தவுட்டுபெண்ணும் தகரபெண்ணும்

பூங்கரை ஒரு அழகான பசுமையான கிராமம். இந்த கிராமம் புலிவனம் எனும் அடர்ந்த காட்டுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஊர் மக்களின் கூற்றுப்படி காட்டிற்குள் புலிகள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அப்பெயர் பெற்றது. இவ்வாறு பசுமை செழிப்பான கிராமத்தில் இரு அழகான பெண்கள் வசித்து வந்தார்கள். இருவரும் பக்கத்து வீட்டு காரர்கள் ஆவர். அவர்களில் ஒருத்தியை தவுட்டுபெண் என்றும் இன்னொருத்தியை தகரபெண் என்றும் ஊர் மக்கள் அனைவரும் அழைப்பார்கள். இவர்களுக்கு ஏன் இப்படி ஒர் பெயர் வந்தது? என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா? வாருங்கள் மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

முதலில் தவுட்டுபெண்ணின் பெயர் ரகசியத்தையும் அவள் குடும்பத்தினரையும் தெரிந்து கொள்ளலாம். இவளுக்கு திருமணமாகி 10 வயதில் மகன் இருக்கிறான். அழகான நாம் இருவர் நமக்கொருவர் என்று வாழும் குடும்பம். இவளது கணவன் வேலை காரணமாக வெளியூரில் தங்கிவருகிறான். ஏதாவது விஷேஷ நாட்களுக்கு மற்றும் மாசத்துக்கு ஒரு முறை மட்டுமே வந்து மனைவி மகனுடன் நேரம் செலவிட்டு அடுத்து தான் திரும்பி வரும் வரையில் தேவையான பணத்தை செலவுக்காக மனைவியிடம் கொடுத்து செல்வான். அவளும் சிக்கனமாக இருந்து அதில் சேமித்தும் வந்தாள். அவள் பெரும்பாலும் தவிடு எடுத்து வந்து அதில் தனது வீட்டின் பின்புறம் தோட்டத்திலிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் கலந்து அடை வார்த்து தனது மகனுக்கும் கணவருக்கும் கொடுத்து தானும் உண்டு வந்ததால் அவளை தவுட்டுபெண் என்று ஊர் மக்கள் அழைத்தனர். 

இப்போது தகரபெண்ணின் பெயர் பற்றியும் குடும்பம் பற்றியும் அறிந்துக் கொள்ளலாம். இவளுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் 10 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவளது கணவன் பக்கத்து ஊரில் பணியாற்றி வருகிறான். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு பின் குடும்ப செலவிற்கு பணம் கொடுத்து செல்வான். இவளும் சிக்கனமாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தாள். கணவன் ஊருக்கு சென்றால் இவள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காட்டிற்குள் சென்று தகர (திகரை) இலைகளை பறித்து வந்து அதைவைத்து தான் சமையல் செய்வாள். இப்படி தகர இலையை வைத்து சமைத்து வந்ததால் இவளுக்கு தகரபெண் என்ற பெயர் வந்தது. 

ஒரு வழியாக ஊர் மக்களிடம் விசாரித்து பெயர் ரகசியத்தையும் குடும்ப விவரங்களையும் அறிந்துக் கொண்டு விட்டோம். மேலும் கதைக்குள் பயணிக்க தங்களின் இருக்கை வார்ப்பட்டையை அணிந்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்☺️

