பசும்பொன் என்ற ஒரு கிராமம். பெயரை கேட்டதுமே உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் அப்படி ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்று. ஆம் பசுமையான வயல்கள் அதிலே பொன்னிற நெல் கதிர்கள். பார்ப்பதற்கு பச்சையும் பொன்னிறமுமான பட்டுக்கம்பளம் விரித்தது போல் இருக்கும்.
இப்படிப்பட்ட கிராமத்தில் ஜான் பல்லன், முழம் பல்லன் என்று இருவர் வசித்து வந்தனர். கிராமத்திற்கு அதன் அழகை கண்டு எப்படி பெயர் வந்ததோ அதே போல் இவ்விருவரின் பற்களை கண்டு இவர்களை சிறு வயதிலிருந்தே அப்படி அழைத்தனர் கிராம வாசிகள். பின்னர் அதுவே அவர்கள் பெயரும் ஆனது.
ஜான் பல்லனுக்கு பற்கள் ஒரு ஜான் அளவிற்கும், முழம் பல்லனுக்கு பற்கள் ஒரு முழம் அளவிற்கும் நீட்டிக்கொண்டு இருப்பதால் அவர்கள் அப்பெயரை பெற்றனர்.
இருவரும் நல்ல நண்பர்கள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர்.
முழம் பல்லன் அவனால் ஆன உதவிகளை ஊருக்கும் ஊர் மக்களுக்கும் செய்து வந்தான். நல்ல குணம் படைத்தவன். அவனால் முடிந்தால் உதவுவான் இல்லை என்றால் ஒதுங்கி கொள்வான். அவனுடைய கொள்கையானது யாருக்கும் உதவாவிட்டாலும் உபத்ரவமாக இருக்கக்கூடாதென்பதே. அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
ஜான் பல்லன் வெளி உலகிற்கு நல்லவன் வேஷம் போடும் வேஷதாரி. சரியான வடி கட்டின கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்யாவிட்டாலும் முழம் பல்லன் செய்வதை எல்லாம் தான் செய்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆசாமி. யாரையாவது புகழ்ந்தால் இவனுக்கு பிடிக்காது. அவனை யாராவது புகழ்ந்தால் புலங்காகிதம் கொள்வான். அதிலும் முழம் பல்லனை யாரேனும் புகழ்ந்தாலோ இல்லை நல்லதாக நாலு வார்த்தை சொன்னாலோ இவனுக்கு இருப்புக்கொள்ளாது அவர்களிடம் காரணமின்றி சண்டையிடுவான். அவனுக்கு முழம் பல்லனை ஊரார் போற்றுவது சற்றே பொறாமையை கொடுத்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தான்.
இப்படியாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்த சமையத்தில் முழம் பல்லன் தன் பக்கத்து ஊரில் இருக்கும் நண்பனின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தது. பிரயாணத்திற்கு சாப்பாடு பொட்டலம் எல்லாம் கட்டிக்கொண்டு கிளம்பினான். முழம் பல்லனின் தாய் ருசியாக சமைப்பார்கள். தன் நண்பன் ஜான் பல்லனிடம் கூறி விட்டு புறப்பட்டான். ஜான் பல்லனுக்கு மனதில் ஒரே கொண்டாட்டம் இனி ஊர் மக்கள் அவனிடம் தான் உதவி கேட்பார்கள், சில நாட்கள் இனி முழம் பல்லனை போற்றி பேச மாட்டார்கள் என்று.
