக்கொள்ளப்பட்டது. பழைய நினைவுகளில் சில மாதம் ஓடியது பின் மீண்டும் குழு அமைதியானது.
இவ்வாறு புது தோழிகள் சேர்க்கப்படும் போதெல்லாம் குழு விழித்துக்கொள்ளும். குழுவினரும் சோம்பல் முறித்துக்கொண்டு ஒரு ஹாயில் ஆரம்பித்து விசாரிப்புகளும் புகைப்படங்களும் சரமாரியாக பதிப்பிக்கப்படும் பின் மீண்டும் கும்பகர்ணன் போல நீண்ட கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும்.
குழுவில் யாராவது அந்த குழுவில் இல்லாத பழைய தோழியை இணைக்கும் பொழுது யார் ? எவர் ? என்ற விவரங்களை முன்னுரையாக கொடுப்பது வாட்ஸ்அப் குழுவின் சம்பிரதாயம். இது பல குழுக்களில் இணைந்துள்ள நாம் அனைவரும் அறிந்த சடங்காகும். இந்த சடங்கை கடைப்பிடிக்காமல் ஒருவரை நாம் இணைத்துவிட்டோமே என்றால் பாவம் அந்த புது நபர்
“ஹாய் நான் தான் வள்ளி”
என தொடங்கி
“என்ன ஞாபகம் இருக்கா?“
என தன்னைத்தானே அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிவரும். மேலும் அவர்கள் கல்லூரி ஃபேர்வெலில் கடைசியாக பார்த்திருப்பார்கள் சில பேருக்கு பெயரைக் கேட்டாலே யார் என்று விளங்கி விடும் சகஜமாக உறையாட தொடங்கி விடுவார்கள் ஆனால் பலருக்கு யாரென்று ஞாபகம் இருக்காது அதனால்
யார்? எந்த செக்ஷன் ? எந்த பென்ச்? எந்த பஸ்ஸில் கல்லூரிக்கு வருவாய்?
என பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை வைத்து இன்னார் என யூகிக்க முயல்வார்கள்.
இவ்வாறு இந்த பி.ஏ’98 குழுவில் பூமிகா எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவரை முன்னுரை ஏதுமின்றி இணைத்தாள்….அவரும் சில நேரம் பூமிகா இன்ட்ரோ செய்வதற்காக பொருத்திருந்து பின் அவரே ஆரம்பித்தார்…
ஹாய் எவ்விரிஒன் ஹவ் ஆர் யூ ஆல்? ஹோப் யூ ஆல் ஆர் சேஃப்.
லதா: ஹாய் வெல்க்கம். மே ஐ நோ யுவர் நேம்.
வனஜா: ஹாய் உன் பொரோஃபைல் போட்டோவ பார்த்தா…. நீ எங்க செக்ஷன்ல தான் இருந்தனு நினைக்கிறேன்? இஸ் யுவர் நேம் வள்ளி?
கிரிஜா: ஹாய் நீ என்னோட பஸ்ஸில் தானே வருவ?
ரமா: ஹாய் யூ வேர் தி ஒன் ஹூ பிரிங் எக் ரைஸ் ? வாவ் அதோட வாசம் இன்னும் இருக்குப்பா..
பிரியங்கா: ஹே ரமா இது அவ இல்லடி அது நம்ம ரோஸி. இவ நாமகூட ஐஸ்கிரீம் சாப்பிட வந்துட்டு விலைய பார்த்ததும் தண்ணியை குடிச்சிட்டு வந்தாளே அவ தான்…ஆனா ….பேரு மட்டும் ஞாபகம் வர மாட்டேங்குது…
மது: ஹேய் பிரி ….தட் இஸ் மீனு …மா..இவ இல்ல. இவள பார்த்தா மாதிரி இருக்கு ஆனா நீ சொல்லர மாதிரி பேரு மட்டும் ஞாபகம் இல்லமா.
வள்ளி: ஹே யாருப்பா ஆட் பண்ணினா ?
லல்லு: நம்ம பூமி தான்.
கலையரசி: ப்ளீஸ்ப்பா ஆட் பண்ணும்போது இன்ட்ரோவும் குடுங்கப்பா…
பார்கவி: அதுதானே…. லல்லு இவள நம்ம லிட் …கிலாஸ்ல பார்த்திருக்கோம்னு நினைக்கிறேன்…
பிரஸீ: எனக்கும் நல்லா பழக்கமானவ மாதிரி தான் இருக்கு.