இப்படியாக இருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்ததால் தகரபெண் தகர இலையை பறிப்பதற்காக காட்டிற்குள் செல்ல சற்று தாமதமானது அதனால் திரும்பி வருவதற்கும் தாமதமாகலாம் என்று எண்ணி தவுட்டுபெண்ணிடம் பள்ளியிலிருந்து வரும் தன் பிள்ளைகளை தான் வரும்வரை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பி சென்றாள். அவள் காட்டிற்குள் சென்று இலைகளை தேடி கண்டுப்பிடிப்பதற்கே மாலை நேரம் ஆகிவிட்டது. அது பனிக்காலம் என்பதால் சீக்கிரமே இருட்டியது. எப்பொழுதும் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவள் அன்று அவசரத்தில் மறந்துபோனாள். இருளில் எப்படி வந்த வழி மாறாமல் ஊருக்குள் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கும்போது தூரத்தில் ஒரு ஒளி தெறிந்தது. தகரபெண் அதை நோக்கியபடி நடந்து சென்றால். தான் செல்லும் வழிநெடுக தனது சேலையை சிறிது சிறிதாக கிழித்து கையில் பட்ட செடிகளில் அல்லது மரப்பட்டைகளில் சொருகி வைத்துக்கொண்டே சென்றாள். சேலை தாவணியானது அவள் அந்த ஒளி வந்த இடத்தை சென்றடைவதற்குள். அந்த அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு அழகான பெரிய வீடு அதன் வாசலில் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமே நம் தகரபெண் நோக்கி வந்த ஒளி. சற்று பசி, பயம், பதற்றம் ஆகியவற்றுடன் மெல்ல கதவை தட்டினாள். யாரும் திறக்கவில்லை மீண்டும் தட்டினாள் பதில் இல்லை. கடைசியாக ஒருமுறை தட்டிப் பார்ப்போம் பதில் இல்லையெனில் வீட்டு வாசலின் தின்னையில் படுத்துறங்கி காலை விடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம் என்று எண்ணி கதவைத் தட்ட கையை உயர்த்தினாள் கதவு திறந்தது. 

கதவு திறந்ததும் ஆச்சர்யமானாள் தகரபெண். ஏனெனில் கதவை திறந்தது ஒரு 80 வயது மூதாட்டி. காட்டிற்குள் உள்ள வீட்டில் இவ்வளவு வயதான பாட்டியா! அவர் தனியாக இருக்கிறாரா இல்லை வீட்டினுள் வேறு யாரேனும் இருக்கிறார்களா! அப்படி இருந்தால் அவர்கள் கதவை திறக்காமல் ஏன் இந்த வயதான பாட்டி வரவேண்டும்!!! என்ற பல சந்தேகங்கள் அவள் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றியபடி இருக்க “யாரது” என்றாள் பாட்டி. உடனே சுதாரித்துக் கொண்டு தான் யார் என்பதையும் ஏன்?, எப்படி? அங்கு வந்தாள் என்பதையும் சொல்ல தொடங்கியதும் …”உள்ள வந்து உட்கார்ந்து சொல்லுமா. என்னால ரொம்ப நேரம் நிற்க முடியாது” என்றால் பாட்டி. உடனே வீட்டிற்குள் சென்றாள் தகரபெண். வீடு அலங்கோலமாக கிடந்தது ஒரு கெட்ட நாற்றம் வேற….”

தபெ: பாட்டி இந்த காட்டிற்குள் நீங்க தனியாவா இருக்கீங்க?

பாட்டி:  ஆமாம் மா தனியாக தான் இருக்கேன் ஏன் கேக்கறே? சரி என்ன விடு.. இந்த காட்டுக்குள்ள இந்த நேரத்துல உனக்கு என்ன வேலை அத சொல்லு.

தபெ: நடந்தவற்றை எல்லாம் கூறினாள். 

பாட்டி :அச்சச்சோ குழந்தைகள் உன்ன தேடாதோ

தபெ : அதுதான் எனக்கும் வருத்தமா இருக்கு பாட்டி. இதுவரை அவங்களை நான் இப்படி தனியா விட்டு இருந்ததே இல்லை. என் தோழி தவுட்டுபெண் நல்லாதான் பார்த்துப்பா ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்??

பாட்டி: எனக்கு யாரும் இல்லை மா. நான் தனி ஆளாக தான் இந்த காட்டுக்குள்ள பல வருஷங்களா இருந்துட்டு இருக்கேன். இந்த காடு தான் எனக்கு எல்லா உறவுகளும். நான் சொல்லுவது எல்லாம் கேட்கும். என்னை பாதுகாப்பாக இத்தனை வருஷம் பார்த்துக்கிட்டு வருதுனா பாரேன்.

இப்படி பாட்டி கிட்ட பேச்சு குடுத்துக்கொண்டே அவர்கள் இருந்த அறையை சுத்தம் செய்தாள் தகரபெண். பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். 

பாட்டி: அடடே என் வீடா இது பளிச்சுன்னு இருக்கே. பலே!! வாய் பேசும் போதே கை வீட்டு வேலைகள் எல்லாம் பார்த்திடுச்சே. என் வீட இப்படிப்பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. வயசாயிடுச்சுல்ல என்னால வேலைகள் எல்லாம் செய்ய முடியலையே.

