
தனசேகரன், கோகனகை தம்பதியினருக்கு… வைஷ்ரவணன், குபேரன், வாமலோசனை, இலட்சுமி, அலர்மகள், வேஸ்ஸவணன், அம்புயை என ஏழு பொறுப்பான, நற்பண்புகளுடைய பிள்ளைகள். எல்லோருடைய பெயரையும் தனாதிபதிகளான குபேரன் மற்றும் மகாலட்சுமியின் பெயர்களாகவே வைத்துள்ளார் தனசேகரன். அவரது மனைவியை ” கோகனகை” என்ற மகாலட்சுமியின் பெயருக்காகவே திருமணம் செய்துக்கொண்டார் என்றால் பாருங்களேன். அதனால் அவர் தனத்தின் / செல்வத்தின் மேல் அதீத பிரியமுடையவர் என்று அவசரப்பட்டு அவர் மீது நாம் முத்திரை பதிக்க வேண்டாமே. எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருப்பது போல தனசேகரனுக்கு தனாதிபதிகளின் பெயர்களில் ஓர் ஈர்ப்பு அவ்வளவுதான்….
தனசேகரன் என்ற பெயருக்கேற்ப வயல்கள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு என செல்வச் செழிப்புடன் அவரும் அவரை சார்ந்தவர்களும் வாழ்ந்து வந்தனர்.
தனசேகரும், கோகனகையும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து எறும்பு போல வேலைகளில் இறங்குவார்கள். ஐந்தரை மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிள்ளைகளை எல்லாரையும் எழுப்பிவிட்டு வயல்வேலைகளை மேர்ப்பார்வையிட கிளம்பிவிடுவார். கோகனகை காலை உணவை தயார் செய்ததும் வைஷ்ரவணனிடம் அப்பாவிற்கும் அவனுக்குமான உணவை கட்டி குடுத்தனுப்பியபின் மற்ற பிள்ளைகளுக்கும் பறிமாறி அவர்களை பள்ளிக்கு அனுப்ப தயார் ஆவாள். மத்திய உணவு ஏழு டிபன் பாக்ஸில் கட்டி முடிப்பதற்கும் வைஷ்ரவணன் வயலில் இருந்து திரும்புவதும் சரியாக இருக்கும்.
பின் எட்டரை மணிக்கு ஏழு பிள்ளைகளும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றபின் வீட்டை சுத்தம் செய்ய வேலையாட்களுக்கு வேலைகளை பிரித்துக்கொடுத்து, மாடுகளுக்கு தீவனம் போட்டாச்சா என்று மாட்டுத்தொழுவத்தை ஒரு வலம் வந்து தோட்டக்காரர்கள் வேலைக்கு வந்தாச்சா என்று கணக்கெடுத்துவிட்டு அக்கடா என்று ஒரு டம்ளர் தேணீருடன் அமரும் போது மணி பதினொன்று ஆகிவிடும். ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு தனக்கும் கணவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு தென்னந்தோப்புக்கு சென்றடையும்போது சரியாக மணி ஒன்று. இருவரும் ஒன்றாக உணவருந்தி சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கோகனகை வீடு வந்து சேரும் போது மணி நாலு ஆகி விடும்.
தினமும் வித வித மாக ஏதாவது தேணீருடன் கடித்துக்கொள்ள தயாராக சாப்பாட்டு மேஜை மீது வைக்கவும் பிள்ளைகளும், கணவரும் உள்ளே நுழைவதும் சரியாக ஐந்து அடிக்கும் கடிகாரத்தில். இது முடிந்ததும் இரவு உணவு தயார் செய்ய கிளம்பிடுவாள் கோகனகை. அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு பின் பேசி சிரித்து உறங்க செல்லும் போது மணி பத்தாகிவிடும். இதுவே இவர்களின் வாடிக்கையான சிறிதும் அலுப்பில்லாத வாழ்க்கையாக இருந்து வந்தது.
