
வேனு என்கிற வேனுகாந்தன் நமது இந்திய தலைநகரில் உள்ள ஓர் பிரபலமான கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு அதற்காக நன்றாக படித்து பல பரீட்சைகளில் முழு மதிப்பெண்கள் பெற்று. அதில் சேருவதற்காக விண்ணப்பித்து அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதிற்கான பதில் மின் அஞ்சலுக்காக காத்திருந்தான். அவனின் கடின உழைப்பும், நம்பிக்கையும் வீணாகவில்லை. அவன் விரும்பி எதிர்ப்பார்த்த கல்லூரியிலேயே அவனுக்கு ஓர் இடம் கிடைத்தது.
தந்தை சேகர் ஒரு தனியார் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தாய் வள்ளியம்மை இல்லத்தரசி. தங்கை மீனு ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். இவர்கள் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர். சேகரின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. சேகரும், வள்ளியம்மையும் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த ஒரு கஷ்ட்டமும் தெரியாதவாறு வளர்த்து வந்தனர். வேனுவும், மீனுவும் பெற்றவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்ப அனாவசியமாக எந்த செலவுகளும் செய்யாமல் நல்ல பொறுப்புள்ள பிள்ளைகளாகவே இருந்தனர்.
வேனுவிற்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்ததில் சேகருக்கும், வள்ளியம்மைக்கும் சந்தோஷமும் பெருமிதமும் இருந்தாலும் கல்லூரி செலவுகளுக்கான பணத்தை எப்படி புரட்டுவது என்ற கவலையும் கூடவே தொற்றியது. பிள்ளையின் கனவை கலைக்க அவர்களுக்கு மனமில்லை. அதற்காக அவன் எவ்வளவு முயற்சி எடுத்துள்ளான் என்பது அவர்கள் நன்கு அறிந்தவர்களாயிற்றே!!!!வேனு தனது தந்தையின் பாரத்தை குறைக்க எண்ணி கல்லூரி ஃபீஸ் மட்டும் தந்தையை தருமாறும் மற்ற இதர செலவுகளை எல்லாம் தான் ஏதாவது வேலைப்பார்த்து சம்மாளித்துக்கொள்வதாகவும் கூறினான். சேகருக்கு சற்று வருத்தமாகவே இருந்தாலும் அரை மனதுடன் சம்மதித்தார்.
அவன் பயணிப்பதற்கு வேண்டியதை எல்லாம் வள்ளியம்மை செய்து கொடுத்தாள். பதினேழே வயதான தனது மகன் எப்படி தனியாக தெரியாத ஊரில் சென்று இருக்கப்போகிறானோ என்ற பதற்றமும், அச்சமும் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொண்டால் மகனின் மனது கஷ்ட்டப்படுமே என்று எண்ணி அதை மனதிற்குள் பூட்டி வைத்தாள் மகனின் ஆசையை நிறைவேற்ற.
வேனுவின் அறிவுக்கான தேடல் அவனை புதுதில்லி கொண்டு சென்றது. தனது குடும்பத்தை பிரிந்து வந்ததில் அவனுக்கும் சற்று வருத்தமாக தான் இருந்தது ஆனாலும் படிப்பு மீதிருந்த ஆர்வம் அவனை சமாதானம் செய்தது.
வீட்டில் எந்த வேலையும் செய்யாத வேனு கல்லூரி அருகே ஓர் உணவகத்தில் வேலைப்பார்த்துக்கொண்டே படிக்கலானான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகே இருக்கும் ஒரு டியூஷன் சென்ட்டரில் சென்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து தன் செலவுகளுகானதை ஓரளவு மாதாமாதம் தேற்றினான். முதல் அரை ஆண்டு விடுமுறை டிசம்பர் மாதம் வந்தது. தனது எல்லா நண்பர்களும் விடுமுறைக்கு அவரவர் ஊர்களுக்கு சென்றனர். வேனுவிற்கும் தனது குடும்பத்தினரை பார்க்க, அம்மா கையால் உணவருந்த ஆசைதான் ஆனால் ஒரு பதினைந்து நாட்களுக்காக அதுவும் பயணத்திலேயே போக மூன்று வர மூன்று என்று ஆறு நாட்கள் போய்விடும்…ஏன் அவ்வளவு செலவு செய்யவேண்டும் அந்த பணமிருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்கான செலவுக்கு உதவும் என்று போகாமல் கல்லூரி விடுதியிலேயே தனியாக இருந்தான்.