தபெ: யாரையாவது துணைக்கு வச்சுக்கலாம் இல்லையா பாட்டி.

பாட்டி :இந்த காட்டுக்குள்ள எனக்கு வேலை செய்துதர யாருமா வருவா?

தபெ: நாளையிலிருந்து நான் காட்டுக்கு இலை பறிக்க வரும்போது உங்களை வந்து விசாரித்து வீடு சுத்தம் செய்து தந்துவிட்டு போறேன் பாட்டி கவலை படாதீங்க.

பாட்டி: உனக்கு நல்ல மனசு மா. சரி நீ ஏதாவது சாப்பிட்டாயா?? 

தபெ: இல்லை பாட்டி. நீங்க சாப்பிடிங்களா? 

பாட்டி: இதோ இன்று இந்த பழம் தான். சமையல் கட்டில் எல்லா பொருட்க்களும் இருக்கு ஆனா சமைக்க ஆளில்லை என்ன செய்ய!!

தபெ: நான் சமைக்கட்டுமா பாட்டி?

பாட்டி: ஓ தாராளமா!! நானும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு. 

தகரபெண் சமையலறைக்குள் சென்றாள். அவளுக்கு தலை சுற்றியது. எல்லாப் பொருட்களும் சிதறி, கொட்டி கிடந்தன‌. காய்கள் எல்லாம் அழுகி இருந்தது. பாத்திரங்கள் எதுவும் கழுவாமல் குமிந்திருந்தது. உடனே வேலையில் இறங்கினாள். சமையலறை பளிச்சிட்டது. தான் பறித்து வந்து தகர இலை வைத்து சிறிது நேரத்தில் சுட சுட சாப்பாடு தயாரித்து பாட்டியை சாப்பிட அழைத்தாள். பாட்டி அதற்குள் தூங்கிவிட்டாள். தகரபெண் பாட்டியை எழுப்பி உணவு பரிமாறினாள். பாட்டி தகரபெண்ணையும் உணவு அருந்துமாறு கூறினாள். ஆனால் தகரபெண் மறுத்து விட்டாள். ஏனென்றால் அவள் கொண்டு வந்த இலை கொஞ்சம் தான் அதை வைத்து சமைத்துள்ளாள். பாட்டி வேற… நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷமாச்சுன்னு சொன்னதினால் அவள் பாட்டி உண்டபின் மீதமுள்ளதை உண்ணலாம் என்றிருந்தாள். ஆனால் சாதம் மட்டுமே மீந்தது. பாட்டியிடம் ஒரு குவளை நீரும் ஒரு பாத்திரமும் கொடுத்து கைகளை கழுவ சொன்னாள். பின் பாட்டி தனது சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார். தகரபெண் மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்தாள். இட்டிலிக்கு மாவு, பருப்பு ஊற வைத்துவிட்டு இருந்த பழங்களை உண்டு பாட்டி அருகில் வந்து அமர்ந்தாள். பாட்டி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார். 

தபெ: ஏன் பாட்டி அப்படி பாக்குறீங்க?

பாட்டி: இப்பத்தான் வயிறும் மனசும் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நெறஞ்சிருக்கு. ருசியான சாப்பாடு. நன்றி மா. ஆமாம் ருசில அளவு பாக்காம சாப்பிட்டு விட்டேன.. உனக்கு??

தபெ: பரவாயில்லை பாட்டி நான் பழங்கள் எல்லாம் சாப்பிட்டேன். அதுவே போதும். நாளைக்கு வீட்டுக்கு போய் சமைத்து பிள்ளைகளுக்கும் கொடுத்து நானும் சாப்பிட்டா போச்சு.

பாட்டி: சரி மா….நல்ல உணவு உண்டதில் என்க்கு நல்ல உறக்கம் வருது. உனக்கு தூக்கம் வரலையா. 

தபெ: தூங்கனும் பாட்டி ஆனா என் பிள்ளைகள் சாப்பிட்டாங்களோ இல்லையோ என்ற கவலை தூக்கத்தை கலைக்கிறது என்ன செய்ய.

பாட்டி: சரி நான் தூங்க போகிறேன். உனக்கு தூக்கம் வந்தால் அந்த அறையில் போய் தூங்கு. அங்கு தேக்கினால் செய்த கட்டிலில் பஞ்சு மெத்தை போட்டிருக்கும் அதற்கு பட்டுத் துணி விரித்திருக்கும். நன்றாக உறக்கம் வரும். 