பிள்ளைகள் எல்லாரும் வளர்ந்து அவர்களுக்கு திருமணமும் முடிந்து அவரவர் வாழ்ககையை சிறப்பாக மனைவி /கணவர் குழந்தைகள் என ஒவ்வொரு ஊரில் வாழ்ந்து வந்தனர் . தனசேகரும் கோகனகையும் மட்டும் தனியாக வயல் தோப்பு என்றிருந்தார்கள்.
வைஷ்ரவணன் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் டாக்டராக அவர் மனைவி லதா மகன் அத்யமானுடன் டில்லியில் வசித்து வருகிறார்.
குபேரன் வக்கீலாகவும் அவன் மனைவி லலிதா ஆடிட்டராகவும் அவர்களின் மகன் அஷ்வின் மகள் அனுவுடன் ஹைத்தராபாத்தில் வசித்து வருகின்றனர்.
வாமலோசனையும் அவள் கணவர் சேகரும் இணைந்து ஒரு தனியார் கல்வி நிறுவனம் சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டில் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரே மகள் வாணி.
இலட்சுமி, அலர்மகள் அவர்கள் கணவர்களான நேசமணி, அன்பன் ஆகியோர் ஒன்றாக ஒரு அரிசி மில் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் கடையொன்றும் செங்கல்பட்டில் நடத்தி வருகின்றனர். இரண்டு தம்பதியினருக்கும் இனியவள் மீனலோச்சனா என்று ஆளுக்கு ஒரு மகள் இருக்கிறார்கள்.
வேஸ்ஸவணன் பெரிய ஆடிட்டராக மனைவி அம்பாளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் புது மண தம்பதியர் ஆவர். இவர்கள் திருமணத்திற்கு தான் அனைவரும் கடைசியாக ஒன்று சேர்ந்தது. அது ஆகிவிட்டது ஒரு வருடம்.
கடைக்குட்டி அம்புயை வெளி நாட்டில் மெடிசின் கடைசி வருடம் படித்துவருகிறாள். அவளுக்கு வரன் தேடும் சிரமத்தை பெற்றோருக்கு அவள் வைக்கவில்லை. அவளுடன் படிக்கும் அஷோக்கை விரும்புவதாகவும் அவரை படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துக்கொள்ளவும் இரு வீட்டாரும் சம்மதித்து அவர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.
எல்லா வருடமும் தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு ஒன்றுகூடும் குடும்பம் அந்த வருட தீபாவளி மற்றும் பொங்கல் இரண்டுக்குமே யாரும் ஊருக்கு வரவில்லை. தனசேகரும் கோகனகையும் அவர்கள் வேலையாட்களோடு கொண்டாடினார்கள். தனசேகரன் தனது வயல்கள், தோப்புகள் அனைத்தையும் குத்தகைக்கு விட்டுவிட்டார்.
இப்படியே பிள்ளைகள் வராமல் போய்விட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப்பார்க்க தனசேகரனின் மனம் பதபதைத்தது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்ததைப்பார்த்த கோகனகை அவர் மனம் புரிந்து கவலை படாதீங்க.. நம்ம வளத்த புள்ளைங்கங்க...நம்ம அம்புயை கல்யாணத்துக்கு எல்லாரும் வராங்கலே பேசாம தூங்குங்க என்றாள். ஆனால் இருவரும் உறங்கவில்லை.
காலை விடிந்ததும் தனசேகரன் வேகவேகமாக கிளம்பி அவசர அவசரமாக காலை உணவு உண்டு ஒன்பது மணிக்கு எங்கோ புறப்பட்டுச் சென்றார். பின் மதியம் பண்ணிரெண்டு மணிக்கு தான் வீடு திரும்பினார். வந்தவருக்கு ஒரு சொம்பு மோர் கொடுத்து தாகம் தனித்த பின் எங்கு அவ்வளவு அவசரமாக வெளியே சென்றார் என்று கோகனகை கேட்டாள்.