மாதவி: ஹே! நியூ கம்மர்… வை டோன்ட் யூ இன்ட்ரோ யுவர் செல்ஃப்? நாங்க எல்லாரும் இப்படி கெஸ்ஸிங் கேம் விளையாடாமா இருப்போம்ல…
மைதிலி: யாருப்பா அந்த மர்ம நபர் நம்ம குரூப்ல…ஏய் பூமி சொல்லேன்டி…
ரம்பா: ரொம்ப நாளா தூங்கிட்டு இருந்த நம்ம குரூப் முழிச்சுடுச்சுனு சந்தோஷப்படரதா இல்ல “யார் நீ” னு கேட்டுட்டே இருக்கறதா…
மனோன்மணி: ஏன்மா புதுசா இணைந்த புண்ணியவதி… பூமி தான் ஏதோ பிஸியா இருக்காப்போல நீயாவது உன்னைப்பத்தி சொல்லலாம்ல…
பூமிகா: ஹலோ கேர்ள்ஸ் என்னப்பா இது?? எல்லாருமா மறந்துட்டிங்க? நான் முன்னுரை கொடுத்திருக்கவேண்டும் அனைவரும் மன்னிக்கவும்.
நான் ஒரு ஹாய் சொன்னா எப்பவாவது உடனே பதில் சொல்லிருக்கீங்களா ? இன்னிக்குனு ஒரு அஞ்சு நிமிஷத்துல இவ்வளவு மெஸேஜஸ்ஸா!!!!
நான் ஆட் பண்ணியது நம்ம இங்கிலீஷ் பொரொஃபஸர் மிஸ் லில்லி. அம் எக்ஸ்டிரீம்லி சாரி மேம். நான் இன்ட்ரோ கொடுக்க கொஞ்சம் லேட் ஆனது இவ்வளோ விபரீதமாகும்னு நினைக்கலை. ஸோ சாரி.
என்ற பூமிகா வின் மெஸேஜ்க்கு பிறகு சற்று அமைதி நிலவியது. பின் குழுவில் ஒரே சாரி மெஸேஜஸாக பொழிந்தது. அதற்கு அவர்கள் லில்லி மேம் “இட்ஸ் ஓகே” என்று பதிலளித்தும் மீண்டும் சாரி என்று பலர் கூற அதற்கு அவர் பதில்….
லில்லி மேம்: ஹாய் கேர்ள்ஸ் ஏன் எல்லாரும் சாரியை மாரியாய் பொழிகிறீர்கள்? நீங்கள் எல்லோரும் நான் பார்த்து வளர்ந்த என் பிள்ளைகள். உங்கள் அனைவரையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க்கை எனும் ஓடு களத்தில் நீங்கள் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் ஆனால் எனது வாழ்க்கை நிதானமாகிவிட்டது.
மறதி என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் அதில் எந்த தவறும் இல்லை ஆனால் நீங்கள் இதிலுள்ள முகியமான பாடத்தை கவனிக்காமல் விட நான் அனுமதிக்க மாட்டேன்.
என்னடா இந்த மேம் இத்தனை வருஷத்துக்கப்புறமும் க்ளாஸ் எடுக்க வந்துட்டாங்கனு நீங்க நினைத்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு இது என்றாவது உதவாமல் போகாது. வாழ்வில் ……
“எது நடந்தாலும் வேய்ட் ஃபார் அ வைல். டு நாட் ஜம்ப் டூ ரெஸ்பான்ட் ஆர் ரியாக்ட்.”
தினமும் ஏதாவது மெஸேஜஸ் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் விஷ் செய்துக் கொள்ளுங்கள். ஓகே கேர்ள்ஸ்👍 லவ் யூ ஆல். இதுதான் எனது அலைபேசி எண் அனைவரும் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
நானும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன். எனது நம்பர் உங்கள் அனைவரிடமும் இருப்பதால் உங்களுக்கு எப்போ வேண்டுமானாலும் என்னை அழைத்து உறையாடலாம். சிநேகிதிகளான உங்களுக்குள் டிஸ்கஷன்ஸ் நிறைய இருக்கும் ஸோ ஐ திங்க் ஐ ஷுட் லீவ் திஸ் குரூப். நோ ஹார்டு ஃபீலிங்க்ஸ். இட் வாஸ் ஸோ நைஸ் டு ரீட் ஆல் யுவர் மெஸேஜஸ். பை ஆல். டேக் கேர் அன்ட் பி சேஃப் ஆல் ஆஃப் யூ.
என்று கூறி லில்லி டிச்சர் குழுவை விட்டு வெளியேற மீண்டும் அமைதி நிலவியது... ஆனால் குழுவில் மாற்றங்கள் சில நேர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் குழு எந்த நாளும் ஒரு மெஸேஜ் கூட இல்லாமல் இருந்ததே இல்லை. குழு நிதானமாக செயல்பட தொடங்கியது. பல கும்பகர்ணிகளை தட்டி எழுப்பி செயல்பட வைத்த லில்லி மேமுடன் “வீ லவ் லில்லி மேம்” என மற்றுமொரு குழு ஆரம்பிக்கப்பட்டது.
❤️முற்றும்❤️