தபெ: அச்சச்சோ !!! பாட்டி எனக்கு அதிலெல்லாம் படுத்து பழக்கம் இல்லை. ஒரு பாய் போதும் இப்படியே தரையில் படுத்துக்கறேன். 

பாட்டி: அப்படியா சரி அப்போ அதுக்கு பக்கத்து அறையில் பாய் இருக்கு அங்க போய் தூங்கிக்கோ. சரியா நான் உறங்க போறேன். காலை பார்ப்போம்.

என்று சொல்லி பாட்டி உறங்க சென்றாள். தகரபெண்ணுக்கு உறக்கம் வரவில்லை. அவள் பாட்டி சொன்ன அறைக்குள் சென்று பார்த்தாள். அங்கு ஒரு பாய் இருந்தது ஆனால் அந்த அறை முழுவதும் பஞ்சு பறந்து கிடந்தது. ஊசி நூல் எல்லாம் சிதறிய படி கிடந்தன. அவள் அந்த பஞ்சை எல்லாம் ஒரு துணி கொண்டு ஒன்றுசேர்த்து அவற்றை அங்கு கிடந்த காலி தலையனை உறைக்குள் நிறப்பி பின் ஊசி நூல் கொண்டு தைத்து அழகான தலையனைகளை செய்து அடுக்கி வைத்து அறையை சுத்தம் செய்தாள். பின் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை ஆட்டுக்கள்ளில் அறைத்து மாவாக்கி மூடி வைத்தாள். அழுகாத காய்களை தனியாக எடுத்து வைத்தது அவளுக்கு ஞாபகம் வர உடனே அவற்றை நன்றாக நீரில் அலம்பி ஒரு கூடையில் போட்டு வைத்தாள். பூஜை அறையை சுத்தம் செய்தாள். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக வேலை செய்து கொண்டே இருந்ததில் சற்று கண் அசந்து போனாள். பொழுது விடிந்தது. உடனே எழுந்து வீட்டின் வாசலை கூட்டி, கழுவி கோலமிட்டாள். பின் காலை உணவுக்கு இட்டிலி, சட்டினி, சாம்பார் செய்தாள். பாட்டி எழுந்து வந்தாள்.

பாட்டி: என்ன ஒரு அருமையான சாப்பாட்டின் வாசனை. என்னை படுக்கையறையிலிருந்து இழுத்து வந்துள்ளது. 

தகரபெண் தான் கிளம்ப வேண்டும் என்பதை சொல்ல வந்தாள் அதற்குள் பாட்டி குறுக்கிட்டு …

பாட்டி: இரு இரு நான் குளித்து விட்டு வரேன் இருவரும் ஒன்றாக உணவு அருந்தலாம்.

என்று கூறி உள்ளே சென்றாள்.

தகரபெண்ணுக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்ற கவலை இருந்தாலும் பாட்டிக்காக காத்திருந்தாள். 

“ஆஹா ஆஹா என் வீடு தெய்வீக மணம் கமழுதே. மிக சுத்தமாக இருக்கிறதே. மகிழ்ச்சியாக இருக்குமா.” என்று சொல்லிக்கொண்டே இட்டிலியை  சட்டினி சாம்பார் போட்டு சாப்பிட்டாள். நீயும் சாப்பிடுமா என்றாள் பாட்டி. 

தகரபெண் : பாட்டி நீங்கள் சாப்பிட்டு முடிப்பதற்காக தான் காத்திருந்தேன். நான் உடனே கிளம்ப வேண்டும். என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். உங்களுக்கு மத்திய உணவும் செய்து வைத்துள்ளேன். சாப்பிடுங்கள். நான் விடைபெற விரும்புகிறேன். நாளை மீண்டும் வருகிறேன்.

பாட்டி: புரிகிறது மா. உன் அவசரம் புரிகிறது. சரி போவதற்கு முன் அதோ ஒரு அறை இருக்கிறதே அதில் நிறைய பெட்டிகள் இருக்கு. அதிலிருந்து ஏதாவது பெட்டியை என் பரிசாக நீ எடுத்துக்கோ. 

தபெ: வேண்டாம் பாட்டி நான் சென்று நாளை வரும்போது எடுத்துக்கொள்கிறேனே.

பாட்டி: இந்தா சாவி. போய் எடுத்துக்கொண்டு கிளம்பு.