“அதற்கு பதில் இன்னும் ஒருவாரத்தில் நீயே தெறிஞ்சுக்குவ”
“ஒரு வாரமா!!! அப்படி என்னத்த பண்ணிருகீங்க ஏன் இப்போ சொன்னாதான் என்னவாம்”.
“சரி சொல்லாட்டி விட மாட்டியே… இரும்பு பெட்டி செய்வாருல ஜம்பு அவரையும் அப்புறம் நம்ம தங்க ஆசாரி ஜனார்தனனையும் பார்த்து ஒரு பெட்டகம் செய்ய ஆடர் கொடுக்க போனேன். அது அடுத்த வாரம் நம்ப வீட்டுக்கு வரும். போதுமா”
“இரும்பு பெட்டகமா? அதெதுக்கு இப்போ!! அது தான் மூனு இருக்கே இங்க”
“அதோட மகிமையை நம்ம கடைக்குட்டி அம்புயை கல்யாணத்துல பார்ப்ப….நம்ம பிள்ளைகளை நாம புரிஞ்சுக்கிட்டா மாதிரி அவங்களையும் நம்மள புரிஞ்ச்சுக்க வைக்கத்தான் அந்த பெட்டகம்”
“எனக்கு ஒன்னும் புரியல…என்னமோ நீங்க பண்ணினா அது சரியாத்தான் இருக்கும். பொறுத்திருந்து தெரிஞ்சுக்கறேன் இப்போ சாப்பிட வாங்க”
பிள்ளைகள் சொத்து பணத்திற்காக ஆசை படுபவர்கள் அல்ல என்பதும் அவர்கள் அன்பு பாசத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்பதும் தனசேகரன் நன்கு அறிவார்.
ஒருவாரத்தில் ஆறு அடி உயரம் உள்ள இரும்பு பெட்டகம் தனசேகரன் வீட்டிற்கு வந்திறங்கியது. கோகனகை கண்கள் அந்த பெட்டகத்தைப் பார்த்ததும் அகன்று விரிந்தன. அவ்வளவு அழகாக இருந்தது. அதில் சாவி போடுவதற்கு எட்டு துவாரங்கள் இருந்ததைப் பார்த்து…
“ஏங்க ஏன் எட்டு சாவி துவாரம் இருக்கு? அப்படி என்ன பொக்கிஷத்தை இதனுள் வைக்க போரீங்க?”
“அவசரம் ஏன் இன்னும் இரண்டே மாதத்தில் நீயே தெரிஞ்சுக்குவ “
“பசங்களா அத அந்த பூஜை அறைக்கு பக்கத்தில் வையுங்கப்பா”
பெட்டகம் வீடு வந்ததும் ஏழு சாவிகளுடன் ஏழு கடிதமும் இணைத்து தனது பிள்ளைகளுக்கு அனுப்பினார். கடிதத்தில்….
அன்பு செல்வங்களே,
இந்த சாவியை பத்திரமாக வைத்து நீங்கள் அனைவரும் நம்ம அம்புயை கல்யாணத்துக்கு எடுத்துட்டு வரணும். அப்படி நியாபகமா எடுத்துட்டு வந்தா ஒரு அறிய பொக்கிஷத்தை பார்க்க முடியும்.
உங்கள் வரவுக்காக காத்திருக்கும்
அப்பா அம்மா.
என்றிருந்தது. இதைப்பார்த்த பிள்ளைகள் அனைவரும் அப்படி என்ன நாம பார்க்காத பொக்கீஷம் நம்ம அப்பா அம்மா கிட்ட இருக்கு என்று ஒருவரொருக்கொருவர் கான்ஃபரென்ஸ் காலில் உறையாடிக்கொண்டனர். எப்படியும் அடுத்த மாசம் தெரிஞ்சிடுமே என்று குபேரன் கூற அனைவரும் கால்ஐ துண்டித்து அவரவர் வேலையில் மும்முரமானார்கள்.
