கோமு என்ற ஒரு வாலிபன் முருங்கைக்கரை என்ற ஊரில் வசித்து வந்தான். அவனது தொழில் வேட்டையாடுதல். காட்டுக்குள் சென்று விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி அவற்றை ஊர் மக்களிடம் விற்பனை செய்து காசு சம்பாதித்து வாழ்ந்து வந்தான். காட்டுக்குள் கிடைக்கும் அரிய வகை மூலிகைகள் பொருட்கள் ஆகியவற்றையும் சேகரித்து அதை ஏலத்தில் விட்டு அதையும் காசாக்கிவிடுவான். நல்ல கெட்டிக்காரன், திறமைசாலி, யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல உள்ளம் படைத்தவன். கடவுள் பக்தி உடையவன். அவன் அந்த ஊர் தலைவர் ஆகவேண்டும் என்று பல நாள் ஆசை பட்டு அதற்கு பல வழிகளில் முயற்சியும் செய்துப்பார்த்து பயனில்லாமல் போனது. கடவுளிடம் கோபம் கொண்டான். அந்த ஆசையை அப்படியே மனதினுள் பூட்டி வைத்து விட்டு தனது வேலையை பார்த்தான்.
ஒரு நாள் வேட்டைக்கு சென்றவன் ஊர் திரும்பவில்லை. அனைவரும் அவனுக்காக காத்திருந்து காத்திருந்து பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர். காட்டுக்குள் சென்ற கோமுவை வனவிலங்குகள் தாக்கியதில் அவன் மூக்கு பாதியாக அறுப்பட்டு போனது. அவன் பல மூலிகைகளை காயம் பட்ட இடங்களில் போட்டு தனக்கு தானே வைதியம் பார்த்துக்கொண்டு அங்கு கிடைத்த பழங்களை உண்டு இருந்தான். விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் ஓடியதில் வழி மாறி போய்விட்டான். எங்கு இருக்கின்றான் என்பது அவனுக்கே தெரியாது.
காயங்கள் எல்லாம் மாய்ந்து கொஞ்சம் உடலில் சக்தி வந்ததும் எழுந்து மீண்டும் நடக்கலானான் தன் ஊரைத் தேடி முறிந்த அரை மூக்குடன். பல நாள் நடந்தும் அவனால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை ஏனெனில் அவன் காட்டின் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளான். அவ்வளவு தூரம் காட்டிற்குள் அவன் சென்றதில்லை. ஊருக்கு வழி தெரியாததால் குழப்பம், வலியால் வேதனை, நல்ல உணவுக்காக ஏக்கம், மூக்கு அறுப்பட்டு பாதியானதில் கோபம், ஊர் தலைவர் பதவி ஆசை இப்படி பல உணர்ச்சிகளால் சூழப்பட்டு அதில் சிக்கி செய்வதறியாது கடவுளை திட்டித்தீர்தான். ஏன் தனக்கு இப்படி கஷ்டங்களையும் தோல்விகளையும் கொடுத்து வாட்டி வதைக்கிறார் என்ற ஆத்திரத்தில் கத்தினான். காடே அதிர்ந்தது. எங்கடா மீண்டும் காட்டு விலங்குகள் தனது சப்தத்தில் வந்து மீதமுள்ள மூக்கையும் தின்று விடுமோ என்று பயந்து சற்று நேரம் ஒளிந்து கொண்டான். பின்னர் வலது புரம் திரும்பிபார்த்தான் ஏதோ ஒரு ஒளி தெறிந்தது. ஒளியின் பிரகாசத்தை நோக்கியே நடக்கலானான். தனது ஊர் என்று எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தான்.
அவன் நடந்து நடந்து களைத்து விட்டதால் ஒரு மரத்தாலான கம்பம் ஒன்றில் சாய்ந்தான். சற்று நேரம் கழித்து தான் எதன் மேல் சாய்ந்துள்ளோம் என்று தலையை தூக்கிப் பார்த்தான். பெரிய பெயர் பலகை தெரிந்தது அதில் வெள்ளரிக்கா பட்டினம் என்று எழுதியிருந்தது. தனது ஊர் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு ஊரை அடைந்தது அவனுக்குள் மகிழ்ச்சியை அளித்தது. ஊருக்குள் சென்றான் அதிர்ச்சியுற்றான். ஏனெனில் அந்த ஊர் மக்களுக்கு யாருக்குமே மூக்கு என்ற ஒரு உறுப்பு முகத்தில் இல்லை. அதற்கு பதில் சிறு இரு துவாரங்கள் மட்டுமே இருந்தது. ஏதோ வித்தியாசமான ஊருக்குள் நுழைந்து விட்டோம் ஏதோ விபரீதம் தனக்கு நடக்க போகிறது, இன்னொரு சோதனை தனக்காக அந்த கடவுள் கொடுத்து ரசிக்கிறார் என்ற பல எண்ணங்கள் அவனுள் பறந்தன. வெள்ளரிக்கா பட்டின மக்கள் கோமுவைப்பார்த்து அதிசயித்துப் போனார்கள் ஏனென்றால் அவர்கள் அரை மூக்குடன் இருக்கும் மனிதனை அன்று தான் முதல் முதலில் காண்கிறார்கள். அவர்கள் காட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். அவர்கள் ஊருக்குள் நுழைந்த முதல் அரை மூக்குடைய வேற்று ஆள் நமது கோமு தான்.