என்றாள் அதட்டலாக. உடனே வீட்டின் ஞாபகத்தில் வேகமாக சாவியை வாங்கி அறையை திறந்து ஆக சிறிய பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் அறையை பூட்டி சாவியை பாட்டியிடம் கொடுத்து 

தபெ: நான் எடுத்துக்கொண்டேன் பாட்டி சந்தோஷமா. இப்பொழுது கிளம்பட்டுமா 

பாட்டி: இது சிறிய பெட்டியாச்சே பெரிசு எடுத்திருக்கலாமே சரி சரி உன் விருப்பம் அதுவானால் நான் என்ன சொல்ல ..சரி இப்படியே கிழிந்த புடவையுடனா போக போகிறாயா?பெட்டி எடுத்த அறைக்கு பக்கத்தில் தான் எனது அறை இருக்கிறது போய் உனக்கு வேண்டிய புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு வா. பட்டுப்புடவைகள் நிறைய இருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ. இனி எங்க நான் பட்டுப்பீதாமரமா உடுத்திக்க போகிறேன். அப்படியே அங்கு ஒரு பெட்டியில் எனது நகைகளும் இருக்கும். அதிலிருந்தும் வேண்டியதை எடுத்துக்கொள். 

தகரபெண் வீட்டிற்கு போக தவிக்கிறாள். இந்த பாட்டி என்னடான்னா அது செய் இது செய் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தகரபெண்ணும் ஒன்றும் மறுத்துப்பேசாமல் பாட்டி அறைக்கு சென்றாள். மறுத்து பேசினால் பாட்டி இன்னும் தாமதமாக்குவாரோ என்ற பயம். வேகமாக ஒரு நூல் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு ஒரேஒரு சங்கிலி மட்டும் அணிந்து கொண்டு ஓடி பாட்டியிடம் வந்து தான் கிளம்பியாக வேண்டும் என்று கெஞ்சாத குறையாக சொன்னாள்.

பாட்டி அவளது அவசரம் புரியாததுபோல் ஏன் பட்டுப்புடவை உடுத்திக்கொள்ளவில்லை? ஏன் ஒரேஒரு சங்கிலி தான் அணிந்து “பத்திரமாக சென்று வா பெண்ணே நாளை சந்திப்போம் என கூறி விடை கொடுத்தாள்”

ஒரு வழியாக பாட்டி வீட்டிலிருந்து கிளம்பினாள் தகரபெண். அவள் தான் வழிநெடுக போட்ட புடவை கிழிசல்களை தொடர்ந்து ஊருக்கு போய் சேர்ந்தாள். நேராக தவுட்டுபெண் வீட்டின் கதவை தட்டினாள். கதவு திறந்ததும் தன் பிள்ளைகளை பற்றி விசாரித்தாள்.

தவுட்டுபெண் : இரு இரு என்ன அவசரம் உனக்கு?? அவர்கள் எழுந்து பால் அருந்துகின்றனர். ஆமாம் நீ எங்கே சென்றாய்? இரவெல்லாம் எங்கிருந்தாய் ?

தகரபெண்: அந்த விவரம் எல்லாம் என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்து சொல்கிறேன்.

என்று கூறிக்கொண்டே தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். பின் வேகமாக காலை உணவு செய்து பிள்ளைகளுக்கு கொடுத்து, பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியதும் அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. சற்று நேரம் படுத்துக்கொண்டாள். அப்பொழுதுதான் அவளுக்கு அந்த பாட்டி பரிசாக தந்த பெட்டியின் ஞாபகம் வந்தது. பிள்ளைகளை கிளப்பும் அவசரத்தில் மறந்தே போனாள். உடனே அதை எடுத்து திறந்ததும் அதிர்ச்சியுற்றாள். ஏனென்றால் அந்த பெட்டி முழுவதும் தங்க காசுகளும், வைர வைடூர்யங்களின் ஒளி  கண்ணைப் பறித்தது. அப்படியே பிரமையில் ஆழ்ந்தாள். கதவை யாரோ தட்டும் சத்தம் அவளை பிரமையிலிருந்து மீட்டு வந்தது. கதவை திறந்தாள்.

தவுட்டுபெண்: என்னடி கதவை திறக்க இவ்வளவு நேரம்? என்ன செய்து கொண்டிருந்த? சரி நேற்று முழுவதும் எங்க இருந்த? அத கேட்க தான் வந்தேன்.