அம்புயை ஊரிலிருந்து வந்தாள். திருமணத்திற்கு அனைத்து அண்ணன்களும் அக்காக்களும் வந்து சேர்ந்தனர். வீடே ஓர் ஊர் போல சலசலத்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் விசாரித்து கொண்டும் பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டும் அதை அவரவர் பிள்ளைகளோடு பகிர்ந்து கொண்டும், பேரப்பிள்ளைகளோடு சிறுப்பிள்ளைகள் போல தனசேகரனும் கோகனகையும் விளையாடிக்கொண்டும் வீடு முழுவதும் சிரிப்பொலி நிறைந்திருந்தது.
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன் அனைவரும் ஒன்றாக உணவருந்தியப்பின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது குபேரன் தனது தந்தையிடம் அந்த சாவியைப்பற்றி வினவினான்.
அதற்கு வாமலோசனை அது என்னப்பா எங்களுக்கு தெரியாத பொக்கிஷம்?
அது தானே சிறு வயது முதல் எங்களிடம் எல்லாம் சொல்லித்தானே வளர்த்தீங்க அப்புறம் என்ன இது புதுஸா? என்றாள் அலர்மகள்.
சரி..சரி..ஏன் வீனா பேசிக்கொண்டு எல்லாரும் சாவியை எடுத்துட்டு வந்துருக்கீங்க தானே இல்ல யாராவது மறந்துட்டேங்களா? என்றார் தனசேகரன்.
“அது எப்படிப்பா நீங்க சொன்னதுக்கப்புறமும் மறப்போமா என்ன சரிதானே” என்றான் வைஷ்ரவணன்.
எல்லோரும் ஆமோதித்தனர். சாவிகளை எடுத்துக்கொண்டு பூஜை அறைக்கு வரச்சொன்னார் தனசேகரன். அனைவரும் சாவிகளுடன் வந்தபின் கோகனகையை அந்த பெட்டகத்தை மூடியிருந்த திரையை விலக்கச்சொன்னார். திரை விலகியது..அனைவரும் அந்த பெட்டகத்தின் அழகிய வேலைப்பாடுகளை பார்த்து அது குறித்து உறையாடி கொண்டிருந்தார்களே அன்றி அதில் என்ன இருக்கும் என்பதைப்பற்றி யாருமே பேசிக்கொள்ளவில்லை.
தனசேகரன் அந்த பெட்டகத்தை குறித்து சில தகவல்களைச்சொன்னார்.
1)அந்த பெட்டகத்தை என்றும் எட்டு சாவி கொண்டு தான் திறக்க முடியும்
2) அந்த சாவிகளை ஒரு வரிசைப்படி போட்டால்தான் அடுத்தடுத்த சாவிகளைப்போட முடியும்
3) ஒவ்வொரு சாவியாக வரிசைப்படி போட்டு ஒரு சுற்று சுற்றிய பின் அனைத்து சாவிகளையும் ஒன்றாக ஒருமுறை சுற்றவேண்டும்
அப்பொழுதுதான் அந்த பெட்டகம் திறக்கும்.
4) இதில் சுற்றியுள்ள ஏழு தாமரைகளும் எனது ஏழு செல்வங்கள். அவைகளின் தண்டுகள் அனைத்தும் சேர்வது இவ்விரு தாமரைகளில் அதாவது என் செல்வங்களான நீங்கள் அனைவரும் வந்தது எங்களிலிருந்தே ஆகையால் நாம் அனைவரும் சாவியைப்போட்டால் தான் இந்த பெட்டகம் திறக்கும்.
அப்பா சபாஷ். என்னே உங்கள் அறிவு. சூப்பர் அப்பா.. நீங்க ஜீனியஸ் .. ஆனந்தத்தில் வேஸ்ஸவணனும், அம்புயையும்.