வெள்ளரிக்கா பட்டினத்துக்கு ஒரு வயதான ராஜா இருக்கிறார் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அடுத்து யார் தங்கள் ஊரை ஆளப்போகிறார் என்ற குழப்பம் ஊர் முழுவதும் நிலவி இருந்தது. ராஜா உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். மக்களும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்த ஊரில் வெள்ளரிக்காய் செடியிலும் கொடியிலும் காய்த்து ஊர் முழுவதும் பரவி கிடந்தது. இது போக மா, பலா, தென்னை மரங்களும் தெருக்களின் ஓரங்களில் நெடு நெடுவென காய் கனிகளோடு அழகாக வளர்ந்திருந்தது. அவர்கள் தோட்டத்தில் தங்கமும் வைரமும் சாதாரண கற்கள் போல கிடந்தன. ஊரின் மேற்கு எல்லையில் ஒரு பெரிய கிணறு உள்ளது. அதிலுள்ள நீர் அமிர்தம் போல் இருக்கும். காட்டிற்குள் இப்படி ஒரு தன்னிறைவு பசுமை கிராமம் இருப்பதே யாருக்கும் தெரியாது. கோமுவை போல் வழிதவறி வந்தவர்கள் இந்த ஊரின் வளத்தை கண்டு பேராசைக்கொள்ள..அவர்கள் காட்டு விலங்குகளுக்கு இறையாக வெட்டி வீசப்பட்டனர். இதெல்லாம் நமது கோமுவுக்கு தெரியாதல்லவா. அவன் செய்வதறியாது நின்றான்.
நாட்டு மக்கள் அவனை தூக்கிக்கொண்டு அரசரிடம் சென்றார்கள். அரசரும், அவரது மந்திரியும் அரைமூக்கனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். கோமுவை பார்த்து யார், எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டார்கள். கோமு நடந்ததை கூறினான். ராஜா அவனுக்கு ஒரு வீடு கொடுத்து அதில் இருக்கச்சொன்னார். அவனும் ஆரம்பத்தில் சற்று பயத்துடன் இருந்தான். ஏனென்றால் அது புது ஊர் அதுவும் அடர்ந்த காட்டிற்குள். மூக்கில்லாத வித்தியாசமான மனிதர்கள். தனக்கு நல்லது செய்கிறார்களா இல்லை தன்னை பலி கொடுக்க நல்ல நாளுக்காக விட்டுவைத்திருக்கிறார்களா என்ற குழப்பத்தில் இருந்தான். மீண்டும் கடவுளை மனதில் திட்டினான்.
சில நாட்கள் கடந்தது அந்த நாட்டு மக்கள் கோமுவிடம் நன்றாக பழகினார்கள் கோமுவும் அவர்கள் ஊரில் சில மாற்றங்களை செய்து அழகாகினான். புதுப்புது உணவு வகைகளை செய்தும் கொடுத்தான், செய்முறையை கற்றும் கொடுத்தான். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தான். வெளி உலகம் பற்றி நிறைய விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டான். ஆனால் அவன் அங்கு இருக்கும் தங்கத்துக்கும், வைரத்துக்கும், அந்த நாட்டின் வளத்துக்கும் ஆசைப்படவே இல்லை ஏனென்றால் அவன் உயிரோடு வாழ்வதே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அரசருடனும் கோமு நன்றாக பழக ஆரம்பித்தான். இப்படியே பல மாதங்கள் ஓடிவிட்டது. ஒரு நாள் ராஜா இறந்துவிட்டார். ஊரே கவலையில் ஆழ்ந்தது.
அடுத்து யார் தங்களுக்கு ராஜாவாக இருந்து வழி நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. மந்திரி எழுந்தார் மக்களை பார்த்தார் ” நமது நாட்டிற்கு வந்து சில காலங்களே ஆனாலும் நம் அனைவரையும், நம் பழக்கவழக்கங்களையும், நம் முறைகளையும் நன்கு புரிந்துகொண்டு, கற்றுக்கொண்டு மேலும் நம் நாட்டு நலனுக்காக பல திட்டங்களை வகுத்து தந்து, கல்வி என்ற ஒன்றை நம் பிள்ளைகளுக்கு கற்ப்பித்து நமது அரசரின் செல்ல பிள்ளையாக இருந்த முறிமூக்கனை நமது ஊரின் ராஜாவாக்க முடிவெடுத்துள்ளோம் இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்” என்று கூறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி நிலவியது. பின் மக்கள் அனைவரும் முறிமூக்கன் ராஜா வாழ்க !! முறிமூக்கன் ராஜா வாழ்க!! வாழ்க!! என கோஷம் எழுப்பினர். நடப்பவை அனைத்தும் கனவா இல்லை நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டு திகைத்து நின்றான்.