தகரபெண் : வா வா நானே உன் வீட்டுக்கு வந்திருப்பேன். உனக்கு ஒன்னு காட்டுகிறேன் நீ அசந்துடுவ. 

தவுட்டுபெண் : நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்லுற!!!!

என்று கூறிக்கொண்டே தகரபெண் காட்டிய பெட்டியை பாத்து வாயடைத்து போனாள்.

தவுபெ: என்னப்பா இது இவ்வளவு ஜொலிக்கிறது. ஏது உனக்கு? அவ்வளவும் நிஜமாகவே தங்கமும் வைரமுமா? இதை எடுக்கதான் போயிருந்தாயா? சொல்லிருந்தால் நானும் வந்திருப்பேன் இல்லையா!! இதை வைத்து நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே!! நம் கணவர் இப்படி வெளியூரில் கஷ்டப்பட வேண்டியதில்லை!! 

தகபெ: நீ இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே போற!!! என்னை பதில் சொல்ல விடு.

என்று சொல்லிக்கொண்டே தகரபெண் நடந்தவற்றை கூறி முடித்ததும்….

தவுபெ: அட அசடே எடுத்தது தான் எடுத்த கொஞ்சம் பெரிய பெட்டியா எடுத்திருக்கலாமில்லையா!! 

தகபெ: எனக்கு இதை தூக்கிகிட்டு வரத்துக்கே கஷ்டமாக இருந்தது. பாவம் வயசான பாட்டி தனியா இருக்காங்க. நாளைக்கு வரேன் என்று சொல்லியுள்ளேன் ஆனால் என்னால் போக முடியாது. என் கணவர் நாளை வருவார். இப்போதான் ஞாபகம் வந்தது. இரண்டு நாள் கழித்து போகனும். சரி இந்தா இதிலிருந்து நீயும் கொஞ்சம் எடுத்துக்கொள். 

தவுட்டுபெண் அதிலி‌ருந்து பாதி பொருளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். அதிலிருந்து எடுத்து வந்த நகையை போட்டு அழகு பார்த்தாள். அப்பொழுது அவளுள் பேராசை எழுந்தது. தானும் ஒரு பெட்டி எடுத்து வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்பொழுதே சென்றால் வேலையும் அவ்வளவாக இருக்காது ஏனெனில் தகரபெண் எல்லா வேலைகளையும் சுத்தமாக செய்பவள் என்பது ஊர் அறிந்ததே அதனால் பாட்டியின் வீடு பளிச்சிடும் மேலும் மாவாட்டி வைத்திருப்பதால் சட்டென்று உணவும் பாட்டிக்கு கொடுத்திடலாம் என்றெல்லாம் யோசித்து  மனதிற்குள் ஒரு திட்டமிட்டு தகரபெண்ணிடம் சென்று தனது ஊர்க்காரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை அதனால் தான் உடனே  போகவேண்டும் தனது பிள்ளையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள் காட்டிற்குள். 

தகரபெண் சொன்ன வழியாக சென்றாள். சிறுது நேரத்தில் தகரபெண்ணின் புடவை கிழிசல்களை பார்த்தாள். அதே வழியில் பயணித்தாள். மாலையானது இருளும் படிந்தது, வீடும் தெறிந்தது. மகிழ்ச்சியாக கதவை தட்டினாள். தகரபெண் கூறியது போல் இரண்டு முறையும் கதவு திறக்கவில்லை. மூன்றாவது முறை திறந்தது. பாட்டி “யாரது” என்று கேட்டாள். உடனே தவுட்டுபெண் உள்ள போய் பேசலாம் பாட்டி வாங்க என்று பாட்டிக்கு முன் அவர் வீட்டிற்குள் சென்றாள். சென்றவள் கெட்ட நாற்றம் தாளாமல் ஒடி வெளியே போனாள். தகரபெண் வீட்டை சுத்தம் செய்து முழுசா ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் வீடு அலங்கோலமாகவும் கெட்ட நாற்றத்துடனும் இருக்கே!!!! தகரபெண் பொய் சொல்லியிருப்பாலோ!!!! என்றெல்லாம் பல எண்ணங்கள் தோன்றியது தவுட்டுபெண்ணுக்கு.  பாட்டி உள்ளே இருந்து ” ஏம்மா ஓடிட்ட” என்று கேட்டாள். உடனே சுதாரித்துக் கொண்டு வீட்டை சுற்றிப்பார்க்க போனதாக சொல்லி சமாளிக்க நினைத்தாள் ஆனால் பாட்டி விடுவாரா!!!