உள்ள என்ன இருக்கோ ஏது இருக்கோ ஐ லைக் திஸ் கான்ஸெப்ட் என்றான் வைஷ்ரவணன்.
வெளியவே இவ்வளவு விஷயம் இருக்கிறது என்றால் உள்ளே என்ன இருக்குமோ என வாயைப் பிளந்தான் குபேரன்.
சபாஷ் மாமா உங்கள போல ஒரு கலைநயம் கொண்டவரை இதுவரை பார்த்ததில்லை என்றனர் மாப்பிள்ளைகள்.
எல்லாம் சரி அது என்ன வரிசைன்னு சொல்லுப்பா ஆவலில் வாமலோசனை.
என்னை புகழ்ந்தமைக்கு நன்றி. இனி விஷயத்துக்கு வருவோமா…அது என்ன வரிசைன்னா…முதலில் நானோ இல்லை உங்க அம்மாவோ இந்த இரு தாமரை பூட்டினுள் எங்கள் சாவியைப்போட்டு இப்படி ஒரு முறை சுழற்ற வேண்டும் அதைத்தொடர்ந்து முதலில் எங்கள் மூத்த பிள்ளை வைஷ்ரவணன் சாவியை போட வேண்டும் பின் குபேரன், வாமலோசனை, அலர்மகள், வேஸ்ஸவணன் கடைசியில் எங்கள் கடைக்குட்டி அம்புயை சாவியைப்போட்டு ஒரு முறை சுற்றிய பின் அனைவரும் ஒன்றாக ஒருமித்து அவரவர் சாவியை சுழற்ற வேண்டும் என்ன சுழற்றலாமா? எல்லாரும் தயாரா?
இதிலும் நான் தான் கடைசியா! என்று அம்புயை கூறியதும் அனைவரும் சிரித்துக்கொண்டே ஒன் டூ த்ரீ சொல்லி சாவிகளை சுழற்றினர். அந்த அழகிய பெட்டகத்தின் கலைநயம் கொண்ட கதவு திறந்தது. அனைவரும் ஆச்சர்யமானார்கள்.
அந்த பெட்டகத்தினுள் ஒன்பது தங்கத்தினால் ஆன படிகள் ஜொலித்தது. கீழிருந்து முதலாம் படியில் மட்டும் மாம்பழம், தேங்காய், வாழை பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ, ஒரு படியில் தங்க நெல் கதிர்கள் என அனைத்தும் தங்கத்தால் செய்ப்பட்டு ஒரு தங்க வாழை இலையில் அழகாக அடுக்கியிருந்தது. அதற்கு மேல் அதாவது கீழிருந்து இரண்டாம் படியில் தனசேகரன் கோகனகை என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கீழிருந்து மூன்றாம் படியில் வைஷ்ரவணன், நான்காம் படியில் குபேரன், ஐந்தாவதில் வாமலோசனை, ஆறாவதில் இலட்சுமி, ஏழாவதில் அலர்மகள், எட்டாவதில் வேஸ்ஸவணன், ஓன்பதாவது படியில் அம்புயை என பெயர்கள் நவமணிகளால் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் படிகள் காலியாக இருந்தது. அதைப்பற்றி இலட்சுமி வினவன…தனசேகரன்…
“அவைகள் காலியாக இல்லை மக்களே…படிகளை எடுத்துப்படித்தால் புரியும்”
உடனே எடுக்க முயன்றாள் இலட்சுமி ஆனால் எடுக்க முடியவில்லை.
அதற்கு தனசேகரன் ஒரு விளக்கம் கொடுத்தார் அனைவரது கண்களும் நனைந்தன ….