அந்தக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடந்தே செல்வார்கள். இடையிடையே கிடைத்த இடத்தில் இளைப்பாறி பின் மீண்டும் பயணத்தை மேற்கொள்வார்கள். அதுபோல் நம் முழம் பல்லன் ஒரு நதியின் கரையில் இளைப்பாற முடிவு செய்தான். சூரியன் வானுக்குள் மறைந்தார். நிலவு மெல்ல மேலே எழ ஆரம்பித்தார். நாள் முழுவதும் நடந்த களைப்பால் அவனை மேலும் நடக்க அனுமதிக்கவில்லை அவனது கால்கள். எனவே அங்கேயே அமர்ந்தான். முகம், கை, கால்களை கழுவி விட்டு கட்டிக்கொண்டு வந்த புளியோதரையில் கொஞ்சம் சாப்பிட்டு மீதியை மீண்டும் கட்டி பையினுள் வைத்து விட்டு கைகளை நதியில் கழுவினான். மிதமான தென்றல் வீசியது, இரவு உணவும் ஆனது, தனது மேல் துண்டை தரையில் விரித்தான் நன்றாக உறங்கினான்.
நடுஇரவில் ஏதோ சப்தம் கேட்டது. அவன் அசையாமல் கண்களை மட்டும் திறந்து சப்தம் வந்த திசை பார்த்தான்……….தேவதைகள் போல் இரு உருவம் அவன் பையில் இருந்த புளியோதரையை சாப்பிட்டுக்கொண்டிந்ததை கண்டான். ஏதோ பயணிகள் பசியினால் தன் உணவை சாப்பிடுகிறார்கள் இந்த வேளையில் தான் எழுந்தால் அவர்கள் பயத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று எண்ணி அவர்களை காணாதது போல் மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான்.
பொழுது விடிந்ததும் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அவ்விருவரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. சரி புறப்பட்டுச் சென்றிருப்பார்கள் என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டான். நதியில் குளித்து பின் பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்து நீருக்குள் செல்வதற்கு முன் முகத்தை கழுவுவதற்கு கைகளில் நீர் எடுக்க குனிந்தான் நீரில் அவன் முகத்தை பார்த்து அதிர்ச்சியுற்றான். மீண்டும் பார்த்தான் அவனால் நம்ப முடியவில்லை. அவனது முகத்தில் ஒரு மாற்றம். அவனது முழம் பற்கள் எல்லாம் மாய்ந்து அழகான பல் வரிசையுடன் முகம் மிளிர்ந்தது. மேலும் அவன் சாப்பாட்டு பையில் பொன்னும், வைரமும், வைடூர்யமும் மின்னின. மகிழ்ச்சியில் வேகம் கூடியது அவன் நடையில். தன் தாயிடமும் நண்பனிடமும் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது ஊருக்கே திரும்பி சென்றான். கிராம மக்கள் எல்லோரும் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று வினவினார்கள். அவனும் நடந்தவற்றை ஒளிவு மறைவு இன்றி அப்படியே கூறினான்.
இதை அனைத்தையும் கேட்ட ஜான் பல்லன் உடனே இரண்டு பையில் உணவு பொட்டலங்கள் கட்டிக்கொண்டு நண்பனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு சென்றான்.
அதே நதிக்கரையை பொழுது சாயும் வேளையில் சென்றடைந்தான். ஒரு பையிலிருந்த உணவை உண்டு மற்றொரு பையை சற்று தள்ளி வைத்து விட்டு உறங்காமல் அவ்விரு உருவங்களுக்காக காத்திருந்தான். நள்ளிரவில் சப்தம் கேட்டது மெல்ல திரும்பி பார்த்தான் அதே தேவதைகள் போல இருவர் பையை திறந்து பார்த்தனர் ஆனால் அதில் நல்ல உணவு இல்லாததால் அவர்கள் உண்ணாமல் எழுந்து ஜான் பல்லனை பார்த்து “பாவம் இம் மானிடன் நல்ல உணவும் இல்லை பற்களும் இவ்வளவு நீளமாக இருக்கிறதே” என்று
அவர்களுக்குள் உரையாடினர். இதை அனைத்தையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஜான் பல்லனுக்கு கோவம் ஏனெனில் அந்த தேவதைகள் உணவை உண்ணாததால் வைரமும், வைடூரியமும் வைக்கவில்லையே என்று. தேவதைகள் கூறிக்கொண்டனர் “உணவு தான் இல்லை வந்ததற்கு அவன் பல்லையாவது சரி செய்துவிட்டு செல்வோம்” என்று கூறிக்கொண்டே அவன் அருகில் சென்றனர். ஜான் பல்லனுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கவில்லையே என்ற கோபம் ஒருபுறம் ..எங்கே இவர்கள் தன் பற்களை முழம் பல்லனை போல் அழகாக்காமல் போய் விடுவார்களோ என்ற எண்ணம் மறுபுறம். இந்த சிந்தனை அவனை பொருமை இழக்க செய்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல் ….ஜான் பல்லன் சும்மா இல்லாமல் “அவன் பல்லைப்போல எம்பல்லும்” என்று கூற தேவதைகள் சட்டென்று மறைந்தனர். ஜான் பல்லனும் மயங்கி விட்டான்.