பாட்டி: அதற்கு ஏன் ஓடின ஏதோ என் வீடு இடியபோறாமாதிரி? நிதானமாக சுற்றி பார்க்க வேண்டியது தானே!! அதுவும் வெளியே இந்த இருட்டில் என்னத சுற்றி பார்ப்ப வா உள்ள வா. நீ யாரு ? எப்படி இங்கே வந்த ? இந்த விவரங்கள் எல்லாம் சொல்லு கேட்போம். 

தவுபெ: இதோ வரேன். சொல்லுங்க பாட்டி. சாப்பிட ஏதாவது வச்சிருக்கேங்களா?? இல்லை மாவெல்லாத்தையும் முடிச்சிட்டிங்களா??

பாட்டி: என்னது!!! ஏதோ நீ தான் நேற்று வந்து மாவு அறைத்து வச்சிட்டு போன மாதிரி கேக்கறே?

தவுபெ: வீடுன்னா இட்டிலிக்கு மாவாட்டி வைத்திருப்பது சகஜம் தானே அதனால கேட்டேன் !!

என்று சொல்லிக்கொண்டே நாலாபுறமும் அவள் கண்கள் சுழன்றது

பாட்டிக்கு இவள் எப்படி அங்கு வந்தாள்? ஏன் வந்திருக்கிறாள்? எதை அவள் கண்கள் சுழன்று தேடுகிறது என்பதெல்லாம் புரிந்தும் புரியாததுபோல தனக்கு பசிப்பதாகவும் சமைத்து தரும் மாறு தவுட்டுபெண்ணிடம் கூறினாள். அதற்கு தவுட்டுபெண் பாட்டிக்கு வயசாகிவிட்டதால் பழம் மட்டும் சாப்பிடுமாறு கூறிவிட்டு தனக்கு தூக்கம் வருவதாகவும் எங்கே படுத்துரங்க வேண்டும் என்று கேட்டாள். பாட்டியும் தகரபெண்ணிடம் சொன்னது போலவே இரண்டு அறைகளைப்பற்றி சொல்லி முடிப்பதற்குள் தான் தேக்கு கட்டிலில் படுத்துக்கொள்வதாக கூறினாள். சரி என்று பாட்டி அறையை காண்பிக்க ஓடீ சென்று மெத்தையில் படுத்துருண்டாள். நன்றாக உறங்கினாள். காலை விடிந்து பல மணிநேரம் ஆகியும் எழாமல் உறங்கிக்கொண்டிருந்த தவுட்டுபெண்ணை எழுப்பினார் பாட்டி. வேகமாக எழுந்தாள். வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். பாட்டி புன்முறுவலுடன் “சரி சரி அந்த கடைசி அறைல பெட்டிகள் அடுக்கி இருக்கும் நீ போய் உனக்கு வேண்டியதை என் பரிசாக எடுத்துக்கொள்” என்று கூறி முடிப்பதற்குள் சாவியை பறித்து கொண்டு போய் அறையை திறந்து இருப்பதிலேயே பெரிய பெட்டியை தூக்க முடியாமல் இழுத்துக்கொண்டு வந்தாள். இதை பார்த்ததும்…

பாட்டி : இது போதுமா? 

தவுபெ: இதைவிட பெரிய பெட்டி இருக்கா?

பாட்டி: இல்லை இதை இப்படி வீடு வரை இழுத்துக்கொண்டே போக போறயா?? சரி உன் பாடு சென்று வா.

தவுட்டுபெண் யோசித்தாள் “என்ன இந்த பாட்டி பொசுக்கென்று போயிட்டு வா என்று சொல்லுது அப்போ பட்டுப்புடவை…அதையும் விட கூடாது”

தவுபெ : ஏன் பாட்டி உங்க கிட்ட புடவைகள் நிறைய இருக்குமே இத்தனை வருஷமாக சேர்த்து வச்சிருப்பேங்களே!!!

பாட்டி: அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மா. இந்த காட்டுக்குள்ள எனக்கு யாரு புடவை எடுத்து தர போறா!!! சரி உனக்கு நேரமாகுதில்ல. கிளம்ப வில்லை? 