அவனைப்போல் இன்னும் சிலர் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டான். அவர்களுடன் உரையாடி அவர்களைப்பற்றி அறிந்துக்கொண்டான். அப்பா, அம்மா, தங்கையுடன் தினமும் சிறிது நேரமே பேசினாலும் வேனுவிற்கு அன்று முழுவதும் ரீச்சார்ஜ் ஆனதுப்போலிருக்கும். அவன் அங்கு தனிமையிலிருப்பதை வீட்டினருடன் பகிர்ந்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என்று கூறாமல் மறைத்தான். அந்த தனிமை அவனுக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.
மீண்டும் ஜனவரியில் கல்லூரி திறந்தது தனது நண்பர்களைப்பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தான் வேனு. மறுபடியும் படிப்பு வேலை என்று வாழ்க்கை நகர ஆரம்பித்தது. பிப்ரவரி மாத கடைசியில் எல்லா நாடுகளிலும் ஒரு வைரஸ் பரவுவதாகவும் அதனால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு போட்டதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. இந்தியாவிலும் இது நிகழும் என்பதை வேனு எதிர்ப்பார்க்கவில்லை. கல்லூரி அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் மின் அஞ்சல் அனுப்பியது. டங் என்று வேனுவின் அலைபேசி சப்தம் எழுப்பியது. அந்த கடிதத்தை படித்ததும் வேனுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் காலவரையின்றி கல்லூரி முடப்போவதாகவும், வகுப்புகள் அனைத்தும் இணையதளம் மூலம் நடைபெறும் என்றும் அனைவரும் கல்லூரி விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களிடம் கல்லூரி கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவரத்தை செய்தித்தாள்களிளும், தொலைக்காட்சி செய்திகளிளும் தெரிந்துக்கொண்ட சேகரும், வள்ளியம்மையும் துடித்துப்போனார்கள். உடனே எப்படியாவது கிளம்பி வரச்சொல்லி வேனுவிடம் கூறினார்கள்.
ஆனால் வேனு ஒரு முடிவெடுப்பதற்குள் அனைத்து போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. நாடே ஸ்தம்பித்தது. நண்பர்களை அவர்கள் வீடுகளிலிருந்து கார்கள் வந்து அழைத்துச்சென்றது. அதில் ஒரு நண்பன் வேனுவை தன்னுடன் வருமாறு கூறினான். எத்தனை நாள் நண்பன் வீட்டில் தங்குவது என்று எண்ணி மறுத்துவிட்டான் வேனு. தான் எங்கு செல்வது எங்கே தங்குவது என்ன செய்வது என்று பல கேள்விகள் அவனுள் உதித்தது.
பெட்டியுடன் கல்லூரிக்கு வெளியே வந்தவன் ஒரு சுவரொட்டியைப்பார்த்தான். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துமனைக்கு தன்னார்வத் தொண்டர்கள் தேவை இருக்க இடம் மற்றும் உணவு வழங்கப்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது. மனதிற்குள் ஒரு தெம்பு வந்தது வேனுவிற்கு. நேராக அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றான். ஓர் நேர்காணல் நடந்தது. வேனு அதில் தேரச்சிப்பெற்று தனது சேவையை தொடங்கினான். அங்கு பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தான். பணம் படைத்த தனவான்கள் பலர் முன் வந்து உதவுவதைப்பார்த்து தானும் நாளை படித்து பெரிய ஆளாகி இப்படி நம்மால் முடிந்ததை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்தான். ஒரு நச்சுயிரின் வெறியாட்டத்தை தன் கண்களால் காண நேர்ந்தது வேனுவிற்கு. அவன் கண்கள் கலங்கின. இரண்டு நாள் உணவும் உட்க்கொள்ளவில்லை. இதை கவனித்த மற்றொரு தன்னார்வ தொண்டர் ஒருவர் வேனுவிடம் ….நன்றாக உணவு அருந்தவில்லை என்றால் பின்பு எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினார்.
மீண்டும் தன் சேவைகளில் இறங்கினான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடியது. ஒரு நாள் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டதாக செய்தி வர வேனு நேராக தன்னார்வத் தொண்டர்கள் தலைவரிடம் சென்று தான் ஊருக்கு போவதற்கு அனுமதிக்கேட்டான். அவரும் அவனது இரண்டு மாத சேவைக்கு நன்றி தெரிவித்து பயணத்திற்கு கொஞ்ம் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். இவை அனைத்தையும் தனது தந்தையிடம் கூறி தன் வரவை தெரிவித்தான்.