“அப்படியெல்லாம் எடுக்க முடியாது இலட்சுமி…ஒவ்வொரு படியும் தனக்கு மேல்லுள்ள அண்ணன் அல்லது அக்காவின் படியோடு இணைக்கப்பட்டுள்ளது அதனால் இதுவும் வரிசைப்படி தான் எடுக்க முடியும் …இந்தப்படிகளில் உங்கள் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்பு, ஆசைகள், கனவுகள் மற்றும் உங்களைப்பற்றி பல சுவாரசியமான விஷயங்களை நாங்கள் கண்டது, உணர்ந்ததைப்பற்றி விரிவாக எங்கள் மனதில் எழுதியிருப்பதை இந்த தங்க படியில் பொறித்துள்ளோம். முதலில் நம் அனைவரது அரவணைப்பிலும் சுகம் கண்டு வளர்ந்த அம்புயை பின் வேஸ்ஸவணன் அவனை தொடர்ந்து அலர்மகள், இலட்சுமி, வாமலோசனை, குபேரன், வைஷ்ரவணன்… உங்கள் அனைவரின் படிகளை தாங்கிக்கொண்டிருக்கும் கடைசி இரண்டு படிகள் நிறந்தரமாக பதிக்கப்பட்டவை ஆகும் அவற்றை அசைக்க கூட முடியாது ஏனெனில் மேல உள்ள படிகள் ஆடாமல் அசையாமல் சீறாக வாழ இந்த இரண்டு படிகளே அடித்தளம். இவைகளையும் எடுக்கும்படி செய்திருந்தால் இந்த பெட்டகமே குலைந்து விடும். கடைசிப்படியில் ஒரு தங்க தகடு இருக்கு அதில் இந்த விவசாயம் எங்களுக்கு எவ்வாறெல்லாம் கைக்குடுத்துள்ளது என்பதைப்பற்றியும் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உள்ளது அதுவும் எட்டு தகடுகளாக இருக்கும் அனைத்தையும் இனைத்தாலே சூட்சுமம் விளங்கும்.
நான் எப்பொழுதும் பணம் நகை போன்ற செல்வங்களை விட பெரிதாக மதிப்பதும் விரும்புவதும் எனது செல்வங்களான வயல்களும், தோப்புகளும், பிள்ளைகளான உங்களையும் தான். இங்கிருக்கும் தங்க பழவகைகளையும், காய்களையும் எவராலும் உண்ண முடியாது என்பது நாம் அறிந்ததே ஆனால் நம்ம வயலில், தோப்பில் கிடைக்கும் அனைத்து வகை பழங்களையும் அரிசியையும் நாமும் உண்டு இந்த ஊருக்கே கொடுத்து மகிழவும் முடியும். எனது பிள்ளைகளில் ஒருவர் கூட இந்த விவசாயம் பக்கம் வரவில்லை என்பதில் எனக்கு சிறிய வருத்தம் இருந்தாலும் நீங்கள் அவரவர் தொழிலில் சிறந்து விளங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியே.
(அந்த பெட்டகத்தின் கதவின் உட்புறம் தங்கத்தால் ஆன ஏர் கலப்பை பதிக்கப்பட்டிருந்ததைப்பார்த்து) இனி இதை இப்படி பதித்துத்தான் வைக்கவேண்டும் போல”
என்று கூறிக்கொண்டே அவர் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியதை வேகமாக துடைத்துக்கொண்டு… சரி..சரி அனைவரும் அவர்அவர் படியை படித்து திரும்ப வரிசைப்படி வையுங்கள் நான் நம்ம மாந்தோப்பு வரைக்கும் போயிட்டு வரேன்.
என்று கூறி அவர் கிளம்பியப்பின் சிறிது நேரம் வீட்டினுள் அமைதி நிலவியது. வெளியே விளையாடச்சென்ற பேரப்பிள்ளைகள் வந்து
“ஹய்யா என்ன இது “என்று கேட்டார்கள்.