ஒரு ஊருக்கு தலைவராக ஆசைப்பட்ட கோமு இப்பொழுது காட்டிலிருக்கும் ஊருக்கு ராஜா ஆனான். அன்றிரவு அவன் தனக்கு நடந்தவைகளை நினைத்துப்பார்த்தான். ஒவ்வொரு முறை அவனுக்கு கெடுதல் நடந்த போதும் அவன் கடவுளை திட்டியது ஞாபகம் வந்தது. இப்போது அவனுக்கு புரிந்தது கடவுள் அவனுக்கு கொடுத்த கஷ்டங்கள் எல்லாமுமே அவனை இப்படி ஓர் இடத்தில் அமர வைத்து அழகு பார்ப்பதற்கே என்று. அந்த ஊரில் ஒரு கோவில் கூட அவன் பார்க்கவில்லை என்பதும் அவன் நினைவிற்கு வந்தது. மறுநாள் மக்களிடம் அவன் கற்ற பாடத்தை கூறி ஒரு கோவில் கட்ட ஆலோசனை கேட்டான். மந்திரிகளும் மக்களும் அமோதிக்க உடனே கட்டுமானம் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
அவனது கோமு என்ற பெயர் மாய்ந்து போனது. மூக்கில்லா ராஜ்ஜியத்தில் முறிமூக்கன் ராஜாவாக சிறப்புடன் நல்லாட்சி புரிந்து வந்தான். நல்ல சிந்தனைகளும், நேர்மறை எண்ணங்களும், பொருமையும் இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு கோமு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தான். அவன் நினைத்திருந்தால் தப்பி செல்ல முயன்றிருக்கலாம் ஆனால் அவன் அதை செய்யாமல் கிடைத்தை ஏற்றுக்கொண்டு பொறுமையுடன் தனது காலத்தை மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காமல்/செய்யாமல் முடிந்தவரை உதவிகள் செய்து கடவுளை மனதில் திட்டினாலும் அவர் மீது வைத்த நம்பிக்கையை விடாமல் நல்லதே நடக்கும் என்று நம்பியதால் அவனுக்கு நல்லதே நடந்தது.
வாழ்க்கை என்பது நமக்கு கடவுள் வழங்கிய விசித்திர பரிசுப் பெட்டகம். ஆம் ஒவ்வொரு முறை நாம் திறக்கும்போது ஒவ்வொரு அனுபவங்களை கொடுத்து நமக்கு பாடம் கற்ப்பிக்கும் மந்திரம் நிறைந்த பெட்டிகள் கொண்ட பெட்டகமே. நமது வாழ்வில் நடப்பவை எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். காரணமின்றி எந்த காரியமும் நடந்திராது. உதாரணமாக நமது குடுபம்பத்தை கெடுப்பதற்க்கும் நிம்மதியை குலைப்பதற்கும் என்றும் சில பொறாமை கார்கள் நமக்கு பின்னால் அவர்களைப் போன்றே எண்ணமுடையவர்களோடு கைக்கோர்த்து பல வேலைகளை செய்வார்கள். அது அவர்களின் குணம். அவர்கள் மீது கோபப்பட்டு அல்லது ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லை. நமது வாழ்வில் அப்படி ஒரு சங்கடம் நடக்க வேண்டும் என்றிருந்தால் அது நடந்தே தீரும். கெட்டவை கெட்டவர்கள் மூலம் தான் நடக்கும். சிலர் கஷ்டப்படும் காலங்களில் கடவுளை திட்டித்தீர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கே நல்லது நடந்தால் நன்றி கூறுபவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருப்பார்கள் நம் கோமுவைப்போல் சிலர். கஷ்டமோ நஷ்டமோ சந்தோஷமோ துக்கமோ எதுவாயினும் நாம் தான் கடந்து ஆகவேண்டும். அவ்வாறு நடப்பவைகளை நேர்மறை எண்ணங்களுடன் அணுகினால் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும் என்பதை உணர்ந்திடவே வெள்ளரிக்கா பட்டினம் சென்று வந்தோம்.
உங்களின் இந்த வெள்ளரிக்கா பட்டினம் வரையிலான பயணம் இனிதே முடிந்தது.
❤️முற்றும்❤️