மனதிற்குள் தனது குடும்பத்தினரை காணப்போகும் சந்தோஷத்தில் வேகமாக நடந்தே ரயில் நிலையம் சென்றான். அங்கு எல்லா ரெயில்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர். அவர்கள் எவரும் முககவசம் அணிந்திருக்கவில்லை. எல்லாரும் அவரவர் ஊர்களுக்கு திரும்பும் ஆர்வத்தில் இப்படி கூடிச்சென்றால் அந்த நச்சுயிர் மிக சுலபமாக தன்னினத்தை பெருக்கி விடுமே அதிலிருந்து தப்பித்து அனைவரும் பத்திரமாக குடும்பத்துடன் சேர்ந்திட வேண்டுமே என்று மனதார வேண்டிக்கொண்டு ரயில் ஏறினான் வேனு.
ரயிலில் ஒரு கட்டிட தொழிலாளியுடனும் அவர் குடும்பத்தினருடனும் உரையாட வாய்ப்பு கிடைத்ததும் அவர்களைப்பற்றியும் அந்த ஊரடங்கினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் அவர்கள் சொல்லக் கேட்டதும் தனது கஷ்ட்டங்கள் ஓன்றுமே இல்லை என்ற எண்ணம் வேனு மனதில் தோன்றியது.
மூன்று நாட்கள் பயணத்தில் வேனு வெரும் தண்ணீரும், டியும், பிஸ்கெட்டும் உண்டு வந்தான். மூன்றாவது நாள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவனுள் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பொங்கியது. சேகர் ரயில் நிலையம் வந்து தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
வள்ளியம்மை ஆரத்தி தட்டுடன் வாசலில் அமர்ந்திருந்தாள். சேகரின் வண்டி வந்து நின்றதும் முதலில் வள்ளியம்மையும் மீனுவும் வேனுவிற்கு ஆரத்தி எடுத்தனர் அதற்கு வேனு
“என்ன போருக்கா போயிட்டு வந்திருக்கேன் ஆரத்தி எல்லாம் எடுக்குறீங்க” என்று நகைத்தான்.
சேகர் : உண்மையிலே இதுவும் ஒரு வகை போர் தாம்பா. நாங்க பதரின பதரல், பயந்தது, எல்லாம் உனக்கு புரியாதுப்பா. பத்திரமாக திரும்பி வந்திருக்க அதற்கு தான் இந்த ஆரத்தி. வா வா உள்ள போகலாம்.
வள்ளியம்மை: எப்படிப்பா இந்த இரண்டு மாதம் சம்மாளிச்ச? ரொம்ப கஷ்டப்பட்டியோ? ரொம்ப மெலிஞ்சிட்டயே !! சரியா சாப்பிடலயா??
சேகர்: அவன் குளிச்சிட்டு வரட்டும் அப்புரம் வெச்சுக்கோ உன் கேள்விகளை…நீ போப்பா குளிச்சிட்டு சாப்பிட வா… முதல்ல பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை வள்ளி.
தனது மாற்று துணி எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி சென்றான். மீனு ஒடிவந்து அண்ணனுக்கு துண்டு கொடுத்தாள். வள்ளியம்மை அடுப்படியிலிருந்து அப்பளம் பொறித்துக்கொண்டே
“உடுத்திருக்கற துணிகள அப்படியே பக்கெட்டில போட்டூப்பா நான் துவைச்சுக்கறேன்” என்றாள்
குளித்தபின்பு நேராக பூஜை அறைக்கு சென்று விபூதி பூசிக்கொண்டு உணவருந்த குடும்பத்தினருடன் அமர்ந்தான். தனது குடும்பத்தினரின் அன்பிலும், சுட சுட சாதத்தில் அம்மா செய்த சாம்பார் ஊற்றியதும் எழுந்த வாசத்திலும் அவன் கல்லூரி சென்ற நாளிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து சேரும் வரை பட்ட அத்தனை கஷ்ட்டங்களும் காணாமல் போனது வேனுவிற்கு.
அறிவு தாகத்தினால் திண்டுக்கல்லிருந்து தில்லி வரை பயணம் மேற்கொண்டு பல இன்னல்களுக்கு ஆளாகினாலும் வாழ்க்கை வேனுவிற்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. சிறு வயதில் நமக்கு நேரும் சிரமங்களையும் கஷ்ட்டங்களையும் பாடங்களாக ஏற்று அதையும் நன்கு படித்து வாழ்க்கை எனும் பல்கலைக்கழகத்தின் பரீட்சையில் தேர்ச்சி பெற்றோமேயானால் நம்மை வெல்ல எவராலும் முடியாது.
❤️முற்றும்❤️