உடனே அனைவரும் அவர்களின் தாத்தா பாட்டியின் பெருந்தன்மைக்கூறி அவரவர் படியை பிள்ளைகளுடன் படித்து ரசித்தனர். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த கோகனகை கடவுளிடம் தங்கள் பிள்ளைகள் என்றும் இப்படியே ஒற்றுமையாகவும், யாரேனும் ஒருவர் தனது கணவரின் வயல்கள் மற்றும் தோப்ப்புகளை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்றும் மனதார வேண்டிக்கொண்டாள். பேரப்பிள்ளைகள் அனைவரும் பாட்டியிடம் பணியாரம் கேட்க பாட்டி சந்தோஷமாக அனைவரையும் அழைத்து சென்று ஒன்றாக அமரவைத்து பணியாரத்தை கொடுத்தாள்.
பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தார்கள். அப்பா திரும்பி வந்தபின் அப்பா அம்மா இருவரையும் உட்கார வைத்து வைஷ்ரவணன் கூறலானான்…
அப்பா எங்களுக்கும் விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும் ஆனால் அதில் ஏனோ இவ்வளவு நாட்களாக நாட்டமில்லாமல் இருந்துவிட்டோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரு முடிவு எடுத்துள்ளோம் அது உங்களுக்கும் அம்மாவிற்கும் சரியாக பட்டால் அதன்படியே இருப்போம். என்னவென்றால் இப்போதைக்கு இலட்சுமி, அலர்மகள் அவர்கள் அரிசி மில்லையும், டெக்ஸ்டைல்ஸையும் பொறுப்பான ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டு இங்கு வந்து வயல்களையும் தோப்புகளையும் குத்தகைக்காரரிடமிருந்து திருப்பி வாங்கி பராமரிக்க ஒற்றுக்கொண்டுள்ளனர். நான் என் மனைவி லதா மற்றும் அம்புயை பக்கத்து ஊரில் உள்ள நம்ம தரிசு நிலத்தில் ஒரு மருத்துவமனை கட்டி அது முடிவடைந்ததும் இங்கு வந்திடுவோம். வேஸ்ஸவணனும், குபேரனும் லலிதாவும் சேர்ந்து ஒரு லீகல் அன்ட் ஆடிட்டிங் ஃப்ர்ம் ஒன்று வாமலோசனை பள்ளிக்கு அருகே ஆரம்பிக்க சம்மதித்துள்ளனர் ஆக அனைவரும் இங்கேயே வந்து வாசம் செய்து அவரவர் தொழிலையும் பார்த்துக்கொண்டு அப்படியே விவசாயமும் செய்யலாம் என்பதுதான் எங்கள் அனைவரின் ப்ளான் என்ன சொல்லரீங்க அப்பா ?
என்றதும் பெட்டகத்தின் பலன் கிடைத்ததை கண்டு தனசேகரனுக்கும் கோகனகைக்கும் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.
“ரொம்ப சந்தோஷம்ப்பா இனி விவசாயம் என் பிள்ளைகளால் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இப்பொழுதே வந்துவிட்டது…நானும் உங்கள் அம்மாவும் இனி பேரப்பிள்ளைகளோடு ஆசை தீர எங்களின் மிதமுள்ள வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்வோம். ஏய் குழந்தைகளா வாங்கடா இனி நாம் அனைவரும் ஒன்றாக இருக்கப்போகிறோம்”
என்று ஒரு சிறு பிள்ளையைப்போல ஆனந்தத்தில் துள்ளினர் தனசேகரும்
கோகனகையும்.
அம்புயை திருமணமும் சிறப்பாக சிரிப்பும் கும்மாளமுமாக நடந்து முடிந்தது.
ஆம் ஒற்றுமையையும் விவசாயத்தையும் பொக்கிஷத்தைப்போல் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பேணிக் காத்து வந்தால் நம் ஒவ்வொருவரின் வீடு மட்டுமல்ல நம் நாடும் முன்னேற்றம் அடையும். இதை உணர்ந்து ஒன்றுபடுவோம் நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயத்தை காத்திடுவோம்.
❤️முற்றும்❤️