மறுநாள் சூரியன் உதயம் ஆகி பல மணிநேரம் ஆனபிறகு எழுந்தான் ஜான் பல்லன். உடனே வேகமாக நதியில் முகம் பார்க்க ஓடினான். நீரில் முகம் பார்க்க குனிந்தான் அதிர்ச்சியுற்றான். முன்னிருந்த ஜான் பல்லுடன் முழம் பல்லும் சேர்ந்து ஒரு அடி நீளத்திற்கு பல் இருந்தது. கவலையில் ஆழ்ந்தான். ஊருக்கு சென்றான். அனைவரும் சிரித்தனர். முன்னாள் முழம் பல்லன் ஓடி வந்து வினவினான்.
விம்மி விம்மி அழுதுகொண்டே ஜான் பல்லன் நடந்தவற்றை கூறினான். இப்பொழுது அழுது என்ன பயன். முன்னாள் முழம் பல்லன் அவனை சமாதானம் செய்தான். அவனுக்கு கிடைத்த வைரம், வைடூர்யங்களை ஜான் பல்லனுடன் பகிர்ந்து கொண்டான். ஜான் பல்லன் தன் நண்பனை கட்டி கொண்டு “நண்பா உன்னைப் போல ஒரு நல்லுள்ளம் படைத்தவன் மீது நான் பொறாமை கொண்டதாலும், அதன் காரணமாக உன்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்ததாலும், இந்த ஊர் மக்கள் உன்னை பழித்து என்னை உயர்த்தி பேச வேண்டும் என்று எண்ணியதாலும் வந்த விளைவு தான் இந்த ஒரு அடி நீள பற்கள். நான் கற்றுக் கொண்ட இந்த பாடத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.” என்று கூறியதுடன் விடாமல் வாழ்ந்தும் காட்டினான்.
ஜான் பல்லனைப் போல் பட்டால் தான் திறுந்துவேன் என்று இல்லாமல் பெரியவர் சொல்கேட்டு அல்லது இது போன்ற கதைகள் கேட்டு /படித்து நம்மை திருத்திக் கொண்டால் வாழ்வில் எந்தவிதத்திலும் நஷ்டப்படாமல் நிம்மதியாக வாழலாம்.
பொறாமை குணம் கொண்டால் நஷ்டமும் சில நேரங்களில் அழிவும் நிச்சயமே. மல்லிகைப்பூ தாமரையை கண்டு பொறாமை கொண்டால் தன்னிடம் இருக்கும் சுகந்தம் என்ற குணத்தை மறக்கின்றது, தன்னை தலையில் சூடி அழகு பார்ப்பார்கள் என்பதை மறக்கின்றது. அதுபோல ஒருவர் மற்றொருவர் மீது பொறாமை கொண்டால் தனது நற்குணங்களை தானே மறந்து விட நேரிடும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் தனித்தன்மைகள், குணாதிசயங்கள் எல்லாம் வேறுபடும். அதில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். அன்னப்பறவை எப்படி பாலையும் நீரையும் கலந்து கொடுத்தால்…பாலை மட்டும் குடிக்குமோ அதுபோல நல்லதை உணர்வோம், அதை மட்டும் பின்பற்றுவோம். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்!
❤️முற்றும்❤️