தவுட்டுபெண் மனதிற்குள் ” போச்சு பட்டுப்புடவை போச்சு இந்த கிழவி தராது போல… பரவாயில்லை இந்த பெட்டில இருக்கறத வச்சு நாமளே வாங்கிக்கலாம்”

பாட்டி: என்னடிமா யோசனை??

தவுபெ: ஒன்னுமில்லை!! நான் சென்று வருகிறேன்

பெரிய பெட்டியை தூக்கவும் முடியாமல் இழுக்கவும் முடியாமல் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். அவள் பிள்ளையை பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்தாள். வேகமாக கதவை திறந்து வீட்டிற்குள் சென்று அவசர அவசரமாக பெட்டியை திறந்தாள். அதனுள் பாம்பு, பூரான், தேள் எல்லாம் நிரம்பி வழிந்தன. பயந்து போனாள் தவுட்டுபெண். தகரபெண் மீது கோபம் கொண்டாள். அவள் தன்னிடம் பொய் சொன்னதாக கருதினாள். 

இவ்விடத்தில் தவுட்டுபெண் 

பேராசையால் பொறாமை கொண்டு பொறாமையால் கோபம் கொண்டு மதியிழந்தாள். செய்வதறியாது தகரபெண் தான் தனது இந்த நிலைமைக்கு காரணம் என்று மதிகெட்டு நினைத்து அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் கொண்டு போய் போட்டாள். அந்த பெட்டி தகரபெண் வீட்டின் பின்புறம் மண் தரையில் விழுந்த வேகத்தில் திறந்து கொண்டது. அதனுள்ளே பாம்பு தேள்களுக்கு பதில் தங்கமும் வைரமும் ஜொலித்து. 

அதிர்ச்சியடைந்த தவுட்டுபெண் வேகமாக தகரபெண் வீட்டின் கதவை ஓடிபோய் தட்டினாள். தகரபெண் கதவை திறந்து நலம் விசாரித்தாள். அதற்கு பதில் சொல்லாத தவுட்டுபெண் தனது பெட்டி ஒன்று தகரபெண் வீட்டின் பின்புறம் விழந்ததாகவும் அதை எடுக்க வந்ததாகவும் கூறிக்கொண்டே பின்புறம் கதவை திறந்து தகரபெண் பார்ப்பதற்குள் வேகமாக பெட்டியை மூடி அதை அவள் வீட்டுப் பக்கமாக வேலியின் அடிவழியாக தள்ளிவிட்டு சென்றுவருவதாக கூறி தன் மகனையும் அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு பின்புறம் போய் பெட்டியை இழுத்து வந்து வீட்டினுள் வைத்து திறந்தாள் மீண்டும் பாம்பும், தேளும் நெளிந்தது. குழம்பி போன தவுட்டுபெண் தன் பிள்ளையை கூட கவனிக்காமல் மீண்டும் தகரபெண் வீட்டினுள் பெட்டியை போட்டாள் பொன்னும் வைரமுமாக மின்னியது. பின் தனது வீட்டினுள் எடுத்து வந்தால் மீண்டும் பாம்பாக மாறியதில் தவுட்டுபெண்ணுக்கு பித்து பிடித்தது. இதைப்பார்த்த அவள் மகன் அழுது கொண்டே எந்த பெட்டியால் தனது தாய் இப்படி ஆனாளோ அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் போட்டு விட்டு தன் தாயை அழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் அங்கேயே இருந்தார்கள். தகரபெண் தனது வீட்டின் பின்புறம் சென்று பார்த்தாள் பாட்டி வீட்டில் பார்த்த அதே பெட்டி கிடந்தது. அப்பொழுது தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது. தன் கணவரிடம் நடந்தவற்றை கூறி இருவரும் பாட்டி வீட்டிற்கு காட்டிற்குள் சென்றார்கள். அங்கு அப்படி எந்த வீடும் இருந்ததுக்கான அறிகுறியும் இல்லை. அந்த வீடு இருந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்த தம்பதியர் மெல்ல பெட்டியை திறந்தார்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். 

இத்துடன் இந்த பயணம் இனிதே நிறைவுற்றது. உங்கள் இருக்கை வார்ப்பட்டையை இத்துடன் அவிழ்த்து விடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

❤️முற்றும்❤️

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s